Monday, 22 July 2013

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

தொழில்
பிஸினஸ் குட்டிக்கதை!
 
ரா கவ் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்து ஒருவாரம்தான் ஆகியிருந்தது. அதற்குள் தர்பூசணி வடிவத்தில் வம்பு வந்து சேர்ந்தது. சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த ஒரு கஸ்டமர், ராகவ்விடம், ‘‘எனக்கு பாதி தர்பூசணி வேண்டும்’’ என்றார். ராகவ் பணிவான குரலில் ‘‘பாதி தர்பூசணியை வெட்டித் தரமுடியாது சார்... வாங்கினால் முழுதாகத்தான் வாங்க வேண்டும்’’ என்றார்.
‘‘என் தேவை பாதிதான். உனக்காக முழுதாக வாங்கிட்டுப் போய் மீதியை நான் என்ன செய்வது?’’ என்றார் அந்த கஸ்டமர்.
‘‘அதற்கில்லை சார், மீதியிருக்கும் பாதியை யாரும் வாங்காமல் போனால் எங்களுக்கு வீணாகப் போய்விடும். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்’’ கெஞ்சினார் ராகவ் பணிவைக் கைவிடாமல். கஸ்டமர் ஒப்புக்கொள்வதாக இல்லை. ‘‘என்ன வேலைக்காரன் நீ? உன் முதலாளிக்கு பாதி பழத்தின் மூலமாகக் கிடைக்கும் லாபத்தைக் கெடுக்கப் பார்க்கிறாயே!’’ என்றார்.
‘‘எங்கள் முதலாளி சொல்வதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். பாதியெல்லாம் கிடையாது’’ என்றார் ராகவ் கறாராக. விவாதம் முற்றியது. கஸ்டமர் விடுவதாக இல்லை. “பாதிப்பழம் தரமுடியாது என்று உன் முதலாளி சொல்லட்டும். நான் நம்புகிறேன்’’ என்று அவர் விடாப்பிடியாக நிற்க... இவர்களின் விவாதம் முதலாளி அறை வரை எட்டிவிட்டது.
ராகவ்வை அழைத்து, ‘‘என்னப்பா... என்ன விஷயம்?’’ என்று முதலாளி கேட்க, “முதலாளி... ஒரு சரியான சாவு கிராக்கி, பாதி தர்பூசணிதான் வேணும்னு அடம் பிடிச்சு...” என்று சொல்ல ஆரம்பித்த ராகவ், சண்டை போட்ட அந்த கஸ்டமர் பின்னாலேயே வந்து நிற்பதை சட்டெனக் கவனித்துவிட்டார். “...வாங்கிட்டுப் போயிட்டார். அந்த மீதியை விற்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதோ, இப்போது இந்த ஜென்டில்மேனும் பாதியை வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டு வந்திருக்கிறார்” என்றார்.
ராகவ், நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்ததில் முதலாளிக்கு ஏக சந்தோஷம்.
கஸ்டமருக்கு பழத்தைக் கொடுக்கச் சொல்லி அவரை அனுப்பிவிட்டு, ராகவ்வை அழைத்த முதலாளி, “உனக்கு எந்த ஊர்?’’ என்று கேட்டார். ‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாம் பீகாரில்தான்..!” என்றார் ராகவ்.
‘‘பீகாரை விட்டுவிட்டு ஏன் இங்கு வந்தாய்..?’’ என்று கேட்டார் முதலாளி.
‘‘பீகாரில் என்ன இருக்கிறது..? பாதிப்பேர் முட்டாள், சோம்பேறிகள்... பாதிப்பேர் கிரிக்கெட் ஆடறவங்க..’’ என்றார் ராகவ்.
முதலாளி நமுட்டுச் சிரிப்போடு சொன்னார். ‘‘என் அப்பாவும் பீகாரிதான்!’’ என்றார்.
‘‘அப்படியா முதலாளி... அவர் எந்த டீமுக்காக கிரிக்கெட் ஆடினார்..?’’ சிரிக்காமல் கேட்டார் ராகவ்!

No comments:

Post a Comment