Thursday, 22 July 2010

நீங்களும் முதலாளி ஆகலாம்! - ஃபிரான்ச்சைஸ்

நீங்களும் முதலாளி ஆகலாம்!

தொழில்
சுவையான சிக்கனில் இருந்து தொடங்கியது ஃபிரான்ச்சைஸ் என்ற புதிய அத்தியாயம். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்கு அருகில் உள்ள கென்ட்டகி என்ற ஏரியாவில் சிக்கன் ஃப்ரை செய்து விற்றுக்கொண்டிருந்தவர், தன் சிக்கனை மற்ற கடைகளுக்கும் விற்கத் தொடங்கி னார். அப்போது, ஒரு கடைக்காரர் இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் ஒரு துண்டு சிக்கனுக்கு ஐந்து சென்ட் என்ற ராயல்டியை அந்த ஃபார்முலாவுக்காகத் தந்து விடுவதாகவும் சொன்னதோடு, ‘கென்ட்டகி ஃப்ரைட் சிக்கன்’ என்று அதற்கு பெயரும் கொடுத்தார். அதுதான் முதல் ஃபிரான்ச்சைஸ்!
இது 50 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரம். காலையில் பத்து மணிக்குச் சென்று மாலை ஐந்து மணிக்குத் திரும்பும் அலுவலக வேலை அலுத்துப் போகிறவர்களுக்கு உள்ளுக்குள் தொழில் ஆர்வம் ஓடும். ஆனால், அந்த சலிப்பு ஏற்படும்போது 35 வயது தாண்டி இருக்கும். அப்போது, குடும்பப் பொறுப்புகளும் அதிகமாக இருக்கும். இதுவரையில் வாழ்க்கைத் தேவைக்காக சேமித்துவைத்த பணத்தை எடுத்து மூலதனமாகப் போட்டுத்தான் தொழில் தொடங்க வேண்டியிருக்கும்.
துவங்கப்போகும் தொழில் பிக்-அப் ஆகவேண்டும். நம் தொழில் பற்றிய தகவல்கள் வாடிக்கை யாளர்களுக்குப் போய்ச்சேர்ந்து அவர்கள் நம்மைத் தேடிவந்து வியாபாரம் கொடுக்க, கொஞ்ச காலம் பிடிக்கும். நம் தொழிலின் தரத்தைப் பற்றி உயர்வான எண்ணத்தை உருவாக்கினால்தான் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகமாகும். அதுவரை நம் இருப்பைச் சொல்லும்வகையில் விளம்பரங்கள் செய்து கொண்டே இருக்கவேண்டும். இதற்கெல்லாம் ஆகும் செலவைக் கணக்கிட்டால் தலையைச் சுற்றும். இருக்கிற சூழ்நிலையில், தொழில் தொடங்கிய அடுத்த மாதமே வருமானம் வர ஆரம்பிக்கவேண்டும். இப்படி பலவிதமான குழப்பங்களோடு இருப்பவர்களுக்கு கலங் கரை விளக்கமாக இருப்பதுதான் ஃபிரான்ச்சைஸ்!

தொழில்

ஏற்கெனவே மக்கள் மத்தியில் ஒரு பொருள் அல்லது சேவை பிரபலமாக இருக்கும். அதற்கான தேவையும் அதிகமாகவே இருக்கும். ஆனால், உங்கள் பகுதியில் அது கிடைக்காமல் இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் அந்தப் பொருளை அல்லது சேவையை உங்கள் பகுதியில் வழங்க முடிவெடுத்தால், அடுத்த மாதம் வரைகூட காத்திருக்கத் தேவையில்லை, அடுத்தநாளே வருமானம் கொட்டத் தொடங்கி விடும். இதற்கு அடிப்படையான தேவை, அந்தத் தொழிலை உங்கள் பகுதியில் தொடங்குவதற்கு நீங்கள் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வதுதான்!

