Monday, 22 July 2013

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில்
 
‘ மூளை’தனம்
நல்ல ஐடியா முதலீடைத் தரும்!
வெ றுங்கையால் முழம் போட்டு கோடிகளைப் பிடித்தவர் தரும் பிராக்டிகல் தொடர்!
துணிகள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. ஜெர்மனியில் உள்ள பெரிய துணி வியாபாரியிடம் இருந்து அவர்களுக்கு ஒரு ஆர்டர் கிடைக்க, சந்தோஷமாகத் தயாரித்து அனுப்பினார்கள். பல நூறு கோடி ரூபாய் ஆர்டர் கிடைத்து, அந்நிறுவனம் பெரிய அளவில் விரிவாக்கம் நடந்து ஏகப்பட்ட ஊழியர்கள் சேர்க்கையுடன் வெற்றிகரமாகவே சென்றது பிஸினஸ்.
அந்த வேளையில் ஜெர்மன் துணி வியாபாரி புதிய கட்டளை ஒன்றைப் போட்டார். ‘உங்களிடம் ஆர்டர் கொடுத்து, சரக்கு என் கைக்கு வரும்போது 85 நாட்கள் ஆகிறது. இன்னும் விரைவாக 40 நாளில் கொடுக்கவேண்டும்! இல்லையேல் விலை சற்றுக் கூடுதலானாலும் பரவாயில்லை என்று உள்ளூர் மார்க்கெட்டிலேயே நான் வாங்கிக்கொள்ள நேரிடும்’ என்பதுதான் அவரது கட்டளை.
நிறுவனம் கணக்குப் போட்டுப் பார்த்து, திணறி நின்றது. ஆர்டர் கைக்குக் கிடைத்தவுடன், அதற்கான துணிகளை வரவழைக்க ஐந்து நாட்கள். ஃபேக்டரிக்கு வந்ததும் அதை வெட்டி, தைத்து, அழகாக பேக் செய்து பெட்டிகளில் அடுக்கி, பார்சல் செய்ய... 45 நாட்கள். அதைத் தனிக் கப்பலில் அனுப்ப... 35 நாட்கள். இதில் போக்குவரத்து நாட்களிலும் துணிகள் கொள்முதல் செய்யத் தேவைப்படும் நாட்களிலும் ஏதும் செய்யமுடியாது. தையல் நேரத்தை வேண்டுமானால் பத்து நாட்கள் வரை குறைக்கமுடியும்.
என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தது நிர்வாகம். சரியான ஏற்பாடுகள் ஏதும் செய்யமுடியாத நிலையில் நிறுவனமே மூன்றே மாதத்தில் நொடித்து நிதி சிக்கலில் சிக்கிக்கொள்ளும் என்பதுதான் நிர்வாகிகளின் கவலை.
இந்தத் தகவல் அரசல் புரசலாக ஊழியர்களிடம் பரவ... பீதி சூழ்ந்தது. பலர் வேறு வேலைகளுக்குத் தாவ, இடம் பார்க்க ஆரம்பித்தனர். அந்நிலையில் நிர்வாகத்தைச் சந்திக்க வந்தார் தையல் பிரிவு ஊழியர் ஒருவர். ‘சார்! 40 நாளில் டெலிவரி கொடுக்க ஒரு வழி இருக்கு’ என்றார்.
‘வியாபாரப் படிப்பு படித்த பலரும் சொல்லாத யோசனையை ஒரு ஊழியரால் எப்படிச் சொல்லிவிட முடியும்’ என்று யோசிக்கவில்லை நிர்வாகி. ஆர்வமாக, காது கொடுத்தார்.
‘துணியைத் தேர்ந்தெடுத்து, வாங்கி ரகம் வாரியாக வெட்டி எடுக்க ஆகும் 5 நாட்களையும் போக்குவரத்துக்கு ஆகும் 35 நாட்களையும் கூட்டினால் கம்பெனிகாரர்கள் கேட்கும் 40 நாட்கள் வந்துவிடுகிறதே..?’ என்ற,
தொழிலாளி சொன்ன திட்டம் இதுதான். ‘தொழிற்சாலை தையல் இயந்திரங்களை கப்பலில் ஃபிக்ஸ் செய்துவிடவேண்டும். தைப்பது, அயர்ன், பேக்கிங் இந்த வேலைகள் அனைத்தையும் கப்பலில் வைத்தே முடித்துவிடவேண்டும். ஊழியர்களை அழைத்துச் சென்று வர சற்று செலவு கூடும். ஆனால், இந்த ஏற்பாடு மூலம் நிறுவனம் பெறப்போகும் நற்பெயரோடு ஒப்பிட்டால், இது ஒன்றும் பெரிய விஷயமல்ல...’
நிர்வாகி முகத்தில் மகிழ்ச்சி. ஊழியர் சொன்ன திட்டத்தில் உள்ள சிறுசிறு ஓட்டைகளைக் களைந்து, செயல்படுத்தியதில் அந்த நிறுவனம் பழையபடி வெற்றிப்பாதையில் நடைபோட்டது. ஒரு யோசனை ஒரு நிறுவனத்தையே தூக்கி நிறுத்தியது.
சென்னையில் இருக்கிற லங்கா லிங்கம் என்ற இளைஞரும் இப்படி ஒரு சவாலை சந்தித்து ஜெயித்தவர்தான். அப்பா முருகேசு ஆரம்பித்த அப்பள பிஸினஸில் நுழைந்த நேரம். தரம் எப்போதுமே முக்கியம் என்பது அவரது அப்பாவின் தாரக மந்திரம்.
தன் 21-வது வயதில் அப்பள பிஸினஸில் உள்ளே நுழைந்ததும் லிங்கம் செய்த புரட்சி, வெறும் அப்பளங்களாக விற்பதைவிட, பொரித்த அப்பளங்களாக, அப்படியே சாப்பிடும் விதமாக தயார்செய்து விற்கலாம் என்ற யோசனைதான். இந்தத் திட்டத்துக்கு உள்ளூரைவிட, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதையும் அறிந்து கொண்ட லிங்கம், இதற்காக லண்டனில் இருக்கும் மொத்த வியாபாரி ஒருவருடன் ஒப்பந்தம் போட்டார். தயாரிக்கும் அப்பளங்களை அப்படியே மொத்தமாக வெளிநாட்டு வியாபாரிக்குக் கொடுத்துவிடுவது... அவர் தன் வாடிக்கையாளர்கள் உள்ள வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பது என்பதுதான் திட்டம். இரண்டு இங்கிலீஷ் கஸ்டமர்களுடன் தொடங்கிய வியாபாரம், இந்திய கிராமத்துக் கைப்பக்குவத்தில் கிடுகிடுவென 20,000 கஸ்டமர்களைப் பெற்றுத் தந்தது. உள்ளூர் பிஸினஸைவிட, ஃபாரின் வியாபாரம் சூடுபிடித்தது.
ஒருமுறை கடும் மழை காரணமாக, அப்பளத் தட்டுப்பாடு. உடனடியாக அப்பள பார்சல்களை எதிர்பார்த்தார் வெளிநாட்டு வியாபாரி. கப்பலில் பார்சல்களை அனுப்பிவந்த லிங்கத்தால் அவரது உடனடித் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாத நிலை. தொழில் போட்டியாளர்களையும் சமாளிக்க வேண்டிய இக்கட்டான அந்தச் சூழலில் தெளிவாக ஒரு முடிவெடுக்காவிட்டால், இத்தனை நாள் கட்டிக்காத்த வியாபாரம் மொத்தமும் அம்பேல் ஆகிவிடும்... என்ன செய்வது? லிங்கம் தன் தந்தையிடம், ‘இந்த பார்சல்களை விமானம் மூலம் அனுப்பினால் என்ன?’ என்று ஐடியா சொன்னார். ‘சுண்டைக்காய் கால் பணம்... சுமைகூலி முக்கால் பணமா?’ என்று திகைத்த அவருடைய தந்தை முருகேசுவை, வேறொரு திட்டம் மூலம் சம்மதிக்க வைத்தார் லிங்கம்.
‘தேவைக்காக சப்ளை செய்யும் நிலையில் இந்தப் போக்குவரத்துச் செலவை அவரையும் பகிர்ந்துகொள்ள வைப்போம். அதுதவிர, வாங்கும் சரக்குக்கு உடனே பணம் கொடுத்துவிடவேண்டும் என்போம்’ என்பதுதான் லிங்கம் சொன்ன திட்டம். அது ஒர்க் அவுட் ஆனது. தனி விமானங்கள் மூலம், கன்டெய்னர்களில் அப்பளம் கை மாறின. இன்று நிலை என்ன தெரியுமா..? வெளிநாட்டு ஆர்டர்கள் எல்லாமே விமானம் மூலம்தான் போகின்றன.
சில கோடி ரூபாயில் அப்பள பிஸினஸ் செய்துகொண்டிருந்தாலும் லிங்கத்தின் சிந்தனை மெகா ரகம். பெரிய பிஸினஸாக டர்ன் ஓவரில் 100 கோடிகளைத் தாண்டி, 1,000 கோடிகளைத் தாண்டி வியாபாரம் செய்யவேண்டும் என்பது அவரது கனவு. அப்பள பிஸினஸில் இருந்தபடியே, கை தாங்கும் சிறு முதலீட்டில் பெரிய பிஸினஸ் என்ன என்று பார்த்தார். ஆட்டோமொபைல் துறை அவரது கனவுக்குக் கதவு திறந்துவிடும் என்று தெரிந்தது. டொயோட்டா ஏஜன்ஸி எடுத்தார்.
கையில் இருந்து போட்டதைவிட, வங்கிக் கடனில் புரட்டிய முதல் அதிகம். கார்களை வாங்கி விற்கும் பிஸினஸில் இறங்கிய சில ஆண்டுகளிலேயே 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் என்ற அவரது முதல் கனவை எட்டினார். இன்று 300 கோடியைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று தகவல்.
லிங்கத்திடம் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி சொல்வார். ‘ஐடியா இருந்தால், எவ்வளவு பெரிய பிஸினஸுக்கும் கை முதல் தேவைப்படாது!’ என்பதுதான். நல்ல ஐடியாக்கள் காசைக் கொண்டு வந்து நம் முன் நிற்கவைக்கும் என்பதைத்தான் அப்படிச் சொல்வார். எங்கே, எப்படி வரும் என்பது தெரியாவிட்டாலும் வரவேண்டும் என்று நினைக்கிற தொகை கைக்கு வந்து சேர்ந்துவிடும் என்பதைத் தன் பிஸினஸில் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கும் துடிப்பான ரசனைக்காரர்.
பொதுவாக, ஒரு எம்.டி-யின் பிரத்யேக அறை என்பது அவரவர் ரசனைக்கேற்ப, அலங்காரமாக, பெரிதாக, சிறிதாக, குளிர்ச்சியாக என்று இருக்கும். கோயம்பேடு ரோகிணி தியேட்டர் எதிரில் உள்ள இவரது ‘டொயோட்டா அலுவலகம்’ முகத்தில் புன்சிரிப்பை வரவழைக்கும் ரசனை கொண்டது.
நான்காவது மாடியில் அறை. வழக்கமான ரிசப்ஷன். உள்ளே நுழைந்தால், பளீரென முகத்தில் அடிக்கிறது வெயிலின் தாக்கம். கூடவே, ஏ.ஸி-யின் சில்! மொட்டை மாடியில் மூன்றுபக்கமும் கண்ணாடித் தடுப்புகொண்ட பெரிய அறை. அறைக்கு வெளியே விசாலமான புல்தரை... இந்தப் பக்கம் தண்ணீரின் சில்லிப்பும், சலசலப்பும் கலந்த நீச்சல் குளம். கட்டைச் சுவரைத் தாண்டி, நீளமான கரும் பாம்பின் மேல் ஊறும் எறும்புகளாக வாகனங்கள்.
இப்படி ஒரு அட்மாஸ்பியரில் சந்திப்பவர்கள் இவர் கேட்கும் விஷயங்களுக்கு ஓகே சொல்லி விடுவார்கள். தான் யார் என்பதைத் தன் செயல்களில், சுற்றுப்புறங்களிலேயே விவரித்துவிடுவதும் ஒருவகையான மூளைதனம்தான். லிங்கம் அந்த ரகம். ஐடியாவை விற்று மூலப்பொருள் வாங்கும் ரகம்.
எந்த பிஸினஸ் தொடங்க இருப்பவரும் இதை முயற்சிக்கலாம். உங்கள் திட்டங்களை, புதுமையான சிந்தனைகளை முதலில் சரியான வங்கி அதிகாரியிடம் நிரூபித்தால், வியாபாரத்துக்குத் தேவையான பணத்தைக் கடனாகத் தரத் தயாராவார்.
லங்கா லிங்கம் பேசும்போது, ‘ஏன்னா...’ என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவதைக் கவனித்திருக்கிறேன். ‘ஏன்?’ என்ற வார்த்தை கேட்காமல் வாழ்க்கை மட்டுமல்ல... பிஸினஸும் இல்லை என்பது அவரது வாதம்.
இந்த ‘ஏன்?’ உள்ளேதான் இருக்கிறது பிஸினஸ் வெற்றி ரகசியம். ஒரு விஷயத்தை டீல் செய்யும்போது, ஐந்து முறை ‘ஏன்?’ என்று கேட்டுப் பாருங்கள். பல பின்னணிகள் புரிய ஆரம்பிக்கும். சும்மா ஓர் உதாரணம் சொல்கிறேன்.
ஒரு மூங்கிலால் ஆன கூடை ஊஞ்சல் விற்கச் செல்கிறீர்கள். ‘குழந்தைகளும் வயதானவர்களும் வாங்குவார்கள். நகரத்தில் உள்ளவர்கள்தான் விரும்பி வாங்குவார்கள்’ என்ற நம்பிக்கையோடு மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்கிறீர்கள். ஆனால், அங்கே விற்பனை அதிகமில்லை. மாறாக, கிராமங்களில் அதிகம் விற்கிறது. ஏன் இப்படி..? தெரிந்தோ தெரியாமலோ உங்கள் ஊஞ்சல் இரண்டு பேர் உட்கார்ந்து ஆடும் அளவுக்கு அகலமாக இருந்தது. கிராமத்துப் புதுமண ஜோடிகளும் தென்னந்தோப்பு பார்ட்டிகளும் ரொமான்ஸ் பண்ண இதைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் விசாரணையில் கிடைத்தால், அதையே விளம்பர வாசகமாக்கி, நகரத்திலும் விற்கமுடியுமே!
ஒருவேளை, உங்கள் எதிர்பார்ப்பு நடந்தே விட்டாலும், ‘ஏன்?’ என்று கேளுங்கள். உங்கள் வாடிக்கையாளர் எங்கே திருப்தியானார்? என்று விசாரித்தால், உங்களுக்கே தெரியாத ஒரு காரணத்தை அவர் சொல்லிவிடக்கூடும். அதில் முன்பைவிட இன்னும் முனைப்பாக இறங்கி பெரிய வளர்ச்சி அடைய முடியுமில்லையா..?
இப்படி ஒரு தயாரிப்பு நன்றாகப் போனாலும் சரி... எதிர்பார்ப்புக்கு மாறாக, படு டல்லானாலும் சரி... அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். முயற்சி செய்யுங்கள். அந்த ‘ஏன்?’-ல் இருக்கிறது சக்ஸஸ்!
இன்னொரு விஷயம், கஸ்டமர்கள் என்பவர்கள் நமக்கு இலவச அறிவுரை சொல்பவர்கள். நாம் தயாரிக்கும் பொருளைப் பயன்படுத்தும் அவர்களுக்கு பொய் சொல்லவோ, குழப்பவோ அவசியமில்லை. அவரைத் தவிர, வேறு யாராலும் தனக்கு இது, இந்த முறையில் இப்படித் தேவை என்பதைத் தெளிவாகச் சொல்லமுடியாது. நீங்கள் இலவச சாம்பிள் கொடுத்து அதன் பயன்பாட்டை அறியும்போதுகூட, அவர் முகஸ்துதிக்காக உங்கள் தயாரிப்பைப் புகழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால், காசு கொடுத்து வாங்கிய வாடிக்கையாளர் ஒரு தகவல் சொன்னால் அது உண்மை யாகத்தான் இருக்கும். இதில் இடத்துக்கு இடம் வேண்டு மானால் சிறிய மாறுபாடு இருக்குமே ஒழிய, உங்களைத் தேடிவந்து பாராட்டோ புகாரோ சொன்னால் அதற்கு மதிப்பளியுங்கள். உங்கள் தயாரிப்பின் தரம் நிச்சயம் உயரும்.
அதுபோலதான் ஊழியர்கள் விஷயமும். சம்பந்தமே இல்லாத ஒரு துறை ஊழியரிடம் இருந்து ஏதோ ஒரு யோசனை வரலாம். நிர்வாகத்திடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், எங்கோ பயன்பட்ட ஓர் அனுபவ விஷயத்தைக்கூட தன் யோசனை போல, அவர் சொல்ல முன் வரலாம். ‘இவர் யார் எனக்குச் சொல்வது?’ என்று எண்ணாமல் அந்த யோசனையைக் கனிவுடன் அணுகுங்கள். நிறுவன வளர்ச்சியையே உச்சாணிக் கொம்புக்குக் கொண்டு செல்வதாகக்கூட அது அமையலாம்.
என்னைப் பொறுத்தவரை எந்த சிந்தனையுமே தப்பானதில்லை. எனவே, அதைச் சொல்பவரின் ஆர்வத்துக்குக் காது கொடுங்கள். அதில் உங்கள் புத்திசாலித்தனத்தை இணைத்து இம்ப்ரூவ் செய்தால் மேலும் பிரகாசிக்கக்கூடும். ஐடியாக்களை முளையிலேயே கிள்ளாதீர்கள்.

No comments:

Post a Comment