Monday 22 July 2013

ஃப்ரிஜ்ஜுக்குள் மார்க்கெட்!

ஃப்ரிஜ்ஜுக்குள் மார்க்கெட்!
தொழில்
 
ஃப்ரிஜ்ஜுக்குள் மார்க்கெட்! சீசன் பிஸினஸில் லாபம் பார்க்க சூப்பர் ஐடியா!
ஊ ரெல்லாம் தக்காளிப்பழம் கிலோ 20 ரூபாய் என்று விற்கும்போது, உங்கள் கடையில் மட்டும் கிலோ 15 ரூபாய்க்குக் கொடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்..?
காதலர் தினத்தன்று எல்லாக் கடைகளிலும் ரோஜா பூ பத்து ரூபாய் விற்கும்போது, நீங்கள் மட்டும் அதே ரோஜாவை ஐந்து ரூபாய்க்கு விற்க முடிந்தால் எவ்வளவு கூட்டம் அலைமோதும்..? கேட்கவே நன்றாக இருக்கிறதே... இதெல்லாம் சாத்தியம்தானா என்று யோசிக்கிறீர்களா..? சாத்தியம்தான், உங்களிடம் ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ இருந்தால்! இப்போது சூடான தொழில் என்றால் அது ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ எனப்படும் குளிர்பதனக் கிடங்குதான்!
காய்கறிகள், பழங்கள் பறிக்கப்பட்ட பிறகு, ஒரு சில நாட்கள் மட்டுமே சாதாரண வெப்பநிலையில் கெட்டுப்போகாமல் இருக்கும். அதன் பிறகு பாக்டீரியா, பூஞ்சைகளின் தாக்குதலால் அழுகிவிடும். அவற்றைப் பாதுகாத்து வைக்கமுடியாது.
நம்நாட்டில், காய்கறிகள், பழங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே விளைகின்றன. அவற்றைப் பாதுகாத்து வைக்க வழியில்லாமல் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை அல்லது வீணாகிப் போய் கொட்டி அழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள் விவசாயிகள். அப்படி இல்லாமல் நல்ல விலை வரும்வரை காத்திருக்க வழிசெய்கின்றன குளிர்பதனக் கிடங்குகள்.
இந்தக் குளிர்பதனக் கிடங்குகளைச் செய்து தரும் ‘யூகான்’ ( Eukcon ) நிறுவன பொது மேலாளர் சேகர், ‘‘இந்தக் கிடங்கில் காய்கறிகள், பழங்கள் மட்டுமன்றி ஐஸ்க்ரீம், பட்டுப் புழு முட்டைகள் போன்றவற்றைக் கூடப் பாதுகாக்கலாம். குறுகிய காலமாக நான்கு மாதங்கள்வரையும், நீண்ட காலமாக ஒருவருடம் வரையும்கூட பொருட்களை வைத்திருக்கலாம். குறுகியகால முறையில் பலவிதமான காய்கறிகளையும், நீண்டகால முறையில் ஒரே வகையான காய்கறிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும்.
இப்படி குளிர்பதனக்கிடங்கில் பாதுகாத்து வைத்திருந்து வியாபாரம் செய்வது ஒருவகை என்றால், குளிர்பதனக் கிடங்குகளை உருவாக்கி, வாடகைக்கு விட்டுச் சம்பாதிப்பது இன்னொரு வகையில் லாபம் தரும் தொழில். சிறுவியாபாரியாக இருந்தால்கூட ஒரு குளிர்பதனக்கிடங்கை உருவாக்கி தன் தேவைக்குப் போக மீதியை வாடகைக்கு விட்டு அதன்மூலம் கூடுதலாக லாபம் சம்பாதிக்க முடியும். இதுபோன்ற கிடங்குதாரர்களுக்கு ஊக்கம் தருவதற்காகவே அரசாங் கம், மின் கட்டண சலுகைகளைத் தருகிறது.
மிகக்குறைந்த அளவாக 6 அடி நீள, அகலத்தில் 7 அடி உயரத்தில் குளிர்பதனக் கிடங்கு அமைக்க இரண்டு லட்சம் ரூபாய்வரை செலவாகும். பொருட் களின் அளவைப் பொறுத்து இதில் 800 கிலோ வரை வைக்க முடியும். அதனால், கொஞ்சம் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் அல்லது விவசாயம் செய்பவர்கள் தாராளமாக இந்தத் துறையில் இறங்கலாம்’’ என்றார்.
நாம் வீட்டு ஃப்ரிஜ்ஜில் வைக்கத் தயங்குகிற வெங்காயம், மாம்பழம் போன்றவற்றை கோல்ட் ஸ்டோரேஜில் வைக்கிறார்கள் என்பது ஆச்சர்ய செய்தி!
சென்னை, கோயம்பேட்டில் தமிழக அரசின் கூட்டுறவு குளிர்பதனக்கிடங்கு உள்ளது. இது, அங்குள்ள காய்கறி, பழ விற்பனையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் அலுவலர் செந்திலிடம் பேசினோம். ‘‘தமிழ்நாடு முழுவதற்குமான காய்கறி, பழங்கள் கோயம்பேடுக்கு வந்து பிறகுதான் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இங்குள்ள விற்பனையாளர்கள் சீசன் சமயங்களில் மொத்தவிலைக்கு பழம், காய்கறிகளை வாங்கி இங்கே வைத்து விடுவார்கள். பிறகு தேவையானபோது எடுத்து விற்பனை செய்வார்கள். கூட்டுறவு அமைப்பாக இருப்பதால் வாடகை மிகக்குறைவாக இருக்கிறது. தனியார் அமைப்புகளில் கொஞ்சம் அதிகமாக இருக்கும்’’ என்றார் அவர்.
செஞ்சி, வேலூர் பகுதிகளில் பயிரிடப்படும் தர்பூசணியின் சீசன் ஜனவரியிலிருந்து ஜூலை வரைதான். ஆனால் அதன் தேவையோ வருடம் முழுவதும் இருக்கிறது. சீசன் சமயங்களில் அதிகமாக விளையும் தர்பூசணி பழங்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க அரசே 2 கோடி ரூபாய் செலவில் அங்கே கோல்ட் ஸ்டோரேஜ் கட்டத் திட்டமிட்டுள்ளது.
கெர்கின்ஸ் ( Gherkins ) எனப்படும் ஸ்பெஷல் வகை வெள்ளரி திண்டுக்கல், மதுரை, ஓசூர் பகுதிகளில் மட்டுமே அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுக்கப் பயிராகும் இந்த வெள்ளரி பாதுகாக்கப்பட்டு, கிறிஸ்துமஸுக்கு முன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கிறிஸ்துமஸ் விருந்தில் இதுதான் முக்கிய உணவு என்பதால் அந்த நேரத்தில் இதற்கு ஏக டிமாண்ட்!
சென்னையைச் சேர்ந்த எக்ஸோடிக் கிரினேஜ் ( Exotic Greenage ) நிறுவனம் இந்த கோல்டு ஸ்டோரேஜ் வசதியைப் பயன்படுத்தி ஏற்றுமதித் துறையில் வெற்றிகரமாகச் செயல்படுகிறது. அதன் நிர்வாகிகளான மாதவன், ஜான் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர், ‘‘நாங்கள் மொத்தமாக விவசாயப் பண்ணைகளிலேயே காய்கறி, பழங்களை வாங்கிவிடுவோம். ஏற்றுமதிக்காகக் காத்திருக்கும் நேரத்தில் எங்கள் பொருட்களைப் பாதுகாக்க இந்த குளிர்பதனக்கிடங்கு வசதி பயனுள்ளதாக இருக்கிறது. காய்கறிகளைவிட பழங்களுக்கான தேவை இருக்கும் சமயத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
வெளிநாடுகளில் மிகவும் தேவையாக இருக்கிற கறி வேப்பிலை, மிளகாய், வெள்ளரி, பாகற்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளுக்கும், தர்பூசணி போன்ற பழவகைகளுக்கும் வெளிநாட்டில் நல்ல மார்க்கெட் இருக் கிறது’’ என்றார்கள்.
கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் முதலியவை இத் திட்டத்துக்காக குறைந்த வட்டிக்குக் கடன் அளிக்கின்றன. புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய தோட்டக்கலை வாரியம் இந்தக் கடன்களில் 25% மானியம் வழங்குகிறது.
இந்தியாவில் வருடத்துக்கு 150 மில்லியன் டன் அளவுக்கு காய்கறி, பழங்கள் உற்பத்தி ஆகிறது. ஆனால், இந்தியாவில் சரியான சேமிப்பு வசதி இன்றி 25 முதல் 35% காய்கறிகள், பழங்கள் வீணாகின்றன. சுமார் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் வீணாவதைத் தடுக்கும் நோக்கத்தில்தான் தோட்டக்கலை வாரியம் இந்த சலுகைகளை அறிவித்துள்ளது.
இதேபோன்று காய், பழ விற்பனை சந்தை வைத்திருப்பவர்கள் கூட்டாகச் சேர்ந்து விண்ணப்பித்தால் 25% வரை மானியம் வழங்குகிறது விற்பனை மற்றும் ஆய்வுக்கான மத்திய அரசு நிறுவனம்.
அந்த நிறுவனத்தின் துணை வேளாண் விற்பனை அதிகாரியான சண்முகம், ‘‘கூட்டுறவு நிறுவனங்கள், சுயஉதவி குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுக்கும் இந்தத் தொழிலைத் தொடங்க, வங்கிகளில் கடன் அளிக்கப்படுகிறது. அதிலும் நாங்கள் மானியம் வழங்குகிறோம்’’ என்றார்.
முக்கியமாக விவசாயிகள் கூட்டாகச் சேர்ந்து குளிர்பதனக்கிடங்கைத் தொடங்கினால் அவர்கள் தங்கள் காய்கறிகளை வந்த விலைக்கு விற்கவேண்டிய தேவையும் இருக்காது. பலமடங்கு லாபமும் பெறலாம் என்பதற்கு இந்த கோல்ட் ஸ்டோரேஜ் சிறப்பாகப் பயன்படும்.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்ற பழமொழியைப் பொய்யாக்கி, சந்தையில் நல்ல விலை வரும்வரை விவசாயி காத்திருக்க நல்ல வாய்ப்புபாக இருக்கிறது இந்த குளிர்பதனக் கிடங்கு. பயன்படுத்திக் கொள்ளுங்கள் விவசாயிகளே!

1 comment:

  1. http://www.siruthozhilmunaivor.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

    ReplyDelete