தொழில் 

‘‘ஃபிரான்ச்சைஸ் எடுக்கப்போனால் முன்பணம் அல்லது ஃபிரான்ச்சைஸ் கட்டணமாக, பெரிய தொகையைக் கேட்பார்கள். எதற்காக அவர்களைத் தேடிச் செல்லவேண்டும். நமக்குத் தெரிந்த தொழிலை புதிய பெயரில் செய்தாலே, அந்தப் பொருளுக்கோ, சேவைக்கோ தேவை இருப்பவர்கள் தேடி வரத்தான் போகிறார்கள். இதனால், வருமானம் வராமல் போக வாய்ப்பில்லையே... அதோடு, ஃபிரான்ச்சைஸுக்கு பணம் கட்டத் தேவை இல்லை என்னும்போது அந்த முதலீட்டை ஈடுசெய்வதற்காக விலையை அதிகம் வைக்கத் தேவை இருக்காதே... இதனால், அதிக வாடிக்கை யாளர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதே..!’’ என்று கேள்வி எழுப்புபவர்கள், கேட் கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்தின் ஃபிரான்ச்சைஸை எடுத்து நடத்தும் சரவணபிரகாஷ் சொல்வதைக் கேளுங்கள்.
‘‘மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனக்குள் சொந்தத் தொழில் ஆர்வம் பெருக்கெடுத்தது. அப்போது கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. நாமும் இப்படி ஒரு சென்டரைத் தொடங்கினால் என்ன என்ற யோசனையோடு களத்தில் இறங்கினேன். வெளியில் இருந்து பார்த்த முகம் வேறு... உள்ளே இறங்கியபிறகு தெரிந்த முகம் வேறாக இருந்தது. தேடித்தேடிப் போனாலும் சென்டருக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

தொழில் 

வந்த எல்லோருமே, ‘என்ன பெயரில் சான்றிதழ் கொடுப்பீர்கள்... நீங்களே நடத்துகிறீர்களா, அல்லது பெரிய நிறுவனத்தின் பின்னணி ஏதாவது இருக்கிறதா?’ என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தினம் தினம் பேப்பரிலும் டி.வியிலும் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைப் பற்றி விளம்பரங்களைப் பார்க்கிறார்கள். அந்த நிறுவனங்கள் கொடுக்கும் கட்டணங்களுக்கும் நான் நிர்ணயித்திருக்கும் கட்டணங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், என்னுடைய பேனர் பிரபலமாகாமல் இருந்தது. அப்போதுதான் நான் இந்தத் துறையில் பிரபலமாக இருக்கும் கேட் சென்டருடன் கைகோத்தேன். இதற்காக நான் 12 லட்ச ரூபாய் முதலீடு செய்தேன். இப்போது, எனக்கு ஆண்டுக்கு 30% வருமானம் கிடைக்கிறது.

இப்போது வாடிக்கையாளர்கள் தினம் தினம் விளம்பரங்களில் பார்த்த, மற்றவர்கள் சொல்லக்கேட்டு நம்பிக்கையோடு தேடி வரும் இடமாக என் மையம் இருக்கிறது. இதனால், நான் அடைந்த லாபம் மிகப்பெரியது’’ என்றார். அனுபவம் சொல்லும் உண்மைக்கு நிச்சயமாக மதிப்பு அதிகம் உண்டு!
‘‘பொதுவாகவே, இதுபோன்ற பயிற்சி நிறுவனங்களுக்கு நற்பெயர்தான் முக்கியமான மூலதனம். அதைச் சம்பாதிப்பதற்காக போராடி காலத்தைச் செலவிடுவதைவிட, நற்பெயர் பெற்றவர் களோடு சேர்ந்துகொள்வது புத்திசாலித்தனம். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் தொழிலில் உள்ள வருமானத்துக்கான ரிஸ்க்கைக் குறைப்பதற்கு என்று சொல்லலாம். காரணம், ஃபிரான்ச்சைஸ் எடுப்பதன் மூலம், அந்த நிறுவனம் பெற்ற அனுபவத்திலிருந்து தொழிலில் எளிதாக வெற்றி பெறமுடியும்’’ என்று சொன்ன ‘கேட் சென்டர் ட்ரெயினிங் சர்வீஸஸ்’ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான காரையடிச் செல்வன், ஃபிரான்ச்சைஸில் உள்ள பிரிவுகளைப் பற்றிச் சொன்னார்.

தொழில் 

‘‘இதில் இரண்டு மாடல்கள் இருக்கின்றன. ஒன்று வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ராயல்டியாக பெற்றுக்கொள்வது. மற்றொன்று வருடத்துக்கு இவ்வளவு ரூபாய் என்று கணக்கிட்டு வாங்கிக்கொள்வது. இதில் நாங்கள் இரண்டாவது முறையைத்தான் பின்பற்றுகிறோம். இந்தத் துறையில் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேரில் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். அவற்றை எல்லாம் எங்களிடம் ஃபிரான்ச்சைஸ் எடுத்தவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறோம். இந்த மாற்றங்களால் வருமான வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டேதான் வரும். அந்த வருமானத்தில் எங்களுக்குப் பங்கு தரவேண்டியது இல்லை. இந்த முதலீட்டுக்கு வங்கிகளில் கடன் வசதியும் தருகிறார்கள்’’ என்றார். ராயல்டி, அதாவது விற்பனையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வாரத்துக்கு அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ என கணக்குப்பார்த்து கொடுத்துவரவேண்டும். சில நிறுவனங்கள் ஒட்டுமொத்தச் செலவிலிருந்து அதாவது வாடகை, மின்கட்டணம், ஊழியர் சம்பளம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. எனவே, ஃபிரான்ச்சைஸ் எடுக்கும்போது, அக்ரிமென்ட் போடும் போதே, ராயல்டியில் எதுவெல்லாம் அடங்கும் எனக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
ஃபிரான்ச்சைஸ் எடுப்பவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது. இருதரப்பினரின் நெருக்கம்தான் வளர்ச்சிப்பாதைக்கு வழி வகுக்கும். இதையே வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொள்கிறார் ஏர்டெல் நிறுவனத்தின் தமிழக சீ.ஓ.ஓவான மகேஷ் தம்பி.
‘‘ஃபிரான்ச்சைஸ் எடுப்பவர்கள் எங்களின் ஒரு பகுதிதான். அவர்களை நாங்கள் பார்ட்னர் களாகத்தான் பார்க்கிறோம். ஏனென்றால், அவர்கள் ஒலிப்பது எங்கள் நிறுவனத்தின் குரலைத்தான்’’ என்று ஆரம்பித்தார் அவர். வருமானத்தையும், நற்பெயரையும் பகிர்ந்து கொள்வதைப் போலவே பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது அவரது கருத்து.
‘‘பலரின் விலை மதிக்க முடியாத உழைப்பில் உருவாக்குகிற நிறுவனத்தை கட்டிக் காப்பாற்றும் விதமாக ஃபிரான்ச்சைஸ் எடுப்பவர்கள் நடந்துகொள்ளவேண்டும். தங்களையும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக நினைத்தால் மட்டுமே இதுசாத்தியம்’’ என்றார் மகேஷ் தம்பி.
Click to EnlargeClick to Enlarge
இது சரிதான். தங்கள் நிறுவனமாக நினைக்கும் போது மட்டுமே உரிமையோடு சில விஷயங்களைச் செய்யமுடியும். தெருவுக்குத் தெரு, இன்டர்நெட் பிரவுஸிங் சென்டர்கள் இருந்தாலும் சிஃபி என்ற பெயர் தனித்து நின்று பெயர் வாங்கியதன் பின்னணி ஃபிரான்ச்சைஸ்தான்.
‘‘ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வியாபார எல்லைகளை விரிவுபடுத்த நினைக்கிறது. அதற்கு அந்நிறுவனமே முதலீடு செய்து கிளைகளை அமைப் பது ஒருவகை. அதற்கு நிறையச் செலவு பிடிக்கும். கூடவே, நிர்வாகச் சிரமங்களும் நிறைய இருக்கின்றன. இதற்கு பதிலாக தன் வேலையை இன்னொரு இடத்தில் இன்னொருவருக்குக் கொடுத்துவிடலாம். அதில் வரும் லாபத்தை இருவரும் பகிர்ந்துகொள்ளலாம். இந்த வாய்ப்புகள்தான் இன்று பல புதியவர்களை முதலாளிகளாக்கி உள்ளே இழுத்துக்கொண்டு வந்திருக்கிறது’’ என்கிறார் ‘சிஃபி’ ஐவே-யின் செயல்பாடுகளுக்கான துணை பொதுமேலாளர், ஸ்ரீகாந்த். சிஃபி 3,300 இன்டர்நெட் பிரவுஸிங் சென்டர்களை ஃபிரான்ச்சைஸ்களாகக் கொடுத்துள்ளது.
பிரவுஸிங் சென்டரில் வேலைபார்த்து, இப்போது ‘சிஃபி’ ஐவே நெட் சென்டரின் ஃபிரான்ச்சைஸ் ஒன்றுக்கு முதலாளி ஆகியிருக்கும் ஜெகன் அதற்கு ஒரு உதாரணம்.

தொழில் 

‘‘சாதாரண பிரவுஸிங் சென்டர் போட்டால் குறைவான முதலீடே போதும். அதோடு, முழு லாபமும் நமக்கே கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது எதற்காக சிஃபியின் ஃபிரான்ச்சைஸ்?’’ என்றபோது தெளிவாகப் பதில் சொன்னார் ஜெகன்.
‘‘கொஞ்சநாட்களுக்கு முன்பு பிரவுஸிங் சென்டர் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெருகிக்கிடந்தது. ஆனால், எத்தனை பேரால் தாக்குப்பிடிக்க முடிந்தது? ‘இங்கு சென்றால் தரமான சேவை கிடைக்கும்... சிறப்பான சலுகைகள் தருவார்கள்!’ என்று தேடி வருகிற அளவுக்கு நிலைநிறுத்திக் காட்டிய சில நிறுவனங்கள்தான் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
Click to EnlargeClick to Enlarge
இந்தத் துறையில் காலங்களைக் கடந்து தாக்குப் பிடித்து நிற்பது என்பது முக்கியம். அதோடு, தனி ஆளாக நான் தொழில் தொடங்கினால், எங்கள் ஏரியாவில் என் நிறுவனப் பெயரை பிரபலப்படுத்துவதற்கு பெரும் செலவு பிடிக்கும். ஆனால், இப்போது சிஃபி என்ற வார்த்தை என் நிறுவனத்தின் தன்மையைச் சொல்லிவிடும். சிஃபி கொடுக்கும் எல்லா விளம்பரங்களுமே எனக்கும் சேர்த்துதானே... அந்த செலவு எனக்கு மிச்சமாகிறதே!’’ என்றார் ஜெகன்.
இப்படி ஒரே விளம்பரங்கள் எல்லோருக்கும் பயன் படுவது ஒருவிதம் என்றால், ஒரே இடத்தில் இருக்கும் தகவல்களை எல்லோரும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு தரும் திருமணத் தகவல் நிலையமான பாரத் மேட்ரிமோனி சென்டரின் சேவை வேறுவிதம்.
‘‘இத்துறையின் வாய்ப்பு இந்தியாவில் மிக அபரிமிதமாக உள்ளது. குறிப்பாக, 19 வயது முதல் 35 வயதுள்ள இளைஞர் கள் மொத்த மக்கள் தொகையில் 50%-க்கும் மேல் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் திருமணத் தேவைக்காக தேடிவரும் வாய்ப்பு இருப்பதால் இதன் ஃபிரான்ச்சைஸ் ஆரம்பத்திலேயே டாப் கியரில் பறக்கும் என்பது உறுதி. பல சென்டர்களில் மொத்தமாகக் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதென்றால் ஃபிரான்ச்சைஸ் நல்ல விஷயம்தானே!’’ என்று சிலாகித்துச் சொல்கிறார் இதன் வியாபாரத் தலைவர் உதய் ஜோகர்கர்.
சென்னையின் பிரிலியன்ட் டுடோரியல் கல்வி மையத்தின் உட்பிரிவு நிறுவனம் கம்ப்யூஜென். இது கல்வி நிறுவனங்களுக்கான ஐ.டி தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்கும் கம்ப்யூட்டர் சென்டர் ஃபிரான்ச் சைஸ்களை தென் இந்தியா முழுக்க வழங்குகிறது. இதன்மூலம் நர்ஸரி முதல் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனங்கள் வரை கம்ப்யூட்டர் பயிற்சியை வழங்கமுடியும்.

தொழில் 

‘‘இதற்கான ஃபிரான்ச்சைஸ் பெற  முதலீடாக பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை ஆகிறது. இது பகுதிகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். இதனை ஆரம்பிக்க இடமோ, அலுவலகமோ, ஆட்களோ, பொருட்களை ஸ்டாக் செய்யவோ தேவையில்லை. கல்வி நிறுவனங்களுடன் நல்ல தொடர்பு உள்ளவர் கள், வீட்டிலிருக்கும் பெண்கள் என அனைவரும் களத்தில் இறங்கலாம்’’ என்கிறார் விஸ்வநாதன். இவர் கம்ப்யூஜென் நிறுவனப்பிரிவின் தலைவர்.
இதுபோன்ற சேவைத் தொழில்களுக்கு ஃபிரான்ச்சைஸ் எடுக்கும்போது பெரிய அளவில் மூலதனம் தேவைப்படாது என்பது பொதுவான கருத்து. ஆனால், கொஞ்சம் அதிகமாக டெபாசிட் கட்ட வேண்டியிருக்கலாம். அது தொழிலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
‘‘கோத்ரெஜ் நிறுவன சர்வீஸுக்கான ஃபிரான்ச்சைஸ் கொடுக்கும்போது நாங்கள் டெபாசிட் வாங்குவதில்லை. ஆனால், சர்வீஸுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளச் சொல்கிறோம். ஏனென்றால், சர்வீஸுக்கு அதுதானே ஆணிவேர். இந்தத் தொழிலில் 25% முதல் 30% வரை லாபம் பெறமுடியும். ஆனால், ஒரு வருடம் வரை பொறுமையுடன் இருக்கவேண்டும்’’ என்றார் கோத்ரேஜ் சர்வீஸஸின் மூத்த மேலாளர் ஜான் ஜெராட்.
கோத்ரெஜ் சர்வீஸ் சென்டர் ஃபிரான்ச்சைஸ் எடுத்துள்ள சுதாகர், ‘‘தொழிலில் சீசன் நேரம், சீசன் இல்லாத நேரம் என்று ஏதும் உள்ளதா என கவனிக்க வேண்டும். அந்தச் சமயத்தில் லாபம் குறையலாம். அதனை சரிசெய்ய நிறுவனங்கள் புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவார்கள். புதிய வசதிகளைத் தருவார்கள். அதைச் சரியாகப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொள்ளவேண்டும். இது தொழிலை எப்போதுமே லாபகரமாக வைத்துக்கொள்ள உதவும்’’ என்றார்.
இது போன்ற சீசன் பிஸினஸ்களில் ஒன்று ஐஸ்க்ரீம் ஃபிரான்ச்சைஸ் தொழில். நான் கைந்து நிறுவனங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் இதைச் செய்துவருகின்றன. அவற்றில் ஒன்றான குவாலிட்டி வால்ஸ் நிறுவனத்திடம் ஃபிரான்ச்சைஸ் பெற்று, மயிலாப்பூர் பகுதியில் கடை நடத்துகிற கிருஷ்ணன், ‘‘இதுபோன்ற தொழிலில் சீசன் என்பதைவிட, ஏரியாதான் முக்கியக் காரணியாக இருக்கும். வீடுகள் இருக்கும் பகுதிகளைவிட கல்லூரி, பள்ளிகள் உள்ள பகுதிகளில் நடத்துவது லாபம் தரும். இதுதவிர, கடை சேல்ஸ் ஒருபக்கம் என்றால், விழா விருந்து, விசேஷங்களிலும் சப்ளை எடுக்கும் திறன் இருந்தால் கூடுதல் லாபம் பார்த்துவிடமுடியும். 50 முதல் 200 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. இப்போதைய இளைஞர் கூட்டம் எல்லா நேரத்திலும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை விரும்புவதால், சில மாதங்களில் டல்லடிக்கும் என்ற பிரச்னை எனக்கு இல்லை! குளிர் காலங்களில் ஆர்டர் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் போது, ஸ்பெஷல் ஆஃபர் போட்டு மக்களை ஈர்த்து விடுவோம். இதுபோன்ற ஆஃப் சீசன் காலத்தில் வேறு தொழில் செய்துகொள்ளவும் சில இடங்களில் அனுமதிக்கிறார்கள்’’ என்று உற்சாகமாகச் சொல்கிறார் கிருஷ்ணன்.

தொழில் 

வேலையே கதி என்று இருக்காமல் இதுபோல் பரந்து விரிந்து கிடக்கும் ஃபிரான்ச்சைஸ் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உடனே களத்தில் இறங்குங்கள். புதிதாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்கும் முதல் ஜெனரேஷன் தொழிலதிபர்களுக்கும் இது நல்ல வாய்ப்பு! இங்கே நாம் பார்த்தது, சில துளிகள்தான். கடல் போல் காத்திருக்கின்றன வாய்ப்புகள். இந்த வாய்ப்பு களைச் சொல்ல தனி இதழ்களே வந்து கொண்டிருக்கின்றன. தவிர, வெப்சைட் களிலும் ஏராள வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உரியதை, உடனே தேர்ந்தெடுங்கள்.

No comments:

Post a Comment