Saturday, 31 May 2014

Naatu Koli Valarpu Seval - நாட்டுக்கோழி வளர்ப்பு சேவல்

Naatu Koli Valarpu Seval - நாட்டுக்கோழி வளர்ப்பு சேவல்

பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சேவக்கட்டு (சேவல் சண்டை) எனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும். சேவல் சண்டை, பொங்கல் சமயம் மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காக சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத் தேவை இருப்பதால், சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு.
பெரும்பாலும், சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வு செய்வார்கள். இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம். அசில் போலவே பெருத்து வளரக்கூடிய இன்னொரு இனம்... 'சிட்டகாங்’ எனும் நாட்டுரகச் சேவல். இந்த இரண்டு இனங்களையும் கலப்புசெய்து, பெருவட்டு இனக் கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார், திண்டுக்கல் மாவட்டம், காப்பிளியப்பட்டி, பாலமுருகன்.
கட்டுமானத்தொழிலில் இருந்து கால்நடை வளர்ப்புக்கு!
காலை வேளையொன்றில்... கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாலமுருகனைச் சந்தித்தோம்.
''எங்களுக்கு ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம்தான் குடும்பத்தொழில். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, கோயம்புத்தூர்ல பத்து வருஷம் வேலை பாத்தேன். குடும்பத்தை விட்டு பிரிஞ்சே இருந்ததால, குடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன். விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்னு மூணு வருஷத்துக்கு முன்ன ஊருக்கு வந்துட்டேன். எங்க தோட்டத்துல தண்ணி வசதி இல்லாததால, தென்னம்பட்டியில இருக்கற இந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன். கோ.எஃப்.எஸ்-29 தீவனச்சோளம், கோ-4 மாதிரியான பசுந்தீவனப் பயிர்களை விதைச்சு... 16 கலப்பின பால் மாடுகளை வாங்கி, பால் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 250 லிட்டர் பால் கிடைச்சுட்டு இருந்தது. ஆனா, கொஞ்ச நாள்லயே கிணத்துல தண்ணி வத்திடுச்சு. அதனால, தீவனம் உற்பத்தி பண்ண முடியாததால... பத்து மாடுகளை வித்துட்டேன். இப்போ ஆறு மாடு மட்டும் கையில இருக்கு. மாடுகளுக்கு போட்ட ஷெட்டுல, கோழிகளை வளர்க்க லாம்னு தோணுச்சு. அதனால ஒன்றரை வருஷமா கோழிகளை வளர்த்திட்டிருக்கேன்'' என்று  முன்னுரை கொடுத்த பாலமுருகன், தொடர்ந்தார்.
  
நாட்டுக்கோழிக்குத் தேவை அதிகம்!
''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்’னு பலரும் ஆலோசனை சொன்னாங்க. நான், நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள்ல எந்தக் கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்குனு பார்த்து, அதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி... சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அப்போ, நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், பெருவட்டு சேவல்களையும், கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப் பாத்தேன். குறிப்பா, அசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. விலையும் நல்லா கிடைக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். நாமக்கல் கே.வி.கே-யிலயும் விசாரிச்சுட்டு அசில், சிட்டகாங் வகைக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.
பெரும்பாலும், அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்க. அதனால, இதுக்கு நல்ல தேவை இருக்கு. நான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி, சேவல்கள் நல்ல பெருவெட்டா வருது. இப்போ, கையில அசில், சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து 10 சேவல்கள், 100 கோழிகள்,
100 குஞ்சுகள் வெச்சுருக்கேன். நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்து கிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்கு. இது, பழங்குடி மக்கள் வளர்க்கற ரக கோழி. இதோட கறி, கருப்பு நிறத்துலதான் இருக்கும். ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த கறி. இந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன், கடக்நாத் கோழிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்.
வளர்ப்புக்கு மட்டும் விற்பனை!
''அசில், சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம் செஞ்சுக்கும். ஆனா, கடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும். அதனால, இனம் கலக்குறதுக்கு வாய்ப்பில்லை. சராசரியா, இப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. அதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன். ஊளை முட்டைகள் போக, மாசத்துக்கு சராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுது. நான் குஞ்சுகளா விக்கிறதில்லை. அம்பது, அம்பத்தஞ்சு நாள் வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன். அதேமாதிரி, கறிக்காகவும் விக்கிறதில்லை. வளர்ப்புக்காக தாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன். சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும் வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன், பராமரிப்பு முறைகளை விளக்கினார்.
''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன். சுத்தி கம்பி வலை இருக்கு. கோழிகளுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன். ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன். இந்த கேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம். தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும். தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம். நாட்டுக்கோழிக்குனு பிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குது. அதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.
ஒவ்வொரு செட்டா இன்குபேட்டர்ல வெச்சு பொரிப்போம். இதுக்காவே தனியா இன்குபேட்டர் ரூம் இருக்கு. இன்குபேட்டர் மூலமா 21 நாள்ல குஞ்சு பொரிஞ்சுடும். அப்பறம் சுத்தப்படுத்திட்டு, அடுத்த செட் முட்டைகளை வெச்சுடுவோம். குஞ்சு பொரிச்சவுடனே ஈரம் காயுற வரைக்கும் இன்கு பேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். அதுக்கப்பறம், அதை புரூடருக்கு மாத்துவோம். தரையில் தவிட்டைப் பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா அட்டை, பாய் இல்லனா தகரத்தை சுத்தி வெச்சு... இதுல வெப்பத்துக்காக பல்புகளை எரிய விடணும். இதுதான் புரூடர். கூண்டுக்குள்ளகூட இந்த மாதிரி வசதியைப் பண்ணிக்கலாம். இப்போ கரன்ட் அடிக்கடி கட் ஆகறதால, மண் பானைக்குள்ள மூட்டம் போட்டு வெச்சுடுறோம். இது குஞ்சுகளுக்கு கதகதப்பா இருக்கும்.
குஞ்சுகள் பொரிஞ்சு வந்த முதல் நாள், குளுக்கோஸ் தண்ணி மட்டும் கொடுப்போம். ரெண்டாவது, மூணாவது நாள்ல அரைச்ச மக்காச்சோளம் கொடுப்போம். அதுக்கப்பறம், கம்பெனி தீவனம் கொடுக்குறோம். ஒரு மாசம் கழிச்சு குஞ்சுகள கொட்டகைக்கு மாத்திடுவோம். அம்மை, கழிசல் நோய்களுக்கான மருந்துகளை... பிறந்ததுல இருந்து ஏழாம் நாள், பதினஞ்சாம் நாள், இருபத்தோராம் நாள், முப்பத்தஞ்சாம் நாள், அம்பத்தஞ்சாம் நாள்னு முறையா கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் மாசத்துக்கு ஒரு தடவை மருந்து கொடுப்போம். இதெல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டிய மருந்து'' என்று பராமரிப்பு முறைகளை விளக்கிய பாலமுருகன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஜோடி 1,500 ரூபாய்!
''நல்லா செழிம்பா தீவனம் கொடுத்து வளர்க்கறதால கோழிகள் மூணு மாசத் துலேயே ரெண்டு கிலோ வரைக்கும் எடை வந்துடும். அம்பது, அம்பத்தஞ்சு நாள் வளர்த்துதான் விற்பனை செய்றேன். வளர்ப்புக்கு மட்டுமே கொடுக்கறதால ஒரு ஜோடி 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன். மாசத்துக்கு 50 ஜோடி வரைக்கும் விற்பனை செய்றேன். வீட்டுத்தேவைக்கும், ரொம்ப நெருங்கின நண்பர்களுக்கும்தான் கறிக்காக கோழியை எடுத்துக்குவோம். இதெல்லாம் போக மீதியை பண்ணையிலயே வளர்த்துடுவோம். மூக்கு வளைஞ்சு, கிளி மூக்கு மாதிரி இருக்கற சேவல்களை சண்டைக்குப் பழக்க வாங்குவாங்க. இதுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு எல்லாம் போக நாட்டுக்கோழி மூலமா மாசத்துக்கு சராசரியா அம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார் பாலமுருகன்.

No comments:

Post a Comment