A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Monday, 22 July 2013
ஃபெமிலி பிஸினஸ்... எங்கள் சக்ஸஸ்!
தொழில் |
ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள்...
ஃபேமிலி பிஸினஸ்... எங்கள் சக்ஸஸ்!
‘‘ரா த்திரி, பகலாகக் கிடந்து பிஸினஸில் நான் படும் கஷ்டம் என்னோடு போகட்டும். எனக்குப் பிறகு நீ இந்தத் தொழிலுக்கு வரவேண்டாம். நல்ல வேலையைத் தேடிக்கொள்...’’ என்று சொல்லும் தந்தைகள் இப்போது மாறிவிட்டனர்.
உலகம் முழுக்கவே இருக்கிற தொழில்களில் ஃபேமிலி பிஸினஸ் என்பது முக்கால் பாகம் வரை இருக்கிறது. இந்தியாவிலும் குடும்பத் தொழில் என்பது காலங்காலமாக இருந்துவருகிறது. அதில் பல நன்மைகள்... சில சங்கடங்கள்.
ஆனாலும், ‘‘ஃபேமிலி பிஸினஸ்... எங்கள் சக்ஸஸ்!’’ என்று குடும்ப உறுப்பினர்களின் கூட்டு முயற்சிக்கு ‘ஜே’ போடுகிறார்கள் இவர்கள். அப்படி வெற்றிகரமாக தொழில் நடத்தும் சிலரைச் சந்தித்தோம்.
‘ஓரளவுக்கு விவரம் தெரியும் வயது வந்தவுடன் மகனோ, மகளோ தன்னுடன் கம்பெனிக்கு வந்து வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தன் பிஸினஸில் புதிய ரத்தம் பாய்ச்சி இளமையான எண்ணங்களோடு கம்பெனியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்’ என்றெண்ணி, செயல்படுபவர்கள் ஏராளம்.
ஈரோட்டைச் சேர்ந்த சௌபாக்யா கிரைண்டர் தயாரிப்பாளர்கள் அப்படித்தான் அடுத்த ஜெனரேஷனைக் களமிறக்கி உள்ளார்கள். ‘‘எங்கப்பா ஆரம்பிச்ச பிஸினஸ் இது. மூத்த அண்ணன் ராஜேந்திரன் சீன்னா, நாங்க E, ஷிஆ இருப்போம். அவர் நிர்வாகம், கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொள்வார். ரெண்டாவது பையனான நான் சென்னையிலே இருந்தபடி மார்க்கெட்டிங், சேல்ஸ் எல்லாத் தையும் பார்த்துக் கொள்வேன். என் தம்பி ஆதிகேசவன், தயாரிப்புப் பணிகளைப் பார்த்துக்கொள்வார். எங்கள் மைத்துனர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், இப்போது பெங்களூர் பகுதி விநியோகஸ்தராகச் செயல்படுகிறார்.
இப்படிக் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் நாங்கள், பிஸினஸ் நன்மைக்காக உறவினர்களுக்குள்ளே கடிஞ்சு பேசறதோ, தேவை இல்லாத பிரச்னைகளிலே முறைப்பதோ கிடையாது. எங்களுடைய டார்கெட் ஒன்று... எங்களுடைய பயணம் அதை நோக்கித்தான் என்பதில் எல்லோருமே தெளிவாக இருப்போம்.
இதற்காக எல்லா வேலைகளையும் நாங்களே தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு பார்ப்போம் என்றில்லை. எங்களுடைய பணி களுக்கு நன்கு படித்த, திறமையான ஆட்களை நியமித்திருக்கிறோம். வெளி ஆட்களின் திறமையை எடுத்துக்கொண்டு, எங்களுக்கே உரிய பொறுப்பு உணர்ச்சியோடு செயல்படுகிறோம். நாங்கள் திட்டமிட்ட பாதையில் போய்க் கொண்டு இருக்கிறோம்’’ என்கிறார் சௌபாக்யா வரதராஜன்.
குடும்பத் தொழிலாக இருந்தாலும் வருடத்தில் மூன்று நாட்கள் மொத்த உறவினர்களும் ஒரே இடத்தில் கூடி, மகிழ்ச்சியோடு இருப்பதை வழக்க மாக்கிக் கொண்டிருக்கிறார்கள், இந்தக் குடும்பத்தினர்.
அம்பானி குடும்பமாக இருந்தாலும் சரி, ஆப்பக்கடை முனியம்மா குடும்பமாக இருந்தாலும் சரி, ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து செய்யும்போதுதான் வேலையும் முழு வேகத்தோடு நடக்கும். லாபமும் நிறையக் கிடைக்கும்.
இதற்கு என்.கே விஷன்ஸ் என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் கிருஷ்ணசாமியின் குடும்பம் நல்ல உதாரணம்.
‘‘இதுவரை 400-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் செய்திருக்கிறோம். எங்களுக்குள் வேலைகளைத் தெளிவாகப் பகிர்ந்துகொள்வோம். டைரக்ஷன் பொறுப்பு என்னுடையது. என் மகன் பாலா தயாரிப்புத் தொடர்பான வேலை களையும், மற்றொரு மகன் சுரேஷ் கேமரா, எடிட்டிங் பணிகளையும் பார்க்கிறார்கள். ஸ்கிரிப்டைத் தயார் செய்யும் வேலை மகள் அனுவுக்கு!’’ என்றவர் ஒரு சம்பவம் சொன்னார்-
‘‘வரலாற்றுச் சம்பவம் ஒன்றைப் படம் பிடிக்க அந்தச் சரித்திரத்துடன் தொடர்புள்ள இடங்களுக்குச் சென்றோம். இதனால், திட்டமிட்டதைவிட பட்ஜெட் ஏகத்துக்கும் எகிறிவிட்டது. அந்தச் சமயத்தில் நான் உட்பட எந்த டெக்னீஷியனுமே சம்பளம் பெறவில்லை. எல்லோரும் குடும்ப உறுப்பினர்களாக இருந்ததால் இந்த ப்ராஜெக்ட் மூலமாக நமக்குக் கிடைக்கப்போகும் நல்ல பெயர்தான் முக்கியம் என்ற நோக்கத்தோடு செயல்பட முடிந்தது. இதுவே, வெளியில் இருந்து டெக்னீஷியன்களைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களிடம் இந்த மனப்பான்மையை எதிர்பார்க்க முடியாது, அது நியாயமும் கிடையாது. அதனால்தான் அடித்துச்சொல்கிறேன், ஃபேமிலி பிஸினஸ் எப்போதுமே சக்ஸஸ் தரும்’’ என்றார்.
‘‘எங்கள் வீட்டைப் பொறுத்தவரையில் ‘எப்போது பார்த்தாலும் கம்பெனி, கம்பெனி என்று அலைகிறீர்களே... உங்களுக்குக் குடும்பத்தின்மீது அக்கறையே கிடையாதா..?’ என்ற சண்டை வரவே வராது. காரணம், கம்பெனியில் சில பொறுப்புகள் அவர் கையில்தானே இருக்கிறது’’ என்றார் சென்னை, வேளச்சேரியில் ‘பிரின்ட் ஃபாஸ்ட்’ என்ற பெயரில் அச்சுப் பணிகளைச் செய்துவரும் முத்துகுமார்.
மார்க்கெட் மற்றும் வளர்ச்சிப் பணிகளை முத்துகுமார் கவனித்துக்கொள்ள, வரவேற்பு, வடிமைப்பு, அக்கவுன்ட் போன்றவற்றை மனைவி வெற்றிசெல்வியும், தயாரிப்பு, இதர வெளிப்பணிகளை மைத்துனர் ரவிக்குமாரும் கவனித்து வருகிறார்கள். புதிதாக முத்துகுமாரின் அண்ணன் மகன் மகேஷ் ஆஃப்செட் மெஷினில் பயிற்சி எடுத்து வருகிறார்.
முத்துகுமாரின் மனைவி பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர், கிராமத்துவாசி. இதனால், ஆரம்பத்தில் தொழில் பக்கம் வர மிகத்தயங்கியவரை இழுத்துப்பிடித்து உள்ளே கொண்டு வந்திருக்கிறார் முத்துகுமார். இன்று கார்ட்களை கம்ப்யூட்டரில் டிஸைன் செய்யும் அளவுக்குத் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல, ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய மைத்துனர், இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சென்று ஆங்கிலத்தில் பேசி ஆர்டர் பிடிக்கும் அளவுக்குத் தயார்படுத்தி இருக்கிறார்.
‘‘குடும்பத்தினரே தொழிலில் ஈடுபடும்போது ஈகோ பார்க்காமல் விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்... வெற்றியை நோக்கி வேகமாக ஓடமுடியும். 3 லட்ச ரூபாயாக இருந்த டர்ன் ஓவர் ஐந்தே வருடங்களில் அரைக் கோடியைத் தாண்டி, இந்த ஆண்டில் ஒன்றரைக் கோடி ரூபாய் என்ற இலக்கை நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். ஒரு பொறுப்பை வெளி ஆட்களிடம் ஒப்படைப்பதற்கும் குடும்ப உறுப்பினர்களிடம் தருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அலுவலக நேரம், சொந்தப் பிரச்னைகள் என்ற சிந்தனைகள் இன்றி, வேலையை முடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக குடும்ப உறுப்பினர்கள் செயல்படுவார்கள். இதனால், நம் இலக்கை வெகுவேகமாக எட்டிவிட முடியும்’’ என்றார்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் சேர்ந்து சென்னை தி.நகரில் ‘ஸ்வஸ்திக்’ என்ற பெயரில் ஜெராக்ஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார்கள். குடும்பத்தில் மூத்தவரான குணசேகரன், ‘‘நான் திருச்சி யில் அரசுப் பணியில் இருந்தேன். ஒரு சகோதரர் ராஜஸ்தானில் வேலை பார்த்தார். அப்போது அப்பா சென்னையில் லூப்ரிகன்ட் ஆயில் விற்பனை மற்றும் ஜாப் டைப்பிங் சென்டரைத் தொடங்கி இருந்தார். ‘இந்த இரண்டு பிஸினஸ்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து தொழில் செய்யலாம்’ என்றார் அப்பா. அதன்படியே நாங்களும் வந்தோம். ஜாப் டைப்பிங், எலெக்ட்ரானிக் டைப்பிங்கானது. பிறகு கம்ப்யூட்டர் டி.டி.பி வந்தது. கூடுதல் வருமானத்துக்காக ஜெராக்ஸையும் இணைத்துக்கொண்டோம். கடைசியில் சேர்ந்த ஜெராக்ஸ் தொழில் நன்றாக சூடுபிடிக்க, ஆயில் விற்பனைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, இதையே முழுநேரத் தொழிலாக்கிவிட்டோம். படிப்பு முடிந்ததும் தம்பிகள், தங்கைகளும் பிஸினஸுக்குள் வந்துவிட்டார்கள்’’ என்றவர், குடும்பத்தொழில் மூலம் கிடைக்கும் லாபம் பற்றிச் சொன்னார்.
’’குடும்ப உறுப்பினர்கள் பலர் ஒருங்கிணைந்து ஒரு தொழில் அல்லது வணிகத்தைச் செய்யும்போது தனித்தனியே முதலீடு போட வேண்டியதில்லை. உடனடி லாபமில்லை என்றாலும் தொழிலைத் தொடர்வதில் பிரச்னை இருக்காது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அத்தனை பேரும் விட்டுக்கொடுத்துப் போவார்கள். எங்கள் அனைவரின் வீடும் ஒரே காம்பவுண்டில்தான் என்பதால் பிஸினஸ் தொடர்பாக எப்போது வேண்டுமானலும் சந்தித்துப் பேச முடிகிறது. இப்போது அடுத்த தலைமுறையும் பிஸினஸுக்குள் வந்துவிட்டனர்’’ என்கிறார் குணசேகரன்.
பிரச்னை என்று ஏதாவது வந்தால் அனைவரும் ஒன்றுகூடி விவாதிக்கும் வாய்ப்பு குடும்பத் தொழிலில் அதிகமிருக்கிறது. மேலும், தொழிலில் ஈடுபடுவர்கள் வீட்டிலும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொள்ள முடிவதால், சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைத்து தொழில் வேகமாக வளர்ச்சி காணும். குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் தொழில் நடக்கும் இடத்தில் எப்போதும் இருந்துகொண்டு இருப்பதால் ஊழியர்கள் ஒழுங்காகப் பணிபுரிவார்கள்.
