Sunday, 17 August 2014

கண்கண்ணாடி மொத்த விற்பனைக் கடை - கூலிங் கிளாஸ் kan kannadi

கண்கண்ணாடி மொத்த விற்பனைக் கடை - கூலிங் கிளாஸ் kan kannadi 


கோடையில் கூல் பிஸினஸ்!
 உ ள்ளத்துக்குக் குளிர்ச்சி நல்ல எண்ணம்... உடம்புக்குக் குளிர்ச்சி நல்ல எண்ணெய்... கண்ணுக்குக் குளிர்ச்சி நல்ல கண்ணாடி... சவாலுக்கு நான் ரெடி... உங்க வசதி எப்படி?’ நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஸ்ரீதரன் நச்சென்று கடிதம் எழுதி இருந்தார்.
‘‘என்ன விற்கப் போறீங்க... எண்ணெயா... கண்ணாடியா?’’ என்ற கேள்வியோடு, ஸ்ரீதரனைப் பிடித்தோம்.
‘‘எண்ணெய் விற்கறதா... எந்தக் காலத்துல இருக்கீங்க... இன்னிக்குப் பசங்களுக்குத் தேவை கண்ணுக்குக் குளிர்ச்சியாக கண்ணாடிதான்...’’ என்றார் நாமக்கல் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ படிக்கும் ஸ்ரீதரன். நம்பிக்கையுடன் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தோம்.
சேலத்துக்குக் கிளம்பினார் ஸ்ரீதரன். கண்கண்ணாடி மொத்த விற்பனைக் கடையைத் தேடிப் பிடித்தவர், ஆயிரம் ரூபாயையும் கூலிங் கிளாஸ்களாக மாற்றினார்.
10 ரூபாய்க்கு குறைந்த விலை, 15 ரூபாய்க்கு உயர் வகை என இரண்டு வெரைட்டியாகப் பிரித்து கூலிங் கிளாஸ் வாங்கிய ஸ்ரீதரன், வியாபாரத்தில் இறங்கினார்.
உடம்பையே டிஸ்பிளே போர்டாக்கி, கூலிங் கிளாஸை கண்களிலும் முகத்திலும், பேண்ட் பாக்கெட்டிலும், சட்டை பாக்கெட்டிலும் செருகிக் கொண்டு புதிய பஸ் நிலையத்துக்குள் நுழைந்தார். இளைஞர் கூட்டம் வட்டமிட ஆரம்பித்துவிட்டது.
‘‘கூலிங் கிளாஸ் இல்லாம வெயில்ல கண்ணே அவிஞ்சு போயிடும் போலிருக்கு. என்ன ரேட்டு!’’ என ஒருவர் கேட்க, ‘‘இருபத்தஞ்சுல இருக்கு. நாற்பதிலிருக்கு. உங்க முகத்துக்கு இதுதான் எடுப்பா இருக்கும். நாற்பது ரூபாயைப் பார்க்காதீங்க..!’’ என்றபடி ஒரு கண்ணாடியை அவருடைய காதுகளில் செருகிவிட்டு, ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்று அவரை ஏற இறங்கப் பார்த்தார். ‘‘அண்ணே... அசப்புல சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்கீங்க. ஒரு காஸ்ட்லி கண்ணாடி ஆளை எப்படி மாத்திடுது பார்த்தீங்களா..!’’ என்று கொஞ்சம் மிகையாக நடித்து, அந்த சிங்கத்தைச் சாய்த்தார். முதல் போணி அங்கே ஆரம்பித்தது.
‘‘வெயிலும் ‘சுள்’ளுனு ஏறுது. அது ஏற ஏறத்தானே நமக்கு மார்க்கெட்டு...’’ என்ற ஸ்ரீதரன், தடாரென்று ஒரு பஸ்ஸுக்குள் ஏறி, ‘‘இது ‘வாளைமீனு’ பாட்டுக்கு ‘கானா’ உலகநாதன் போட்ட கண்ணாடி... லேட்டஸ்ட் ஹிட் மாடல்!’’ என்று கூவிவிட்டு உலகநாதனைப் போலவே கையை ஆட்டி அபிநயம் பிடித்தார்.
பாட்டுக்கு உடனடி பலனாக, பஸ்ஸுக்குள் இருந்த குழந்தை ஒன்று ‘‘அப்பா... வாளமீனு கண்ணாடி வாங்கித்தா!’’ என அடம்பிடித்தது. அந்தக் குழந்தையின் அப்பா விலை விசாரிக்க, கவருக்குள் இருந்து கண்ணாடியை எடுத்துக் கொடுத்தார் ஸ்ரீதரன். ஆனால், அந்தக் குழந்தை அடம் பிடித்து ஸ்ரீதரன் போட்டிருந்த கண்ணாடியையே வாங்கிக் கொண்டது. அதேவேகத்தில், அந்த பஸ்ஸிலேயே ஆறேழு கண்ணாடிகளை விற்றார்.
மெல்ல நகர்ந்து அடுத்த பஸ்ஸில் ஏறினார். ‘‘தூசு தும்பு, வெயிலிலிருந்து தப்பிக்கலாம். என்னை மாதிரி மூஞ்சி கோணலா இருக்கிற பார்ட்டிங்க, இந்த கண்ணாடியைப் போட்டா அஜீத் மாதிரி ஆகிடுவீங்க. ஃபார்ட்டி ருபீஸ்’’ என ஜாலியாக டயலாக் பேச, ‘‘வெயில் கொடுமை தாங்கலை... அதான் வாங்குறோம்!’’ என விளக்கம் சொல்லிக்கொண்டே இரண்டு பேர் ஆளுக்கு ஒரு கண்ணாடியை வாங்கினார்கள்.
மற்றவர்களும் ஆர்வமாகக் கையில் வாங்கிப் பார்க்க, சிலர் காசை எடுத்து நீட்ட... வியாபாரம் விர்ரிட்டது. அந்த நேரம் பார்த்து பஸ்ஸுக்குள் ஏறிய கண்டக்டர், ‘‘யார்யா அது... பஸ்ஸுக்குள் விக்கிறவன்..? அப்படியே பின்வாசல் வழியா இறங்கிப் போயிடு, இல்லே... லக்கேஜ், டிக்கெட்டைப் போட்ருவேன்’’ என்று மிரட்ட, நல்லபிள்ளையாக பஸ்ஸில் இருந்து குதித்தார்.
இரண்டு பஸ்ஸிலும் சேர்த்து இரண்டு டஜன் உயர் ரக கண்ணாடிகள் விற்றிருந்தன. குறைந்த விலை கண்ணாடியை ஸ்ரீதரன் வெளியிலேயே எடுக்கவில்லை. ‘‘வேகமாக விற்பனை நடக்கும் இடத்தில் வெரைட்டி காட்டி குழப்பக்கூடாது. ஒரே ரேட்... ஒரே குவாலிட்டி’’ என்று புதிய பிஸினஸ் தத்துவம் ஒன்றை உதிர்த்தபடி, பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியில் வந்தார்.
‘‘மணி 11.30 ஆகுது. அண்ணா பார்க்கிலே வெயிலைக்கூட பொருட்படுத்தாத காதலர்கள் கூட்டம் நிறைய இருக்கும்... வாங்க...’’ என்றபடி, பார்க் செல்லும் பஸ்ஸில் ஏறினார். உடம்பெல்லாம் கண்ணாடியாக இருந்த ஸ்ரீதரனைப் பார்த்த ஒருவர், ‘‘என்னப்பா... மொபைல் ஆப்டிகல்ஸா... என்ன ரேட்?’’ என்று வலிய விலை விசாரித்தார். பார்க் போய்ச் சேருவதற்குள் பஸ்ஸில் நாலைந்து கண்ணாடிகள் விற்று சாதனை (?) படைத்தார் ஸ்ரீதரன். பஸ்ஸை விட்டு இறங்கி விறுவிறுவென பார்க்குக்குள் புகுந்தவர், கற்பனை உலகத்தில் எதிர்கால வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த ஜோடிகளைத் தேடினார்.
‘‘கூலிங் கிளாஸ் வேணுமா மேடம்? சாருக்கும் நல்லா இருக்கும். வெளியில நாற்பதுனு விற்கிறேன். காதலர்களுக்கு மட்டும் 30 ரூபா. ஒரே கண்டிஷன்... ஜோடியாகத்தான் வாங்கணும்!’’ என புது ஸ்கீமை அறிவித்தார். அந்த ‘ஜோடி கண்ணாடி’ திட்டம் நன்றாகவே வேலை செய்தது. ‘‘உனக்கு இந்த மாடல்தான் அழகாயிருக்கும்’’ என காதலரும், ‘‘உங்களுக்கு இந்த கண்ணாடி எடுப்பா இருக்கு!’’ எனக் காதலியும் ஒருவரை ஒருவர் புகழ... ஸ்ரீதரனுக்கு நல்ல வேட்டை!
அப்படியே ஒரு சுற்று சுற்றி பூங்கா வாசலுக்கு வந்தபோது, நாற்பதும் 25-மாகப் பறந்தன கண்ணாடிகள். பேரம் பேசுகிற பார்ட்டிகளை குறைந்த விலை கண்ணாடியைக் கொடுத்து மடக்குவது என்று, விற்பனை டெக்னிக்கில் புலியானார் ஸ்ரீதரன். ‘‘சார்... எவ்வளவோ ஆடம்பரச் செலவு பண்றோம். கண்ணைப் பாதுகாக்க, கூல் பண்ண தயங்காதீங்க’’ என ஆரம்பிக்க, சட்சட்டென சில முகங்கள் ஸ்ரீதரனை நோக்கித் திரும்பின.
அதேவேகத்தில் ஆறு கண்ணாடிகள் விற்பனை ஆயின. ‘‘நிறைய லாபத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறதைவிட, லாபம் குறைந்தாலும் பரவாயில்லைனு இறங்கினால் வியாபாரம் விறுவிறுனு இருக்கும்’’ என ஒரிஜினல் விலையிலிருந்து இறங்கி வந்து வியாபார நுணுக்கம் காட்டியவர், அப்படியே பழைய பஸ் நிலையம் பக்கமாக நகர்ந்தார்.
அண்ணா சிலை ஓரமாக நின்று, பைக் பார்ட்டி களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்ணாடிகளை மாற்றி மாற்றி போட்டுக் காட்டினார். கையில் அடுக்கி, நீட்டிக்கொண்டு என விளையாட்டுக் காட்ட, பைக் நபர்கள் நிற்க ஆரம்பித்தனர். கண்ணாடிகளை மாறி மாறி பார்த்தவர்களிடம், ‘‘குறைஞ்ச விலை... பைக்குல வேகமா போறீங்க... தூசு அடிக்கிறதிலே இருந்து காப்பாத்திக்க இந்தக் கண்ணாடியைப் போடுங்க பாஸ்!’’ என்று டைமிங்காகப் பேச, விற்பனை கொஞ்சம் வேகமாகவே இருந்தது.
அப்படியே அங்கே சில கண்ணாடிகளும், சில மணிநேரங்களும் ஓடின. ‘‘காலேஜ் பசங்களுக்குத்தான் விதவிதமாகக் கண்ணாடி போட்டுப் பார்க்கணும்னு ஆசை அதிகமாக இருக்கும். டார்கெட் கஸ்டமர்ஸ் முக்கியம்’’ என்றபடி அடுத்த ஸ்பாட்டாக பிரபல காலேஜை நோக்கி கிளம்பினார். போகும் வழியில் பழக்கடைக்காரர் தென்பட... அவரிடம் ஒரு கண்ணாடி விற்றார்.
அந்தப் பிரபல காலேஜில் இறங்கியவர், அங்கிருந்த பி.ஆர்.ஓ-விடம் பேசி விற்பனைக்கு அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தார். ‘‘கூலிங் கிளாஸ் வாங்கிக்கோங்க மேடம்... இது ஆட்டோ கூலிங்! பகல்ல கூலிங் கூடும். நைட்ல ஒயிட்டா மாறும். இதனால, நைட்ல டூ-வீலர்ல போறப்ப கூட எந்தத் தொந்தரவும் இருக்காது. ஸ்டூடன்ட்ஸ் ஆஃபர், ஒன்லி இருபது ரூபா!’’ என கண்ணாடிகளை எடுத்துத் தர, மாணவர் கூட்டம் ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி கண்ணாடி போட்டு அழகு பார்த்தனர்.
‘‘சாக்லெட்ஸ், ஐஸ்க்ரீம், காபினு எதுக்கெதுக்கோ செலவு பண்றீங்க. இது ஒரு ரேட்டா? வாங்கிக்கோங்க மேடம்!’’ என ஸ்ரீதரன் அடுத்தகட்ட உரையை ஆரம்பிக்க... ‘‘வாங்கிக்கிறோம்!’’ என ஜாலியாக கூவியது மாணவர் கூட்டம். அங்கே ஒரு டஜன் கண்ணாடிகளை விற்று, திருப்தியோடு வெளியேறினார்.
அடுத்து ரயில்வே ஸ்டேஷன்... முன்புறமிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ‘‘வெயில் சூட்டைக் கிளப்புது. உங்க ஆட்டோ இன்ஜின் சூடு வேற! அதனால, கண் எரிச்சல் வரும். இந்த ஸ்பெஷல் கிளாஸைப் போட்டா கண்ணெரிச்சல் வராது. இருபதே ரூபாய்தான்!’ என எடுத்துச் சொல்ல, மந்திர வார்த்தைகள் ஆட்டோக் காரர்களுக்கு சரியெனப் பட்டிருக்கவேண்டும். மடமடவென அங்கே 3 கண்ணாடிகள் விற்றன. கையில் ஒரு டஜன் கண்ணாடிகள் மீதமிருந்தன.
‘‘இந்த வெயிலில் யாரும் வெளியிலேயே நடமாட மாட்டாங்க. கையில் இருக்கும் மீதி கண்ணாடிகளை மொத்தமாக தள்ளி விட்டுவிடலாம்’’ என்றபடி, சுற்றுமுற்றும் பார்த்தார்.
பிளாட்ஃபார்ம் ஓரமாக சட்டைகளைப் போட்டு விற்றுக்கொண்டிருந்த ஒரு கடைக்காரரை நெருங்கி, ‘‘அண்ணே... இலவசம் இல்லாமல் எந்தப் பொருளும் போணியாகாது. சட்டைக்கு ஒரு கூலிங் கிளாஸ் இலவசம்னு அடிச்சு விடுங்க... சட்டை வியாபாரம் அள்ளிக்கிட்டு போகும்...’’ என்று புது கான்செப்ட்டை எடுத்து வைக்க, அவரும் பிரமிப்பாக ஓகே சொல்லி, கையில் இருந்த கூலிங் கிளாஸ்களை தலா 15 ரூபாய் ரேட்டுக்கு வாங்கி அடுக்கி விட்டார்.
நிதானமாக ஓர் இடத்தில் உட்கார்ந்து, பணத்தை எடுத்துக் கணக்கைப் பார்த்தார். நெருக்கி 1,500 ரூபாய் இருந்தது. ‘‘சேலம் வந்த பஸ் செலவு, சாப் பாட்டுச் செலவு, லோக்கல் பஸ் செலவு நீங்க கொடுத்த ஆயிரம் ரூபாய் மூலதனம் எல்லாம் போக லாபம் நானூற்று சொச்சம் ரூபாய் எனக்கு!’’ என்றவர், ‘‘நான் கூட 200, 300 கிடைக்கும்னுதான் நினைச்சேன். இவ்வளவு லாபம் வரும்னு எதிர்பார்க்கலை. படிக்கிற போதே பார்ட் டைமா இந்த வேலையையும் பார்க்க வேண்டியதுதான்!’’ என உற்சாகமாகப் புறப்பட்டார் ஸ்ரீதரன்.
கூலிங் கிளாஸ் இல்லாமலே அவருடைய கண்களில் குளிர்ச்சி தெரிந்தது. அது உழைப்பு தந்த குளிர்ச்சி!

No comments:

Post a Comment