Saturday, 31 May 2014

தொழில் தொடங்க கடன் உதவி

சுயதொழில் தொடங்க 25ரூ மானியத்துடன் கடன் உதவி சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு      

சென்னை, மே 21- சென்னை மாவட்டத் தில் பிரதமரின் வேலை வாய்ப்பு பெருக்க திட் டத்தின் கீழ் சுயமாக தொழில் தொடங்க 25 சதவீத மானியத்துடன் ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு சுயவேலைவாய்ப்பு அளிக்கவும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வும் பிரதமரின் வேலை வாய்ப்பு பெருக்க திட் டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்க சென்னை மாவட்டத் திற்கு நடப்பு நிதி ஆண் டுக்கு ரூ.85.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 36 நபர் களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தில், உற்பத்தி சார்ந்த தொழில் களுக்கு அதிகபட்சம் ரூ.25 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட் சமும் கடன் பெறலாம். உற்பத்தி திட்டம் தொடர் பான திட்டத்தொகை ரூ.10 லட்சத்திற்கு மேலும், சேவை தொழில் தொடர் பான திட்டத்தொகை ரூ.5 லட்சத்திற்கு மேலும் இருந்தால் அத்தகைய தொழில்களுக்கு கடன் உதவி பெற விண்ணப் பிப்போர் குறைந்தபட் சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடன் பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு கிடையாது.
தனிநபர்கள், தொழில் முனைவோர்கள், உற் பத்தி கூட்டுறவு சங்கங் கள், சுய உதவிக்குழுக் கள், அறக்கட்டளைகள் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். பொதுப் பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்ட கடன் தொகை யில் 15 சதவீதமும் சிறப்பு பிரிவினர்களான பிற் படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர், பழங்குடி யினர், சிறுபான்மையி னர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோ ருக்கு 25 சதவீத மானி யமும் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப் பத்தை சென்னை கிண்டி தொழிபேட்டையில் உள்ள தொழில் வர்த்த கத்துறை இணை இயக் குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். கடைசி தேதியான ஜூன் மூன்றாம் தேதி வரை பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் கள் மட்டுமே நேர் காணல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதுதொடர்பாக கூடு தல் விவரங்கள் அறிய 04422501621, 22501620 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
- இவ்வாறு ஆட்சியர் சுந்தரவல்லி கூறி உள்ளார்.

Naatu Koli Valarpu Seval - நாட்டுக்கோழி வளர்ப்பு சேவல்

Naatu Koli Valarpu Seval - நாட்டுக்கோழி வளர்ப்பு சேவல்

பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சேவக்கட்டு (சேவல் சண்டை) எனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும். சேவல் சண்டை, பொங்கல் சமயம் மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காக சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத் தேவை இருப்பதால், சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு.
பெரும்பாலும், சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வு செய்வார்கள். இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம். அசில் போலவே பெருத்து வளரக்கூடிய இன்னொரு இனம்... 'சிட்டகாங்’ எனும் நாட்டுரகச் சேவல். இந்த இரண்டு இனங்களையும் கலப்புசெய்து, பெருவட்டு இனக் கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார், திண்டுக்கல் மாவட்டம், காப்பிளியப்பட்டி, பாலமுருகன்.
கட்டுமானத்தொழிலில் இருந்து கால்நடை வளர்ப்புக்கு!
காலை வேளையொன்றில்... கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாலமுருகனைச் சந்தித்தோம்.
''எங்களுக்கு ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம்தான் குடும்பத்தொழில். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, கோயம்புத்தூர்ல பத்து வருஷம் வேலை பாத்தேன். குடும்பத்தை விட்டு பிரிஞ்சே இருந்ததால, குடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன். விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்னு மூணு வருஷத்துக்கு முன்ன ஊருக்கு வந்துட்டேன். எங்க தோட்டத்துல தண்ணி வசதி இல்லாததால, தென்னம்பட்டியில இருக்கற இந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன். கோ.எஃப்.எஸ்-29 தீவனச்சோளம், கோ-4 மாதிரியான பசுந்தீவனப் பயிர்களை விதைச்சு... 16 கலப்பின பால் மாடுகளை வாங்கி, பால் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 250 லிட்டர் பால் கிடைச்சுட்டு இருந்தது. ஆனா, கொஞ்ச நாள்லயே கிணத்துல தண்ணி வத்திடுச்சு. அதனால, தீவனம் உற்பத்தி பண்ண முடியாததால... பத்து மாடுகளை வித்துட்டேன். இப்போ ஆறு மாடு மட்டும் கையில இருக்கு. மாடுகளுக்கு போட்ட ஷெட்டுல, கோழிகளை வளர்க்க லாம்னு தோணுச்சு. அதனால ஒன்றரை வருஷமா கோழிகளை வளர்த்திட்டிருக்கேன்'' என்று  முன்னுரை கொடுத்த பாலமுருகன், தொடர்ந்தார்.
  
நாட்டுக்கோழிக்குத் தேவை அதிகம்!
''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்’னு பலரும் ஆலோசனை சொன்னாங்க. நான், நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள்ல எந்தக் கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்குனு பார்த்து, அதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி... சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அப்போ, நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், பெருவட்டு சேவல்களையும், கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப் பாத்தேன். குறிப்பா, அசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. விலையும் நல்லா கிடைக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். நாமக்கல் கே.வி.கே-யிலயும் விசாரிச்சுட்டு அசில், சிட்டகாங் வகைக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.
பெரும்பாலும், அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்க. அதனால, இதுக்கு நல்ல தேவை இருக்கு. நான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி, சேவல்கள் நல்ல பெருவெட்டா வருது. இப்போ, கையில அசில், சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து 10 சேவல்கள், 100 கோழிகள்,
100 குஞ்சுகள் வெச்சுருக்கேன். நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்து கிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்கு. இது, பழங்குடி மக்கள் வளர்க்கற ரக கோழி. இதோட கறி, கருப்பு நிறத்துலதான் இருக்கும். ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த கறி. இந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன், கடக்நாத் கோழிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்.
வளர்ப்புக்கு மட்டும் விற்பனை!
''அசில், சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம் செஞ்சுக்கும். ஆனா, கடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும். அதனால, இனம் கலக்குறதுக்கு வாய்ப்பில்லை. சராசரியா, இப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. அதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன். ஊளை முட்டைகள் போக, மாசத்துக்கு சராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுது. நான் குஞ்சுகளா விக்கிறதில்லை. அம்பது, அம்பத்தஞ்சு நாள் வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன். அதேமாதிரி, கறிக்காகவும் விக்கிறதில்லை. வளர்ப்புக்காக தாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன். சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும் வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன், பராமரிப்பு முறைகளை விளக்கினார்.
''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன். சுத்தி கம்பி வலை இருக்கு. கோழிகளுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன். ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன். இந்த கேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம். தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும். தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம். நாட்டுக்கோழிக்குனு பிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குது. அதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.
ஒவ்வொரு செட்டா இன்குபேட்டர்ல வெச்சு பொரிப்போம். இதுக்காவே தனியா இன்குபேட்டர் ரூம் இருக்கு. இன்குபேட்டர் மூலமா 21 நாள்ல குஞ்சு பொரிஞ்சுடும். அப்பறம் சுத்தப்படுத்திட்டு, அடுத்த செட் முட்டைகளை வெச்சுடுவோம். குஞ்சு பொரிச்சவுடனே ஈரம் காயுற வரைக்கும் இன்கு பேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். அதுக்கப்பறம், அதை புரூடருக்கு மாத்துவோம். தரையில் தவிட்டைப் பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா அட்டை, பாய் இல்லனா தகரத்தை சுத்தி வெச்சு... இதுல வெப்பத்துக்காக பல்புகளை எரிய விடணும். இதுதான் புரூடர். கூண்டுக்குள்ளகூட இந்த மாதிரி வசதியைப் பண்ணிக்கலாம். இப்போ கரன்ட் அடிக்கடி கட் ஆகறதால, மண் பானைக்குள்ள மூட்டம் போட்டு வெச்சுடுறோம். இது குஞ்சுகளுக்கு கதகதப்பா இருக்கும்.
குஞ்சுகள் பொரிஞ்சு வந்த முதல் நாள், குளுக்கோஸ் தண்ணி மட்டும் கொடுப்போம். ரெண்டாவது, மூணாவது நாள்ல அரைச்ச மக்காச்சோளம் கொடுப்போம். அதுக்கப்பறம், கம்பெனி தீவனம் கொடுக்குறோம். ஒரு மாசம் கழிச்சு குஞ்சுகள கொட்டகைக்கு மாத்திடுவோம். அம்மை, கழிசல் நோய்களுக்கான மருந்துகளை... பிறந்ததுல இருந்து ஏழாம் நாள், பதினஞ்சாம் நாள், இருபத்தோராம் நாள், முப்பத்தஞ்சாம் நாள், அம்பத்தஞ்சாம் நாள்னு முறையா கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் மாசத்துக்கு ஒரு தடவை மருந்து கொடுப்போம். இதெல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டிய மருந்து'' என்று பராமரிப்பு முறைகளை விளக்கிய பாலமுருகன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஜோடி 1,500 ரூபாய்!
''நல்லா செழிம்பா தீவனம் கொடுத்து வளர்க்கறதால கோழிகள் மூணு மாசத் துலேயே ரெண்டு கிலோ வரைக்கும் எடை வந்துடும். அம்பது, அம்பத்தஞ்சு நாள் வளர்த்துதான் விற்பனை செய்றேன். வளர்ப்புக்கு மட்டுமே கொடுக்கறதால ஒரு ஜோடி 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன். மாசத்துக்கு 50 ஜோடி வரைக்கும் விற்பனை செய்றேன். வீட்டுத்தேவைக்கும், ரொம்ப நெருங்கின நண்பர்களுக்கும்தான் கறிக்காக கோழியை எடுத்துக்குவோம். இதெல்லாம் போக மீதியை பண்ணையிலயே வளர்த்துடுவோம். மூக்கு வளைஞ்சு, கிளி மூக்கு மாதிரி இருக்கற சேவல்களை சண்டைக்குப் பழக்க வாங்குவாங்க. இதுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு எல்லாம் போக நாட்டுக்கோழி மூலமா மாசத்துக்கு சராசரியா அம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார் பாலமுருகன்.

Sunday, 11 May 2014

சிப்ஸ் செய்வது எப்படி

சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளேவர்களில் பல பேக்கிங்களில் வந்தாலும், வாழையடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை என்பதே இதன் பெரிய பிளஸ் பாயின்ட்.
சந்தை வாய்ப்பு!

எந்த இடத்திலும் இந்த தொழிலைத் தொடங்கலாம் என்பது இதற்கிருக்கும் தனிச் சிறப்பு. நல்ல வருமானம் தரக்கூடிய, பரவலான வியாபாரத்தைக் கொண்ட தொழில் என்பதால் உள்ளூர் அளவிலான தயாரிப்பாளர்கள் இதில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். சில்லறை வியாபாரம் மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி கேன்டீன்கள், ஓட்டல்கள், மதுபான விடுதிகள், ரயில்வே மற்றும் விமான கேட்டரிங் ஒப்பந்தம் என பல இடங்களிலும் மொத்த விற்பனைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பெரிய பிராண்டட் நிறுவனங் கள் இருந்தாலும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கிற நிலை இருக்கிறது.
தயாரிக்கும் முறை!
உருளைக்கிழங்கு மற்றும் நேந்திரன், மொந்தன் வாழைக்காய்களில் செய்யப் படும் சிப்ஸ்களே அதிக அளவில் விற்பனை யாவதால், இந்த காய்களில் நல்ல தரமான காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். சிப்ஸ் செய்வதற்கு முன் காய்களை நன்கு கழுவி தோலை நீக்கி, இதற்கென பிரத்யேகமாக இருக்கும் இயந்திரத்தைக் கொண்டு தகுந்த அளவுகளில் நறுக்கி, மீண்டும் ஒருமுறை நன்கு கழுவி காய வைக்கவேண்டும். தரமான எண்ணெய்யில் பக்குவமாக பொறித்தால் சிப்ஸ் ரெடி. தேவையான அளவு உப்பு மற்றும் காரம் சேர்த்து, சூடு ஆறியதும் பேக்கிங் செய்யவேண்டும்.

தரக்கட்டுப்பாடு!
எல்லாத் தொழிலுக்கும் தரம் முக்கியம் என்றாலும், சிப்ஸ் தயாரிப்பு என்பது உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் கூடுதல் அக்கறையோடு தரமாகவும், சுகாதாரமாகவும் செய்ய வேண்டும். இத் தொழிலைத் தொடங்கும்முன் உணவு பதப்படுத்தல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழைப் பெறுவதுபோல, உங்கள் தயாரிப்புக்கு பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்) தரச் சான்றிதழ் வாங்குவது அவசியம். அதன் மூலம் உங்கள் தயாரிப்பு மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரிக்கும்.
நிலம் மற்றும் கட்டடம்!
இத்தொழிலைத் தொடங்க சுமார் 250 சதுர அடி இடம் வேண்டும். இதில் 125 சதுர அடிக்கு கட்டடம் கட்டவும், 75-80 சதுர அடியில் குடோன் மற்றும் பேக்கிங் அறைக்கு என ஒதுக்கிக் கொள்ளலாம். நிலத்தின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாயாகவும், கட்டடம் கட்ட மதிப்பு 3.15 லட்சம் ரூபாயாகவும் திட்டமிடலாம். இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்தது.

இயந்திரம்!
300 வேலை நாட்களில் இரண்டு ஷிப்ட்களாக வேலை பார்த்தால் ஆண்டுக்கு 50 டன் சிப்ஸ் தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்கள் கவுஹாத்தி, கொல்கத்தா, கோயம்புத்தூர், சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது.
அத்தியாவசிய தேவைகள்!
தினசரி 10 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
மூலப்பொருட்கள்!
உருளைக்கிழங்கு தமிழ்நாட்டில் ஊட்டியில் கொள்முதல் செய்யலாம். நேந்திரன் வாழை கன்னியாகுமரி, திருச்சி, கேரளாவில் கிடைக்கிறது. மற்ற பொருட்களான உப்பு, காரம், எண்ணெய் அனைத்தும் சுலபமாக கிடைப்பதுதான். நமது ஆண்டு உற்பத்தி 50 டன் எனில் உருளைக்கிழங்கு 44 டன், நேந்திரன் 25 டன் தேவைப்படும். உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரிக்கும்போது 30 சதவிகிதமும், நேந்திரன் சிப்ஸில் 20 சதவிகிதமும் கழிவு ஏற்படலாம்.

வேலையாட்கள்!
சிப்ஸ் தயாரிக்கத் தெரிந்தவர்கள்- 2
பேக்கிங் வேலையாட்கள்- 2
உதவியாளர்கள் - 2
விற்பனையாளர் - 1

செயல்பாட்டு மூலதனம்!
முதல் வருடத்தில் 60 சதவிகித உற்பத்தித் திறனுக்கு செயல்பாட்டு மூலதனம் 1.40 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
சிறிய அளவிலும், கொஞ்சம் பெரிய அளவிலும் இத்தொழிலைச் செய்ய நினைப்பவர்கள் தாராளமாக இறங்கலாம். தரம், சுவை, வாடிக்கையாளர் சேவை என ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் சிப்ஸ் தயாரிப்புத் தொழில் உங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : இரா. கலைச்செல்வன்
முகமது நிஷாத்,
கேரளா ஹாட் சிப்ஸ், சென்னை
''எல்லோரும் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது. சுவையில் விட்டுக் கொடுக்காமல் இருந்தால்தான் மார்க்கெட்டில் நிலைக்க முடியும். முழுக்க முழுக்க கைகளாலும் இத்தொழிலை செய்யலாம்; இயந்திரங் களின் உதவியோடும் செய்யலாம். குறைந்த அளவிலான உற்பத்தி எனில் இயந்திரங்கள் தேவை யில்லை. கொஞ்சம் பெரிய அளவில் இத்தொழிலை செய்ய நினைக்கிறவர்கள் இயந்திரங்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது.
குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் இருந்தால்கூட இத்தொழிலில் இறங்கி விடலாம். நல்ல தரமான எண்ணெய்யைப் பயன்படுத்தும் போதுதான் சிப்ஸ் சுவையாக இருக்கும். பாம் ஆயிலில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும். ரீஃபைன்ட் ஆயிலில் செய்தால், ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். எண்ணெய் கறுத்துவிட்டால் மேற்கொண்டு அந்த எண்ணெய்யைப் பயன்படுத்தக்கூடாது. புதிய எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.
எல்லா காலங்களிலும் உருளைக்கிழங்கு தாராளமாகக் கிடைக்கும். இதேபோல் நேந்திரம், மொந்தன், ரோபஸ்டா போன்ற வாழைக்காய்களும் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவது நேந்திரம்தான். சரியான பதத்தில் பொரித்தெடுத்து, தேவையான அளவு மசாலாக்களை சேர்த்து பேக்கிங் செய்தால் வியாபாரிகளே நம்மைத் தேடி வருவர். பத்து, இருபது ரூபாய் அளவில் பேக்கிங் இருந்தால் நிறைய விற்பனையாகும்; நல்ல லாபமும் கிடைக்கும்.''