A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Tuesday, 22 July 2014
‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில் |
ஊழியரும் முதலாளி ஆகலாம்!
வ ளம்மிக்க தீவு ஒன்றைக் கைப்பற்றத் திட்டமிட்டுப் படையோடு கிளம்பினான் ஒரு மன்னன். தங்கள் மண்ணை யாருக்கும் விட்டுத் தரக்கூடாது என்ற வைராக்கியத்தோடு வீரமாகப் போரிடும் மக்கள் நிறைந்த தீவு அது.
பலரும் ஆசையோடு படையெடுத்துப்போய், அந்தத் தீவின் வீர மைந்தர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கிய சம்பவங்கள் உண்டு. இதையெல்லாம் அறிந்துகொண்டேதான் படையெடுத்துச் சென்றான் அந்த மன்னன்.
அந்தத் தீவின் முகத்துவாரத்தை அடைந்தது படை. ஒரே ஒரு மரப்பாலம்... அதைக் கடந்து தான் தீவுக்குள் செல்லவேண்டும். வீரர்களை எல்லாம் பாலத்தைத் தாண்டி அனுப்பிவிட்டு கடைசியாக வந்த மன்னன், பாலத்தைத் தீவைத்துக் கொளுத்திவிட்டு, வீரர்களிடையே உரை ஆற்றினான்.
‘வீரர்களே... திரும்பிச் செல்ல இனி வழி கிடையாது. வெற்றி பெற்று புதிய பாலம் அமைத்தால்தான் நாம் வெளியேற முடியும். எனவே, இந்தத் தீவின் மைந்தர் களை வெற்றிகொள்வதுதான் ஒரே வழி! வாருங்கள்... ஜெயிக்கப் போகிறோமா... சாகப் போகிறோமா..? என்பதைப் பார்த்துவிடுவோம்!’ என்றபடி போரில் இறங்கிய மன்னனுக்கு வெற்றி கிடைத்தது என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.
‘பர்ன் தி பிரிட்ஜ்’ என்ற கதை இது. உயிர்பயம் என்கிற உந்துசக்திதான் அவர்களை ஜெயிக்க வைத்தது. 100% ரிஸ்க் இருந்தால், ஜெயிப்பதைத்தவிர வேறு வழியே இல்லையே! அந்தத் துடிப்பும் திடமான மனதும் பிஸினஸிலும் இருக்கவேண்டும். ‘நான் இந்தச் செயலில் இறங்கிவிட்டேன். இனி பின்வாங்க மாட் டேன். எத்தனை இன்னல்கள் வந்தாலும் என்னால் துணிந்து சமாளிக்கமுடியும்’ என்ற எண்ணத்தோடு தொழிலில் இறங்கிய யாரும் தோற்றதில்லை. இந்த நம்பிக்கையும் ஒருவகையில் மூலதனம்தான். எடுக்க எடுக்கக் குறையாத மூலதனம்!
செலிபிரிட்டி ஃபேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ராஜகோபாலிடம் இருந்தது அப்படி ஒரு மூலதனம்தான். தன்னந்தனியராக டெக்ஸ்டைல் தொழிலில் இறங்கிய ராஜகோபால், இன்று 13,000-க்கும் மேற்பட்ட ஊழியர் களைக் கொண்ட நிறுவனத்தின் தலைவர். போலீஸ் அதிகாரியாக, அதுவும் ஐ.ஜி லெவலில் இருந்து அந்த வேலையை உதறிவிட்டு வந்தவர் என்பது ஆச்சர்யமான செய்தி. எந்த வேலையில் இருப்பவரும் தொழிலதிபர் ஆகலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்!
சென்னையில் படித்த ராஜகோபால், ஐ.பி.எஸ் பாஸ் செய்ததும் உத்தரப்பிரதேசத் தில் பணி வாய்ப்பு கிடைத்திருக் கிறது. 26 வயது... ஜாலியாக இருந்தவர் கையில் ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்கும் பொறுப்பு... பெரிய வேலை! தடக்கென ஒரு ‘பக்குவ லோடை’ உள்ளே இறக்கிக் கொண்ட ராஜகோபால் வேலையில் சின்சியராக இறங்கிவிட்டார்.
‘திடுமென வரும் அதிகாரம் இரண்டு விஷயங்களுக்குத் தூண்டும். நம்மைவிட, அனுபவஸ்தர்களை, வயதில் முதிர்ந்தோரை வேலை வாங்கும் நிலையில் வரும் இரண்டு துருவங்கள் அவை. ஒன்று, மமதை. அடுத்தது அடக்கம். நான் இரண்டாவது ரகமாக இருந்தேன். காரணம், நான் வளர்க்கப்பட்ட விதம் அப்படி!’ என்று தன் பெற்றோருக்கு அடிக்கடி நன்றி சொல்வார் ராஜகோபால்.
வட மாநிலங்களில் கண்டிப்பான உயர் போலீஸ் அதிகாரியாக, நேர்மையாளராக வலம்வந்த அவருக்கு, சிலர் எதிர்பார்க்கும் நெளிவு, சுழிவுகள் கைவரவில்லை. சி.பி.ஐ-க்கு இடமாற்றம் பெற்று எஸ்.பி-யாக இருந்தும் மேலதிகாரிகள், கீழதிகாரிகளைச் சமாளித்து, தினம் தினம் நடத்தும் போராட்டம், இலக்கற்ற வாழ்க்கை யாகத் தெரிந்திருக்கிறது. அந்த நிமிடங்கள் பற்றி ராஜகோபாலே சொல்கிறார்.
‘இந்த வேலையே வேண்டாம்... என்று யோசித்தேன். அப்படி யோசித்த 1989-ம் வருடத்தில், எனக்கு 13,500 ரூபாய் சம்பளம். அதில் பாதி இருந்தாலே, என் குடும்பம் நன்றாக நடக்கும் என்று தோன்றியது. அதை எப்படியும் சம்பாதித்து விடமுடியும் என்று நம்பிக்கை எனக்குள் இருந்தது. வேலையை உதறிவிட்டு சென்னை வந்தேன். என் மனைவி, குழந்தைகளின் எதிர்காலம் என் கையில் இருந்தது. அப்பாவின் பென்ஷனை நம்பி இருந்துவிடக்கூடாதே என்ற கவலை எனக்கு. ஆனால், மனைவியும் அப்பாவும் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள்.
வேலை இல்லை... வருமானம் வேண்டும். என்ன தொழிலைத் தொடங்குவது, எப்படி நடத்துவது எதுவும் யோசனை இல்லை என்றாலும் எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்... இல்லாவிட்டால் பிழைக்க முடியாது என்ற இக்கட்டான நிலை. (‘பர்ன் தி ப்ரிட்ஜ்’ கதைதான்). எனக்குத் தெரிந்து டெக்ஸ்டைல் துறையில் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பும் எதிர்காலமும் இருந்தது. அதில் இறங்க முடிவு செய்தேன். இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கடன் கேட்டேன். கைப்பணம், சேமிப்பு கொஞ்சம் இருந்தது. சிறிதாக ஒரு தொழிற்சாலை ஆரம்பித்தேன். 50 மெஷின்களைப் போட்டு துணி தைத்துத்தரும் பணி. வெற்றி ஒன்றே இலக்கு என்று கடுமையாக உழைத்தேன். எக்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு பெரிய ஆர்டர் பிடிக்க ஆர்வம் காட்டியதில் நிறுவனம் மெள்ள, மெள்ள வளர்ந்து, இன்று கோடிக்கணக்கில் டர்ன் ஓவர் செய்ய முடிகிறது’ என்கிறார் ராஜகோபால்.
‘அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது, ஜெயித்து விட்டார்’ என்றும் ‘போலீஸ் அதிகாரியாக இருந்த ஒருவர் இப்படி தொழிற்சாலை ஆரம்பிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!’ என்றும் சிலர் கேட்கலாம்.
தன் போலீஸ் அனுபவத்தை அவர் பயன்படுத்தியது ‘மேன் மேனேஜ்மென்ட்’ எனப்படும் மனிதர்களுக்குள் ஏற்படும் சிக்கலைத் தீர்க்க. அதேபோல, யாரை எப்படி நடத்தவேண்டும்... யாரிடம் எந்தப் பணியைக் கொடுக்கவேண்டும் என்பது போன்ற விஷயங்களில்தான் அவர் தன் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொண்டார். ஒவ்வொருவருக்கும் இதுபோல், அனுபவம் நிச்சயம் இருக்கும். அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்பது தான் முக்கியம்.
‘தண்ணீர் இல்லாமல் 40 நாட்கள் வாழலாம்... காற்று இல்லாமல் 8 நிமிடம் வாழலாம்... ஆனால், நம்பிக்கை இல்லாமல் ஒரு நொடிகூட வாழ முடியாது’ என்று ஒரு பழமொழி உண்டு. அந்த நம்பிக்கை, தொழில் தொடங்குகிற நடத்துகிற எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
சம்பளம் வாங்குகிற ஒருவர், வாழ்நாள் முழுக்க, கைநீட்டி சம்பளம் வாங்கிக்கொண்டேதான் இருக்கவேண்டுமா..? சம்பளம் கொடுக்கிற இடத்துக்கும் வரமுடியும் என்பதற்கு ராஜகோபால் நல்ல உதாரணம். ஆர்வம், வேகம் இதைவிட சிறந்த மூலதனம் ஏதுமில்லை.
இன்று பங்குச் சந்தையில் தன் நிறுவனப் பங்குகளை விற்று, லாபகரமான நிலையில் நிறுவனத்தை நடத்தும் அளவுக்குத் தகுதி பெற்றிருக்கிற ராஜகோபாலிடம் இருந்த விடாமுயற்சிதான் 15 ஆண்டுகளில் அவரை இந்த அளவு வளர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அவர் தொழில் தொடங்கும்போது, தான் இப்படி வரவேண்டும் என்று யோசித்திருக்கமாட்டார்... இலக்கு வைத்திருக்கமாட்டார். ஆனால், எடுத்த காரியத்தில் வெற்றி!
புதிய தொழில் ஒன்றைத் தொடங்கும்போது, நிலவை இலக்கு ஆக்குங்கள். அது, நீங்கள் சமவெளியில் ஓடுகிற திசை எங்கும் உங்கள் கூடவே வரும். இப்படி ஓடினால் பிடிக்கமுடியாது என்று தோன்றும்போது, உயரே பறக்க ஆரம்பிப்பீர்கள். நீங்கள் அதை நெருங்கி விட்டதாக நினைக்கும்போதெல்லாம் கண்ணுக்குத் தெரிகிற அதன் அளவுதான் பெரிதாகுமே தவிர, கைக்கு சிக்காது. இன்னும் நெருங்குங்கள்... மேலும் உயரம் தொடுங்கள். நீங்கள் பறக்கிற வேகம் உங்களுக்குப் பழகிவிடும். நிலவு தன்னாலே உங்களை நோக்கி வரும். வெற்றிகரமான தொழில் அதிபர்கள் செய்வது இதைத்தான். ‘குழந்தைப் பையன்... நிலாவுக்கு ஆசைப்படறான்’ என்று வெட்டி வீணர்கள் உதடு பிதுக்கி செய்யும் பரிகாசத்தை, இடதுகையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு உங்கள் ஓட்டத்தைத் தொடருங்கள்... நிலவைப் பிடிப்போம் வாருங்கள்.
|
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment