Monday, 22 July 2013

தொழில் தொடங்கலாம், வாங்க!

தொழில் தொடங்கலாம், வாங்க!
தொழில்
தொழில் தொடங்கலாம், வாங்க!

பழைய புத்தகத்திலும் பார்க்கலாம் வருமானம்!
ப ளபளப்பான அட்டையோடு, சிறந்த கட்டமைப்பில் புத்தகத்தைப் பார்த்ததும் கண்ணைப் பறிக்கும். ஆனால், அதன் விலையைப் பார்த்தால் கையைக் கடிக்கும். புதிய புத்தகங்களின் விலை றெக்கை கட்டி பறப்பதால் பழைய புத்தகங்களை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலை பழைய புத்தக கடைகள் தொடங்கும் புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மிகக் குறைந்த விலைக்கு புத்தகங்களை விற்பனை செய்தாலும் கை நிறைய லாபம் அள்ளலாம். கல்லூரிகள் இருக்கிற சிறு நகரமாக இருந்தாலே போதும். கண்ணை மூடிக்கொண்டு கடை விரித்துவிடலாம்.
நம்முடைய வசதிக்கேற்றவாறு விஸ்தாரமான இடம் தேர்வு செய்து கொள்ளலாம். தொடக்கத்தில் குறைந்தபட்சம் 50,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். தேவைக் கேற்ப முதலீட்டை அதிகப்படுத்திக் கொள்ளுவதும் அவசியம்.
அந்த ஊரில் இருக்கும் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்களை நன்கு அறிந்து வைத்துக்கொண்டு, அதற்கேற்றார் போல் பழைய புத்தகங்களை கொள்முதல் செய்வது அவசியம். ஏனெனில் நம் பிரதான வாடிக்கை யாளர்களாக இருக்கப்போவது கல்லூரி மாணவர்கள்தான்...
பெரும்பாலும் பழைய புத்தகங்களை சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற ஊர்களில் மொத்தமாகச் சேகரிக்கமுடியும். இந்த ஊர்களில் பழைய புத்தகங்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கென்றே பல கடைகள் (உதாரணமாக சென்னையில் திருவல்லிக்கேணி பகுதி) இருக்கின்றன. இங்கே புத்தக மதிப்பில் 20% என்கிற அளவுக்கு மிகவும் சல்லிசான விலையில் பழைய புத்தகங்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு வரலாம். இவ்வளவு சல்லிசான விலையில் புத்தகங்கள் கிடப்பதால் சென்னை, பெங்களூர் சென்று வந்தாலும் கொள் முதல் செலவு கையைக் கடிக்காது. மேலும் புத்தகங்களை 60 சதவிகித விலையில் விற்கும்போது இருமடங்கு லாபம் ஈட்ட முடியும்.
இதுதவிர கடை பிரபலமானதும் புத்தகம் வாங்க வருகிறவர்களே தங்களிடம் உள்ள பழைய புத்தகங் களை குறைவான விலைக்குக் கொடுப்பார்கள். இந்நிலையில் வெளியூர் கொள்முதலை குறைத்துக் கொள்ளலாம்.
இன்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ் போன்ற டெக்னிகல் படிப்பு தொடர்பான புத்தகங்கள் தவிர, இலக்கியம், வரலாறு போன்ற அனைத்துத் துறை புத்தகங்கள் பற்றியும் ஓரளவு அறிந்து வைத்திருப்பதோடு புத்தக ஆசிரியர்கள் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.
மற்ற தொழில்களைப் போல பழைய புத்தகக் கடை தொடங்கியதுமே விற்பனை சூடு பிடித்துவிடாது. மாணவர்களும், வாசகர்களும் கடை பற்றி அறிந்துகொள்ள விளம்பரம் அவசியம். கல்லூரிகளுக்கும் மக்கள் கூடும் இடங்களுக்கும் சென்று துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து விளம்பரம் செய்வது நல்ல பலனைத் தரும். ஒரு வாசகருக்குத் தெரிந்தால், அவர் நான்கு பேரிடம் சொல்ல அந்த நான்கு பேர், எட்டு பேராக... என ஒரே வருடத்தில் கடை பிரபலமாகி விடும்.
வாடிக்கையாளர் கேட்கிற புத்தகங்கள் இல்லை என்றாலும் ‘தேவைப்பட்டியலில்’ குறித்து வைத்துக் கொண்டு அடுத்தமுறை மறக்காமல் அந்த புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்து அவரை நிரந்தர வாடிக்கையாளராக்கி விடலாம். அதோடு, ஆட்களின் டேஸ்ட்டுக்கு ஏற்ற புத்தகங்களைக் கொடுத்து அசத்தலாம். இல்லாத புத்தகங்களைத் தெரிந்த மற்ற கடைகளில் வாங்கிக் கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்துவதோடு, விற்பனைக்காக 20% கமிஷன் பெற்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.
கொள்முதலைப் பொறுத்தவரையில் அடக்க விலையில் 35% விலைக்கே கல்லூரி பாடப் புத்தகங்களை வாங்கலாம். அதை 70% விலைக்கு விற்று பாதிக்குப் பாதி லாபம் ஈட்ட முடியும். அதேபோன்று இலக்கியம், வரலாறு, பஞ்சாங்கம் போன்ற பிறதுறை புத்தகங்களை 25% விலையில் சேகரித்து, 50% விலைக்கு விற்கலாம். தொடக்கத்தில் அருகிலுள்ள கல்லூரிகளுக்குச் சென்று ஸ்டால் போட்டு விற்பனை செய்தால் கை நிறைய லாபம் கிடைப்பதோடு, கடைக்கு நல்ல விளம்பரமும் கிடைக்கும். நாளன்றுக்கு குறைந்தது 2,000 ரூபாய்க்கு வியாபாரம் நடந்தாலே சுமார் ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்த்துவிடலாம். மாதம் குறைந்தது 20,000 ரூபாய் வரை தாராளமாக வருமானம் ஈட்டமுடியும்.
இதுபோக மிக மிக அரிதான, பதிப்பு நின்று போன, பலவருடங்களுக்கு முந்தைய புத்தகங்களை என்ன விலை கொடுத்தும் வாங்க புத்தக ஆர்வலர்கள் தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்ட புத்தகங்களைத் தேடிக்கொண்டு வந்து கொடுத்து, நம் தேடலுக்கு சர்வீஸ் சார்ஜாக பெரிய தொகையைப் பெறமுடியும்.
மேலும் நமது கடை பிரபலமாகும்போது கல்லூரி மற்றும் தனியார் நூலகங்களில் இருந்து, நல்ல நிலையில் இருக்கும் பழைய புத்தகங்கள் வேண்டி மொத்தமாக ஆர்டர் கொடுக்கவும் செய்வார்கள். பத்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பு வரை கிடைக்கும் இத்தகைய ஆர்டர்கள் மூலமாக கடை விற்பனை போக, தனியாகவும் வருமானம் பார்க்கலாம். பழைய வார, மாத இதழ்களை விற்பனை செய்வதன் மூலம் உபரி வருமானத்துக்கும் வழியுண்டு.
பராமரிப்புச் செலவென்று தனியாக ஒரு தொகை ஒதுக்கவேண்டிய அவசியமும் இந்தத் தொழிலில் இல்லை. மாதம் ஒருமுறை புத்தகங்களை தூசி தட்டி வைத்தாலே போதுமானது. வாடிக்கையாளர் பேரம் பேச வாய்ப்பு அதிகம் என்பதால் பொறுமை மிகவும் அவசியம். போட்டி அதிகமுள்ள தொழில் இது! எனவே, நிறைவான சேவை இருந்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.

No comments:

Post a Comment