A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Sunday, 17 August 2014
வீட்டு உள் அலங்காரத் தொழிலில்
அழகில் வருதே, அசத்தல் வருவாய்!
வீட்டு உள் அலங்காரத் தொழிலில் இருக்கும் கோதண்டராமன் தம்பதி!
வீட்டு உள் அலங்காரத் தொழிலில் இருக்கும் கோதண்டராமன் தம்பதி!
ஆ ள் பாதி, ஆடை பாதி என்பார்கள்... அலங்காரம் எத்தனை முக்கியமானது என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் பழமொழி! இது ஆளுக்கு மட்டுமல்ல... வீட்டுக்கும் பொருந்தும்.
வீட்டுக்குள் நுழையும்போதே, விருந்தினர்கள் நம்முடைய குணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு மனிதர்களின் நுட்பமான உணர்வுகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது வீட்டு அலங்காரம். தங்கள் ரசனையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருப்பதால், எல்லோருமே இப்போது வீட்டின் உள்அலங்காரத்தில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். அதனால், இன்டீரியர் டெக்கரேஷன் என்பது இப்போது நல்ல வரவேற்புள்ள தொழிலாக இருக்கிறது.
கொஞ்சம் கலை ரசனையும், ஆட்களை வைத்து மேற்பார்வை செய்யும் திறமையும் இருந்தால் போதும்... நீங்களும் இந்தத் தொழிலில் சிறப்பாகப் பிரகாசிக்கமுடியும்.
பல போட்டியாளர்கள் இருக்கிறார்களே என்பதைப்பற்றிக் கவலை வேண்டியதில்லை. இதில் கவனிக்க வேண்டியதே வாடிக்கையாளர்களின் திருப்தி, திருப்தி, திருப்தி... மனதுக்குப் பிடித்த வகையில் அழகான பொருட்ளையும் நம்பிக்கையான சர்வீஸையும் ஒருவருக்குக் கொடுத்தால் போதும். அவரே உங்கள் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவார். தரமும் நேர்த்தியும்தான் இத் தொழிலின் தாரகமந்திரம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர் யார்?
புது வீடு வாங்குபவர்கள் மட்டுமல்ல... வீட்டை புதுப்பிப்பவர்கள், அழகுபடுத்த நினைப்பவர்கள், அலுவலகங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்கள், பள்ளிக்கூடங்கள், நகைக்கடைகள், ஆஸ்பத்திரிகள் என எல்லையில்லாமல் பரந்து விரிந்து கிடக்கின்றன உங்கள் வாடிக்கையாளர் வட்டம்! தொழில் அதிபர்கள் முதல் தனியார், அரசு அதிகாரிகள் வரை அனைவரும் இதில் அடங்குவர்.
எவ்வளவு முதலீடு தேவைப்படும்?
உங்கள் கற்பனைத்திறனும் கடின உழைப்பும்தான் முதல் முதலீடு. அத்துடன் பொருட்கள் கிடைக்கும் இடம், விலை, போன்றவற்றைத் தெரிந்தும், சாம்பிள்களை(கேட்லாக்)கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும். மொத்த வியாபாரம் செய்பவர்களுடன் நன்கு பழகிக்கொள்வது உபயோகமாக இருக்கும். மற்றபடி பெரிய அளவில் அலுவலகமோ, இடவசதியோ தேவையில்லை. உங்களைத் தொடர்புகொள்ள ஒரு தொலைபேசி எண் இருந்தால் போதும். அதோடு, ஒரு ஆர்டரின்போது முதலில் பொருட்கள் வாங்க சில ஆயிரங்களைக் கையில் வைத்துக்கொண்டால் நல்லது.
என்ன மாதிரியான வேலை இது?
வீட்டை அழகுபடுத்துவதுதான் அடிப்படையான தேவை என்றாலும் இதில் பலவகைகள் இருக்கின்றன. வீட்டுச் சுவர்களுக்கு ஏற்ற வண்ணங்களில் பெயின்ட் அடிப்பது, அதற்கு ஏற்றமாதிரி திரைச் சீலைகள், கட்டில், சோபா விரிப்புகள் போன்றவற்றைத் தைத்துக்கொடுப்பது, அறைக்கு அழகுசேர்க்கும் விதமாக பூ ஜாடிகள், அலங்கார சுவர் ஓவியங்கள், சின்னச் சின்ன ஸ்டாண்ட்கள் போன்றவற்றை அமைத்துக்கொடுப்பது, முக்கியமாக மிகவும் பயனுள்ள வகையில் சமையலறையை உருவாக்கிக்கொடுப்பது என்று எல்லாமே இன்டீரியர் டிஸைனிங்தான்.
மேற்கூரைகளுக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கொண்டு டிஸைன் அமைப்பது போன்ற பெரிய வேலைகளை ஆரம்பத்தில் செய்யவேண்டாம். கொஞ்சம் அனுபவம் கிடைத்தபிறகு அதைத் தொடுவது நல்லது.
சுவர்களுக்கான வண்ணத்தைப் பொறுத்த வரையில், எப்போதுமே வெளிர் நிறங்களையே தேர்வு செய்யுங்கள். அடத்தியான வண்ணங்கள் அறையை இருட்டாகக் காட்டும். இப்போது வெளிப்புறச் சுவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்களைப் பயன்படுத்துவது ஃபேஷனாகி வருகிறது. வாடிக்கையாளரின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப வண்ணம் பூசிக் கொடுக்கவேண்டும்.
அதேபோல, விதவிதமான பெயின்ட்கள் இருக்கின்றன. வாடிக்கையாளரின் பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில் வண்ணம் பூசிக்கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கான பெட்ரூம் என்றால், வண்ணப் பூச்சுடன் சேர்த்து கார்ட்டூன் உருவங்கள், விலங்குகள் படம் போட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொடுக்கலாம். குழந்தைகள் பயன்படுத்தும் பாத்ரூமிலும் கார்ட்டூன் உருவங்கள் கொண்ட டைல்ஸ்களைப் பதித்துக்கொடுக்கலாம்.
இந்த சுவர் வண்ணங்களுக்கு ஏற்ற நிறங்களில் கதவு, ஜன்னல் களுக்கான திரைச் சீலைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை யும் அமைக்கவேண்டும். துணிகள் விற்கும் கடைகளிலேயே இதற்கென டெய்லர்கள் இருக்கிறார்கள். கதவு, ஜன்னல் திரைக்கான துணிகள் பல விதங்களிலும் பல விலைகளிலும் கிடைக்கின்றன.
படுக்கை அறை விரிப்புகள், தலையணை உறை களுக்கான கலரை சுவரின் வண்ணத்தை விட சற்று திக்கான கலரில் தேர்ந்தெடுக்கவேண்டும். குழந்தை களுக்கான அறையில் உள்ள மெத்தைக்கும், தலையணைக்கும் கார்ட்டூன், பொம்மைகள் உள்ளவாறு செலக்ட் பண்ணவேண்டும். ஃபர்னிச்சர் இன்டீரியர் என்பதும் இதேபோல தனிதுறைதான்.
எப்படி வேலை வாங்குவது?
மேற்சொன்ன வேலைகள் அனைத்துக்கும் தின சம்பளத்துக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதனால், தனியாக வேலையாட்களை வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதேசமயம், ஆரம்பத்தில் அவர்களை நேரடியாக வைத்து வேலை வாங்குவதும் கடினம். எனவே தின சம்பளம் எவ்வளவு என ஒன்றுக்கு நாலு இடத்தில் விசாரித்து, அதன் அடிப்படையில் வேலையை கான்ட்ராக்ட்டாக அந்தத்துறையில் அனுபவம் பெற்றவர்களிடம் ஒப்படைத்து விடுவது மிகவும் நல்லது. அவர்கள் வேலை செய்யும்போதே வேலைத்திறன் மற்றும் சிக்கல்களை அறிந்துகொண்டு பிறகு நேரடியாக ஆட்களை அமர்த்தி வேலை வாங்கலாம்.
அதேபோல, வாடிக்கையாளரிடம் டிஸைனிங் பற்றித் தெளிவாகப் பேசிக்கொள்ளவேண்டும். தேவைப்பட் டால், அட்வான்ஸ் மற்றும் பணம் தரும் விவரம் மற்றும் வேலை குறித்து அக்ரிமென்ட் கூட போட்டுக் கொள்ளலாம். அது இரு தரப்பினருக்கும் நல்லது. பில்டிங் இன்ஜினீயர்கள் தொடர்பும் இதில் பெரிய அளவில் உதவும்.
லாப விகிதம்
இன்டீரியர் வேலை என்பது வாடிக்கை யாளரின் குணத்தைப் பொறுத்தது. ஒருவர் 50,000 ரூபாய்க்கு வேலை கொடுக்கலாம், இன்னொருவர் ஒரு லட்ச ரூபாய்க்கும் ஆர்டர் கொடுக்கலாம். ஆர்டர் தொகையில், 15 முதல் 20% லாபம் வைத்துக்கொண்டால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய சுமையாகத் தெரியாது. பலரும் தேடி வருவார்கள்.
பெரிய அளவில் பண முதலீடு இல்லாமலே சிறப்பாகச் செய்ய ஒரு தொழில் காத்திருக் கிறது. செய்ய நீங்கள் ரெடியா..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment