Friday, 20 June 2014

மாத்தி யோசிக்கும் பிசினஸ்மேன்கள்! - வெற்றிக்கு வித்திடும் வித்தியாசமான சூழல்கள்...

ஒரு தொழில் ஓஹோவென வளர்வதற்கு முக்கியமான தேவை, அந்தத் தொழில் மூலம் கஸ்டமர்களுக்குக் கிடைக்கும் வித்தியாசமான அனுபவம்தான். இந்த அனுபவம் மட்டும் ஒரு கஸ்டமருக்கு பிடித்துப்போய்விட்டால், அந்த கஸ்டமர் அந்த நிறுவனத்தைத் தேடி அடிக்கடி வருவார் என்பதே பிசினஸ் ரகசியம். சென்னையில் வித்தியாசமான சூழலைத் தரும் சில நிறுவனங்களை தேடிப்போய், அந்தச் சூழலை உருவாக்கும் ஐடியா எப்படி பிறந்தது என்று விசாரித்தோம். நாங்கள் முதலில் கோடம்பாக்கத்தில் உள்ள டவுன்பஸ் ஹோட்டலுக்குச் சென்றோம்.
கோடம்பாக்கத்தின் அடையாளம்!
பெயருக்கேற்ப முழு ஹோட்டலை யும் டவுன்பஸ் வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். உண்மையான பஸ் போன்றே சக்கரம், கண்ணாடி ஜன்னல், சைடுமிரர் என்று இருக்கிறது வெளிப்புறம். அப்படியே உள்ளே சென்றால் பஸ்ஸில் உள்ளது போன்றே உட்காரும் சேர் உள்ளது. வெளியே காத்திருக்கும் இடத்தில் உள்ள சேர்களும் இதே வடிவம்தான். மேற்புறத்தில் கைபிடி கம்பிகளையும் பஸ்ஸில் உள்ளதுபோன்றே இரண்டு வரிசைகளில் டேபிள்களையும் அமைத்திருக்கிறார்கள். சாப்பாடு மெனுவில்கூட 'டவுன்பஸ் சூப்பர் ஃபாஸ்ட்’, 'டவுன்பஸ் எல்.எஸ்.எஸ் ஸ்பெஷல்’ என வெரைட்டியான உணவு வகைகளைத் தருகிறார்கள்.
டவுன் பஸ் ஹோட்டலின் உரிமையாளர் வேலுவிடம் பேசினோம். ''எங்க அப்பா ஏகநாதன் பல்லவன் பஸ் சர்வீஸில் டிரைவராக வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். 2008-ம் ஆண்டு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என யோசித்தபோது எங்க அப்பாதான், 'இந்தமாதிரி பஸ் வடிவத்தில் அமைத்தால் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என்னுடைய டிரைவர் வேலைக்கும் அடையாளமாக இருக்கும்’ எனச் சொன்னார். அவரது விருப்பப்படியே இந்த ஹோட்டலை அமைத்தேன்.
கஸ்டமர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹோட்டலை இப்படி வித்தியாசமாக வடிவமைத்தபோது அதுவே எங்களுக்கு ஒரு பெரிய விளம்பரமாக மாறியது. எங்கள் கடை கோடம்பாக்கத்தின் அடையாளமாகத் திகழ்வது எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்தான்'' என்று பெருமிதத்துடன் சொன்னார்.
வித்தியாசமான முகப்புகள்!
அடுத்து, நாங்கள் சென்றது போத்தீஸ் ஜவுளிக் கடைக்கு. போத்தீஸின் ஸ்பெஷாலிட்டியே பண்டிகைகள் மற்றும் பருவகாலத்துக்கேற்ப கடையின் இன்டீரியர்களை மாற்றுவது மற்றும் கடையின் முகப்பில் வித்தியாசம் காட்டுவதும்தான். இதன்மூலம் தங்களது கடையைத் தேடிவரும் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்த நிறுவனம். தீபாவளி, சம்மர் கொண்டாட்டம், கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் ஆடித் தள்ளுபடி என ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப முகப்புத் தோற்றத்தையும் உள்ளே இருக்கும் இன்டீரியர் டிசைனையும் இந்த நிறுவனம் மாற்றத் தவறுவதில்லை.
அதிலும் குறிப்பாக, சம்மர் சீஸனில் பசுமை கொண்டாட்டம் என்ற பெயரில் இந்த நிறுவனம் அமைக்கும் மாற்றங்களை மக்கள் கவனிக்காமல் இருக்க முடிவதில்லை. கடையின் முன்புறம் செடிகளை வளைவாக அமைக்கிறார்கள். வாடிக்கையாளர் களுக்கு இலவச மரக்கன்றுகள், உள்ளே வருபவர்களுக்கு குடிக்க மோர், லஸ்சி போன்றவற்றைத் தருகிறார்கள்.
இதுபற்றி போத்தீஸின் விளம்பரப் பிரிவு மேனேஜர் ஆரோக்கியராஜுடன் பேசினோம். ''ஒவ்வொரு சீஸனுக்கேற்ப இப்படி ஏதாவது வித்தியாசமாக செய்வதால், வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர முடிகிறது. இந்த வித்தியாசமான அனுபவத்துக்காகவே எங்கள் கடையைத் தேடிவரும் வாடிக்கையாளர்கள் பலர்'' என்றார் அவர்.
திகில் தரும் ராக்!
'தி ராக் ரெஸ்டாரன்ட்’ - சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் இந்த ஹோட்டலின் நுழைவு வாயிலை குகை வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். கதவு ஒரு மனித குரங்கு பொம்மை மாதிரி இருக்கிறது. உள்ளே சென்றால், ஏதோ ஒரு காட்டுக்குள் நுழைந்துவிட்ட மாதிரி ஓர் அனுபவம். குறுகலான பாதைகள், ஆதிமனிதனின் சிலைகள், தீப்பந்தம் போன்ற லைட்கள், சுற்றிலும் பாறைகளைச் செதுக்கியது போன்ற அமைப்பு, இருட்டறைகள், மரத்தூண்கள் என வித்தியாசமான சூழலை அனுபவிக்க முடிகிறது. இங்கே கிடைக்கும் உணவுப்பொருட்களும் இப்படி வித்தியாசமாக இருக்குமோ என்று கேட்டால், அப்படி எல்லாம் இல்லை; எல்லா உணவுவகைளும் எங்களிடம் கிடைக்கும் என்கிறார்கள் இங்கு பணிபுரியும் ஊழியர்கள்.
இந்த ஹோட்டலின் மேனேஜர் ரவிச்சந்திரனுடன் பேசினோம். ''2009-ம் ஆண்டு இதன் உரிமையாளர் கலைவாணன் மற்ற ரெஸ்டாரன்ட்கள் மாதிரி அல்லாமல் வாடிக்கையாளர்களைக் கவருகிற மாதிரி புது ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க நினைத்தபோது இப்படி அமைக்க முடிவெடுத்தார். வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் திருப்தியை விளம்பரமாக்குவது தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்று எண்ணினோம். இதை அமைப்பதற்குக் கொஞ்சம் செலவு அதிகம்தான். ஆனாலும், வருகிற வருமானத்துக்குக் குறையில்லை. நாங்கள் வித்தியாசமாக அமைத்திருக்கும் சூழ்நிலை எங்களது கஸ்டமர்களுக்குப் பிடித்துப்போகவே, சென்னையில் ஆறு இடங்களில் இதேமாதிரி கிளைகளை வடிவமைத் திருக்கிறோம்'' என்றார்.
கஸ்டமர்கள்தான் முதுகெலும்பு!
வித்தியாசமான சூழலை உருவாக்கி வெற்றிகரமாக பிசினஸ் செய்துவரும் நிறுவனங்கள் பற்றி பிராண்ட்காம் நிறுவனத்தின் சிஇஓ-வான ராமானுஜம் ஸ்ரீதரிடம் கேட்டோம். ''ஒரு நிறுவனம் வெற்றிகரமாக நடக்கவேண்டுமெனில், இந்த வித்தியாசமான அணுகுமுறை கட்டாயம் வேண்டும். இதுவே அந்த நிறுவனத்துக்கு வெற்றி தேடித்தரும் விளம்பரமாகவும் அமையும். வித்தியாசமான சூழலை அமைத்துத் தரும்போது அது வெறும் விளம்பர உத்தியாக மட்டும் இல்லாமல், கஸ்டமர்களுக்கு திருப்தி தருகிறமாதிரி இருப்பது நல்லது.
வித்தியாசம் காட்டும் மருத்துவமனை!
இதற்கு பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையை உதாரணமாக சொல்வேன். பொதுவாக, மருத்துவமனையில் ஐசியூ வார்டுகளை மற்றவர்களுக்குத் தெரியாதபடி அமைத்திருப்பார்கள். ஆனால், இந்த மருத்துவமனையில் மட்டும் ஐசியூ வார்டில் இருப்பவருடைய நன்மைக்காகவும், அவரது உறவினர்களின் திருப்திக்காகவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்படி, ஐசியூ வார்டு அமைத்திருக்கிறார்கள். இதனால் நோயாளிக்கு உறவினர்களைப் பார்க்க முடியவில்லை என்கிற கவலை இல்லை. இதனால் நோயாளிகளும் அவர்களை பார்க்க வருகிறவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
யதார்த்தமாக இருக்க வேண்டும்!
இப்படி வித்தியாசமான சூழலை உருவாக்கும்போது கஸ்டமர்கள் முகம் சுழிக்கிறமாதிரி எதையும் செய்துவிடக் கூடாது. நமது வாழ்க்கையின் யதார்த்தமான விஷயங்கள் கஸ்டமர்களுக்கு நினைவூட்டுகிற மாதிரி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வித்தியாசம் என்கிற பெயரில் கட்டாந்தரையில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னால், பலருக்கும் அது சங்கடமான அனுபவமாகவே இருக்கும்.
ஆனால், கஸ்டமர்களின் மனத்தில் தைக்கிறமாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரும்போது, அதுவே அந்த நிறுவனத்துக்கு பெயர் பெற்றுத்தரும் விளம்பரமாக மாறிவிடுகிறது. அதன்பிறகு அந்த நிறுவனம் விளம்பரத்துக்காக பெரிதாக செலவு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
தொழில் செய்பவர்கள் கவனத்துக்கு!
வித்தியாசமான சூழலைத் தருகிறோம் என விளம்பரம் செய்துவிட்டு, அதைப் பார்த்து கஸ்டமர்கள் கடையைத் தேடிவந்தால், அவர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும். அப்போதுதான் சிறிய அளவிலான கடை என்றாலும் அங்கு தனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றி சாதாரணமாக இன்னொருவருடன் பேசும்போதும், சமூக வலைதளங்களிலும் பதிவு செய்வார்கள் கஸ்டமர்கள்.
மோசமான அனுபவமாக இருந்தால், அதையும் மறக்காமல் மற்றவர்களிடம் சொல்லி, சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து, வரநினைக்கிற ஒன்றிரண்டு கஸ்டமர்களையும் வராமல் தடுத்துவிடுவார்கள். எனவே, வெறும் வடிவமைப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், கஸ்டமர்களை உபசரிப்பதிலும் கவனம் காட்டினால்தான் உங்கள் ஸ்மார்ட் ஐடியா நிச்சயம் வெற்றி பெறும்'' என்றார் அவர்.
தொழிலில் ஜெயிக்க நினைப்பவர்கள் இந்த விதத்தில் யோசித்து, வெற்றி பெறலாமே!

No comments:

Post a Comment