சி-மொழி வரலாறு
சி-மொழியைப் படைத்த கணிப்பொறி வல்லுநர், டென்னிஸ் எம்.ரிட்சி (Dennis M. Ritchie) என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சி-மொழி உருவான வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அதன் வரலாற்றையும் சிறப்பையும் அறிந்து கொண்டாலே அந்த மொழியைக் கற்க வேண்டும் என்னும் ஆசை தானாக வரும். சி-மொழியின் நுணுக்கங்களைக் கற்றறிவதற்கு முன்பாக அது தோன்றி வளர்ந்த வரலாற்றைச் சற்றே புரட்டிப் பார்ப்போம
Programming in Tamil
சி-மொழிக்கு முன்னால்
1950-1960: உயர்நிலைக் கணிப்பொறி மொழிகள் (High Level Languages) பல புதியதாக உருவாகி உலா வந்த காலம் அது. உயர்நிலை மொழிகளின் உதவியுடன் மனிதன் கணிப்பொறியுடன் எளிதாக உரையாட முடிந்தது. ஆனால் அக்காலத்தில் உருவான கணிப்பொறி மொழிகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகையான பணிகளைச் செய்து முடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவையாக இருந்தன.
பொறியியல் மற்றும் அறிவியல் பணிகளுக்கென ஃபோர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslation) உருவாக்கப்பட்டதும், வணிகத் துறையின் பயன்பாடுகளுக்காகக் கோபால் (COBOL - COmmon Business Oriented Language) மொழி உருவாக்கப்பட்டதும் நாம் அறிந்தவை. இப்படி ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு மொழி இருந்த காலகட்டத்தில், எல்லாப் பணிகளுக்காகவும் ஒரு பொதுவான மொழி உருவாக்கப்பட்டால் என்ன? என்ற ஏக்கம் கணிப்பொறித் துறை வல்லுநர்கள் அனைவருக்கும் இருந்தது.
இந்தக் குறையை நீக்கப் பல நாடுகளின் வல்லுநர்களைக் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்கள், பெருமுயற்சிக்குப் பின் 1960-ல் ‘அல்கால்’ (ALGOL - ALGOrithmic Language) மொழியை உருவாக்கினர். அம்மொழி எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. மிகவும் அருவமாகவும் (too abstract), மிகப் பொதுப்படையாகவும் (too general) இருந்தது. மிகக் குறைவான நிரல் குறியீடுகள் உடையதாகவும், புரிவதற்குக் கடினமான நிரல் வரைவு கொண்டதாயும் விளங்கியது.
கணிப்பொறித் துறை வல்லுநர்களின் ஆய்வு தொடர்ந்தது. அல்கால் மொழியின் குறைகளை நீக்கி, 1963-ல் சிபீஎல் (CPL - Combined Programming Language) என்ற புதிய மொழியை உருவாக்கினர். அல்கால் அந்த விளிம்பில் என்றால், சிபீஎல் இந்த விளிம்பில் நின்றது. அதாவது சிபீஎல்லில் மிக அதிகமான புரோகிராம் குறியீடுகள், வளவளா என்று மிக விரிவான சடங்கு முறைகள் இருந்தன. கற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் மிகக் கடினமான ஒரு மொழியாக இருந்தது.
ஆனால், சிபீஎல் பல நல்ல கூறுகளை உள்ளடக்கியதாகவும் விளங்கியது. அதை ஓரளவு சுருக்கி, அதன் நல்ல தன்மைகளை வெளிக்கொணர பலர் முயன்றனர். அவர்களுள் ஒருவரான, இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த மார்ட்டின் ரிச்சர்ட்ஸ் (Martin Richards), பிசிபீஎல் (BCPL- Basic Combined Programming Language) என்னும் புதிய மொழியை 1967-ல் உருவாக்கி வெளியிட்டார். சிபீஎல்-லின் நல்ல தன்மைகளை அது உள்ளடக்கியதாக இருந்தது என்றாலும், சிபீஎல் அளவுக்குச் சக்தி வாய்ந்ததாக இல்லை. மேலும், ‘அனைத்துப் பணிகளுக்கான பொதுப்படையான மொழி’ ஒன்றை உருவாக்குவது என்ற அடிப்படை நோக்கத்திற்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அது ஆகிவிட்டது. அதாவது, சில குறிப்பிட்ட வகைப் பணிகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியதாய் அம்மொழி அமைந்திருந்தது.
சி-மொழியின் பிறப்பு
வரலாற்றின் நிகழ்ச்சிகள் ஒருபுறம் இவ்வாறு நடந்து கொண்டிருக்க, அமெரிக்கத் தொலைதொடர்பு மற்றும் கணிப்பொறித் துறையின் முன்னணி நிறுவனமான ஏடீ & டீ (AT & T) நிறுவனத்துக்குச் சொந்தமான பெல் (Bell) ஆய்வுக் கூடத்தில் கென் தாம்சனும் (Ken Thompson) டென்னிஸ் ரிட்சியும், அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த ’மல்டிக்ஸ்’ (MULTICS) என்னும் பல்பயனர் இயக்கமுறைமைக்கு (Multiuser Operating System) மாற்றாக ஒரு புதிய இயக்க முறைமையை உருவாக்கிக் கொண்டிருந்தனர். தாங்கள் உருவாக்கிய புதிய இயக்கமுறைமையை, மூலையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த டெக் பீடிபீ-7 (DEC PDP - 7) என்ற குறுங் கணிப்பொறியில் (Mini Computer) நடைமுறைப்படுத்தினர். பிறகு சற்றே திறன் கூடுதலான டெக் பீடிபீ-11 என்ற கம்ப்யூட்டரில் அந்த இயக்கமுறைமையை வெற்றிகரமாக இயக்கினர். மல்டிக்ஸைக் காட்டிலும் பல்வகையிலும் மேம்பட்டிருந்த தங்களின் இயக்க முறைமைக்கு எதிர்மறையாக ‘யூனிக்ஸ்’ (UNIX) என்று பெயரிட்டனர். அது இன்றளவும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வதை நாம் அறிவோம்.
இந்தப் பணியில் மூழ்கியிருக்கும்போதே கென் தாம்சன், தனியாக ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பீடிபீ-11 கணிப்பொறியில் யூனிக்ஸ் இயக்க முறைமையில் செயல்படுத்த, ஃபோர்ட்ரான் மொழிக்கான ஒரு ‘நிரல்பெயர்ப்பியை’ (Compiler) உருவாக்கிக் கொண்டிருந்தார். ஃபோர்ட்ரான் மொழிக்குக் கம்ப்பைலரை எழுதும்போது பக்க விளைவாக ஒரு புதிய கணிப்பொறி மொழி உருவானது. தாம்சன், கம்ப்பைலர் வேலையைப் பாதியிலேயே மறந்துவிட்டு, யூனிக்ஸ் இயக்க முறைமையில் இயங்கும் அந்தப் புதிய மொழியை வளர்த்தெடுத்தார். இது 1971-ல் நடந்தது.
பிசிபீஎல் (BCPL) மொழிதான் கென் தாம்சனுக்கு முன் மாதிரியாய் இருந்தது. பிசிபீஎல்-லின் பல நல்ல கூறுகளை தாம்சன் மொழி உள்ளடக்கியதாக இருந்தது. ஒரு வகையில் அதன் வாரிசாகவும் திகழ்ந்தது என்றுகூடச் சொல்லலாம். எனவே தாம்சன் தன் மொழிக்கு `பி’ (B) என்று பெயரிட்டார். `பி’ என்பது பிசிபீஎல் (BCPL) என்ற பெயரின் முதல் எழுத்தாகும்.
பி-மொழியிலும் சில பின்னடைவுகள் இருந்தன. முதலாவதாக, பி-மொழி, ’ஆணைபெயர்ப்பி’ (Interpreter) சார்ந்த மொழியாக இருந்தது. இரண்டாவதாக, பிசிபீஎல் மொழியைப் போன்றே மிகக் குறுகிய, குறிப்பிட்ட பணிகளுக்கே உதவும் மொழியாக இருந்தது.
இந்த நேரத்தில்தான், டென்னிஸ் ரிட்சி, வரலாற்றுச் சிறப்புமிக்க அச்சாதனையைச் செய்தார். பி-மொழியைச் செழுமைப்படுத்தி, தன் மேதமையின் சாரத்தைப் பிழிந்து அதில் கலந்து, கம்ப்பைலர் சார்ந்த ஒரு புதிய மொழியை உருவாக்கினார். பிசிபீஎல் மொழியிலும், பி-மொழியிலும் காணாமல் போயிருந்த பொதுத்தன்மையைத் தன் மொழியில் மீட்டுத் தந்தார். குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் அல்லாமல் எல்லாப் பணிகளுக்கும் பயன்படும் பொதுமொழியாக அது திகழ்ந்தது. கணிப்பொறி மொழி வல்லுநர்கள் 1960-ல் கண்ட கனவைக் கடைசியாக 1972-இல் ரிட்சி நிறைவேற்றி வைத்தார்.
