Friday, 12 September 2014

business ideas in tamil 2

தொழில் ஆத்திசூடி - உன் சுயம் அறி; உள் பயம் முறி!

''காட்டில் இருந்தாலும் சிங்கம் மந்தையில் சேருவதில்லை: மண்ணில் கிடந்தாலும் தங்கம் மக்கிப் போவதில்லை''                                            
இந்த வாக்கியங்கள் என்ன சொல்கின்றன? காட்டில் இருக்கும் சிங்கம் எந்த மந்தையோடும் சேர்ந்து தன் தனித்துவத்தை இழப்பதில்லை. அது தன் அடையாளத்தைத் தனியே காட்டுவதில் முனைப்புடன்தான் இருக்கிறது. அதேபோல் மண்ணுக்குள் புதைந்திருக்கும் தங்கம் மக்கிப்போகாமல், தன் தனித்துவத்தை நீர்த்துப் போகச் செய்வதில்லை. அதாவது, பூமியின் செரிமானத்திறன் தங்கத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. சிங்கமும், தங்கமும் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் சுயத்தை இழப்பதில்லை.
சுயத்தை ஒருவர் இழக்காமல் இருப்பதன் முதல்படி, அவர் தன் சுயத்தின் நிஜ பலத்தை அறிவது. தன் சுயத்தை அறிவதும் அதைப் பேணிகாப்பதும் ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கான மூலதனம்.
தொழில்முனைவோரின் வாழ்க்கைப் பாதை இந்த சுயம் அறிதல் மற்றும் அதைப் பேணிகாத்தல் என்பதில் முழுமூச்சாக பயணம் செய்ய வேண்டும். அது அவர் சார்ந்த தொழில் துறையில் அவரை தனித்துவமான வெற்றிக்கு அழைத்துச் செல்லும். இன்று தொழில் முனைவோர்களை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை...
1. குறிப்பிட்ட தொழிலில் காதல் ஏற்பட்டு, அது தன் சிந்தனையோட்டத்துடன் தொடர்புடையது என அதில் இறங்கி, வெற்றிவாகை சூடியவர்கள்.
2. பரம்பரையாகச் செய்துவரும் தொழிலை குழந்தைப் பருவம் முதலே கற்று அந்தத் தொழிலை மென்மேலும் மெருகேற்றுபவர்கள்.
3. ஒரு குறிப்பிட்ட தொழிலின் தொழிலாளியாக இருந்து அதைக் கற்று, சுயமாகச் செய்ய ஆரம்பித்து, 10 - 15 ஆண்டுகளுக்குள் அந்தத் தொழிலில் விஸ்வரூபம் எடுப்பவர்கள்.
4. தன் குடும்பத் தொழிலில் ஈடுபட்டு, ஆனால் தனக்கு இந்தத் தொழில் பிடிக்கவில்லை என்று புலம்பிக்கொண்டே தொழில் செய்து அதில் தேக்கநிலையிலே இருப்பவர்கள்.
5. 'சார், முதலீடு எனக்கு பிரச்னை இல்லை. புதுசா என்ன தொழில் செய்யலாம், சொல்லுங்க!’ என்று மூன்று வருடத்திற்கு ஒருமுறை வெவ்வேறு தொழில் செய்பவர்கள்.
6. 'எனக்கு கடன் ஜாஸ்தி ஆயிடுச்சி! நான் தொழில் செய்து கடன் அடைக்கப்போறேன் என்று கிளம்பி, சில ஆண்டுகளுக்குள் மீண்டும் சம்பளத்துக்கே வேலைக்குச் செல்பவர்கள்.
7. 'சார், இந்தத் தொழில் சூப்பராப் போகுதாமே! நானும் அதுல ஒரு கடை ஆரம்பிக்கிறேன்’ என்று இலக்கு இல்லாமல் செல்பவர்கள்.
இத்தனை வகை தொழில்முனைவோர்களில் முதல் மூன்று வகையினர் பெரும் தொழிலதிபர்களாக மாறுகிறார்கள். ஏனெனில், இவர்கள் அடிக்கும் காற்றில் பறக்கும் காய்ந்த சருகைப்போல தங்கள் சிந்தனையை அலையவிடுவதில்லை. மாறாக, இவர்கள் புயலுக்கும் தாக்குப்பிடிக்கும் ஆலமரமாக தங்கள் சிந்தனையை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் தன் தொழிலின் அன்றன்றைய மாறுபாடுகளைப் பொறுத்து எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஏனெனில், நிகழ்காலப் போராட்டங்களில் இவர்கள் லயிப்பதில்லை. அந்தத் தொழிலின் எதிர்காலத்தையே இவர்கள் நிர்ணயிக்கிறார்கள். ஏனெனில், இவர்கள் தன் சுயம் சொல்வதைக் கேட்கிறார்கள்.
இப்படிப்பட்ட சுயத்தை அறிவதற்கு, முதலில் உங்களின் தனிப்பட்ட பலம், பலவீனம் அறியவேண்டும். இது உங்கள் மனதுக்கு நீங்கள் நேர்மையானவராக இருந்தால், இதை அறிக்கையிட்டு ஒரு பேப்பரில் எழுதுங்கள். பின் நீங்கள் உங்கள் துறை சார்ந்த மற்றும் நீங்கள் ஈடுபடப்போகும் துறை சார்பான தகவல்களைத் தேடித் தேடி படியுங்கள். உங்களைச் சுற்றி 'ஆமாம் சாமி’களை வைத்துக்கொள்ளாதீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு பிடித்தமில்லாத ஒரு தொழிலை, அடுத்தவர் பேச்சைக் கேட்டு செய்யாதீர்கள். உங்களுக்கு பிராய்லர் கோழி பிடிக்கும். அதன் கறி பிடிக்கும். ஆனால், ஈமு கோழி வளர்ப்புதான் பெஸ்ட் என்று உங்கள் ஊரே உங்களைச் சுற்றி நின்று கும்மியடித்தாலும், உங்கள் உள்மனதை ஒருமுறை நேர்மையுடன் கேளுங்கள், 'நான் ஈமு கறி சாப்பிடுகிறேனா? என் உறவினர் யாராவது ஈமு கறி சாப்பிடுகிறார்களா?’ இதன் பதில் என்னவோ, உங்கள் உள் மனம் என்ன பதில் சொல்கிறதோ, அதைச் செய்யுங்கள். புது தொழிலை பற்றி சிந்திக்கும்போது, சிங்கமாக நீங்கள் எந்த மந்தையோடும் சேராதிருங்கள். ஏனென்றால், தொழிலில் இழப்பென்று ஒன்று வந்தால், அப்போது உங்களை மந்தையோடு சேர்த்தவர்கள் வந்து நிற்கப் போவதில்லை.
தொழில் செய்யும் பலருக்கு சுயம் அறிவது பல நேரங்களில் நடக்கவே செய்கிறது. தான் என்னவெல்லாம் நினைக்கிறோம், என்னவெல்லாம் செய்ய முடியும், தான் இருக்கும் தொழில் துறையில் என்னவெல்லாம் வாய்ப்புகள் உள்ளன என்பது பலருக்கும் தெரியவே செய்கிறது. பெரிதாக தொழிலில் சாதிக்கவேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கவே செய்கிறது. ஆனால், தன் சுயம் அறிந்தபின் இவர்களைச் செயல்பட விடாமல் தடுப்பது 'உள் பயம்’. இது நமது சுற்றம், நட்புகளின் போதனை, பயமுறுத்தல்கள் மற்றும் நமது அறியாமை இந்த மூன்றையும் ஊட்டச் சத்தாகப் பெற்று நன்கு வளர வளர நாம் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருப்போம், நம் சிந்தனை வளம் நன்றாக இருந்தாலும்கூட...
உங்கள் மனச்சிறையில் எப்போதும் 'சுயம்’, 'பயம்’ என்ற இரண்டு சிங்கங்கள் சண்டை இட்டுக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் எந்த சிங்கத்திற்கு அதிகமாக உணவளிக்கிறீர்களோ, அந்தச் சிங்கம் பெரும்பாலான நேரங்களில் வெற்றி பெறுகிறது.
தன் மனதில் எப்போதும் சுயம் என்ற சிங்கத்திற்கே அதிக உணவளித்து, உள் பயம் என்ற சிங்கத்தைத் துவைத்து காயப் போட்டு, தான் நினைத்ததை எல்லாம் வெற்றிகரமாக சாதித்துக் கொண்டதோடு அல்லாமல், தமிழகத்தின் கடலூரில் ஆரம்பித்த தனது நிறுவனத்தை, இன்று சர்வதேச நிறுவனங்களோடு போட்டியிடும் நிறுவனமாக நிலைநிறுத்தியிருக்கும் தொழிலதிபர் சி.கே.ஆர். என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் கெவின்கேர் நிறுவனத்தை நிறுவிய சி.கே.ரங்கநாதன். தன் சுயம் அறிந்து, உள் பயம் முறித்த மனிதர்களுள் மிக முக்கியமானவர்.
1983-ல் 15,000 ரூபாய் முதலீட்டுடன் கடலூரில் ஒரு சின்ன அறையில் தனது நிறுவனத்தை சி.கே.ஆர். ஆரம்பித்தார். அடித்தட்டு மக்களின் தேவைக்காக சிக் ஷாம்பு சாஷே பாக்கெட்டுகளைத் தயாரித்தார். ஆரம்பத்தில் தன் தயாரிப்பைச் சந்தையில் நிலைநிறுத்த பெரும் சவால்களைச் சந்தித்தார். ஆனால், மனம் தளரவில்லை. மக்களைக் கவர, மூன்று காலி சாஷே பாக்கெட்டுகளைத் தந்தால் ஒரு சிக் ஷாம்பு பாக்கெட் இலவசம் என்று அந்தக் காலக்கட்டத்தில் அவர் அறிவித்த ஒரு திட்டம் சிக் ஷாம்புவை சந்தையில் நன்கு நிலைநிறுத்திய தோடு அல்லாமல் அவரது நிறுவனத்தையும் வளர்ச்சியில் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இத்திட்டம், அந்த நேரத்தில் மிகவும் புதுமையானது. ஆனால், ஒரு புது தொழிலதிபரின் பார்வையில் மிகவும் அபாயகரமானதும்கூட. ஒருவேளை இத்திட்டம் தோல்வி அடைந்தால் மிகப் பெரிய இழப்பை நிறுவனம் சந்திக்க வேண்டும் என்று அவரை பலர் அன்று பயமுறுத்தியிருக்கலாம். ஆனால், அவர் தன் திட்டத்தின் மேல் பெரும் நம்பிக்கை வைத்தார். தன் உள்மனம் சொன்னதைச் செய்தார். அன்று பெரும் வெற்றி அடைந்தார்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்தியாவில் ஒரே நிறுவனத்திற்குள் நிறைய பிராண்டுகளை உருவாக்கியவர் அவர்தான். இது சர்வதேச தொழிலதிபர்களிடம் பொதுவாகக் காணப்படும் குணாதிசயம். கடலூரில் பிறந்த சி.கே.ஆருக்கு இந்தக் குணாதிசயங்கள் இயற்கையிலேயே இருந்தது பெரிய விஷயம். ஏனெனில், ஒரு பொருளை உற்பத்தி செய்வதைவிட, அதை பிராண்டிங் செய்ய அதிகம் செலவாகும். இதற்கு பயந்தே பலர் இதில் பின்தங்கி, தொழிலும் பின்தங்கி விடுகிறார்கள். ஆனால், இந்தப் பயம் சி.கே.ஆரிடம் இல்லை.
தொழில் ஆரம்பிக்கும் பலருக்கு மூலதனம் திரட்டுவதில் பெரும் பயம் இருக்கும். ஆனால் சி.கே.ஆர். இதை தனது மாற்றுச் சிந்தனைகள் மூலம் எதிர்கொண்டார். மூலதனம் இல்லை என்று பயப்படாதீர்கள். உங்கள் மூளையே உங்கள் முதலீடு என்று அவர் சொல்வது தொழில் தொடங்க நினைக்கும் பலருக்கும் ஒரு உற்சாக டானிக். தன் சுயம் அறிந்து, உள்பயத்தை அவர் முறித்ததன் விளைவு, சாஷே பாக்கெட்டில் ஆரம்பித்த சி.கே.ஆர்., பிரீமியம் செக்மென்ட் பொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்து, அதிலும் பெரும் வெற்றி கண்டார். இன்று இந்நிறுவனம் 1,200 கோடி ரூபாய்களுக்குமேல் டேர்னோவர் செய்கிறது.    

1 comment: