Thursday, 3 April 2014

தொழில்முனைவோர் குணங்கள் | Habits of Eunterprenuer

சொந்தமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற விரும்புகிறீர்களா? வாழ்த்துக்கள். நிச்சயம் உங்களால் முடியும். மிகப்பெரிய தொழிலதிபராகும் தகுதி உங்களிடம் இருக்கிறது. கூடவே சில விஷயங்களை கவனமாக நீங்கள் பின்பற்றினால் போதும். வெற்றி நிச்சயம்! சரி, அந்த சில விஷயங்கள் என்னென்ன?
முதலில் தாங்கள் ஒரு தொழிலை நிறுவி வெற்றி பெறச்செய்யும் சாதனையில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதின் அடித்தளத்தில் இருக்க வேண்டும். இது முதல் விஷயம் மட்டுமல்ல, முக்கியமான விஷயமும் கூட. இதன் பிறகுதான் மற்ற குணங்கள். அவை:





1. தொழில்தாகம்

தொழிலைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற தணியாத தாகம் வேண்டும்.

2. சிரித்த முகம்

நகல்வல்லர் அல்லரார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்(று) இருள்.
(திருக்குறள் 999)

அதாவது, பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகம், ஒளியுள்ள பகற்காலத்திலும் இருளில் கிடப்பதாகும் என்கிறார் வள்ளுவர்.
எல்லாத் தொழிலிலும் பொதுமக்களுடன் நெருங்கிப்பழகும் அவசியம் ஏற்படும். ஆகவே, தொழில்முனைவோர் பொது மக்களிடம் சிரித்துப் பழகுகின்ற பழக்கத்தையும், குணத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பாக ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரும்பிப் பழக வேண்டும்.

3. மனதில் உறுதி இருக்க வேண்டும்

முன் வைத்த காலை பின்வைக்காதே என்பதை மனதில் கொள்ள வண்டும். தொழிலின் தொடக்க காலத்தில் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும். அச்சமயங்களில் மனம் தளராத உறுதி கொள்ள வேண்டும்.

4. முயன்றால் முடியும்

தொடங்கும் தொழில்முனைவோர் வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பினார் கெடுவதில்லை. மனமுண்டானால் வழி உண்டாகும் போன்ற பழமொழிகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். இந்த நான்கு விதிகளையும் கடைப் பிடித்து நடந்தால், வெற்றி நிச்சயம். ஆமாம், நீங்கள்தான் வெற்றி பெற்ற தொழில்முனைவோர்!