ரிட்சி, தன் மொழிக்கு `சி’(C) என்று பெயரிட்டார். B என்ற ஆங்கில எழுத்துக்கு அடுத்த எழுத்து C என்பதால்தான் ரிட்சி அவ்வாறு பெயரிட்டதாக பலரும் கருதினர். ஆனால் அந்த ஒற்றுமை, தற்செயல் நிகழ்ச்சி என்று கூறுவாரும் உண்டு. உண்மையில் `சி’ என்பது பிசிபீல் (BCPL) மொழியில் உள்ள இரண்டாவது எழுத்தைத்தான் குறிக்கிறது என்பது அவர்கள் கருத்து. ஆக, தாம்சன் தன் மொழி பி-க்கு பிசிபீஎல்-லின் முதல் எழுத்தைச் சூட்டியதுபோல, ரிட்சி தன் மொழிக்கு இரண்டாவது எழுத்தைச் சூட்டினார் என்ற கருத்தும் ஒத்துக் கொள்ளக்கூடியதே.
1973-ஆம் ஆண்டில், டென்னிஸ் ரிட்சியும் கென் தாம்சனும் தாங்கள் ஏற்கெனவே உருவாக்கிய ‘யூனிக்ஸ்’ இயக்க முறைமையின் புதிய பதிப்பை, முழுக்கவும் சி-மொழியில் எழுதினர். சி-மொழியின் செயல்திறனுக்கு, யூனிக்ஸ் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.
சி-மொழியின் வளர்ச்சி
உயர்தனிச் செம்மொழியாய் சி-மொழி திகழ்ந்தபோதும் கணிப்பொறி நிரலர்களைப் (Computer Programmers) பெருமளவில் அது கவரவில்லை. அடுத்த ஆறு ஆண்டுகள் சி-மொழி பதுங்கிய புலியாகத்தான் இருந்தது எனலாம். பயன்படுத்திய சிலரும் தத்தம் விருப்பத்திற்கிணங்க சி-மொழியை வடிவமைத்துப் பயன்படுத்தி வந்தனர். ஒரு தரப்படுத்தப்பட்ட சி-மொழியை (Standard C) வரையறுக்கும்படி, அமெரிக்கன் நேஷனல் ஸ்டாண்டர்டு இன்ஸ்டிடியூட் (ANSI) கேட்டுக் கொண்டதற்கிணங்க, 1978-ல் டென்னிஸ் ரிட்சியும், பிரியன் கெர்னிகனும் இணைந்து `தி சி புரோகிராமிங் லாங்குவேஜ்’ (The C - Programming Language) என்ற நூலை வெளியிட்டனர்.
இன்று, சி-மொழி பற்றிய புத்தகங்கள் பலவும் கே & ஆர் (K & R) என்று மேற்கோள் காட்டுவது இந்தப் புத்தகத்தைத்தான். கே & ஆரின் புத்தகம் வெளியானதுமே கணிப்பொறி உலகில் ஒரு புரட்சியே நிகழ்ந்தது எனலாம். சி-மொழி, மென்பொருள் துறையை ஒரு கலக்கு கலக்கியது. இந்தக் கால கட்டத்தில்தான் வன்பொருள் துறையில் ஒரு புரட்சி நடந்தது. ஐபிஎம் (IBM) நிறுவனத்தினரின் சொந்தக் கணிப்பொறிகள் (Personal Computers - PCs) புற்றீசல் போல உற்பத்தியாகி உலா வந்தன.
பெரும் எண்ணிக்கையிலான பீசிக்களின் உற்பத்தி, சி-மொழியின் செல்வாக்குக்கு அடித்தளமாய் அமைந்தது. யூனிக்ஸ் பணித்தளச் சூழலில் பிறந்தபோதும், தன் பிறந்தகமான யூனிக்ஸின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு, சி-மொழி சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியது. சி-மொழியின் செல்வாக்குப் பெருகியதும் சி-மொழியின் உருவாக்கத்தில் பங்கு பெறாத நிறுவனங்கள்கூட சி-மொழிக் கம்ப்பைலர்களை உருவாக்கி வெளியிடத் தொடங்கின. அவை தமக்கே உரிய தனித் தன்மைகளைக் கொண்டிருந்தன. மூல சி-மொழியிலிருந்து பல்வேறு மாற்றங்களையும் திருத்தங்களையும் கொண்டு விளங்கின. இதன் காரணமாய், சி-மொழிக்குக் காலத்திற்கேற்ற வடிவமைப்பும் ஒரு கறாரான வரையறுப்பும் தேவை என்பதை சி-மொழி அறிஞர்கள் உணர்ந்தனர். 1983-ஆம் ஆண்டு, அமெரிக்க தேசியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (ANSI) ஒரு குழுவை அமைத்தது. சி-மொழியின் பொலிவு குன்றாமல், திரிபில்லாத, ஒரு நவீன, கட்டுருவான, பொறிசாரா வரையறுப்பை (machine-independent definition) உருவாக்குவதே அக்குழுவின் நோக்கமாய் இருந்தது. ஐந்தாண்டு ஆய்வுகளுக்குப்பின் ‘அன்சி-சி’ (ANSI-C) உருவானது. டென்னிஸ் எம். ரிட்சியும், பிரியன் டபிள்யூ. கெர்னிகனும் இணைந்து, ‘தி சி புரோகிராமிங் லாங்குவேஜ்’ என்ற நூலின் இரண்டாம் பதிப்பை 1988-இல் வெளியிட்டனர்.
அன்சி-சி
அன்சி-சி சில மாற்றங்களைக் கொண்டிருந்தது. செயல்கூறுகளை (Functions) அறிவிப்பதிலும் வரையறுப்பதிலும் புதிய வடிவம் புகுத்தப்பட்டது. செயல்கூறின் தலைப்பியிலேயே (Function Header) செயலுருபுகளின் (arguments) தரவினத்தையும் (data type) குறிப்பிட முடியும். ’ஸ்ட்ரக்ட்’ (struct) தரவின மாறியில் (variable) மதிப்பிருத்தலும், ’ஈனம்’ (enum) தரவின வகையும் சி-மொழியின் உள்ளிணைந்த அங்கமாயின. மிதவைப் புள்ளிக் (floating point) கணக்கீடுகள் ஒற்றைத் துல்லிய (single precision) முறையில் செய்யப்பட்டன. ‘அன்சைன்டு’ (unsigned) இனங்களின் கணக்கீடுகள் தெளிவுபடுத்தப்பட்டன. செயலாக்கிக்கு முந்தைய (pre-processor) நெறிப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டன. விரிவான சி-மொழி நூலகம் (C Library) உள்ளிணைக்கப்பட்டது. இயக்க முறைமையை அணுகுவது, குறிப்பாக கோப்புகளில் எழுதுவது/படிப்பது (write/read in files), வடிவமைக்கப்பட்ட உள்ளீடு/வெளியீடு (formatted input/output), நினைவக ஒதுக்கீடு (memory allocation), சரங்களைக் கையாளுதல் (string handling) போன்ற பணிகளுக்கு, ஏராளமான செயல்கூறுகள் உருவாக்கப்பட்டு, நூலக/தலைப்பிக் கோப்புகளாக (library/header files) இணைக்கப்பட்டன.
சி-மொழி நூலகத்தின் பெரும்பகுதி, யூனிக்ஸ் இயக்க முறைமையின் ‘ஸ்டாண்டர்டு ஐ/ஓ லைப்ரரியின்’ மாதிரியில் வடிவமைக்கப்பட்டது. இயக்க முறைமை தொடர்பான செயல்பாடுகள் தவிர, பிற நூலகச் செயல்கூறுகளை சி-மொழியிலேயே உருவாக்க முடியும் என்பதே இதன் சிறப்புக்கூறாகும். மூல சி-மொழியில் இன்டிஜருக்கும் பாயின்டருக்கும் அதிக வேறுபாடு இல்லாமல் இருந்தது. இரண்டையும் எளிதாக மாறுகொள்ள (Interchange) முடியும். ஆனால் அன்சி-சி-யில் இது நீக்கப்பட்டது. சுட்டுகளை முறைப்படி அறிவிக்கும் முறையும், இன்டிஜர் - பாயின்டர் இனமாற்றமும் (type conversion) வெளிப்படையாக செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் புகுத்தப்பட்டது.
சி-மொழி, ஆழமான இன உணர்வு கொண்ட (strongly typed) மொழி அல்ல என்றபோதிலும், இனச் சரிபார்ப்பு (type checking) வலுப்படுத்தப்பட்டது. ஒத்தியல்பில்லா தரவினங்களுக்கிடையே (incombatible data types) தானாக நடைபெறும் இனமாற்றங்கள் (automatic type conversions) தவிர்க்கப்பட்டன. பெரும்பாலான இனப் பிழைகளை (type errors) கம்ப்பைலர் சுட்டிக் காட்டும். 1988-ல் புதுவடிவம் பெற்ற சி-மொழி, தன் பயணத்தில் தளர்வேதும் இன்றி வெற்றி நடைபோட்டு வருகிறது. காலத்திற்கேற்ற பல புதிய மொழிகள் உருவாக்கப்படுவதற்கு ஊற்றுக் கண்ணாகவும் திகழ்கிறது.
சி++ மொழியின் உதயம்
ஏடீ & டீ பெல் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றிவந்த ஜேன் ஸ்ட்ரௌஸ்ட்ரப் (Bjarne Stroustrup) ரிட்சியின் நண்பர் ஆவார். 1980-ல் அவர், தான் செய்துவந்த நிகழ்வு அடிப்படையிலான பாவனைத் திட்டப்பணிக்கு (event based simulation project) ‘சிமுலா67’ (SIMULA67) மொழியைப் பயன்படுத்தினார். அம்மொழி திறன் குறைந்ததாக இருக்கவே, தன் பணியை சி-மொழியில் தொடர்ந்தார். ஆனால், அவரது திட்டப்பணிக்கு மிகவும் தேவையான வசதிகள் சி-மொழியில் இல்லாததை உணர்ந்தார். எனவே சி-மொழியில் சில புதிய வசதிகளைச் சேர்த்தார். சி-மொழியின் சுட்டுக்குச் (pointer) சற்று எளிமையான ’சுட்டுருபு’ (reference) என்னும் மாற்றைக் கண்டுபிடித்தார். இனக்குழு (class) என்னும் திறனுள்ள கருத்துருவைச் சேர்த்தார். பொருள்நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming - OOP) என்ற கருத்துருவுக்குப் புதிய பாதை போட்டுத் தந்தார்.
ஸ்ட்ரௌஸ்ட்ரப் உருவாக்கிய சி-மொழி ஒரு புதிய மொழியாகப் பரிணமித்த போதும், அவர் தன் மொழியைத் தனி மொழியாகக் கருதவில்லை. சி-மொழியின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்றே கருதினார். எனவே, தன் மொழிக்கு ‘இனக்குழுவுடன் கூடிய சி’ (C with Classes) என்றுதான் பெயர் சூட்டினார். மற்றவர்கள், ‘சி-யை உள்ளடக்கிய மொழி’ (Supper Set of C) என்றும், ‘சிறந்த சி’ (Better C) என்றும் பல பெயர்களில் அழைத்தனர். புதிய மொழி உருவாக்கப்பட்டு ஏறத்தாழ நான்காண்டுகள் கழித்து, 1983-ல் ரிக் மாஸ்சிட்டி என்பவர்தான் ஸ்ட்ரௌஸ்ட்ரப்பின் மொழிக்கு ‘சி++’ என்று பெயர் சூட்டினார்.
சி-மொழியில் எழுதப்பட்ட அனைத்து நிரல்களையும் மாற்றமின்றி அப்படியே சி++ மொழியில் செயல்படுத்த முடியும். எனவேதான் சி++ மொழியைத் தனி மொழியாக ஸ்ட்ரௌஸ்ட்ரப் கருதவில்லை. ++ என்பது சி-மொழியில் மாறியின் மதிப்பில் ஒன்றுகூட்டும் செயற்குறி (Operator) ஆகும். சி-மொழி செயற்குறியின் பொருளை உள்ளடக்கி, ‘மேம்படுத்தப்பட்ட சி-மொழி’ என்று பொருள்தொனிக்கும் வகையில் ‘சி++’ எனப் பெயரிடப்பட்டது. முற்றிலும் புதிய மொழி அல்ல என்பதால் பி, சி-க்கு அடுத்து டி (D) எனப் பெயர்சூட்டப்படவில்லை. எனவேதான் சி-மொழி வரலாற்றில் சி++ மொழியின் தோற்றத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
சி-மொழியைப் போலவே சி++ மொழியும் இன்றைக்குத் தனிச்சிறப்போடு விளங்குகிறது. சி-மொழியின் சிறப்புத் தன்மையே சி++ மொழியின் சிறப்புத் தன்மைக்கும் அடிப்படைக் காரணம் எனில் மிகையாகாது.
ஜாவா மொழியின் உதயம்
மின்னணுக் கருவிகளின் உட்பொதி மென்பொருளுக்கான (embeded software) ஆய்வு, ‘ஜாவா’ என்னும் புதிய மொழியின் உதயத்தில் முடிந்தது. சி++ மொழியின் சிக்கலான கருத்துருக்களைக் களைந்து, இணையப் பயன்பாடுகளை (Internet Applications) உருவாக்குவதற்கென்றே, ஒரு முழுமையான எளிய பொருள்நோக்கு நிரலாக்க மொழியாக ஜாவாவை ஜேம்ஸ் காஸ்லிங்கும் அவரது நண்பர்களும் சேர்ந்து உருவாக்கினர். பல வகையிலும் ஜாவா, ஒரு புதிய மொழி என்றபோதிலும் அதன் கட்டளை அமைப்புகள் அப்படியே சி- மொழியிலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.
மாறிக் கோவைகள் (expressions), if...else நிபந்தனைக் கூற்று (conditional statement), switch என்னும் கிளைபிரி கட்டளை (branching command) மற்றும் சக்தி வாய்ந்த for(), while(), do... while() ஆகிய கட்டுப்பாட்டு மடக்கிகள் (control loops) அனைத்தும் அப்படியே சி-மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவை. தரவினங்கள் (data types), செயற்குறிகள் (operators), செயல்கூறு வரையறுப்புகள் (function definitions) ஆகியவையும் பெருமளவு சி-மொழியை ஒத்தவை. குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் முதன்முதல் ஜாவா கம்ப்பைலரும், ஜாவா இன்டர்பிரட்டரும் சி-மொழியில் உருவாக்கப்பட்டவை. ஜாவா மொழி, சி-மொழிக்குப் பெருமளவு கடமைப்பட்டுள்ளது எனில் மிகையாகாது.
இன்றைய மொழி சி#
மைக்ரோசாஃப்டின் புதிய படைப்பான சி# மொழி, சி மற்றும் சி++ மொழிகளின் அப்பட்டமான வாரிசாகும். சி# மொழியை உருவாக்கியவர்கள், அதனை சி, சி++ மொழிகளின் இயல்பான பரிணாம வளர்ச்சி என்றே கூறுகின்றனர். சி# மொழி ஜாவாவுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட மொழி என்றபோதிலும், சி, சி++ ஆகிய மொழிகளின் பாரம்பரியப் பெருமைகளை விட்டுக் கொடுக்காமல் அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
அடிப்படைத் தரவினங்கள் மற்றும் கட்டளை அமைப்புகளை சி-மொழியிலிருந்து தருவித்துள்ளனர். ஜாவாவைப் போலப் பாயின்டர்களை முற்றிலும் துறந்து விடாமல், ’பாதுகாப்பற்ற குறிமுறை’ (unsafe code) என்ற பெயரில் சி# மொழியில் பாயின்டர்களை அப்படியே எடுத்தாள வழி செய்துள்ளனர். சி-மொழியின் வேகமும், திறனும் ஜாவாவைவிட சி# மொழியில் அதிகமாகவே உள்வாங்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். மைக்ரோசாஃப்ட் தன்னுடைய புதிய மொழிக்குப் பெயர் சூட்டும்போது, சி-மொழியின் பாரம்பரியத்தை நினைவுகூறும் வகையில் கவனமாக ‘சி#’ எனப் பெயரிட்டது. சி, சி# ஆகியவை இசைப்பலகையில் (Music Keyboard) சுரங்களைக் (Notes) குறிக்கும் குறியீடுகளாகும்.. சி வெள்ளைக் கட்டையிலும், சி# அடுத்துள்ள கருப்புக் கட்டையிலும் அமையும். சி-யைவிட, சி# சற்றே கூர்மையாய் ஒலிக்கும். எனவே, சி-யின் வழிவந்த புதுயுக மொழிக்கு சி# எனப் பெயரிட்டது பொருத்தமே.
பாடம்-2
No comments:
Post a Comment