Thursday, 22 July 2010

கால் மிதியடி செய்வது எப்படி - தொழில்

தொழில் தொடங்கலாம், வாங்க!


கால் மிதியடி செய்வது எப்படி - தொழில்


தொழில்
வாசல் படியில் ராச லட்சுமி!
வீ ட்டுக்கு வீடு வாசற்படி என்பது பழமொழி. வாசற்படிக்கு வாசற்படி கால்மிதி என்பது புதுமொழி! அப்படி இருக்கும்போது கால்மிதி தயாரிப்பில் இறங்குவது எளிமையான முதலீட்டில் வளமான வருமானம் பார்க்கும் நல்ல தொழிலாக இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க கால்மிதி தயாரிப்பு ஒரு சிறந்த வழி.
பிளாஸ்டிக் அல்லது நார் பொருட்களை வைத்துத் தயாரிக்கப் பெரிய இயந்திரங்கள்... பெரிய மூலதனம் தேவைப்படலாம். ஆனால், துணியில் இருந்து கால்மிதி தயாரிக்கும் தொழிலில், கை வேலைப்பாடுதான் முக்கியமான அம்சம்!
தையற்கடைக்குச் சென்றால், தைப்பதற்காக வெட்டிய துணி போக, மீதி துண்டுத்துணிகள் ஏராளமாகக் கிடைக்கும். இடத்தைக் காலி செய்வதற்காக அதை இலவசமாகக் கூட கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அப்படிக் கிடைக்கவில்லை என்றால் சிறிய தொகை கொடுத்து அந்தத் துணிகளை வாங்கவேண்டும். இதுதான் அடிப்படையான மூலப்பொருள். அப்படிக் கிடைக்காத பட்சத்தில் பழைய சேலை, சுடிதார் துப்பட்டா போன்ற துணிகளைப் பயன்படுத்தலாம். காட்டன் துணிவகைகள் என்றால் கால்மிதி தயாரிப்பதற்கு வாகாக இருக்கும். அதன் பயன்பாடும் அதிக நாட்களுக்கு வரும்.
துணிகளைச் சேகரித்து வைத்துக் கொண்டு அதைக் குறிப்பிட்ட அளவு அகலத்தில் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். பிறகு அந்தத் துண்டுகளை முடிச்சுப்போட்டு ஒன்றோடு ஒன்று இணைத்து நீண்ட கயிறு போல ஆக்கிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, உல்லன் ஆடைகளை நெய்வது போல, பின்னிப் பின்னி கால்மிதியாக உருவாக்க வேண்டியதுதான்! ஸ்வெட்டர் பின்னத் தெரிந்தவர்களுக்கு மிக எளிதாக இருக்கும்.
நல்ல டிஸைன்களையும் மாடல்களையும் நம் கற்பனைத் திறனுக்கு ஏற்ப வடிவமைத்தால், நல்ல வருமானம் கொட்டக்கூடிய தொழிலாக இதை மாற்றமுடியும். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் நான்கு கால்மிதிகள் தயாரிக்க முடியும். ஒவ்வொன்றும் குறைந்தது 40, 50 ரூபாய்க்கு விற்பனை ஆகும். அதனால், குறைந்த முதலீட்டில் உங்கள் உழைப்புக்கான ஊதியமாக ஒருநாளைக்கு சுமார் 200 ரூபாய் வரைகூட சம்பாதிக்க வழி இருக்கிறது.
இந்தத் தொழிலைச் செய்வதற்கு கருவிகள் என்று பார்த்தால் கத்திரிக்கோல், ஸ்வெட்டர் பின்னும் ஊசி இரண்டும்தான்.
கால்மிதி என்று பெயர் இருந்தாலும் பல்வேறு உபயோகங்களுக்கு இந்தத் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தரமான நூலைக்கொண்டு தயாரித்தால் போன், டீபாயின் மீது பூங்கொத்து, அலங்கார விளக்குகள் போன்றவை வைக்கவும் பயன்படுத்தலாம். பார்க்கவும் அழகாக இருக்கும்; பொருட்களும் பாதுகாப்பாக இருக்கும். அதோடு, சோபா விரிப்பாகவும், டி.வி கவராகவும்கூட இந்தத் தயாரிப்புகள் பயன்படும்.
இதையெல்லாம் ஸ்வெட்டர் நூல் மூலம் வடிவமைக்கும்போதே, மணிகள், அழகுக் கற்கள் சேர்த்து விதவிதமான கலர்களில் பின்னல் போட்டு கலக்கலாம். இதற்கு ஒருபடி மேலே போய் எம்ப்ராய்டரி செய்து கலைநயத்தோடு உருவாக்கினால் அதிகவிலை கிடைக்கும். விதவிதமான பூ வேலைப்பாடுகள் கொண்டவையாகத் தயாரித்தால், 250 ரூபாய் விலை வைத்துக்கூட விற்கமுடியும்.
இப்படி வீட்டில் இருந்தே, செய்துகொண்டு இருந்தால் நம்மைத் தேடி யார் வந்து வாங்குவார்கள்? என்ற சந்தேகம் வரலாம். உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர், மளிகைக் கடைகள் போன்றவற்றில் கொடுத்து விற்கச் செய்யலாம். அவர்களுக்கு ஒரு நியாயமான லாபம் கிடைக்கும் வகையில் விலை வைத்துக் கொடுத்தால், தாராளமாக விற்க முன்வருவார்கள்.
பெரிய பெரிய நிறுவனங்களை அணுகி அவர்களுடைய தேவைக்கு ஏற்ப, அவர்களது நிறுவனப் பெயர் பதித்த தயாரிப்புகளை உருவாக்கித் தந்து லாபம் பார்க்கமுடியும். மேலும், அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு நேரடியாகக் கொடுத்தும் விற்பனையைப் பெருக்கலாம். அதேபோல், பக்கத்து வீட்டாரிடம் பழைய சேலைகளை வாங்கி, கால்மிதி தயாரித்து அவர்களுக்கே கொடுத்து, தயாரிப்புச் செலவாக ஒரு தொகையை வாங்கலாம்.
இதிலேயே பைகள், விதவிதமான திரைச்சீலைகள் போன்றவற்றையும் தயாரித்துக் கொடுக்கலாம். இப்படிப் பலவித தயாரிப்புகளை உருவாக்கி, அதன்மூலம் மாதம் ஐந்தாயிரத்துக்குக் குறையாமல் சம்பாதிக்க முடியும்.
வீட்டுப்படியிலேயே காத்திருக்கிறது வருமான வாய்ப்பு... அள்ளிக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment