Thursday, 22 July 2010

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில்
 
பிஸினஸ் வெற்றிக்கு ‘தலையாட்டி’ தத்துவம்!
வெறுங்கையால் முழம் போட்டு
கோடிகளைப் பிடித்தவர் தரும் பிராக்டிகல் தொடர்!
‘‘இ ந்தக் கடை 25 வருஷம் முன்னால வெச்சது. நல்லா ஸ்டாண்டர்டா போய்க்கிட்டிருக்கு. மாசா மாசம் குடும்பச் செலவுக்குத் தேவையான வருமானம் வருது. சந்தோஷமா ஓடிட்டிருக்கு வாழ்க்கை...’’
‘‘நானும் என் மனைவியுமா சேர்ந்து இந்தக் கடையைப் பார்த்துப்போம். ஒய்ஃபுக்கு படிப்பு கொஞ்சம் குறைவுதான். சமாளிச்சுப் பார்த்துக்கிறா. ஆனா, இப்போ கொஞ்ச நாளா வியாபாரம் ஏனோ டல்லடிக்குது. தொழில்லாம் இப்போ முன்னே மாதிரி இல்லீங்க!’’
‘‘நானும் என் பையனுமா கவனிச்சுட்டிருந்தோம். இப்போ கடையைக் கொஞ்சம் விரிவுபடுத்தினதிலே, மச்சானும் வந்து பார்த்துக் கிட்டிருக்காப்ல! நல்லா வியாபாரம் ஆகுது. லாபம்தான் எதிர்பார்த்த மாதிரி வரமாட்டேங்குது’’
- இப்படி மூன்று வகையான மட்டுமல்ல; முன்னூறு வகையான டயலாக்குகளைக்கூட கேட்கமுடியும். வருவது போதும் என்ற சந்தோஷத்துடன் ஒருவர், நஷ்டத்தை நோக்கிச்செல்லும் மற்றொருவர். பார்ப்பதற்கு எதிரெதிர் திசையில் இருப்பவர்கள் போலத் தெரிந்தாலும் அவர்கள் பொதுவாகச் செய்கிற தவறு ஒன்று இருக்கிறது. அது விரிவாக்கம் செய்யும்போது நடப்பது.
தொழிலை விரிவாக்கம் செய்யும்போது கவனமாகத் திட்டமிட்டுச் செய்யவேண்டும். ‘அதைத்தான் மூன்றாவது நபர் செய்திருக்கிறாரே... ஆனாலும் அவரும் பெரிதாக லாபம் அடைந்த மாதிரி தெரியவில்லையே!’ என்று அவசரப்பட்டுச் சொல்லவேண்டாம். அவரும் தவறுதான் செய்திருக்கிறார்.
ஓகே! என்ன செய்திருக்கவேண்டும்..?
ஒரு தனிமனித வியாபாரம், சொந்தத் தொழில் என்பது அடுத்தகட்டத்துக்குச் செல்ல எது அடிப்படைத் தேவை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். வளர்ந்துவரும் சமுதாய மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து, அதற்கேற்ப பிஸினஸை வளரச் செய்வது அதில் ஒன்று. அதற்கு மார்க்கெட்டில் இப்போது என்ன தேவைகள், எதிர்பார்ப்பு இருக்கிறது என்ற தெளிவு இருக்கவேண்டும்... வளர்ச்சியின் பாதை தெரிந்து பயணிக்கவேண்டும்.
‘‘நான் கஷ்டப்பட்டு ஆரம்பிச்ச பிஸினஸ் இது. இதை வளர்க்க நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும். வேற யாரும் என் அளவுக்கு ஈடுபாட்டோட செய்யமுடியாது. அதுபோக, யாரையும் நம்பி விடமுடியாதுங்க... தொழிலைக் காலி பண்ணிடுவாங்க!’’ என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆனால், உண்மையில் வெளியாட்களை நம்பாமல், ஒரு குடும்பத்துக்குள்ளேயே சொந்த பந்தங்களை மட்டுமே வைத்து நடக்கிற பிஸினஸின் வளர்ச்சி, பெரும்பாலும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில் இருக்கிற பிரச்னை. திறமைசாலிகளை, தொழில் நுணுக்கம் தெரிந்த இளரத்தங்களை, படித்த பட்டதாரிகளை நம்பி நம் தொழிலை ஒப்படைத்துவிட்டு, அவர் அதைச் சரியாகச் செய் கிறாரா என்பதைக் கண்காணித்தால் போதும்.
இங்கே இரண்டே இரண்டு விஷயங்களில் தெளிவாக இருந்துவிட்டால், அப்புறம் பிஸினஸ் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும். முதலாவது, ஆள் தேர்வு. சூட்டிகையான, ஆர்வமான, விசுவாசமான ஆளாக இருக்கவேண்டும். இந்த மூன்றில் எது குறைந்தாலும் பாதிப்பு வரும். அடுத்தது, அவரிடம் ஒப்படைத்த வேலையில் மூக்கை நுழைத்துக்கொண்டே இருக்காமல், சந்தேகக் கண்கொண்டு பார்க்காமல், அவரது யோசனைகளைச் செயல்படுத்துவது. அப்போது தான் நாம் தேர்ந்தெடுத்த திறமைசாலியை முழுதாகப் பயன்படுத்தமுடியும்.
நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்துவிட்டால், தானே நிர்வாகி என்பது போன்ற மனநிலையுடன் அதில் வெற்றி ஒன்றே குறிக்கோளாகச் செயல் படுவார்கள் பணியாளர்கள். இது சிறிதோ, பெரி தோ எல்லா தொழில்களுக்குமே பொருந்தும்.
இதே விஷயத்தில், உறவுக்காரர்களை எடுத்துக் கொள்ளுங்கள். மச்சானைக் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறீர்கள். காரணம், வெளியாட்களைவிட, கல்லாவைப் பார்த்துக் கொள்ள உறவுக்காரர் நம்பிக்கையாக இருப்பார் என்பதுதான்.
ஒருவேளை சிறு தவறுகள் நடந்தாலும் சொந்தக் காரர்தானே சாப்பிடுகிறார் என்ற மனநிலை. மச்சானைப் பொறுத்தவரை, ஒருவித பிடிப்பில்லாமல் கடையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கலாம். ஆர்வமாக இருந்தாலும் அடுத்தகட்ட வளர்ச்சியைத் திட்டமிட முடியாதவராக இருக்கலாம். இருக்கிற பிஸினஸை சரிந்துவிடாமல் காப்பாற்றினாலே பெரிய விஷயம் என்ற எண்ணம் கொண்டவராக இருக்கலாம். இதெல்லாம் யாருக்குப் பாதிப்பை உண்டாக்கும்..? உங்கள் தொழிலுக்குத்தானே! மச்சானே ஒரு திறமையான ஊழியராக அமைந்து விட்டால் அது ஆச்சர்யமான விஷயம்தான்.
விசுவாசமான நபர் தேவைதான். ஆனால், வெறும் விசுவாசம் வேலைக்காகாது... லாபம் தராது. அது ஒரு அடிப்படை. அதை மட்டுமே வைத்து பிஸினஸில் ஜெயித்துவிட முடியாது.
நான் இவ்வளவு சொல்கிறேன் என்றால், அது என் அனுபவம். நானும் இதுபோல் ஒரு தவறைச் செய்து பெரிய நஷ்டத்துக்குப் பின் கற்றுக்கொண்ட பாடமாகத்தான் இதை உங்களுக்குச் சொல்கிறேன்.
எங்கள் கவின்கேர் நிறுவனத்துக்கு இந்தியா தாண்டியும் உலகின் பல நாடுகளில் கிளை நிறுவனங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் டெல்லியில் ஒரு கிளை துவங்க முடிவு செய்தபோது, அதன் நிர்வாகியாக என் நம்பிக்கைக்கு உரிய ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பி வைத்தேன். நல்ல திறமைசாலி அதிகாரி அவர்.
கிளை ஆரம்பித்தது. உற்சாகமான வரவேற்பு இருந்தது போல் தெரிந்தாலும், சில மாதங்களுக்குப் பிறகுதான் வியாபாரம் டல்லடித்த காரணம் புரிந்தது. அங்கே பிரச்னை திறமையில் இல்லை... மொழியில்தான் என்பது புரிந்தது. உள்ளூர் மார்க்கெட் தெரியாமல், ஆட்களோடு பேசுவதற்கு கஷ்டப்பட்டதால், தயாரிப்புகளை கடைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் சிரமம் இருந்தது புரிந்தது.
உடனே ஒரு முடிவெடுத்து, விளம்பரம் கொடுத்து, உள்ளூர் நபர் ஒருவரை வேலைக்கு எடுத்தேன். அவரை வழிநடத்தும் பொறுப்பை என் அதிகாரிக்குக் கொடுத்து நிர்வாகம் செய்யச் சொன்னதில் விற்பனை கிடுகிடுவென உயர்ந்தது. அங்கே உள்ளூர் மொழியில் பேசினால்தான் பயன்கிடைக்கும். அடுத்தடுத்து, வெவ்வேறு நாடுகளில் கிளை அமைத்தபோதும் உள்ளூர் பணியாட்களை நம்பியே ஆரம்பித்தோம். வெளிநாட்டு கம்பெனிதானே! என்று அசட்டையாக இருக்காமல் தங்கள் உழைப்பை சின்ஸியராகக் கொடுக்கும் அந்த ஊழியர்களால், நிறுவனம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது.
புதிய ஆட்கள்தான் வெற்றிக்கனி பறித்துத் தருவார்கள் என்று நான் சொன்ன உடனே, கண்ணை மூடிக்கொண்டு புதியவர்களிடம் விழுந்துவிடக்கூடாது. அவர்களின் பின்னணியைத் தெளிவாக விசாரித்து, நான் சொன்னதுபோல அடிப்படை விஷயங்களில் அவரது வேகம், திறமையைக் கணக்கிட்ட பின்னரே அவரை உள்ளே சேர்க்கவேண்டும்.
இன்று ஃபைனான்ஸ் நிறுவனங்களும், நகைக் கடைகளும் அதிகம் வளராமல் ஒரு தெருவுக்குள்ளேயே முடங்கிப் போவதற்குக் காரணம் இதுதான். இந்தப் பிரச்னையைச் சரிசெய்தாலே, சீக்குக் குதிரையாக ஒரே இடத்தில் இருக்கும் பிஸினஸ், சீறிக்கிளம்பும்.
அதேபோல, ‘சீனியராக இருக்கிறவர்தான் நிறுவனத்தை வழிநடத்த முடியும். புதிதாக ஒருவரை நியமித்தாலும் அவருக்குக் கீழ்தான் இவரை பணியமர்த்துவேன்’ என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்கக்கூடாது.
ஜூனியர் இன்றைய காலத்து அறிவோடு வரும்போது, அதிகம் படிக்காத அவரது சீனியரால் அவரை சிறப்பாக வழிநடத்திச் செல்லமுடியாது. அதோடு, தன் ஈகோவுக்காக, ஜூனியரின் திறமையையும் கெடுக்க ஆரம்பிப்பார். பணியாளரின் நலனில் நீங்கள் காட்டும் அக்கறை, உங்கள் பணத்தை அழிப்பதாக ஆகிவிடக்கூடாது. சீனியருக்கு வேறுவிதமான பொறுப்புகள், மரியாதைகளைச் செய்யுங்கள். இலக்கு ஒன்றை நோக்கிப் போகும்போது, தடைக்கற்களைத்தான் நகர்த்தவேண்டுமே ஒழிய, இலக்கின் பாதையை மாற்றக்கூடாது.
ஒரு பிரபல பி.ஆர்.ஓ நிறுவனத்தின் நிர்வாகியை சந்தித்தபோது, அவரது டேபிளில் அழகான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை இருந்தது. ‘அழகா இருக்குதே!’ என்றேன். ‘எடுத்துப் பாருங்க!’ என்றார். எடுத்தேன். அட, உள்ளுக்குள் இன்னொரு பொம்மை. ஆச்சர்யமாக அதைத்தூக்கினால், அதற்குள் இன்னொன்று, உள்ளே இன்னொன்று என்று 7 பொம்மைகள் வரை இருந்தன. வியப்போடு அவரைப் பார்த்தேன்.
‘‘இதுதான் என் தொழில் ரகசியம். மேலே இருக்கிற இந்தத் தலையாட்டிதான் நான். எனக்குக் கீழே இருக்கிற ஆறு திறமைசாலி பொம்மைகளை கண்டுபிடித்து, கட்டுப்பாட்டில் வைத்து வேலை வாங்கிக்கொண்டிருப்பதுதான் என் நிறுவனம் லாபம் சம்பாதிக்கும் ரகசியம்!’’ என்றார்.
எத்தனை பெரிய தத்துவம்!

No comments:

Post a Comment