A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Tuesday, 22 July 2014
தொழில் ஐடியா... அட்வைஸர்கள் பராக்.. பராக்!
தொழில் ஐடியா... அட்வைஸர்கள் பராக்.. பராக்!
தொழில் |
தொழில் ஐடியா... அட்வைஸர்கள் பராக்... பராக்!
வி யாபாரம் என்பது எல்லோராலும் முடிகிற காரியமில்லை. தொழிலைத் தொடங்குவதில் ஆரம்பித்து பல கட்டங்களிலும் சோதனையைச் சந்திக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வுகளைச் சொல்வதற்கு ஆலோசனை நிறுவனங்கள் சில செயல்படுகின்றன.
பணம் இருக்கிறது... ஐடியாவும் இருக்கிறது. ஆனால், அதை எடுத்துச்செய்யப் போதிய அனுபவமும் இல்லை, தொழில்நுட்பமும் தெரியாது என்கிற ஆளா நீங்கள்? உங்களுக்கு உதவி செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ‘என்ன தொழில் செய்யவேண்டும்?’ என்பதை மட்டும் முடிவுசெய்து சொல்லிவிட்டால் போதும். அதற்கான முழுத் திட்டத்தையும் நேர்த்தியாக வடிவமைத்துக் கொடுத்துவிடுவார்கள்.
இன்டீரியர் டிஸைன்ஸ், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், கண்ணைக் கவரும் கலர்கள் கொண்ட அலங்காரம், இருக்கிற இடத்தைப் பக்குவமாகப் பயன்படுத்த ஏற்ற திட்டங்கள், தொழிலுக்குத் தேவையான லைசென்ஸ் எடுக்க உதவுவது வரை எல்லா வேலைகளையும் செய்துதருவார்கள் இவர்கள்!
‘‘தொழில்நுட்ப முறையில் இடத்தைப் பொறுத்து எதை, எங்கு என்ன அளவில் வைக்கலாம்? என்பதில் ஆரம்பிக்கும் எங்கள் வேலை! ஏ.ஸி போன்ற வசதிகள் எந்தெந்த பகுதிக்குத் தேவை என்பது போன்ற விவரங்களைக் கொடுப்பதோடு அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் சொல்லிவிடுவோம். அந்த பிராஜெக்ட் பிடித்திருந்து ஓகே செய்து கொடுத்து விட்டால், எங்களை நம்பிவந்த தொழில் நிறுவனத்தைத் தயார் செய்து தரவேண்டியது எங்கள் பொறுப்பு!
‘‘தொழில் தொடங்கவிருக்கும் இடம் தேர்வானவுடனே, அதற்கேற்ற மாதிரி திட்டமிடுவோம். கடைவீதிகள் என்றால் பார்க்கிங் பகுதிக்கு இடம் விட வேண்டும். குடியிருப்புப் பகுதிகள் என்றால் பார்க்கிங் பகுதியைப் பெரிதாக அமைக்கத் தேவையில்லை. இதைக் கணிக்க ஏரியா முக்கியம்’’ என்றார் பிரகாஷ். கடந்த பதினைந்து வருடமாக வடிவமைப்பு மற்றும் ஆலோசனைத் தொழிலைச் செய்துவரும் ‘ஃபோர்கான்’ நிறுவனத்தின் பார்ட்னர்களில் இவரும் ஒருவர்.
‘‘ஓட்டல் என்று எடுத்துக்கொள்வோம். சமையல் பகுதி 40%, சர்வீஸ் பகுதி 60% எனப் பிரித்துக்கொள்ளலாம். இடத்தின் தேவையைப் பொறுத்து சமையல் பகுதியிலேயே காய் நறுக்குவதற்கு தனி இடம் வேண்டுமா, மசாலா அரைக்கும் இயந்திரங்களை அதே பகுதியில் வைக்க வேண்டுமா என்பதை எல்லாம் தீர்மானித்துக்கொள்ளலாம். இதையெல்லாம் வீட்டிலேயே தயார் செய்துகொண்டு வரமுடியுமானால் அந்த இடம் மிச்சம்தானே! சமையல் பகுதியில் அடுப்பு இருக்கும் சுவற்றுப்பக்கம் மின்சார வயர்களோ, இணைப்போ எதுவும் செல்லக் கூடாது. இதுபோன்ற பாதுகாப்பு விஷயத்தையும் கவனித்துச் சொல்வோம்.
பார்சல் வாங்கும் பகுதிக்கு தனி கவுன்டர் போடுவது நல்லது. பார்சல் வாங்கிச் செல்பவர்களுக்கு மின்சாரச் செலவோ, தண்ணீர், டேபிள் சேர், கவனிக்க ஒரு ஆள் என தனியாக ஒதுக்கத் தேவை இல்லை. இதுபோன்ற விஷயங்களை எங்களை நாடிவரும் தொழிலதிபர்களுக்குத் திட்டமிட்டுத் தருவோம்’’ என்றார்.
இந்த விஷயத்தில் அடிப்படையான விஷயம் ஒன்று உள்ளது. அதாவது யார் வாடிக்கையாளர்கள் என்பதைப் பொறுத்து அலங்கார ஏற்பாடுகளைச் செய்யும் போதுதான் மக்கள் கவர்ந்து இழுக்கப் படுவார்கள்.
கல்யாண மண்டபம், தியேட்டர்களில் ஆரம்பித்து, ஃபேன்ஸி ஸ்டோர் நடத்துவதுவரை ஆலோசனை சொல்ல ஆள் இருக்கிறார்கள். பட்ஜெட்டுக்கு ஏற்ப, இவர்களது ஆலோசனைக் கட்டணங்களும் இருக்கின்றன. வேலை முடியும்வரை இருப்பது ஒருவகை என்றால், எதை எப்படி வடிவமைக்க, நிர்மாணிக்க வேண்டும் என்று திட்டமிட்டுத் தருவது இன்னொரு வகை. அவர்களது திட்டத்துக்கான கட்டணத்தை மட்டும் வசூலித்துக்கொள்வார்கள். நாம் அதை நம் கற்பனைக்கேற்றபடி அமைத்துக் கொள்ளலாம்.
இதேபோல, தொழிலை நடத்துபவர்கள் நடைமுறையில் சந்திக்கும் சிக்கல்களைச் சமாளிக்க வழிசொல்லும் நிறுவனங்களும் இருக்கின்றன. அதில் ஒன்றான ‘வேதா கார்ப்பரேட் அட்வைஸர்ஸ்’ நிறுவனத்தின் துணைத்தலைவர் ராம்குமார், ‘‘கம்பெனி விரிவாக்கத்துக்குத் தேவையான தொகையைத் திரட்ட தனிப்பட்ட பங்கு முதலீட்டை ( Private Equity Investment ) நாடுவது நல்லது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஓவரைக்கொண்ட நிறுவனங்கள் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பரவி இருக்கின்றன. இவை தனிப்பட்ட பங்கு முதலீட்டின் வாயிலாக விரிவாக்கத்தில் இறங்கினால், இவை உலக அளவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாகிவிடும். எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வரும்போது தனிப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள்’’ என்றார்.
டாடா நிறுவனத்தின் சில்லரை வணிகப் பிரிவான டிரன்ட்( Trent ), சென்னையைச் சேர்ந்த லேண்ட்மார்க் நிறுவனத்தின் 76 சதவிகிதப் பங்குளை 104 கோடி ரூபாய்க்கு வாங்க ஆலோசனை கொடுத்தது போன்ற விஷயங்களில் வேதா நிறுவனத்தின் பங்கு முக்கியமானது.
சிலர் தற்போதுள்ள தொழில் அல்லது பிஸினஸை விட்டு வெளியேற விரும்புவார்கள். 30, 40 வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க நிறுவனங்கள் சில கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப வளர்ச்சியின்மை, போட்டியைச் சமாளிக்க முடியாமை போன்ற காரணங்களால் சரியாகச் செயல்படாமல் இருக்கும். இதுமாதிரியான நிறுவனங்களை, அத்துறையில் உள்ள சிறப்பாகச் செயல்படும் பெரிய நிறுவனங்கள் வாங்க விரும்பும். அது போன்ற நேரங்களில் நலிவடைந்த நிறுவனத்தின் மதிப்பு, எத்தனை சதவிகிதப் பங்குகளை தங்கள் வசம் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்? முழு அளவில் நிறுவனம் கைமாறினால் தொழிலாளர்களை என்ன செய்ய வேண்டும்... பழைய நிர்வாகம் எவ்வளவு நாளைக்குத் தொடரவேண்டும்? என்பது போன்ற விஷயங்களில் இரு தரப்புக்கு இடையே பாலமாகவும் இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இதில் இவர்களுக்கு லாபமே, திரட்டப்படும் மூலதனத்துக்கு ஏற்ப கமிஷன் பெற்றுக் கொள்வதுதான்!
இதற்கு அடுத்தகட்டமாக, நஷ்டதிசையில் இயங்கும் நிறுவனங்களைக் கையில் எடுத்து, அதை தங்கள் திறமையான நிர்வாகத்தால், லாபதிசைக்கு மாற்றும் வேலையைச் செய்யவும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் செல்வன்.
‘‘செக்யூரிட்டி முதல் சேர்மன்வரை அனைவருக்கும் யார், யாருக்கு என்ன பணி என்பதை முடிவுசெய்து, எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் கம்பெனிக்குள் நுழைவோம். அதன்படி செயல்படுகிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்போம். அடிக்கடி மீட்டிங் போட்டு, ஒட்டுமொத்த கம்பெனியும் எப்படி இணைந்து செயல்படவேண்டும் என்பதை விளக்கிக் கூறுவோம். ஒரு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு பணிகளைச் சரிவர மேற்கொண்டாலே பாதி வேலை முடிந்துவிடும்.
ஊழியர்கள் சிறப்பான முறையில் பணிபுரிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். அவர்கள் கஷ்டப்பட்டு வேலையைச் செய்யக்கூடாது. பணியைச் சுலபமாக செய்ய வழி சொல்லிக்கொடுக்க வேண்டும்.
நாங்கள் சீர்திருத்தம் மேற்கொண்ட கடை ஒன்றில் நடந்த சம்பவத்தையே உதாரணமாகச் சொல்கிறேன். ஐந்தாவது மாடியில் வாங்கப்படும் பொருட்கள் படிக்கட்டு வழியாக சுமார் 25 பேர் கைமாறி கீழ்தளத்துக்கு டெலிவரி பகுதிக்கு வந்து கொண்டிருந்தன. இதில் சிலர் விடுமுறை போட்டு விட்டால் அன்று கஸ்டமர்கள் பாடு திண்டாட்டம் தான். டெலிவரி பொருட்களை வாங்க நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய நிலை. கோபமாகும் சில கஸ்டமர்கள் வேறு கடை பார்த்து நகர ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தப் பிரச்னையும் கஸ்டமர்கள் குறைய ஒரு காரணம் என்று எனக்குப்புரிந்தது. ஆட்கள் கைமாற்றுவதற்கு பதில் கன்வேயர் பெல்ட் மூலம் பொருள்களைக் கீழே கொண்டுவர ஏற்பாடு செய்தேன். பலரது வேலைப்பளு குறைந்து, நேரமும் மிச்சமானது. இது, சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு சிறு நகரத்திலுள்ள கடை ஒன்றில் அமல்படுத்திய திட்டம். செலவு, நேரம், பணிச் சுமையைக் குறைத்ததில், கடைக்கு நல்ல பேர் கிடைத்து வியாபாரம் பெருகியது.
சரியான நிதி திட்டமிடல் இல்லாததால் சரிந்த நிறுவனங்கள் பல உண்டு. அதேபோல, வங்கிக் கணக்கு வழக்குகளை எப்போதும் சரிவர பராமரித்து வருவது நல்லது. அப்போதுதான் ஓர் அவசரத் தேவைக்கு கேட்டதும் கடன் கிடைக்கும். இதுபோன்ற ஒழுங்குகளையும் எங்களை நாடிவரும் வாடிக்கையாளர்களுக்குச் சொல்லித் தருவோம்.
நாங்கள் பொறுப்பேற்கும் நிறுவனத்தில் சேர்மன், டைரக்டர் என எல்லோருக்கும் சம்பளம் நிர்ணயித்து விடுவோம். மீதிப் பணத்தை வங்கியில்போட்டு எடுக்கச் சொல்வோம். தேவையில்லாத வீண் செலவுகளைக் குறைப்பதன் மூலமும் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க முடியும் என்பதை உணர்த்துவோம்.
சில நிறுவனத்தில் நான்கைந்து டைரக்டர்கள் இருப்பார்கள். அவர்கள் ஆளுக்கு சில கிரெடிட் கார்ட்கள் வைத்திருப்பார்கள். பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பதால், இவற்றுக்கான தொகை எகிறும். கார்ட்கள் எண்ணிக்கையைக் குறைத்து, இத்தனை கார்ட்கள்தான் வைத்திருக்கலாம் என எல்லை வகுத்துத் தருவோம். மேலும், கம்பெனி அக்கவுன்ட் தனியாகவும், பர்சனல் அக்கவுன்ட் தனியாகவும் வைத்துக்கொள்ளச் சொல்வதோடு அவ்விதமாகச் செய்கிறார்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வோம். சிக்கனம், தான் முதல் சேமிப்பு என்பதை உணர்ந்து தேவையில்லாத செலவுகளை நீக்க நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் செல்வன்.
நலிவடைந்த நிறுவனத்துக்குப் பொறுப்பேற்று சில மாதங்கள் அவர்களுடனே இருந்து ஒவ்வொரு துறையாகத் சீர்திருத்தம் செய்வது, முழு நேர கன்சல்டன்டாகச் செயல்படுவது தவிர, சில நிறுவனங்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ரிப்போர்ட்டையும் செல்வன் தயாரித்துக் கொடுத்து வருகிறார்.
ஆக, தொழிலில் எந்த நிலையில் சிரமம் ஏற்பட்டாலும் சமாளிக்க வழி சொல்ல வகைவகையாக இருக்கிறார்கள் ஆட்கள்.
|
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment