Sunday, 17 August 2014

ஸ்டிக்கர் கட்டிங் வண்டியில் - Sticker Cutting

 
ஸ்டிக்கர் கட்டிங் வண்டியில் - Sticker Cutting

பச்சக்கென்று ஒரு வருமான வாய்ப்பு!

வா கனங்கள் பெருகிவிட்டன என்பதற்கு பரபரப்பான சாலைகளும், அதில் பறக்கும் மக்களுமே சாட்சி! வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த நேரத்துக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டும் தொழில்!
எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தன் வண்டி மட்டும் தனி அடையாளத்துடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் வாகன உரிமையாளர்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதற்காக வண்டியில் கூடுதலாக அலங்காரம் செய்ய ஆசைப் படுகிறார்கள். அதனால், இந்தத் தொழிலுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
ஒரு கம்ப்யூட்டர், ஸ்டிக்கர் கட்டிங் மெஷின், கொஞ்சம் ஐடியா - இவை இருந்தால் போதும். இந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம். கம்ப்யூட்டர் என்பது 20 ஆயிரம் ரூபாயிலேயே கிடைக்கும். ஸ்டிக்கர் கட் பண்ணிக் கொடுக்கும் பிளக்கர் மெஷின் 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். கம்ப்யூட்டர் அறிவு கொஞ்சம் இருந்தால் போதும். கட்டர் மெஷின் கொடுப்பவர்களே ஸ்டிக்கர் டிஸைனுக்கான சாஃப்ட்வேர்களையும் கம்ப்யூட்டரில் நிறுவிவிடுவார்கள். அதனால், சாஃப்ட்வேர் செலவு ஏதும் வராது. அதுதவிர, ஆரம்ப கட்ட செலவுகளுக்காக 5,000 ரூபாய் வைத்துக்கொண்டால் போதும். ஆக, 50 ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் ஸ்டிக்கர் ஒட்டும் தொழிலைத் தொடங்கிவிடலாம்.
கடை வைப்பதற்கு பெரிய அளவில் இடமோ, ஷோரூமோ தேவையில்லை. கம்ப்யூட்டரையும், கட்டிங் மெஷினையும் வைக்கக்கூடிய அளவுக்கு இடம் இருந்தாலே போதும். கடையின் அளவு முக்கியமல்ல... அதை எந்த இடத்தில் வைக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம். ஆட்டோ மொபைல் ஷோரூம்கள், ஸ்பேர் பார்ட்ஸ் அதிகமாக விற்கும் ஏரியா, மெக்கானிக்குகள் அதிகம் இருக்கும் பகுதி போன்ற இடங்களிலும், வாகனங்களைப் பதிவு செய்யும் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அருகிலும் கடை வைக்கலாம்.
ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடைகள், மெக்கானிக் ஷாப்கள் போன்ற இடங்களில் கடையைப் பற்றிச் சொல்லும் சின்ன நோட்டீஸ்களை விநியோகித்து வைத்தால், அவர்கள் நல்ல வாய்ப்புகளைச் சொல்வார் கள். அடுத்ததாக என்னென்ன மாடல்களில் எல்லாம் ஸ்டிக்கர் இருக்கிறதோ, அதை எல்லாம் மக்கள் பார்வையில் படும்படி கடைக்கு வெளியே ஒட்டி வைக்க வேண்டும். அதைப் பார்த்து பலரும் கடையை நாடி வர வாய்ப்பிருக்கிறது.
நல்ல ஆட்டோமொபைல் பொருட்கள் விற்பனை ஆகும் ஏரியா என்றால் ஒரு நாளைக்கு இருபதிலிருந்து முப்பது டூவீலர்களுக்கும், பத்திலிருந்து இருபது கார்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டித் தரமுடியும். இதர பகுதிகள் என்றால் குறைந்தது பத்து டூ வீலர்களுக்காவது ஸ்டிக்கர் ஒட்ட வாய்ப்பு கிடைக்கும். இந்த இடங்களில் ஏற்கெனவே பலரும் இதேபோன்ற கடைகள் வைத்து இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது டிஸைன்களை அறிமுகம் செய்து, போட்டியைச் சமாளிக்கலாம்.
குறைந்தபட்சம், நான்கு வண்டி களுக்கு ஒட்டக்கூடிய பெரிய ‘ஒளிரும் ஸ்டிக்கர் ஷீட்’ 30 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதே அளவு, சாதாரண கலர் ஸ்டிக்கர் ஷீட்’ 8 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த இரண்டு வகைகளை சேர்த்து ஒட்டினால் 100 ரூபாய் வரை வருமானம் பார்க்கமுடியும். இரண்டு சக்கர வண்டியின் முன் மற்றும் பின் உள்ள நம்பர் பிளேட் ஒட்டித்தருவதற்கு 30 ரூபாய் வசூலிக்கலாம். கார் என்றால் நூறு ரூபாய்வரை பெறலாம். பைக்கின் பக்கவாட்டில் டிஸைன் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு 100 ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். கார் வைத்திருப்பவர்கள் 250 ரூபாயில் இருந்து 500 வரை செலவு செய்கிறார்கள்.
இப்போது புதுப்புது மாடல்களில் ஸ்டிக்கர்கள் வந்திருக்கின்றன. சில வாடிக்கையாளர்கள் அரசியல் தலைவர்களின் போட்டோவை ஒட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய போட்டோவையேகூட வண்டியில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொள்ள விருப்பப்படுவார்கள். அப்படியான உருவத்தை நாமே ஸ்டிக்கர் செய்துதந்து கூடுதலாக வசூலிக்கலாம்.
அதோடு போலீஸ், அட்வகேட், டாக்டர் போன்ற துறை சார்ந்த ஸ்டிக்கர் களையும் வாடிக்கையாளர்கள் விருப்பப்படும் வகையில் வாசகங்களையும் கொடுத்து அசத்தி, கூடுதல் கஸ்டமர்களைப் பிடிக்கலாம்.
இப்படி வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருமானம் பார்ப்பதோடு, அரசு விழிப்பு உணர்வு பிரசார ஸ்டிக்கர்கள், கடைகளுக்கான விளம்பர ஸ்டிக்கர்கள் போன்றவற்றை அச்சிட்டுக் கொடுப்பதிலும் லாபம் பார்க்கலாம். இவற்றைத் தவிர கம்பெனி பெயர், வீட்டின் முன்னால் வைக்கும் பெயர் பலகைகள் எழுதுதல், ஸ்கூல் பைகளில் ஸ்டிக்கர்களை பிரின்ட் செய்து தருவது போன்ற ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
செலவு என்றால் கடை வாடகை, ஒரு ஆளுக்கு சம்பளம், மின்சாரக் கட்டணம், போன் பில் இவை மட்டும்தான். குறைந்தது ஐயாயிரம் ரூபாய் இதற்கு செலவு ஆகும் என்று வைத்துக்கொண்டால் கூட ரூபாய் 15,000 வரை வருமானம் பார்க்கமுடியும்.
கீ செயின்கள் சின்னச் சின்ன பொம்மைகள், காரில் வைக்கிற அழகுப் பொருட்களை வாங்கி வைத்தால் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.
என்ன... இது டக்கர் பிஸினஸ்தானே!

ரெடிமிக்ஸ் சிமென்ட், மணல், ஜல்லி



 ரெடிமிக்ஸ் சிமென்ட், மணல், ஜல்லி 


ரெடிமிக்ஸ் உங்க ஊருக்கு வந்தாச்சா..?

தொழில்

ரெடிமிக்ஸ்
உங்க ஊருக்கு வந்தாச்சா..? 
மி ன்னல் வேக முன்னேற்றம் இன்று கட்டுமானத் துறையில்!
பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது தளம் போடும் பணி. இரண்டாவது தளத்துக்கான கான்க்ரீட் போடவேண்டும். ஜல்லிக்கல் சப்ளை செய்பவர் இழுத்துக்கொண்டே இருக்கிறார். ஜல்லி டிமாண்ட் காரணமாக, விலையும் ‘ஜிவ்’வென ஏற... ஒருபக்கம் பட்ஜெட் கவலை... இன்னொருபக்கம், குறித்த நேரத்தில் தளம் போட்டாகவேண்டும் என்ற வீட்டு உரிமையாளரின் நெருக்குதல்... தவித்துப் போனார் இன்ஜினீயர் ராகவ்!
அவருடைய போன் ஒலிக்க... எதிர்முனையில் நண்பர் சுதர்சன். பேச்சு வாக்கில் தன் பிரச்னையைச் சொல்ல... சூப்பராக ஐடியா கொடுத்தார் அவர். ‘இதுக்கு ஏன் கவலைப்படறே! ரெடிமிக்ஸைக் கொண்டுவரச் சொல்லு! இரண்டு நாள் போடற தளத்தை, மூணே மணி நேரத்திலே முடிச்சுடுவாங்க. கலவையும் தரமா இருக்கும்’’ என்றார்.
‘‘இல்லையே! பட்ஜெட் கட்டுப்படியாகாதே...’’ என்று இழுத்தார் ராகவ்.
‘‘முயற்சிக்காமலே முடிவெடுக்காதே... சிமென்ட், மணல், ஜல்லி விலையை எழுது... அடுத்து, சித்தாள், மேஸ்திரி கூலி, அப்புறம் கலவை மெஷின் வாடகை... வேறென்ன செலவு... அதையும் பட்டியலில் சேர்த்துக்கோ! ரெடிமிக்ஸ் சப்ளை பண்றவங்ககிட்ட ரேட் விசாரி! ஒருவேளை அதைவிட ரெடிமிக்ஸ் ரேட் கொஞ்சம் கூடுதலா வந்தாலும் பரவாயில்லை. உனக்கு நேரம் மிச்சமாகுமே... அவசர நேரத்தில் பட்ஜெட் பார்க்கலாமா..? தாராளமாக வாங்கிடலாம்!’’ என்றார். சரி என்று விசாரித்தால், ரெடிமிக்ஸ் கான்க்ரீட் என்பது ஒரு க்யூபிக் மீட்டருக்கு சுமார் 3,000 ரூபாய் வரை என்றார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் நார்மலாக ஏற்படும் செலவைவிட, 5,000 ரூபாய் குறைவாகவே வந்தது. உடனே, ரெடிமிக்ஸ் கலவையை வாங்கினார்... வேலையை முடித்தார் ராகவ்.
ந கரங்கள் கான்க்ரீட் காடுகளாக மாறிக்கொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையினர் புதிய மாற்றங்களை வரவேற்கத் தயாராகிக்கொண்டே இருக் கின்றனர். ரோட்டை அடைத்து கல், மணல், சிமென்ட் கொட்டி கலவை கலந்து, எறும்பு வரிசை யாக சித்தாள்கள் சிமென்ட் சட்டிகளைக் கைமாற்ற, வாரக் கணக்காக தளம் போட்ட காலம் போயே போய்விட்டது. ஒரு போன் போட்டால், வண்டி நிறைய கலவை வருகிறது. அடுத்த போன் தகவலில் அந்தக் கலவையை பம்ப் செய்து மேலேற்றி, அதிகபட்சம் ஆறு மணிநேரத்தில் எவ்வளவு பெரிய தளத்தையும் போட்டு முடித்துவிடுகிற டெக்னாலஜி வந்துவிட்டது. இதன் பின்னணியில் இருப்பது ரெடிமிக்ஸ் கலவை!
சின்னச் சின்ன சிக்கல்கள் தான் திடீர் புதுமைகளைக் கொண்டுவரும் என்பதில் ரெடிமிக்ஸ் மாற்றமும் ஒன்று!
நெருக்கமான தெருக்கள், சதா வாகனப் போக்குவரத்து, ஆட்கள் போதாத நிலை, கலவைப் பொருட்களில் ஏதாவது ஒன்றுக்கு திடுமென ஏற்படும் தட்டுப்பாடு என்று கட்டடத் துறையில் பல சிக்கல் கள். இந்தக் கவலையைப் போக்க வந்திருக்கிற ரெடிமிக்ஸை, செட்டிநாடு சிமென்ட், டால்மியா சிமென்ட் உள்ளிட்ட பல பெரிய சிமென்ட் நிறுவனங்களே பிளான்ட் போட்டு கலவையைத் தயாரித்து விற்க முன்வந்திருக்கின்றன. இதுதவிர, கட்டடத் துறையில் புகழ்பெற்ற எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களும் கலவையை கலந்து சப்ளை செய்யும் பிளான்ட்களை வைத்திருக் கின்றன.
‘‘இந்தக் கலவைகளில் என்ன விகிதத்தில் மணல், சிமென்ட், கற்கள் சேர்க்கவேண்டும் என்று கம்ப்யூட் டரில் புரோகிராம் செய்துவிட்டால், துளி பிசிறு இல்லாமல் கலவை இயந்திரம் கலந்து கொடுத்துவிடும். இதனால், பில்டர்களுக்கு ரெடிமிக்ஸ் கலவை மேல் அதீத நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் செட்டிநாடு சிமென்ட் சார்பாக நிறுவப்பட்டிருக்கும் ரெடிமிக்ஸ் பிளான்ட்டின் மேனேஜர் வி.சங்கரதாஸ்.
கலவைக்குத் தேவையான சிமென்ட் மூட்டைகளை அடுக்கவும், பல லாரி மணல் மற்றும் ஜல்லியைக் கொட்டி வைக்கவும் சுமாராக 10 கிரவுண்ட் இடமும் இவற்றை வாங்கி ஸ்டோர் செய்துகொள்ள சுமார் ஒரு கோடி ரூபாய் வரையான முதலீடும் தேவைப்படும். இதில் அந்த பிளான்ட் மெஷினின் விலையும் அடங்கும். கலவையை எடுத்துச்செல்ல லாரிகள் கைவசம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால், வாடகைக்கு லாரி தர ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிளான்ட் அமைப்பதற்கு நான்கைந்து பேர் ஒன்றாக முதலீடு செய்து, பார்ட்னர்ஷிப் முறையிலும் தொழில் செய்யலாம். இதற்கு வங்கிக் கடனும் கிடைக்கும். இதிலேயே கலவையை எடுத்துச்செல்லும் வாகனங்களை வாங்கி, அதை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்கலாம். இதுதவிரவும் கலவை டெலிவரி செய்யும் இடத்தில், அதாவது தளம் போடும் இடத்தில் ஒரு வருமான வாய்ப்பு இருக்கிறது. அது - கலவையைக் கட்டடத்தின் மேலே கொண்டு செல்லும் பம்ப்பிங் மெஷின் வைத்துக்கொள்வது!

முதல் மாடிக்கு தளம் போடுவதைவிட, இரண்டாவது மாடிக்கு சற்று கூடுதல் செலவு பிடிக்கும். ஐந்தாவது மாடி என்றால் இது கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். உயரம் செல்லச் செல்ல, கலவையை சுமந்து செல்ல ஆள்கூலி பெருகுவதால் வரும் செலவு இது! லேட்டஸ்ட் நிலவரப்படி, லாரியில் உள்ள ரெடிமிக்ஸ் கலவையை, பம்ப்பிங் மெஷினில் போட்டால் அது ரப்பர் குழாய் வழியே மேலே தள்ளி தேவைப்படும் தளத்தில் டெலிவரி செய்கிறது. பத்து, இருபது மாடிகள் என்று அநாயசமாக எழும்பும் இந்தக் காலகட்டத்தில் இந்த முறையில்தான் தளம் போடுகிறார்கள். மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் இருக்கும் உலகின் இன்றைய மிக உயர இரட்டைக் கோபுரங்களான ‘பெட்ரோனாஸ் டவர்ஸ்’ இப்படித்தான் தளமிடப்பட்டது. இந்த பம்ப்பிங் மெஷின்கள் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் உயரம் வரை கலவையைத் தள்ளிச் செல்லும்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் இதுபோன்ற கலவை இயந்திரங்களையும் பம்ப்பிங் மெஷின்களையும் தயாரிக்கும் ‘ஸ்விங் ஸ்டெட்டர்’ நிறுவனம் இருக்கிறது. கோலாலம்பூர் ‘பெட்ரோனாஸ் டவர்ஸ்’ கோபுரத்தைக் கட்டப்பட்டதே இவர்களது நிறுவன இயந்திரங்களைக் கொண்டுதான்! ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு இந்திய கிளையும் இருக்கிறது. இந்தியாவின் கட்டுமானத்தில் 90% பங்களிப்பு செய்யும் இதன் நிர்வாக இயக்குநர் ஆனந்த் சுந்தரேசன், ‘‘மிகப் பிரமாண்டமாக வளர்ந்துவரும் தொழில் இது. 1999-ல் 27 ஊழியர்களுடன் துவங்கப்பட்டு, இன்று 460 ஊழியர்கள்... டர்ன் ஓவரில் பல மடங்கு வளர்ச்சி... என்று நாங்கள் அடைந்துள்ள முன்னேற்றமே இதற்கு சாட்சி. எங்கள் ஃபேக்டரியில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆறு ரெடிமிக்ஸ் இயந்திரங்களைத் தயார் செய்ய முடிகிறது. இந்த அளவுக்கு மார்க்கெட்டில் டிமாண்ட் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே கட்டடத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் தேவையும் இதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம். அடுத்த 10 வருடங்களில் இந்த வளர்ச்சி மேலும் பல மடங்கு அதிகமாகும் என்பது எங்கள் கணிப்பு’’ என்கிறார்.
இவர்களது நிறுவனமே பம்ப்பிங் மெஷின்களையும் தயார் செய்கிறது. ‘‘திருச்சி, மதுரை, சேலம், கோவை போன்ற நகரங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி இருப்பதால், அங்கெல்லாம் புதியவர்கள் பலர் இத்தொழிலுக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். பிளான்ட்களில் இருந்து கான்க்ரீட்டைக் கொண்டு செல்லும் டிரக்குகளை வாங்கி வைத்து, அதில் வாடகை வருமானம் பார்க்கிற இளைஞர்களும் இருக்கிறார்கள். ரெடிமிக்ஸின் வளர்ச்சி, ஆட்டோமொபைல் துறைக்கும் பெரிய அளவில் உதவி இருக்கிறது.
கட்டுமானத் துறையில் இருக்கிற பெரிய நிறுவனங்கள் சில, தங்களுக்கென பிளான்ட் வைத்திருக் கிறார்கள். சிலர் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டை முடக்க விரும்பாமல், எப்போதெல்லாம் சிமென்ட் தேவையோ, அப்போதைய தேவைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அனைவரும் இந்த ரெடிமிக்ஸ் பக்கம் திரும்பக் காரணம், இந்த சிமென்ட் கலவையின் நம்பகத் தன்மையும் அதன் அதிகமான உழைக்கும் காலமும்தான். இந்தக் கலவைக்கான ஃபார்முலாவை ஒரு முறை பிளான்ட்டில் பதிவு செய்துவிட்டால், அதை மாற்ற 7 விதமான பாஸ்வேர்ட்கள் தேவைப்படும்’’ என்றார் ஆனந்த் சுந்தரேசன்.
இவரது இண்டஸ்ட்ரி தொடர்பான பணிகளைக் கற்றுத்தரும் பயிற்சி வகுப்பு ஒன்றையும் இவர்களது வளாகத்திலேயே துவங்கி இருக்கிறார்கள். 30 பேர் கொண்ட டீம் இந்த கோர்ஸை முடித்து மிக கட்டுமானத்துறை பணிகளில் செட்டில் ஆகி இருக்கிறார்கள்.
தமிழகத்தின் இரண்டாம் நகரங்கள்கூட கட்டுமானத்துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. வீடு கட்டுபவர்களாக இருந்தாலும் சரி, வருமானம் பார்க்க ஆசைப்படுபவர்களாக இருந்தாலும் சரி - அனைத்து நகரத்து மக்களும் கட்டுமானத் துறையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் வரப்பிரசாதமாகவே இருக்கிறது ரெடிமிக்ஸ் துறையின் வளர்ச்சி.
ரெ டிமிக்ஸ் மெஷின்கள் சுமார் பத்தடி உயரம் கொண்டவையாக இருக்கின்றன. இதன் உள் அமைப்பு ஸ்பிரிங் வளையங்கள் போன்ற அமைப்பில் இருக்கிறது. ‘‘இதனுள் 6 டன் அளவு வரை கலவைகளை ஸ்டோர் செய்யமுடியும். சுமார் 6 மணி நேரம்வரை கலவைகள் உடனே கெட்டிப் பட்டுப் போகாமல் இருக்க... ஸ்பெஷல் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. அதேசமயம், லாரியில் ஏற்றப் பட்ட நிமிஷம் முதலே இந்த கன்டெய்னர் உருளை சுற்றிச் சுழன்றுகொண்டே இருக்கும். சாலைகளில் போகும் ரெடிமிக்ஸ் லாரிகளின் பின்பக்கம் இருக்கும் இந்த உருளைகள் சுற்றிக்கொண்டிருந்தால் லோட் செய்யப் பட்டிருக்கிறது என்றர்த்தம்’’ என்கிறார் ஆனந்த் சுந்தரேசன்.

டைனமோ டார்ச் லைட்டு - Dynamo Torch Light

டைனமோ டார்ச் லைட்டு - Dynamo Torch Light

டைனமோ, டைலாமோ... டார்ச் லைட்டு தூளுமா!
‘‘டைனமோ டார்ச்லைட் புதுசா மார்க்கெட்டுக்கு வந்திருக்கு.
பேட்டரி இல்லாமல் கைகளால் அழுத்தினாலே,
டைனமோவில் பவர் ஏறி லைட் எரியும்! அ
ந்த டார்ச்சை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
சென்னைக்கு வந்த இடத்தில் லாபம் பார்க்கலாமேனு யோசித்தேன்...
என்ன சொல்றீங்க?’’ என்று சென்னை பாரிமுனையில் இருந்து
தொலைபேசியில் ஆர்வமாகப் பேசினார், வேலூர் வாசகர் சரவணன்.
ஆ ர்வத்துக்கு பரிசாக ஆயிரம் ரூபாயைக் கொடுத்தோம். நாம் செல்லும் முன்பே பல கடைகளில் ஏறி இறங்கி விலையை விசாரித்து வைத்திருந்தார்.
நேராக ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் புகுந்து 60 ரூபாய் ரேட்டில் 16 டைனமோ டார்ச் லைட்களை வாங்கினார். அங்கேயே தன் வியாபாரத்தைத் தொடங்கி விட்டார்.
எதிர்ப்பட்ட ஒரு ஆளிடம் டைனமோ டார்ச் பற்றி ஆதியோடு அந்தமாக விளக்கி, வியாபாரத்துக்கு அடி போட்டார். ஆனால், அந்த பார்ட்டி அவசர வேலையாக சட்டென்று பஸ்ஸில் ஏறிவிட்டார்.
ஆனாலும், சோர்வடையாமல் ஒரு ஒரு டி.டி.பி கடைக்குள் புகுந்தவர், அங்கிருந்தவர்களைப் பார்த்து பெரிதாக ஒரு வணக்கத்தைப் போட்டார். ‘‘ஏன் இவ்வளவு டல் வெளிச்சத்தில் வேலை பார்க்கிறீங்க..? கரன்ட் கட் ஆயிடுச்சா? இதோ பாருங்க, இந்த டார்ச் லைட்டை பேட்டரி போடவோ, சார்ஜ் பண்ணவோ தேவையில்லை. டைனமோ சார்ஜ் லைட். ரொம்ப நேரம் கம்ப்யூட்டரில் டைப் அடித்து களைச்சுப்போனால் நாலு தடவை இதை அழுத்தி எக்ஸர்சைஸ் பண்ணிக்கலாம். இதனால், லைட்டோடு சேர்த்து உங்களுக்கும் சார்ஜ் ஏறிக்கும்’’ என்று பேசிப்பேசியே ஆளை மயக்கிவிட்டார். நூறு ரூபாய்க்கு முதல் லைட் கைமாறியது.
சட்டென்று பஸ் பிடித்து சேப்பாக்கத்துக்குச் சென்றார். பஸ் ஸ்டாப்பிலேயே சிக்கினார் இன்னொரு பார்ட்டி.
‘‘சார்... புது மாடல் டைனமோ லைட்! சைக்கிளில் டைனமோ பேட்டரி இருக்கும் இல்ல, அதே சிஸ்டம்தான். இந்தப் பிடியை பத்து தடவை அழுத்தினால் போதும், ஒரு மணி நேரம் லைட் பவர்ஃபுல்லா எரியும். சாதா லைட்னா, அடிக்கடி பேட்டரி செல் வாங்கிப் போட வேண்டி இருக்கும்... மாசத்துக்கு இருபது, முப்பது ரூபாய் செலவாகும். அப்படியே போனா, வருஷத்தில் முன்னூறு, நானூறு செலவாகும். இந்த லைட்டை வாங்கினா, ஐந்து வருஷம் வரை உழைக்குதுனு வெச்சுக்கங்க. ஆயிரக்கணக்கில் மிச்சம்தானே!’’ என்று சரவணன் அடுக்கிக்கொண்டே போக, பார்ட்டியின் கைகள், தானாகவே பாக்கெட்டுக்குப் போனது.
அடுத்து, ஒரு கார்மென்ட்ஸ் கடையில் நுழைந்த சரவணன், அங்கு துணியை வெட்டிக் கொண்டிருந்தவர் களிடம், தன் பொருளின் அருமை, பெருமைகளை அள்ளி வீசினார்.
தைத்துக்கொண்டிருந்த பெண்கள் ஆர்வமாக லைட்டைக் கையில் வாங்கிப் பார்த்தார்கள். ‘‘என்ன ரேட்?’’ என்று கேட்டதும், ‘‘120-னு விக்கறது... நீங்க எத்தனை பீஸ் எடுக்கப் போறீங்கனு சொல்லுங்க. விலையைப் பார்த்துக்கலாம்’’ என்றார் சகாயம் செய்பவரைப் போல!
தங்களுக்குள் பேசி முடிவெடுத்து மூன்று லைட்களை வாங்கினார்கள். 300 ரூபாய்க்கு 25 ரூபாய் குறைத்து வாங்கிக்கொண்டார்.
கடைகள்தான் இலக்கு என்பது போல கடை, கடையாக ஏறி இறங்கினார். ‘‘தெருவில் போகிறவர் களிடம் விற்கலாமே...’’ என்றபோது, ‘‘கடையில் இருப்பவர்கள்தான் இப்படிப்பட்ட பொருட்களை வாங்கமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் கடையைச் சாத்திவிட்டு, கிளம்பும்போது இந்த ஃபேன்ஸி அயிட்டங்கள் விற்கிற கடைகள் மூடியிருக்குமே... அப்புறம் எங்கே போய் பொருள் வாங்குவார்கள். அவர்களைக் குறிவைத்து இப்படியான பொருட்களுடன் போனால், வியாபாரம் நன்றாக இருக்கும். இன்னொன்று அவர்களிடம் எப்போதும் காசு இருக்கும். மனசு லேசாக சலனப்பட்டாலே வாங்கிவிடுவார்கள்!’’ என்று லாஜிக் சொன்னபடியே, ஒரு மெடிக்கல் ஷாப்புக்குள் நுழைந்தார்.
அங்குபோய் சரவணன் டெமோ காட்ட, ‘‘நீ சொல்றது எல்லாம் சரிதான்... ஆனால், டாக்டர் அட்வைஸ் இல்லாமல் நான் எந்த எக்ஸர்சைஸும் செய்றதில்லை... அதனால், எனக்கு வேண்டாம். பக்கத்திலேயே டாக்டர் இருக்கிறாங்க. போய்க் கேட்டுப் பாருங்க...’’ என்றார் கேலியான குரலில்.
‘‘டாக்டருக்கு டார்ச் லைட் தேவைப்படுமே... இருங்க கேட்டுட்டு வர்றேன்...’’ என்று க்ளினிக் உள்ளே புகுந்தார். டாக்டரும், ‘‘என்ன?’’ என்றபடி பார்க்க, டக்கென்று தன் டார்ச் லைட்டை எடுத்துக் காட்டி விளக்க ஆரம்பித்தார் சரவணன். ஆர்வமாக கையில் வாங்கிப்பார்த்த டாக்டர், விலையை விசாரிக்க ஆரம்பிக்க, ‘‘ஒரு கன்சல்டேஷன் காசுதான் டாக்டர்! விலையை யோசிக்காதீங்க...’’ என்று உரிமையோடு பேசினார். காரியம் வெற்றியானது.
வெற்றிவீரராக வெளியில் வந்தவர், மெடிக்கல் ஷாப்காரரிடம், ‘‘டாக்டர் ஒரு லைட் வாங்கி இருக் காங்க. நீங்க ஒரு கஸ்டமர் பிடிச்சுக் கொடுத்ததால, கமிஷன் ரேட்ல தர்றேன். இந்தாங்க... 90 ரூபாய் கொடுங்க...’’ என்று அதிரடியாகப் பேச, அசந்து போன மெடிக்கல்காரர் ஒரு லைட்டை வாங்கினார்.
அடுத்து, திருவல்லிக்கேணி பக்கத்தில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தவர், பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்து காத்திருந்தவர்களிடம், ‘‘அண்ணே... இந்த டைனமோ லைட்டை வாங்கிப் பாருங்க. பிரகாசமா எரியும்’’ என்று ஆரம்பித்து, பக்கத்து இலை சிக்கன் பிரியாணிக்கே டார்ச் அடித்தார். ‘‘யாருப்பா அது... எங்க கடைக்குள்ளே தனிக்கடை போடறது?’’ என்று கல்லாவில் இருந்து குரல் கேட்டது. கல்லாவைத் திரும்பிப் பார்த்தார் சரவணன். அங்கே ஒரு சார்ஜர் டார்ச் லைட் பிளக்கில் மாட்டப்பட்டிருந்தது.
‘‘சார்... என்ன சார் இன்னும் சார்ஜ் போட்டு பவரை வீணாக்கிட்டிருக்கீங்க! இப்படி ‘டக்டக்’னு பத்துமுறை அழுத்தினா போதும். அப்படியே கண்ணு கூசற அளவுக்கு லைட் அடிக்கும்’’ என்று சொல்லிக்கொண்டே டெமோவும் காட்டினார்.
டைனமோ லைட்டின் பிரகாசத்தில் கல்லாக்காரர் கொஞ்சம் டைலமாவுக்குப் போனார். அவரது முகத்தில் தெரிந்த மாற்றத்தில், பேரம் படியும் என்று புரிய கொஞ்சம் அழுத்தமாக கேன்வாஸ் செய்து ஒரு லைட்டைத் தள்ளிவிட்டார். வாங்கிக் கொண்ட கடைக்காரர், பத்து ரூபாயும் ஐந்து ரூபாயுமாக 85 ரூபாயை எண்ணி வைத்தார் கல்லாகாரர். ‘‘கட்டுபடி ஆகாதுங்க’’ என்று கொஞ்சி, கெஞ்சி பேசி ஐந்து ரூபாயை எக்ஸ்ட்ராவாக வாங்கிக் கொண்டார்.
அந்த நேரத்தில், சாப்பிட்டு முடித்து பில்லோடு வந்தவர்கள் எட்டிப் பார்க்க, ‘‘சூப்பர் லைட் சார்...’’ என்று கல்லாக்காரரே கேன்வாஸ் செய்தார்.
பில்லைக் கொடுத்துவிட்டு, லைட்டைக் கையில் வாங்கிப் பார்த்தவர், நாலைந்துமுறை லிவரை அழுத்திப் பார்த்தார். பிறகு லைட்டை எரியவிட்டுப் பார்த்தார். திருப்தியாக தலையசைத்துக் கொண்டு பர்ஸைப் பிரித்தார்.
பாதிக்கிணறு தாண்டிய உற்சாகத்தில், டிராஃபிக் நிறைந்த திருவல்லிக்கேணி ஹைரோடு சிக்னலுக்கு வந்தார் சரவணன்.
இரண்டு சக்கர வண்டியில் சிக்னலை தாண்டி போன ஒருவர், லைட் வெளிச்சத்தை பார்த்தும் டக்கென்று பிரேக் போட்டு விட்டு, விலையை விசாரிக்க ஆரம்பித்தார். ‘‘நூற்றி இருபது ரூபா சார்’’ என்று சரவணன் சொல்ல, ‘‘நூறு ரூபாய் வைத்திருந்தேன். ஹோட்டலில் இருபது ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டேன். எண்பது ரூபாய் தான் இருக்கு, அதற்கு ஏற்றமாதிரி நல்ல லைட்டாகக் கொடுங்க...’’ என்று காசை நீட்ட, ‘‘சரி கொடுங்க’’ என்று காசை வாங்கிக் கொண்டு லைட்டை கொடுத்த சரவணன், ‘‘என்னை பார்த்தசாரதி கோயில் பக்கமாக இறக்கி விட்டுடுங்க... ப்ளீஸ்...’’ என்று லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டார்.
கோயில் பக்கம் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்க, டக்கென்று பக்கத்தில் இருந்த அரசு அலுவலர் ஒன்றிய சங்க கட்டடத்துக்குள் போனார் சரவணன். அங்கு தீவிர டிஸ்கஷனில் இருந்த அரசு ஊழியர்கள் என்னவென்று விசாரிக்க... லைட் மேட்டரை சொல்லி விளக்கம் ஆரம்பித்தார். ‘‘தம்பி, என்ன சொல்றீங்க... ஏதாவது ஃப்ரீ உண்டா?’’ என்றார் ஒருவர்.
‘‘பேருதான் சார் லைட்! ஆனா, இதோட செயல்பாடு செம வெயிட். கரகரனு நாலு அமுக்கு அமுக்கி சார்ஜ் பண்ணினா, மினி ட்யூப் லைட் கணக்கா பளிச்னு எரியும். மார்க்கெட்டுக்கு புது பிராடக்ட் சார்... இன்னிக்கு விலை 100 ரூபாய்!’’ என்று சரவணன் சொல்ல, ‘‘அட தம்பி... நல்லாப் பேசுறியே!’’ என்று சொன்ன அந்த அலுவலர், தான் ஒன்றை வாங்கிக்கொண்டதோடு, தன் சகாக்களும் சிபாரிசு செய்து மூன்று லைட்களை வாங்கிக்கொள்ள வைத்தார்.
அங்கிருந்து அப்படியே நடைபோட்டு ஒரு டீக்கடைக்கு வந்தார். ஒரு டீ ஆர்டர் செய்துவிட்டு, வியாபாரத்தை ஆரம்பித்தார்.
‘‘அடிக்கடி கரன்ட் கட் ஆகுதுல்ல சேட்டா... அதுக்கு அருமையான வழியிருக்கு... இதுக்கு ‘டைனமோ லைட்’னு பேரு... பார்த்திருக்கீங்களா..?’’ என்றார். சேட்டா ஆர்வமாகிவிட்டார். ‘‘எங்கே கிடைக்கும் அந்த லைட்?’’ என்று கேட்டார். டக்கென்று பையில் இருந்து லைட்டை வெளியே எடுத்துக் காட்டினார்.
இந்த ட்விஸ்டை எதிர்பார்க்காத சேட்டா, ‘‘முதலாளி இல்லையே...’’ என்று கொஞ்சம் ஜகா வாங்க, ‘‘சேட்டா... நீங்கதான் முதலாளினு எனக்குத் தெரியும். நல்ல பொருள் தேடி வரும்போது வாங்கிப் போடுங்க...’’ என்று கேன்வாஸ் செய்ய ஆரம்பித்தார்.
லைட்டை வாங்கி இருட்டாக இருந்த பக்கத்தில் வெளிச்சத்தை அடித்துப் பார்த்தார். திருப்தி வந்தவுடன், விலையே கேட்காமல் ‘‘பத்து ரூபாய் குறைச்சுக்கோ... சரியா?’’ என்றபடி எடுத்து கல்லாப் பெட்டிக்குள் போட்டார்.
‘‘வெளியிலே 120 ரூபாய்க்கு விற்கறேன். நீங்க பத்தைக் குறைச்சுக்கோங்க...’’ என்றார் சரவணன். சேட்டா தெளிவாக எண்ணி 90 ரூபாயைக் கொடுத்தார்.
கட்டக் கடைசியாக ஒரு லைட் கையில் இருந்தது. ‘‘இதை விற்கப் போறதில்லை... நானே எடுத்துக்கப் போறேன்’’ என்றார் சரவணன். ‘‘உங்க வீட்டுக்கா..?’’ என்றதும், ‘‘இல்லை சார், சென்னையிலேயே இந்த டார்ச் இத்தனை பரபரப்பாக விற்பனை ஆகுதுன்னா... எங்க ஊர் வேலூரில் இன்னும் பரபரப்பாகப் போகும். அங்கே உள்ள கடைக்காரர்களிடம் ஆர்டர் பிடிச்சுக் கொடுக்கலாம்னு ஒரு ஐடியா வந்தது. அங்கே போய் விளக்கம்சொல்லி மாளாது. அதனால், இந்த டார்ச்சைக் கையில்கொண்டுபோய் காட்டி ஆர்டர் பிடிச்சுடுவேன். இந்த டார்ச்தான் இப்போ எனக்கு மூலதனம்’’ என்று சொல்ல, அசந்து போய் அவரைப் பார்த்தோம்.
‘‘ஆர்டர்களைப் பிடிச்சுட்டு அப்புறமா சென்னை வந்து மொத்தமாக வாங்கிட்டுப் போய் வியாபாரம் செய்ய வேண்டியதுதான்...’’ என்று பேசிக்கொண்டே கையில் இருந்த காசை எண்ணினார்.
1,425 ரூபாய் இருந்தது. ஆயிரம் ரூபாயை எண்ணி நம் கையில் கொடுத்துவிட்டு, மீதமிருந்த காசோடு புதிய மூலதனமான டார்ச்சையும் பையில் போட்டுக்கொண்டு கோயம்பேடு பஸ் ஏறினார் சரவணன்.

வீட்டு உள் அலங்காரத் தொழில்

வீட்டு உள் அலங்காரத் தொழிலில்

அழகில் வருதே, அசத்தல் வருவாய்!
 
வீட்டு உள் அலங்காரத் தொழிலில் இருக்கும் கோதண்டராமன் தம்பதி!
ஆ ள் பாதி, ஆடை பாதி என்பார்கள்... அலங்காரம் எத்தனை முக்கியமானது என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் பழமொழி! இது ஆளுக்கு மட்டுமல்ல... வீட்டுக்கும் பொருந்தும்.
வீட்டுக்குள் நுழையும்போதே, விருந்தினர்கள் நம்முடைய குணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு மனிதர்களின் நுட்பமான உணர்வுகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது வீட்டு அலங்காரம். தங்கள் ரசனையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருப்பதால், எல்லோருமே இப்போது வீட்டின் உள்அலங்காரத்தில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். அதனால், இன்டீரியர் டெக்கரேஷன் என்பது இப்போது நல்ல வரவேற்புள்ள தொழிலாக இருக்கிறது.
கொஞ்சம் கலை ரசனையும், ஆட்களை வைத்து மேற்பார்வை செய்யும் திறமையும் இருந்தால் போதும்... நீங்களும் இந்தத் தொழிலில் சிறப்பாகப் பிரகாசிக்கமுடியும்.
பல போட்டியாளர்கள் இருக்கிறார்களே என்பதைப்பற்றிக் கவலை வேண்டியதில்லை. இதில் கவனிக்க வேண்டியதே வாடிக்கையாளர்களின் திருப்தி, திருப்தி, திருப்தி... மனதுக்குப் பிடித்த வகையில் அழகான பொருட்ளையும் நம்பிக்கையான சர்வீஸையும் ஒருவருக்குக் கொடுத்தால் போதும். அவரே உங்கள் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவார். தரமும் நேர்த்தியும்தான் இத் தொழிலின் தாரகமந்திரம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர் யார்?
புது வீடு வாங்குபவர்கள் மட்டுமல்ல... வீட்டை புதுப்பிப்பவர்கள், அழகுபடுத்த நினைப்பவர்கள், அலுவலகங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்கள், பள்ளிக்கூடங்கள், நகைக்கடைகள், ஆஸ்பத்திரிகள் என எல்லையில்லாமல் பரந்து விரிந்து கிடக்கின்றன உங்கள் வாடிக்கையாளர் வட்டம்! தொழில் அதிபர்கள் முதல் தனியார், அரசு அதிகாரிகள் வரை அனைவரும் இதில் அடங்குவர்.
எவ்வளவு முதலீடு தேவைப்படும்?
உங்கள் கற்பனைத்திறனும் கடின உழைப்பும்தான் முதல் முதலீடு. அத்துடன் பொருட்கள் கிடைக்கும் இடம், விலை, போன்றவற்றைத் தெரிந்தும், சாம்பிள்களை(கேட்லாக்)கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும். மொத்த வியாபாரம் செய்பவர்களுடன் நன்கு பழகிக்கொள்வது உபயோகமாக இருக்கும். மற்றபடி பெரிய அளவில் அலுவலகமோ, இடவசதியோ தேவையில்லை. உங்களைத் தொடர்புகொள்ள ஒரு தொலைபேசி எண் இருந்தால் போதும். அதோடு, ஒரு ஆர்டரின்போது முதலில் பொருட்கள் வாங்க சில ஆயிரங்களைக் கையில் வைத்துக்கொண்டால் நல்லது.
என்ன மாதிரியான வேலை இது?
வீட்டை அழகுபடுத்துவதுதான் அடிப்படையான தேவை என்றாலும் இதில் பலவகைகள் இருக்கின்றன. வீட்டுச் சுவர்களுக்கு ஏற்ற வண்ணங்களில் பெயின்ட் அடிப்பது, அதற்கு ஏற்றமாதிரி திரைச் சீலைகள், கட்டில், சோபா விரிப்புகள் போன்றவற்றைத் தைத்துக்கொடுப்பது, அறைக்கு அழகுசேர்க்கும் விதமாக பூ ஜாடிகள், அலங்கார சுவர் ஓவியங்கள், சின்னச் சின்ன ஸ்டாண்ட்கள் போன்றவற்றை அமைத்துக்கொடுப்பது, முக்கியமாக மிகவும் பயனுள்ள வகையில் சமையலறையை உருவாக்கிக்கொடுப்பது என்று எல்லாமே இன்டீரியர் டிஸைனிங்தான்.
மேற்கூரைகளுக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கொண்டு டிஸைன் அமைப்பது போன்ற பெரிய வேலைகளை ஆரம்பத்தில் செய்யவேண்டாம். கொஞ்சம் அனுபவம் கிடைத்தபிறகு அதைத் தொடுவது நல்லது.
சுவர்களுக்கான வண்ணத்தைப் பொறுத்த வரையில், எப்போதுமே வெளிர் நிறங்களையே தேர்வு செய்யுங்கள். அடத்தியான வண்ணங்கள் அறையை இருட்டாகக் காட்டும். இப்போது வெளிப்புறச் சுவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்களைப் பயன்படுத்துவது ஃபேஷனாகி வருகிறது. வாடிக்கையாளரின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப வண்ணம் பூசிக் கொடுக்கவேண்டும்.
அதேபோல, விதவிதமான பெயின்ட்கள் இருக்கின்றன. வாடிக்கையாளரின் பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில் வண்ணம் பூசிக்கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கான பெட்ரூம் என்றால், வண்ணப் பூச்சுடன் சேர்த்து கார்ட்டூன் உருவங்கள், விலங்குகள் படம் போட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொடுக்கலாம். குழந்தைகள் பயன்படுத்தும் பாத்ரூமிலும் கார்ட்டூன் உருவங்கள் கொண்ட டைல்ஸ்களைப் பதித்துக்கொடுக்கலாம்.
இந்த சுவர் வண்ணங்களுக்கு ஏற்ற நிறங்களில் கதவு, ஜன்னல் களுக்கான திரைச் சீலைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை யும் அமைக்கவேண்டும். துணிகள் விற்கும் கடைகளிலேயே இதற்கென டெய்லர்கள் இருக்கிறார்கள். கதவு, ஜன்னல் திரைக்கான துணிகள் பல விதங்களிலும் பல விலைகளிலும் கிடைக்கின்றன.
படுக்கை அறை விரிப்புகள், தலையணை உறை களுக்கான கலரை சுவரின் வண்ணத்தை விட சற்று திக்கான கலரில் தேர்ந்தெடுக்கவேண்டும். குழந்தை களுக்கான அறையில் உள்ள மெத்தைக்கும், தலையணைக்கும் கார்ட்டூன், பொம்மைகள் உள்ளவாறு செலக்ட் பண்ணவேண்டும். ஃபர்னிச்சர் இன்டீரியர் என்பதும் இதேபோல தனிதுறைதான்.
எப்படி வேலை வாங்குவது?
மேற்சொன்ன வேலைகள் அனைத்துக்கும் தின சம்பளத்துக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதனால், தனியாக வேலையாட்களை வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதேசமயம், ஆரம்பத்தில் அவர்களை நேரடியாக வைத்து வேலை வாங்குவதும் கடினம். எனவே தின சம்பளம் எவ்வளவு என ஒன்றுக்கு நாலு இடத்தில் விசாரித்து, அதன் அடிப்படையில் வேலையை கான்ட்ராக்ட்டாக அந்தத்துறையில் அனுபவம் பெற்றவர்களிடம் ஒப்படைத்து விடுவது மிகவும் நல்லது. அவர்கள் வேலை செய்யும்போதே வேலைத்திறன் மற்றும் சிக்கல்களை அறிந்துகொண்டு பிறகு நேரடியாக ஆட்களை அமர்த்தி வேலை வாங்கலாம்.
அதேபோல, வாடிக்கையாளரிடம் டிஸைனிங் பற்றித் தெளிவாகப் பேசிக்கொள்ளவேண்டும். தேவைப்பட் டால், அட்வான்ஸ் மற்றும் பணம் தரும் விவரம் மற்றும் வேலை குறித்து அக்ரிமென்ட் கூட போட்டுக் கொள்ளலாம். அது இரு தரப்பினருக்கும் நல்லது. பில்டிங் இன்ஜினீயர்கள் தொடர்பும் இதில் பெரிய அளவில் உதவும்.
லாப விகிதம்
இன்டீரியர் வேலை என்பது வாடிக்கை யாளரின் குணத்தைப் பொறுத்தது. ஒருவர் 50,000 ரூபாய்க்கு வேலை கொடுக்கலாம், இன்னொருவர் ஒரு லட்ச ரூபாய்க்கும் ஆர்டர் கொடுக்கலாம். ஆர்டர் தொகையில், 15 முதல் 20% லாபம் வைத்துக்கொண்டால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய சுமையாகத் தெரியாது. பலரும் தேடி வருவார்கள்.
பெரிய அளவில் பண முதலீடு இல்லாமலே சிறப்பாகச் செய்ய ஒரு தொழில் காத்திருக் கிறது. செய்ய நீங்கள் ரெடியா..!

கண்கண்ணாடி மொத்த விற்பனைக் கடை - கூலிங் கிளாஸ் kan kannadi

கண்கண்ணாடி மொத்த விற்பனைக் கடை - கூலிங் கிளாஸ் kan kannadi 


கோடையில் கூல் பிஸினஸ்!
 உ ள்ளத்துக்குக் குளிர்ச்சி நல்ல எண்ணம்... உடம்புக்குக் குளிர்ச்சி நல்ல எண்ணெய்... கண்ணுக்குக் குளிர்ச்சி நல்ல கண்ணாடி... சவாலுக்கு நான் ரெடி... உங்க வசதி எப்படி?’ நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஸ்ரீதரன் நச்சென்று கடிதம் எழுதி இருந்தார்.
‘‘என்ன விற்கப் போறீங்க... எண்ணெயா... கண்ணாடியா?’’ என்ற கேள்வியோடு, ஸ்ரீதரனைப் பிடித்தோம்.
‘‘எண்ணெய் விற்கறதா... எந்தக் காலத்துல இருக்கீங்க... இன்னிக்குப் பசங்களுக்குத் தேவை கண்ணுக்குக் குளிர்ச்சியாக கண்ணாடிதான்...’’ என்றார் நாமக்கல் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ படிக்கும் ஸ்ரீதரன். நம்பிக்கையுடன் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தோம்.
சேலத்துக்குக் கிளம்பினார் ஸ்ரீதரன். கண்கண்ணாடி மொத்த விற்பனைக் கடையைத் தேடிப் பிடித்தவர், ஆயிரம் ரூபாயையும் கூலிங் கிளாஸ்களாக மாற்றினார்.
10 ரூபாய்க்கு குறைந்த விலை, 15 ரூபாய்க்கு உயர் வகை என இரண்டு வெரைட்டியாகப் பிரித்து கூலிங் கிளாஸ் வாங்கிய ஸ்ரீதரன், வியாபாரத்தில் இறங்கினார்.
உடம்பையே டிஸ்பிளே போர்டாக்கி, கூலிங் கிளாஸை கண்களிலும் முகத்திலும், பேண்ட் பாக்கெட்டிலும், சட்டை பாக்கெட்டிலும் செருகிக் கொண்டு புதிய பஸ் நிலையத்துக்குள் நுழைந்தார். இளைஞர் கூட்டம் வட்டமிட ஆரம்பித்துவிட்டது.
‘‘கூலிங் கிளாஸ் இல்லாம வெயில்ல கண்ணே அவிஞ்சு போயிடும் போலிருக்கு. என்ன ரேட்டு!’’ என ஒருவர் கேட்க, ‘‘இருபத்தஞ்சுல இருக்கு. நாற்பதிலிருக்கு. உங்க முகத்துக்கு இதுதான் எடுப்பா இருக்கும். நாற்பது ரூபாயைப் பார்க்காதீங்க..!’’ என்றபடி ஒரு கண்ணாடியை அவருடைய காதுகளில் செருகிவிட்டு, ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்று அவரை ஏற இறங்கப் பார்த்தார். ‘‘அண்ணே... அசப்புல சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்கீங்க. ஒரு காஸ்ட்லி கண்ணாடி ஆளை எப்படி மாத்திடுது பார்த்தீங்களா..!’’ என்று கொஞ்சம் மிகையாக நடித்து, அந்த சிங்கத்தைச் சாய்த்தார். முதல் போணி அங்கே ஆரம்பித்தது.
‘‘வெயிலும் ‘சுள்’ளுனு ஏறுது. அது ஏற ஏறத்தானே நமக்கு மார்க்கெட்டு...’’ என்ற ஸ்ரீதரன், தடாரென்று ஒரு பஸ்ஸுக்குள் ஏறி, ‘‘இது ‘வாளைமீனு’ பாட்டுக்கு ‘கானா’ உலகநாதன் போட்ட கண்ணாடி... லேட்டஸ்ட் ஹிட் மாடல்!’’ என்று கூவிவிட்டு உலகநாதனைப் போலவே கையை ஆட்டி அபிநயம் பிடித்தார்.
பாட்டுக்கு உடனடி பலனாக, பஸ்ஸுக்குள் இருந்த குழந்தை ஒன்று ‘‘அப்பா... வாளமீனு கண்ணாடி வாங்கித்தா!’’ என அடம்பிடித்தது. அந்தக் குழந்தையின் அப்பா விலை விசாரிக்க, கவருக்குள் இருந்து கண்ணாடியை எடுத்துக் கொடுத்தார் ஸ்ரீதரன். ஆனால், அந்தக் குழந்தை அடம் பிடித்து ஸ்ரீதரன் போட்டிருந்த கண்ணாடியையே வாங்கிக் கொண்டது. அதேவேகத்தில், அந்த பஸ்ஸிலேயே ஆறேழு கண்ணாடிகளை விற்றார்.
மெல்ல நகர்ந்து அடுத்த பஸ்ஸில் ஏறினார். ‘‘தூசு தும்பு, வெயிலிலிருந்து தப்பிக்கலாம். என்னை மாதிரி மூஞ்சி கோணலா இருக்கிற பார்ட்டிங்க, இந்த கண்ணாடியைப் போட்டா அஜீத் மாதிரி ஆகிடுவீங்க. ஃபார்ட்டி ருபீஸ்’’ என ஜாலியாக டயலாக் பேச, ‘‘வெயில் கொடுமை தாங்கலை... அதான் வாங்குறோம்!’’ என விளக்கம் சொல்லிக்கொண்டே இரண்டு பேர் ஆளுக்கு ஒரு கண்ணாடியை வாங்கினார்கள்.
மற்றவர்களும் ஆர்வமாகக் கையில் வாங்கிப் பார்க்க, சிலர் காசை எடுத்து நீட்ட... வியாபாரம் விர்ரிட்டது. அந்த நேரம் பார்த்து பஸ்ஸுக்குள் ஏறிய கண்டக்டர், ‘‘யார்யா அது... பஸ்ஸுக்குள் விக்கிறவன்..? அப்படியே பின்வாசல் வழியா இறங்கிப் போயிடு, இல்லே... லக்கேஜ், டிக்கெட்டைப் போட்ருவேன்’’ என்று மிரட்ட, நல்லபிள்ளையாக பஸ்ஸில் இருந்து குதித்தார்.
இரண்டு பஸ்ஸிலும் சேர்த்து இரண்டு டஜன் உயர் ரக கண்ணாடிகள் விற்றிருந்தன. குறைந்த விலை கண்ணாடியை ஸ்ரீதரன் வெளியிலேயே எடுக்கவில்லை. ‘‘வேகமாக விற்பனை நடக்கும் இடத்தில் வெரைட்டி காட்டி குழப்பக்கூடாது. ஒரே ரேட்... ஒரே குவாலிட்டி’’ என்று புதிய பிஸினஸ் தத்துவம் ஒன்றை உதிர்த்தபடி, பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியில் வந்தார்.
‘‘மணி 11.30 ஆகுது. அண்ணா பார்க்கிலே வெயிலைக்கூட பொருட்படுத்தாத காதலர்கள் கூட்டம் நிறைய இருக்கும்... வாங்க...’’ என்றபடி, பார்க் செல்லும் பஸ்ஸில் ஏறினார். உடம்பெல்லாம் கண்ணாடியாக இருந்த ஸ்ரீதரனைப் பார்த்த ஒருவர், ‘‘என்னப்பா... மொபைல் ஆப்டிகல்ஸா... என்ன ரேட்?’’ என்று வலிய விலை விசாரித்தார். பார்க் போய்ச் சேருவதற்குள் பஸ்ஸில் நாலைந்து கண்ணாடிகள் விற்று சாதனை (?) படைத்தார் ஸ்ரீதரன். பஸ்ஸை விட்டு இறங்கி விறுவிறுவென பார்க்குக்குள் புகுந்தவர், கற்பனை உலகத்தில் எதிர்கால வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த ஜோடிகளைத் தேடினார்.