திருப்பூரில் உள்ள ‘கிளாசிக் போலோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஷிவ்ராம், தன் சகோதரர்களுடன் இணைந்து தொழில் செய்து வருகிறார். அவர் சொல்லும் கருத்து அலசி ஆராய்வதாக இருக்கிறது. ‘‘குடும்பத் தொழில் என்பதே கூட்டுக் குடும்பம் போலதான். பெரும்பாலான குடும்பங்களில் அனுபவஸ்த அப்பாவோ, துடிப்பான மகனோ விட்டுக் கொடுத்துதான் போகிறார்கள். அப்படிப் போனால்தான் பிஸினஸில் வெற்றி கிடைக்கும். இந்தத் தலைமுறை இடைவெளி இல்லாமல், சகோதரன், சகோதரி, அவருடைய கணவர் என்று குடும்பத் தொழில் அமைந்தால் அங்கே வயது வித்தியாசம் குறையும். இதில் ஒரே வயது என்னும்போது, சிந்தனைகள் சீராக இருக்கும். அவர்களுக்குள் ‘நீயா, நானா’ என்ற ஈகோ வராதவரை பிரச்னை இல்லாமல் போகும் பிஸினஸ்!’’ என்ற ஷிவ்ராம், ‘‘குடும்பத் தொழில் செய்வோர் தங்களுக்கான சம்பளம் எவ்வளவு என்பதைத் தேவைகளை வைத்துத்தான் தீர்மானிக்கவேண்டும். இவ்வளவு தொகை இருந்தால்தான் குடும்பம் நடத்தமுடியும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து திட்டமிட்டுக்கொள்ளாவிட்டால், நிர்வாகத்தினரிடையே நாளை பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது. அண்ணன், தம்பிகள் சும்மா இருந்தாலும் திருமணம் முடித்து வீட்டுக்குள் வருகிற புது மனைவி, ஏதாவது பிரச்னை கிளப்பிவிடக்கூடாது. மனைவியை இந்தக் குடும்பத்து பாரம்பர்யத்துக்குத் தயார் செய்யவேண்டியதும் அவசியம். அப்போதுதான் வீட்டுக்கு வரும்போது நிம்மதி இருக்கும். வியாபார வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது தனிமனித வாழ்க்கைதான் என்பதை குடும்பத் தொழிலில் இருப்பவர்கள் எப்போதும் மறந்து விடக்கூடாது’’ என்றவர், அதிலேயே அடுத்த பாயின்ட் சொன்னார்.
‘‘குடும்பத் தொழிலில் பாதகமான விஷயங்களும் இருக்கின்றன. தொழிலில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர் தவறு செய்யும்போது, உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. குடும்ப உறவில் சிக்கல் உருவாகாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.
ஒரு தொழிலில் லாபம் பிரிப்பது சுலபம். தொழிலைப் பிரிப்பது கடினம்! அந்த எல்லைக்குப் போகாமல் இருக்க குடும்பத்தாரைச் சமாளிக்கவேண்டும். குடும்பத் தொழில் தானே என்று ஒரே காம்பவுண்டுக்குள் வீட்டு உறுப்பினர்களை அடக்கக்கூடாது. ஒரு வீட்டுக்கு ஒரு ராணிதான். அப்படி சமையல்கட்டுகளைப் பிரித்துவிட வேண்டும். தனித்தனி வீடுகளும் சமையல் கட்டுகளும் இருந்தாலே பல பிரச்னைகள் தவிர்க்கப்படும்.
மனைவி நம் வழிக்கு வராமல், சகோதரர்கள், அவர் குடும்பத்தார் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தால் வீம்பாக நாமும் நிற்கக்கூடாது. பதிலாக அவருக்கும் ஒரு பொறுப்பைக் கொடுத்து, அதில் அவரை ஈடுபடுத்தி விடுவது புத்திசாலித்தனம். குடும்பத் தொழிலில் இருப்பவர்கள் மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பது தொழில்வளர்ச்சிக்கு உரம் போடுவதாக அமையும்’’ என்றார் ஷிவ்ராம். இவருடைய சகோதரர்கள் மூவரும் கூட்டாக நிர்வாகத்தைப் பிரித்துக் கவனித்துக் கொள்ள, இவர்களது திருமதிகள் வெவ்வேறு சிறிய யூனிட்களின் நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
இன்னொரு உதாரணத்தையும் சொன்னார் ஷிவ்ராம்- ‘‘இப்படிப் போனால், சகோதரர்கள் காலம் வரை எந்தப் பிரச்னையும் இருக்காது. அடுத்த தலைமுறை ஃபாரின் படிப்பு, டெக்னாலஜி வளர்ச்சியோடு வரும்போது, இரண்டுவிதமான டைவர்ஷன்களில் இழுக்க ஆரம்பிப்பார்கள். ஒருமுக சிந்தனை இல்லாமல் அடுத்தடுத்து வாக்குவாதங்கள் வர நேர்ந்தால், குடும்பத் தொழிலுக்கு அதுதான் அலார மணி. மூத்தவர்களே முன்நின்று யாருக்கு எது பிடிக்கிறதோ, அதைக் கொடுத்து பிரித்துவிடவேண்டும். அப்படிப் பிரிக்கும்போது, ஒவ்வொரு தொழிலும் கிளைவிட்டு நன்கு வளரும். சண்டைகளுடனே இருக்கிற நிலை நீடித்தால், வளர்ச்சியையும் குலைத்து, தொழிலையும் கீழே இறக்கிவிடும். ஃபேமிலி பிஸினஸில் இருக்கிறவர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் இது!’’ என்று முத்தாய்ப்பாகச் சொன்னார் ஷிவ்ராம்.
|
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment