Thursday, 22 July 2010

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில்
 
தேவை என்னும் தேவதை!
 
வெறுங்கையால் முழம் போட்டு கோடிகளைப் பிடித்தவர்
தரும் பிராக்டிகல் தொடர்!
பி ஸினஸில் சக்ஸஸ் ஒன்றுதான் குறிக்கோள் என்று ஓடுபவர்களுக்கு யார் எத்தனை இடையூறு கொடுத்தாலும் சோர்வடையாமல் தங்கள் இலக்கு நோக்கியே ஓடிக்கொண்டிருப்பார்கள்.
இன்று உலகம் முழுக்கப் பிரபலமாக இருக்கிற ஜி.இ எனப்படும் ஜெனரல் எலெக்ட்ரிகல்ஸை நிறுவியர் தாமஸ் ஆல்வா எடிசன். யெஸ், பல்ப் கண்டுபிடித்த அதே எடிசன்தான்.
ஆரம்பத்தில் மிகக் கஷ்டப்பட்ட எடிசனுக்குள்ளே எப்போதும் இருந்தது ஒரு போராட்ட குணம், எடுக்கிற காரியத்தில் எல்லாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற வெறி, வேகம்! அவரது வெற்றிக்கு அதுவே காரணம்.
அப்படி ஒரு செயல் திட்டத்தையும் எதிலும் மனதை அலைபாய விடாமல் வெற்றியை நோக்கி தொடர் பயணம் மேற்கொள்கிற குணத்தையும் முகமது மீரானிடம் பார்த்திருக்கிறேன். உலகப் புகழ்பெற்ற ரெனால்ட்ஸ் பேனாவை இந்தியாவில் விற்க அதிகாரம் படைத்தவர். இந்தியாவில் திருப்தியான எல்லையைத் தொட்டபிறகு, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கும் விரிவு செய்திருக் கிறார். ஒரு நாளைக்குப் பத்து லட்சம் பேனா தயாரிக்கும் அளவுக்கு பணியாட்கள் பலத்துடன் இருக்கிறார்.
மீரான், இந்த இடத்தை எட்டக் காரணம், அவரது கடுமையான உழைப்பு! இத்தனைக்கும் அவர் பிஸினஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல; கைநிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டு சவுதியில் மிட்சுபிஷி வாகன விற்பனை நிறுவனத்துக்காக வேலை செய்தவர். யாரோ, எங்கோ தூண்டிவிட்ட பிஸினஸ் ஆர்வம் அவருக்குள் ‘தொழில் தொடங்கு!’ என்று சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறது.
எதற்கும் ஒரு சரியான சந்தர்ப்பம் வரவேண்டும் இல்லையா..? அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் முதலாளி இலங்கைக்காரர். அப்போதே, இலங்கையின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவர். அவருடைய பல தொழில்களில் ஒன்று ரெனால்ட்ஸ் பேனாவை இறக்குமதி செய்து இலங்கையில் விநியோகிப்பது. ஏரியா மேனேஜர் வேலைக்காக மீரானை வரவழைத்த அந்த முதலாளி, இவரது தொழில் வேகம் பார்த்து ஒருநாள் கேட்டிருக்கிறார். ‘மீரான்... இலங்கை 2 கோடி மக்களைக் கொண்டது. இங்கே அதிகபட்ச மக்களைச் சென்றடைந்தாலும் டர்ன் ஓவர் குறைவாகவே இருக்கும். இந்தியாவில் இந்த பேனாவுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. அங்கே சென்று விற்க முடியுமா..?’ என்றார்.
இந்த இடத்தில் 2 விஷயங்களைச் சொல்ல வேண்டும். ஆள் தேர்வு. இந்த வேலையை இவர் சரியாகச் செய்கிறார் என்பதை அடையாளம் கண்டுபிடிக்கவேண்டியது, ஒரு நல்ல முதலாளிக்கு அழகு. பொருத்தமான ஆளை நியமித்துவிட்டால், வியாபாரம் தானாகவே பெருகும். வருகிற நபர் சம்பளத்தைக் குறிவைத்து வருகிறாரா..? அல்லது, எனக்குப் பணம் என்பது இரண்டாம் பட்சம், கொடுக்கப்பட்ட கடமையை முடிப்பதுதான் என் முதல் நோக்கம் என்கிறவரா என்பதைப் பார்த்துத் தேர்வுசெய்ய வேண்டும். சம்பளம், சலுகைகளைக் குறிவைத்து வருகிறவர், அது கிடைத்துவிட்டால், தெளிவாக செட்டில் ஆகிவிடுவார். அதோடு, வியாபார முன்னேற்றத்துக்கு அவரே வலுவான ஸ்பீடு பிரேக்கராகவும் மாறிவிடுவார்.
அடுத்த விஷயம், எதிர்காலக் கண்ணோட்டம்... திருப்தி அடையாமல் எல்லையை விரித்துக்கொண்டே போவது. திறமையான பிஸினஸ்மேனுக்கு தொழில் வாழ்க்கையில் திருப்தியே கிடைக்காது. அதேபோல, அவர்கள் யோசிக்கிற எண்கள் எல்லாம் எட்டாக்கனி உச்சத்தில்தான் இருக்கும். ஆனால், அப்படி யோசிக்கிற வர்களால் நிச்சயம் அதை எட்டிப்பிடித்துவிட முடியும்.
தன் முதலாளி கேட்டதும் தன்னை நம்பி ஒப்படைக் கப்பட்ட புதிய பொறுப்பை நிறைவேற்ற உடனே தயாராகிவிட்டார் மீரான். அவரது வேகம் பார்த்த முதலாளி, ‘உன் கையில் சேமிப்பாக இருக்கும் ஒரு தொகையை இதில் போடு... இந்திய நிறுவனத்தில் என்னை யும் பங்குதாரராக்கிச் செயல்படு!’ என்று மீரானுக்கு ஒரு தொழிலையே அமைத்துத் தந்துவிட்டார். அப்படி 20 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம், இன்று பல வளர்ச்சிகளைக் எட்டி உள்ளது.
மீரானின் வெற்றி ரகசியத்தைக் கேட்டேன். ‘ரகசியம் என்று நீங்கள் கேட்டாலும் வெற்றி ஃபார்முலா எப்போதுமே சிம்பிளானது. நாம் தொழிலுக்கு என்ன ஐடியாவைப் கொடுக்கிறோமோ அதற்கேற்ற லாபம் கொட்டும். என்னுடைய ஆரம்பகாலத்தில்கூட, தொழிலுக்கு முதலீடு என்று பெரிய தொகை போடவில்லை. நாங்கள் பயன்படுத்திய உத்திகள்தான் இந்த வளர்ச்சியைத் தந்துள்ளது.
விளம்பரம்தான் எங்கள் தொழிலின் வளர்ச்சிக்குக் காரணம். ‘ஒரு கிலோ மீட்டருக்கு எழுதலாம்...’ என்ற எங்களின் விளம்பரங்கள் ஆரம்பகட்டத்தில் இந்திய பேனா ரசிகர்களை ஈர்த்தது. முதல் 5 வருடங்கள் தொடர்ந்து விளம்பரங்களிலேயே பலரையும் உள்ளே இழுத்தோம். எங்கள் பேனாக்களை வாங்கியவர்கள், ‘இங்க் பேனாவை விட, இது வசதியாக இருக்கிறதே!’ என்று எங்கள் பக்கம் வந்தார்கள். ஜாம்பவான்களையும் பெரிய போட்டியாளர்களையும் சமாளித்து கால் ஊன்றினோம்.
இனியும் இறக்குமதி செய்யவேண்டாம் என்ற கட்டம் வந்தபோது, லண்டன் தலைமையகத்தாரின் உதவியுடன் இருங்காட்டுக் கோட்டையில் ஃபேக்டரி போட்டு பலருக்கும் வேலை வாய்ப்பு தந்தோம். பெண்பணியாளர்களுக்கு அதிக வாய்ப்பு தந்தோம்’ என்றவர், ‘எங்கள் சக்ஸஸுக்குக் காரணம் என்ன? என்று கேட்டால், ‘பார்ட்னர்கள்’ என்றுதான் சொல்வேன். ‘உனக்கு பிஸினஸ் வேண்டுமா... பார்ட்னர்கள் வேண்டுமா..?’ என்று யாராவது கேட்டால், பளிச்சென்று சொல்வேன், ‘பார்ட்னர்கள்தான்’ என்று. நல்ல பார்ட்னர்கள் கிடைத்தால் எந்த பிஸினஸிலும் ஜெயித்துவிட முடியும்’ என்ற மீரான், ‘புரஃபஷனலுக்கும் ஆன்ட்ரபெர்னர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா..? இருவரிடமும் ஒரு பொறுப்பைக் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். புரஃபஷனல் அந்த வேலையை முடிக்க முடியவில்லை என்றால், அறையை விட்டு எழுந்து போய்விடுவார். ஆன்ட்ரபெர்னர் எழுந்து போகமாட்டார். ஜன்னல் வழியே குதித்துவிடுவார். அதாவது, தனக்கு அளிக்கப்பட்ட ப்ராஜெக்ட், தன் திறமைக்கு விடப்பட்ட சவால் என்றே எடுத்துக்கொள்வார். அதை முடிக்க முடியாவிட்டால் உயிர் வாழ்ந்து பயனே இல்லை! என்கிற அளவு ஒரு மூர்க்கத்தனம் அவனிடம் இருக்கும்’ என்பார். உண்மைதான் இது! தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அப்படி ஒரு வைராக்கியம் அவசியம் தேவை!
வெற்றியை அடையாளம் காண்பது நல்ல தொழிலதிபருக்கு இருக்கவேண்டிய கடமைகளுள் ஒன்று. சேல்ஸ் டீமும் அவர்கள் தந்த நெட்வொர்க்கும்தான் பலம் என்பதை உணர்ந்து, அவர்கள் மனம் உற்சாகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார் மீரான். சமீபத் தில் தனி விமானம் மூலம் தன் டீமை வெளிநாடுகள் சுற்றிப் பார்த்து வரவும் அனுமதித்துள்ளாராம்.
உங்கள் ஊழியரில் சிலர் உழைப்பாளி யாக இருக்கலாம். சிலர் யோசனைக் காரர்களாக இருக்கலாம். அந்நிலையில் ஐடியா சொல்கிற டீமைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தால், அவர்கள் சொல்கிற திட்டங்களுக்கு உழைக்கும் டீமைப் பயன்படுத்தலாம். தொழில் வளர்ச்சியும் கும்மென்று இருக்கும்.
இந்த உலகத்தில் எல்லோருக்குமே இருப்பது 24 மணிநேரம்தான். அதை யார் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் மாத முடிவில் அவர்களது வருமானம் தீர்மானிக்கப் படுகிறது. நேரத்தைத் தெளிவாகத் திட்டமிட்டவர்கள் ஜெயிக்கிறார்கள் என்பது தெரிகிறதா..?
அதேபோல, நல்ல டீமை உருவாக்கு கிறவர்களுக்கு, டீம் லீடராகத் திகழ்பவர் களுக்கு அபரிமிதமான நேரம் கிடைக்கிறது. சிந்திக்க நேரம் நிறைய கிடைக்கிறது. தங்கள் வெற்றிப் படிகளை அவர்கள் செதுக்குவதன் பின்னணி இப்போது புரிகிறதா..?’
த ன் பிஸினஸ் வளர்ச்சியில் மீரான் பயன்படுத்திய திட்டங்கள், பாலிசிகள் பலருக்கும் சக்தி தருபவை. அதை அவருடைய வார்த்தைகளிலேயே தருகிறேன். ‘நீங்கள் இருக்கும் தொழில் துறையில் சாதித்த நபரை, உங்களை வசீகரித்த நபரை, ரோல் மாடலாக்கிக் கொள்ளுங்கள். இவரைப் போல சாதிப்பேன்’ என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.
உங்கள் பணியாளர்களுக்கு முழு சுதந்திரம் கொடுங்கள். சம்பளத்துக்கு வேலை செய்கிற உணர்வே அவர்களுக்கு வரக்கூடாது. ‘இது தங்கள் பிஸினஸ். தாங்களே முதலாளி...’ என்ற எண்ணத்துடன் அவர்கள் பணியாற்ற வேண்டும். அப்படிப் பணியாற்றும் போதுதான் நேரங்காலம் பார்க்காமல் களைப்பின்றி, உற்சாகமாக, சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருப்பார்கள். நிர்வாகத்தில் நடக்கும் அநாவசியச் செலவுகள், தவறுகள், லாபத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள்.
இப்படிப்பட்ட உழைப்பாளியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நாட்டின் இன்றைய தேவையே, அவரைப் போன்ற கடுமையான, உரிமையான உழைப்பாளி கள்தான். அவரைக் கண்டுபிடித்ததுதான் உங்கள் சக்ஸஸ்! அந்த ஊழியர் தரும் புதிய ஐடியாக்களை அமல்படுத்திப் பாருங்கள். அவரது பணிவும் இன்வால்வ்மென்ட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறதா..? என்பதை மட்டும் நீங்கள் கண்காணித்து வந்தால் போதும்.
மார்க்கெட்டிங் பாகத்தில், தேவைதான் அந்தத் தொழிலை நடத்துகிறவருக்கு தேவதை. தேவை என்னும் தேவதையின் கடைக்கண் பார்வை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு பிஸினஸ் வளர்ச்சியும் இருக்கும். எனவே, உங்கள் யோசனை களையும் சிந்தனைகளையும் அந்தப் பாதையில் திருப்பும்போது தொழில் வளர்ச்சி கிடுகிடுவென இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும். எனக்கு நன்றாக டீ போடத் தெரிந்த ஒருவர் தேவை. ருசியை விரும்புகிற என் அலுவலகத்துக்கு அப்படி ஒருவரைத் தேடுகிறேன். இது பரவலாகும்போது அந்தத் துறையில் ஈடுபட்டிருப்போருக்கு பெரிய லாபம் காத்திருப்பதாக அர்த்தம். எனக்குத் தெரிந்து இன்று தேவை அதிகமுள்ள ஏரியா, ஷூ தயாரிப்பு.
ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், வியாபாரத்தில் மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். ‘அவர் நல்லவர்... நாணயமானவர்’ என்ற சிலரது வாய் வார்த்தைகள் அவருக்கே தெரியாமல் அவரது பிஸினஸை வளர்த்துவிடும் என்பது என் அனுபவ உண்மை.

No comments:

Post a Comment