Monday, 22 July 2013

தொழில் தொடங்கலாம் வாங்க!

தொழில்

தொழில் தொடங்கலாம் வாங்க!
ஒ ரு பட்டனை அழுத்தினால் உலகமே உங்கள் முன் விரியும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. கடிதம், தொலைபேசி என்று இருந்த தகவல் தொடர்பு இப்போது இ-மெயில், சாட்டிங் என்ற ரீதியில் மாறிவிட்டது. ஆனால், இதைப் பயன்படுத்தும் எல்லோருமே வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் அளவுக்கு நிலைமை வளரவில்லை. அதனால், இன்றைய சூழலில் ‘இன்டர்நெட் பிரவுஸிங் சென்டர்’ என்பது லாபம் தரும் தொழிலாக இருக்கிறது.
பிரவுஸிங் சென்டர் தொடங்க என்ன செய்ய வேண்டும்...? இந்தத் தொழிலை எந்த இடத்தில் தொடங்கப் போகிறோம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பிரவுஸிங் சென்டரைப் பொறுத்தவரை அதிக ஆள்புழக்கம் கொண்ட, கல்லூரி, பள்ளிகளுக்கு அருகில் உள்ள இடத்தில் துவங்குவதுதான் பெஸ்ட். 150 முதல் 200 சதுர அடி இடம் இருந்தால் போதும். கடையாகத்தான் என்றில்லை, வீட்டு மொட்டை மாடியைக்கூட மாற்றிக் கொள்ளலாம். தேவையான வெளிச்சம், காற்றோட்ட வசதி, ஃபேன் என்றிருந்தால் போதுமானது. ஏ.ஸி கூட அவசியமில்லை.
இந்தத் தொழிலைப் பொறுத்தவரை போட்டி என்பது பெரிதாக இருக்காது. ஆனாலும் அருகில் வேறு பிரவுஸிங் சென்டர் ஏதும் இருக்கிறதா... அவர்கள் எந்த மாதிரியான கட்டணம் வசூலிக்கிறார்கள்... மாத வருவாய் என்ன..? என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.
இடம் தயாராகி விட்டதா? உங்கள் முதலீட்டு சக்தி மற்றும் இடத்தின் கொள்ளளவுக்கு ஏற்ற கம்ப்யூட்டர் களை வாங்கிக் கொள்ளலாம். கொஞ்சம் விலை அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்று புதிய கம்ப்யூட்டர் களையே வாங்கி விடுங்கள். அதில் 128-ஜிபி வேகம் கொண்ட ராம் இருந்தால் போதுமானது.
அடுத்து இன்டர்நெட் கனெக்ஷன். அதிகபட்சம் நான்கு கம்ப்யூட்டர்களுக்கு ஒரு நெட் இணைப்பு இருந்தாலே போதுமானது. அது நொடிக்கு 128 கே.பி அல்லது 256 கே.பி அளவு வேகம் கொண்டதாக இருக்க வேண்டும். அரசுத்துறையான பி.எஸ்.என்.எல், மற்றும் தொலைதொடர்புத் துறையில் இருக்கும் பல தனியார் நிறுவனங்கள் இந்த இன்டர்நெட் இணைப்பு வசதியை வழங்குகின்றன. அதற்கு மாதத்துக்கு 250 ரூபாயிலிருந்து 550 ரூபாய்வரை என்று வாடகை கட்டணங்கள் இருக்கின்றன. எந்த நிறுவன இணைப்பு வசதியானது என்பதை ஆராய்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
சிங்கிள் பேஸ் மின் இணைப்பு போதுமானது. அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அது கம்ப்யூட்டர்களைப் பாதிக்கும். அதனால், கம்ப்யூட்ட ரோடு யூ.பி.எஸ் இணைத்திருப்பது முக்கியம்.
கம்ப்யூட்டருக்கான டேபிள், சேர்கள் மலிவாகக் கிடைத்தால் செகண்ட் ஹேண்ட்டில்கூட வாங்கிப் போடலாம். தனித்தனி கேபின்களாக அமைக்காமல், அதேசமயம், வாடிக்கையாளரின் வசதிக்கேற்ற ‘பிரைவசி’யை ஏற்படுத்தித் தருவது நல்லது. வாடிக்கை யாளர் என்ன விஷயங்களைப் பார்க்கிறார் என்பது ஓரளவு உங்களுக்குத் தெரியும் வகையில் இருக்கும்படி அமைத்துவிடுங்கள். இது செலவையும் குறைக்கும்... வேண்டாத பிரச்னைகள் வருவதையும் தவிர்க்கும்... உஙகள் சென்டர் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படும். (இப்படி சொந்தமாக ‘பிரவுஸிங் சென்டர்கள்’ வைப்பது தவிர மூன்று, நான்கு லட்சங்கள் கையில் வைத்திருப்பவராக இருந்தால், ‘சத்யம், ஐவே’ போன்ற பெரிய நிறுவனங்களின் பிரான்ச்சைஸியாக இன்டர்நெட் சென்டரைத் துவங்கலாம்)
என்ன வருமானம் வரும்..? இப்போது இருக்கும் நிலவரப்படி, ஒரு மணி நேரத்துக்கு 15 முதல் 20 ரூபாய்வரை கட்டணம் வாங்குகிறார்கள். இதில் மெம்பர்ஷிப் வசதியும் ஏற்படுத்தலாம். மெம்பர்ஷிப் உள்ளவர்களுக்கு கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு 12 ரூபாய் என வசூலிக்கலாம். குறைந்தபட்ச நேரமாக பதினைந்து நிமிடம் அல்லது அரைமணி நேரத்துக்கு, கட்டணம் 10 ரூபாய் வாங்கலாம்.
இந்தக் கட்டணங்கள் தவிர, ஒரு ஸ்கேனர் வாங்கி வைத்துக் கொண்டால் படங்களை ஸ்கேன் பண்ணிக் கொடுக்கலாம். கூடுதலாக சி.டி. ஃப்ளாப்பி விற்கலாம். நெட் பக்கங்களைப் பிரிண்ட் எடுத்துத் தருவது, அரசு டாகுமென்ட்களை டவுன்லோடு செய்து தருவது, பயோ-டேட்டாக்கள், வேலைக் கான விண்ணப்பங்கள் அடித்துத் தருவது என்றெல்லாம் வருமானம் பார்க்கலாம்.
குறைந்தபட்சம், தினம் ஒரு கம்ப்யூட்டர் ஏழு மணி நேரமாவது இயங்க வேண்டும். அதன்படி ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 15 வீதம் வருமானம் ரூபாய் 105. ஆக, நான்கு கம்ப்யூட்டர்களும் சேர்த்து மொத்தம் 28 மணிநேரம் ஓடினால் ஒரு நாள் வருமானம் மொத்தம் ரூபாய் 420. மாதத்தில் எல்லா நாளும் ஓடும் என்று சொல்ல முடியாது. மாதம் சுமார் 10,000 ரூபாய் வரை வரும். இதில் எல்லா செலவுகளும் போக மீதம் ரூபாய் 7,000 வரை கையில் நிற்கும்.

1 comment:

  1. ARUMUGAM.E from chennai . I am small scale industrialist shic my company.I need working capital fund.mob:7904757498.email:aarway@gmail.com

    ReplyDelete