Monday, 22 July 2013

தொழில் தொடங்கலாம், வாங்க! -சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வது

தொழில் தொடங்கலாம், வாங்க!
தொழில்
 
வா யுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். அது சுற்றுலா ஏற்பாடு செய்பவர்களுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். மூலதனமே இல்லாமல் வருமானம் பார்க்கக்கூடிய தொழில், இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ் நடத்துவது!
ஒருநாள் லீவு கிடைத்தாலும் பிக்னிக் போல எங்காவது வெளியில் சென்று வரலாம் என்னும் அளவுக்கு மக்கள் மனநிலை மாறிவிட்டது. அதனால், இந்தத் தொழில் நிச்சயமாக நல்ல லாபம் தரக்கூடியதாகவே இருக்கும்.
ஆரம்ப முதலீடாக ஒரு அலுவலக அறை வாடகைக்கு பிடிப்பது, தொடர்பு வசதிகளுக்காக ஒரு தொலைபேசி, சுற்றுலா பற்றிய விவரங்களை துண்டு பிரசுரங்களாக அச்சடிக்க ஆகும் செலவு என்று ஐயாயிரம் ரூபாய் இருந்தால்கூட போதுமானது.
ஆரம்பத்தில் உங்கள் பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள், கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் போன்றவற்றைப் பற்றித் தெளிவாக ஆய்வு செய்துகொள்ளுங்கள். உங்கள் ஊரில் இருந்து அந்த இடங்களுக்குச் சென்று வருவதற்கான நேரம், அங்கு செலவிட வேண்டிய நேரம், என்னவெல்லாம் பார்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன, எவ்வளவு செலவாகும் என்பது போன்ற விவரங்களைச் சேகரித்தபிறகு அதை வைத்து ஒரு திட்டத்தைத் தயார் செய்யவேண்டும்.
அந்தத் திட்டத்தை பிட் நோட்டீஸ்களாக்கி தெரிந்தவர்களிடையே விநியோகித்து ஆட்களைச் சேர்க்கலாம். இப்படி ஆட்கள் சேர்ந்தபிறகு அதற்கு ஏற்ற மாதிரி வேன் அல்லது பஸ் ஏற்பாடு செய்து சுற்றுலா அழைத்துச் செல்லலாம்.
ஆரம்பத்தில் சிறிய சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வது பெரிய அளவில் செலவுச் சுமை நம்மை அழுத்தாமல் இருக்க வழி செய்யும். ஆரம்பத்திலேயே அகலக்கால் வைத்துவிட்டு பிறகு அவதிப்படக் கூடாது.
இப்படி நீங்கள் சுற்றுலா அழைத்துச் செல்கிறீர்கள் என்று தெரிந்தாலே வாடிக்கையாளர்கள் வந்து அவர்களுடைய சுற்றுலா தேவைகளைச் சொல்வார்கள். அதைவைத்து நீங்கள் அடுத்த சுற்றுலாவைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வட்டத்தை பரப்பி பெரிய சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யலாம்.
இதில், ஆட்களைச் சேர்த்து அழைத்துச் செல்லும்போது பயணச் செலவு தங்குமிடம், உணவு போன்ற செலவுகள் போக உங்களுக்கு 20% லாபம் வைத்தாலே நல்ல வருமானம் கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கும் அது பெரிய தொகையாகத் தெரியாது. ஆட்கள் அதிகமாக அதிகமாக உங்களுக்கான வருமானம் அதிகரிக்கும்.
அதோடு, சுற்றுலா செல்லும் இடங்களில் தங்குமிடம், உணவு போன்ற ஏற்பாடுகளில் நீங்கள் ஒரே இடத்தைத் தொடர்ந்து நாடும்போது குறைவான கட்டணத்தில் கிடைக்கும். அதிலும் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இதில் அடிப்படையான விஷயம் சுற்றுலாத் தலங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கைடுக்கு உரிய நேர்த்தியோடு அந்த இடங்களைப் பற்றி விவரித்தால் வாடிக்கையாளர்களுக்கு ஒட்டுதல் அதிகமாகும்.
மெல்ல உங்கள் பகுதிகளில் சுற்றுலா ஏற்பாடுகளைச் செய்து பழகிய பிறகு வெளிப்பகுதிகள், வெளிமாநிலங்கள் ஏன் வெளிநாடுகளுக்குக்கூட சுற்றுலா ஏற்பாடுகளைச் செய்யமுடியும். அந்தப் பகுதிகளில் உள்ள உங்களைப் போன்ற ஏஜென்ட்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செயல்படலாம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை விடும் நாட்களில் அவர்களுக்கு ஏற்ற கல்விச் சுற்றுலாவை ஏற்பாடு செய்து கொடுக்கலாம். பயணத் திட்டத்தை மட்டும் நாம் உருவாக்கிக் கொடுத்தால் அவர்களுடைய பள்ளிக்கூட பேருந்து அல்லது வேனிலேயே சுற்றுலா அழைத்துச் செல்லலாம்.
கோயில்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும்போது அங்கு என்னென்ன விசேஷம் நடக்கிறது, எப்போது கோயிலைத் திறந்து வைத்திருப்பார்கள், எப்போது பார்வையாளர்களை அனுமதிப்பார்கள், அந்தக் கோயிலில் நடைபெறும் பரிகாரங்கள் என்னென்ன என்பதையெல்லாமும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களால் ஆட்களைச் சேர்க்க முடியா விட்டால், டிக்கெட் சேர்த்துத் தருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷன் தந்தும் வாடிக்கையாளர்களைச் சேர்க்கலாம். மொத்தமாக ஒரே அலுவலகத்திலோ, ஒரே காலனியில் குடியிருப்பவர்களோ அமையும்போது கட்டணத்தைக் குறைத்துக்கொண்டு அவர்களை நிரந்தர வாடிக்கையாளராக்கிக் கொள்ளலாம்.
எப்போதும் சுற்றுலா தேதிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்வது நல்லது. இதனால், கடைசி நேரத்தில் நிகழும் அசௌகரியமான சம்பவங்களைத் தவிர்க்கலாம்.
இப்படி மாதத்துக்கு இரண்டு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வதன் மூலம் 10,000 ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிக்கலாம்.

No comments:

Post a Comment