தமிழகத்தில் பெரிய அளவில் போட்டிகள் கிடையாது. உள்ளூர் மார்க்கெட்டை குறிவைத்து இறங்கினால் லாபம்தான்!
சில பெரிய ஹோட்டல்களில் பார்சல் செய்துதரும் உணவுப் பொருட்கள் வீட்டுக்குப் போகிறவரை சூடாக இருக்கிற மாதிரி அலுமினியம் ஃபாயில் பாக்ஸில் போட்டுத் தருவார்கள். இந்த அலுமினியம் ஃபாயில் கன்டெய்னர்களைத் தயாரிக்கும் தொழிலைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.
தொழில் எப்படி?
சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்குத்தான் இந்த அலுமினிய ஃபாயில் பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, ரயில்களில் மட்டுமல்ல, பெரிய ஹோட்டல்களில் பலவற்றிலும் இந்த பாக்ஸ்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இந்த பாக்ஸ்களில் அடைக்கப்படும் உணவுகள், சூட்டைத் தாங்கும் திறனும், ஒளி ஊடுருவாமல் உணவின் தன்மையைப் பாதுகாக்கவும் செய்வதால் இந்த அலுமினிய பாக்ஸ்களுக்கு தேவை அதிகமாகியுள்ளது.
தமிழக அளவில் இந்தத் தொழிலுக்கு அதிக போட்டிகள் கிடையாது. பெரும்பாலான வடமாநில தயாரிப்பாளர்கள்தான் இங்குள்ள மார்க்கெட்டை கையில்வைத்துள்ளனர். எனவே, உள்ளூர் மார்க்கெட்டை குறிவைத்து இறங்கினாலே வெற்றி கிடைத்துவிடும். முக்கியமாக, ரயில்வே கேன்டீன், பேருந்து நிறுத்த ஹோட்டல்கள் மற்றும் பெரிய பெரிய உணவு விடுதிகளுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம்.
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாநில அரசின் 'நீட்ஸ்’ திட்டம் அல்லது பொது மானியத் திட்டம்... இவற்றில் ஏதாவது ஒன்றில் இயந்திரம் வாங்கும் தொகையிலிருந்து மானியம் பெற வாய்ப்பு உண்டு.
நடைமுறை மூலதனம் மாதத்துக்கு 7 - 10 லட்சம் ரூபாய். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.