Friday, 11 July 2014

ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு! விற்பனையில் 15% லாபம்...!

ரெடிமேட் ஆடைகள்!
முன்பெல்லாம் இரண்டு வேஷ்டி, இரண்டு சட்டை இருந்தாலே போதும், ஒரு வருட காலத்தை தாராளமாக ஓட்டி விடுவார்கள். ஆனால், இன்று? பீரோ நிறைந்தாலும்கூட மனது நிறைவதில்லை! பண்டிகை காலத்தில் மட்டுமே துணி எடுப்பது என்பதும் பழங்கதையாகி விட்டது. குடும்பத்தோடு வீட்டை விட்டு கீழே இறங்கினால் திரும்பும்போது இரண்டு டிரஸ்ஸாவது எடுத்துவிட்டுதான் வருவது என்ற நிலை இன்றைக்கு. மொத்தத்தில் இன்றைக்கு ரெடிமேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது.
ல நூற்றாண்டுகளாக ஜவுளித் தொழிலில் கொடிகட்டி பறக்கிறோம் நாம். நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுக்கவும் நமது ஆயத்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை நமது ஆயத்த ஆடைகளை வாங்காத நாடுகளே உலகில் இல்லை. ஆனால், அதிக வாய்ப்புகள் இருக்கும் அதேநேரத்தில் இந்தத் துறையில் அதிகளவில் ரிஸ்க்கும் இருக்கின்றன. அந்த ரிஸ்க்குகளைத் தாண்டி, சமாளித்து நின்றுவிட்டால் போதும், நீங்களும் ஒரு தொழிலதிபராகி விடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
சந்தை வாய்ப்பு!
தமிழகத்தில் பல நகரங்களில் ஜவுளித் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும், சென்னை, ஈரோடு, சேலம், கோவை பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஆயத்த ஆடைகளை நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம். அல்லது மொத்த வியாபாரிகளிடமிருந்து ஜாப் ஆர்டர் வாங்கி, அதை தயார் செய்தும் கொடுக்கலாம். இத்தொழிலுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், இங்கு தயாராகும் ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூரைச் சுற்றியுள்ள ஊர்களில்தான் இந்த தொழிலை தொடங்க முடியும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. ஆனால், உண்மை என்னவெனில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொழிலைத் தொடங்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
மூலப் பொருட்கள்!
டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணி வகை மற்றும் தைப்பதற்கு நூல் ஆகியவை இத்தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களாகும். டெக்ஸ்டைல்ஸ் துறையில் கொங்கு மண்டலம் சிறந்த மாவட்டம் என்பதால் அங்கிருந்து மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், தற்போது திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சாயப்பட்டறை பிரச்னை காரணமாக மூலப் பொருட்களை பவானி மற்றும் அகமதாபாத் போன்ற பகுதிகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

இயந்திரங்கள்!
இத்தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை (தையல் மெஷின்கள் மற்றும் கட்டிங் மெஷின்கள்) ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கான டீலர்கள் கோவை, சென்னை நகரங்களில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனித் தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களே அசெம்பிள் செய்து கொடுத்து விடுகிறார்கள்.
முதலீடு!
இத் தொழிலைச் செய்வதற் கான நிலம் மற்றும் கட்டடத்தை சொந்தமாகவோ அல்லது குத்த கைக்கோ எடுத்துக் கொள்ளலாம். இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படும்.
ஃபைனான்ஸ்!
இத்தொழிலைத் தொடங்க நினைக்கிறவர் தனது முதலீடாக 5%, அதாவது 30,000 ரூபாய் வரை போட வேண்டும். மீதியை கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மானியம்!
இந்த தொழிலானது பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும்.
வேலையாட்கள்!
நல்ல திறமையான வேலையாட் கள் 20 பேரும், நடுத்தரமாக வேலை செய்யக்கூடிய பெண்கள் நான்கு பேரும், நிர்வாகம் மற்றும் விற்பனையை கவனித்துக் கொள்ள ஒரு நபரும், சூப்பர்வைசர் மற்றும் மெக்கானிக் ஒரு நபரும் தேவைப்படுவார்கள். எனவே மொத்தம் 26 நபர்கள் வரை தேவைப்படுவார்கள்.

தயாரிக்கும் முன்...
டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணிகளை வாங்கிச் சேகரித்துக் கொள்ள வேண்டும். துணிகளின் தரம் சரியாக இருக்கிறதா? கலர் மங்கியிருக்கிறதா? அல்லது வேறு வகையில் சேதம் ஏதும் ஏற்பட்டிருக் கிறதா என்பதைப் பார்த்து ஆய்வு செய்த பின்பே தைப்பதற்கு அனுமதிக்க வேண்டும். காரணம், நமது தயாரிப்பில் டேமேஜ் இருக்கும் பட்சத்தில் அது மீண்டும் நம்மிடமே வந்து சேரும். இந்த இழப்பு வராமல் இருக்க வேண்டுமெனில், தரத்தில் கவனமாக இருப்பது அவசியத்திலும் அவசியம்!
பிளஸ்!
ஏற்றுமதிக்கு அதிகம் வாய்ப்புள்ள தொழில். பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து செய்வதற்கு ஏதுவானத் தொழில் என்பதால், ஒளிமயமான எதிர்காலம் இத்தொழிலால் உண்டு.
மைனஸ்!
திருப்பூர் சாயப்பட்டறை தொழில் சார்ந்த பிரச்னைகளும், தேவையான ஆட்கள் கிடைக் காமல் இருப்பதும், பருத்தி நூல் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு களும் இத்தொழிலில் இருக்கும் மிகப் பெரிய சவால்கள்.
ஆனால், இந்தப் பிரச்னைகளை மட்டும் சமாளித்து விட்டால் நிச்சயம் வெற்றி காணலாம்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : வெ. பாலாஜி
வெங்கடேஷ், குளூம் ஓவர்சீஸ், கோவை.
''நான் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர். இத்தொழிலை ஆரம்பித்தபோது அதில் எனக்கு நிறைய அனுபவமில்லை. பிற்பாடு அனுபவத்தில்தான் தெரிந்து கொண்டேன். அதனால், இப்போது இருக்கக்கூடிய போட்டியிலும் சூழ்நிலையிலும் இத்தொழிலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதற்குபிறகு களத்தில் இறங்குவது நல்லது.
இத்தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் 2,500 சதுரடி இடம் தேவைப்படும். தொடக்க முதலீடாக ஐந்து லட்சம் ரூபாய் தேவை. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் போட்டு பெரிய மற்றும் நடுத்தர கம்பெனிகளில் இருந்து ஜாப் ஆர்டர் வாங்கிச் செய்வதில் ஆரம்பித்து, பின்பு மெள்ள விரிவுபடுத்திக் கொள்ளலாம். எடுத்த எடுப்பிலேயே ஏற்றுமதி ஆர்டர் என்று இறங்கத் தேவையில்லை. காரணம் ஏற்றுமதி செய்வதில் ரிஸ்க் அதிகம்.
லோக்கல் மார்க்கெட்டில் ஆண்கள் ஆடைகளில் மட்டுமே பிராண்டுகளின் ஆதிக்கம் இருக்கிறது. தவிர, பெண்கள் அணியும் ஆடைகளிலும், ஆண்களின் இரவு நேர மற்றும் குழந்தைகள் ஆடைகளிலும் இதுவரை பிராண்டுகளின் ஆதிக்கம் பெரிதாக இல்லை. முடிந்தால் நீங்களேகூட ஒரு பிராண்டை புரமோட் செய்யலாம். இதுபோன்ற அறியப்படாத வாய்ப்புகள் இதில் மிக அதிகம்.
இந்த தொழிலில் நமக்கு இப்போது மிகப் பெரிய போட்டியாக இருப்பது சீனாதான். ஆனால், சில விஷயங்களில் நாம் கொடுக்கும் தரத்தை அவர்களால் தர முடிவதில்லை. எனவே, அந்த போட்டியை நினைத்து நாம் பயப்படாமல் தரத்தை இன்னும் உயர்த்தி, விலையைக் குறைத்து கொடுத்தால் நமக்கு எப்போதும் நல்ல எதிர்காலம்தான்!''.

No comments:

Post a Comment