‘‘கூலிங் கிளாஸ் வேணுமா மேடம்? சாருக்கும் நல்லா இருக்கும். வெளியில நாற்பதுனு விற்கிறேன். காதலர்களுக்கு மட்டும் 30 ரூபா. ஒரே கண்டிஷன்... ஜோடியாகத்தான் வாங்கணும்!’’ என புது ஸ்கீமை அறிவித்தார். அந்த ‘ஜோடி கண்ணாடி’ திட்டம் நன்றாகவே வேலை செய்தது. ‘‘உனக்கு இந்த மாடல்தான் அழகாயிருக்கும்’’ என காதலரும், ‘‘உங்களுக்கு இந்த கண்ணாடி எடுப்பா இருக்கு!’’ எனக் காதலியும் ஒருவரை ஒருவர் புகழ... ஸ்ரீதரனுக்கு நல்ல வேட்டை!
அப்படியே ஒரு சுற்று சுற்றி பூங்கா வாசலுக்கு வந்தபோது, நாற்பதும் 25-மாகப் பறந்தன கண்ணாடிகள். பேரம் பேசுகிற பார்ட்டிகளை குறைந்த விலை கண்ணாடியைக் கொடுத்து மடக்குவது என்று, விற்பனை டெக்னிக்கில் புலியானார் ஸ்ரீதரன். ‘‘சார்... எவ்வளவோ ஆடம்பரச் செலவு பண்றோம். கண்ணைப் பாதுகாக்க, கூல் பண்ண தயங்காதீங்க’’ என ஆரம்பிக்க, சட்சட்டென சில முகங்கள் ஸ்ரீதரனை நோக்கித் திரும்பின.
அதேவேகத்தில் ஆறு கண்ணாடிகள் விற்பனை ஆயின. ‘‘நிறைய லாபத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறதைவிட, லாபம் குறைந்தாலும் பரவாயில்லைனு இறங்கினால் வியாபாரம் விறுவிறுனு இருக்கும்’’ என ஒரிஜினல் விலையிலிருந்து இறங்கி வந்து வியாபார நுணுக்கம் காட்டியவர், அப்படியே பழைய பஸ் நிலையம் பக்கமாக நகர்ந்தார்.
அண்ணா சிலை ஓரமாக நின்று, பைக் பார்ட்டி களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்ணாடிகளை மாற்றி மாற்றி போட்டுக் காட்டினார். கையில் அடுக்கி, நீட்டிக்கொண்டு என விளையாட்டுக் காட்ட, பைக் நபர்கள் நிற்க ஆரம்பித்தனர். கண்ணாடிகளை மாறி மாறி பார்த்தவர்களிடம், ‘‘குறைஞ்ச விலை... பைக்குல வேகமா போறீங்க... தூசு அடிக்கிறதிலே இருந்து காப்பாத்திக்க இந்தக் கண்ணாடியைப் போடுங்க பாஸ்!’’ என்று டைமிங்காகப் பேச, விற்பனை கொஞ்சம் வேகமாகவே இருந்தது.
அப்படியே அங்கே சில கண்ணாடிகளும், சில மணிநேரங்களும் ஓடின. ‘‘காலேஜ் பசங்களுக்குத்தான் விதவிதமாகக் கண்ணாடி போட்டுப் பார்க்கணும்னு ஆசை அதிகமாக இருக்கும். டார்கெட் கஸ்டமர்ஸ் முக்கியம்’’ என்றபடி அடுத்த ஸ்பாட்டாக பிரபல காலேஜை நோக்கி கிளம்பினார். போகும் வழியில் பழக்கடைக்காரர் தென்பட... அவரிடம் ஒரு கண்ணாடி விற்றார்.
அந்தப் பிரபல காலேஜில் இறங்கியவர், அங்கிருந்த பி.ஆர்.ஓ-விடம் பேசி விற்பனைக்கு அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தார். ‘‘கூலிங் கிளாஸ் வாங்கிக்கோங்க மேடம்... இது ஆட்டோ கூலிங்! பகல்ல கூலிங் கூடும். நைட்ல ஒயிட்டா மாறும். இதனால, நைட்ல டூ-வீலர்ல போறப்ப கூட எந்தத் தொந்தரவும் இருக்காது. ஸ்டூடன்ட்ஸ் ஆஃபர், ஒன்லி இருபது ரூபா!’’ என கண்ணாடிகளை எடுத்துத் தர, மாணவர் கூட்டம் ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி கண்ணாடி போட்டு அழகு பார்த்தனர்.
‘‘சாக்லெட்ஸ், ஐஸ்க்ரீம், காபினு எதுக்கெதுக்கோ செலவு பண்றீங்க. இது ஒரு ரேட்டா? வாங்கிக்கோங்க மேடம்!’’ என ஸ்ரீதரன் அடுத்தகட்ட உரையை ஆரம்பிக்க... ‘‘வாங்கிக்கிறோம்!’’ என ஜாலியாக கூவியது மாணவர் கூட்டம். அங்கே ஒரு டஜன் கண்ணாடிகளை விற்று, திருப்தியோடு வெளியேறினார்.
அடுத்து ரயில்வே ஸ்டேஷன்... முன்புறமிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ‘‘வெயில் சூட்டைக் கிளப்புது. உங்க ஆட்டோ இன்ஜின் சூடு வேற! அதனால, கண் எரிச்சல் வரும். இந்த ஸ்பெஷல் கிளாஸைப் போட்டா கண்ணெரிச்சல் வராது. இருபதே ரூபாய்தான்!’ என எடுத்துச் சொல்ல, மந்திர வார்த்தைகள் ஆட்டோக் காரர்களுக்கு சரியெனப் பட்டிருக்கவேண்டும். மடமடவென அங்கே 3 கண்ணாடிகள் விற்றன. கையில் ஒரு டஜன் கண்ணாடிகள் மீதமிருந்தன.
‘‘இந்த வெயிலில் யாரும் வெளியிலேயே நடமாட மாட்டாங்க. கையில் இருக்கும் மீதி கண்ணாடிகளை மொத்தமாக தள்ளி விட்டுவிடலாம்’’ என்றபடி, சுற்றுமுற்றும் பார்த்தார்.
பிளாட்ஃபார்ம் ஓரமாக சட்டைகளைப் போட்டு விற்றுக்கொண்டிருந்த ஒரு கடைக்காரரை நெருங்கி, ‘‘அண்ணே... இலவசம் இல்லாமல் எந்தப் பொருளும் போணியாகாது. சட்டைக்கு ஒரு கூலிங் கிளாஸ் இலவசம்னு அடிச்சு விடுங்க... சட்டை வியாபாரம் அள்ளிக்கிட்டு போகும்...’’ என்று புது கான்செப்ட்டை எடுத்து வைக்க, அவரும் பிரமிப்பாக ஓகே சொல்லி, கையில் இருந்த கூலிங் கிளாஸ்களை தலா 15 ரூபாய் ரேட்டுக்கு வாங்கி அடுக்கி விட்டார்.
நிதானமாக ஓர் இடத்தில் உட்கார்ந்து, பணத்தை எடுத்துக் கணக்கைப் பார்த்தார். நெருக்கி 1,500 ரூபாய் இருந்தது. ‘‘சேலம் வந்த பஸ் செலவு, சாப் பாட்டுச் செலவு, லோக்கல் பஸ் செலவு நீங்க கொடுத்த ஆயிரம் ரூபாய் மூலதனம் எல்லாம் போக லாபம் நானூற்று சொச்சம் ரூபாய் எனக்கு!’’ என்றவர், ‘‘நான் கூட 200, 300 கிடைக்கும்னுதான் நினைச்சேன். இவ்வளவு லாபம் வரும்னு எதிர்பார்க்கலை. படிக்கிற போதே பார்ட் டைமா இந்த வேலையையும் பார்க்க வேண்டியதுதான்!’’ என உற்சாகமாகப் புறப்பட்டார் ஸ்ரீதரன்.
கூலிங் கிளாஸ் இல்லாமலே அவருடைய கண்களில் குளிர்ச்சி தெரிந்தது. அது உழைப்பு தந்த குளிர்ச்சி!