Monday, 22 July 2013

சொந்தத் தொழில்... சொகுசு வாழ்க்கை!

சொந்தத் தொழில்... சொகுசு வாழ்க்கை!
சொந்தத் தொழில்... சொகுசு வாழ்க்கை!

தொழில்
சொந்தத் தொழில்... சொகுசு வாழ்க்கை! 
மு தல் போட்டு செய்தால்தான் தொழிலா..? பைசா கூட முதலீடு செய்யாமலே சொந்தத் தொழில் செய்யமுடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறவர்களும் உண்டு. அப்படி இருவர்தான் இங்கே பேசுகிறார்கள்.
‘‘இன்ஷூரன்ஸ் பாலிசி கமிஷன் மூலம் மாதத்துக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்’’ என்று ஆச்சர்யப்படுத்துகிறார் சோனியா. சென்னை அண்ணாநகரில் இருக்கிற இவர், எல்.ஐ.சி இன்ஷூரன்ஸ் ஏஜென்டாகவும் இன்வெஸ்ட்மென்ட் கன்சல்ட்டன்ட் டாகவும் இருக்கிறார்.
‘‘இத்தொழிலில் பணி நேரம் என்று எதுவும் கிடையாது. வாடிக்கையாளர்களின் பணி மற்றும் ஓய்வு நேரத்துக்கு ஏற்ப அவர்களை அதிகாலை அல்லது இரவு நேரத்தில் சந்தித்துப் பேசவேண்டி இருக்கும். சிலரை ஞாயிற்றுக்கிழமை அல்லது அரசு விடுமுறை தினங்களில்தான் பார்க்கமுடியும். மற்றவர்களின் ஓய்வு நேரத்தில்தான் நாங்கள் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். ஹாயாக ரெஸ்ட் எடுக்க நினைத்தால் கமிஷன் வருமானம் ‘கட்’ என்பதை மனதில் அழுத்தமாக எழுதிக் கொண்டால்தான் இந்தத் தொழிலில் நிலைக்க முடியும்’’ என்ற சோனியா, பாலிசி பிடிக்கும் ரகசியம் குறித்தும் சொன்னார்.
‘‘பெரிய நிறுவனங்களின் சேர்மன், டைரக்டர், மேனேஜர்களை நேரடியாகச் சந்திப்பேன். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அவர்களிடம் விளக்கிச் சொல்வேன். அவர்கள் கன்வின்ஸ் ஆகும்படி புரியவைத்தாலே, பாலிசி எடுத்துவிடுவார்கள். ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் ஒரே நாளில் நூறு பாலிசிகள் பிடித்து சாதனை படைத்திருக்கிறேன். இதேபோன்று எல்.ஐ.சி-யின் பங்கு சார்ந்த யூனிட் லிங்க்ட் திட்டத்தில் தொழில் அதிபர் ஒருவரை ஒரு கோடி ரூபாயை முதலீடு செய்ய வைத்திருக்கிறேன்’’ என்ற சோனியா, ‘‘ஒவ்வொருவரின் பாலிசி தேவையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதற்கேற்ப பாலிசி எடுக்கப் போகிறவரின் குடும்பத்தாரின் பட்ஜெட்டில் பாதிப்பு ஏற்படாதவாறு கவுன்சிலிங் கொடுத்து, பாலிசி எடுக்க வைக்கிறேன். அதுவும் தொடர்ந்து பிரீமியம் கட்டுவதாக இருந்தால் மட்டுமே எடுக்கச் சொல்வேன். யாரையும் வற்புறுத்த மாட்டேன். இந்தத் தொழிலில் பொறுமை, பக்குவமான பேச்சு இரண்டும் தேவை. இது ஆண்களைவிட பெண்களுக்கு இயற்கையிலே அதிகம்’’ என்று ஒரே போடாகப் போட்டார்.
‘‘குழந்தைகளின் எதிர்காலத்துக்காக பாலிசி எடுக்க தாய்மார்கள் பெரிதும் விரும்புகிறார்கள். தங்கள் வீட்டுச் செலவுகளை குறைத்துக்கொண்டு பிரீமியம் கட்டவும் தயாராக இருக்கிறார்கள். இதை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். மேலும், மொத்தமாகப் பணத்தைச் சேமித்து வைத்து பிரீமியம் கட்ட இயலாதவர்கள் இருப்பார்கள். அவர்களது வீட்டில் எல்.ஐ.சி-யில் தரும் உண்டியல் ஒன்றை வைத்து, அதைப் பூட்டிவிடுவேன். பிரீமியம் செலுத்தவேண்டிய நேரத்தில், உண்டியலை நானே திறந்து, அதில் சேர்ந்த தொகையைக் கொண்டு பிரீமியம் கட்டப் பழக்குகிறேன். இதனால், சேமிக்கும் பழக்கம் உருவாவதோடு, முதலீடு செய்யும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறேன்’’ என்ற சோனியா,
‘‘இன்ஷூரன்ஸ் ஏஜென்டானபோது நான் பி.ஏ படித்துக்கொண்டிருந்தேன். இதில் கிடைத்த கமிஷன், நான் தொடர்ந்து படிக்கவும், எம்.ஏ முடிக்கவும் உதவிகரமாக இருந்தது. எனக்கு நானே முதலாளி என்பதால் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடிகிறது’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.
செ ன்னையில் ரியல் எஸ்டேட் ஏஜென்டாக இருக்கும் சொக்கலிங்கம் மாதத்துக்குச் சுமாராக 20,000 ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். அவர், இத் தொழிலுக்கு வந்தது, ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஓட்டல் துறையில் பெற்ற அனுபவத்தைக்கொண்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓட்டல் தொடங்குவதற்காக வீட்டுடன் கூடிய மனையை 12 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். அப்போது ஏஜென்ட் கமிஷனாக மட்டும் 25 ஆயிரம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார். இதே தொழிலை நாம் செய்தால் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாமே என்று தோன்ற, ரியல் எஸ்டேட் ஏஜென்டாக களமிறங்கி, இன்று வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறார்.
‘‘இத்தொழிலில் நம்பகத்தன்மை மிக முக்கியம். பொதுவாக ஒரு சொத்தைக் கைமாற்றி விடும்போது விற்பவர் அல்லது வாங்குபவர் யாரையாவது ஒருவரை ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் நன்கு அறிந்திருப்பது நல்லது. அப்போதுதான் விற்பனை சீக்கிரமாக முடியும்’’ என்ற சொக்கலிங்கம், இத்தொழிலில் ஜெயிக்க கடைபிடிக்க வேண்டியவை பற்றியும் சொன்னார்.
‘‘ஒரு ஏரியாவில் இருப்பவர்களின் டிமாண்டை நன்றாக அறிந்திருந்தால், அதற்கு ஏற்ற மனை அல்லது வீட்டை தேடித் தரமுடியும். மேலும் விற்பவர், அச்சொத்தில் முழு உரிமையும் தகுதியும் உள்ளவர்தானா... அவரின் பின்னணி தகவல்கள், குணநலன்கள் போன்றவற்றை விசாரித்து தெரிந்துகொள்வது நல்லது. இதேபோல், வாங்குபவர்களின் பூர்வீகத்தையும் அறிந்துகொள்வதும் அவசியம். விற்பவர், வாங்குபவர் இருவரையும் நேரில் சந்திக்க வைத்து, விலை பேசி முடிப்பதன் மூலம் நல்ல பெயர் எடுப்பதோடு பிற்காலத்தில் பிரச்னை ஏதும் ஏற்படாமலும் தவிர்க்கலாம். மேலும் பணம் கொடுக்கல், வாங்கலின்போது ஒவ்வொரு முறையும் முத்திரைத்தாளில் எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கிக்கொடுப்பதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். இவ்விதம் செய்தால் அவர்கள் அடுத்த சொத்தை வாங்க அல்லது விற்க நம்மைத் தேடிவருவார்கள்.
வழக்கமாக ரியல் எஸ்டேட் விற்பனையில் இரு தரப்பிலும் 2% கமிஷன் வாங்கப்படுகிறது. கைமாறும் தொகை 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்பட்சத்தில் இந்த 2% கமிஷன் என்பதில் குறியாக இருக்கக்கூடாது. அப்போது 1 - 1.5% என்பது போல் கமிஷனை குறைத்து வாங்கிக்கொண்டால் நல்ல பெயர் கிடைப்பதோடு, நம்மை அவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்கும் சிபாரிசு செய்வார்கள். மாதம் ஒன்றுக்கு மூன்று, நான்கு சொத்துகளை விற்றுக் கொடுப்பது மூலம் சாதாரணமாக 15-20 ஆயிரம் ரூபாய் கமிஷன் பார்க்கமுடியும். இத்தொழிலில் நேரம், காலம் பார்க்கமுடியாது. வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப அதிகாலையில் இடத்தைப் பார்க்க போகவேண்டி இருக்கும். இரவு நேரங்களில்கூட சந்தித்துப் பேசவேண்டி வரும். அதற்கேற்ப நமது நேரத்தையும் உழைப்பையையும் கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும். முழுநேரமாகச் செய்தால்தான் இத்தொழிலில் நாம் எதிர்பார்க்கும் வருமானத்தைப் பெறமுடியும்’’ என்ற சொக்கலிங்கம், இதற்கான வாய்ப்புகளைப் பற்றியும் சொன்னார்.
‘‘வாய்ப்புக்காக எங்கும் தேடி அலைய வேண்டியது இல்லை. பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்து, நண்பர்கள் மூலம் விவரம் அறிந்து, விற்பவர் மற்றும் வாங்குபவர் இடையே பாலமாகச் செயல்பட்டு காசு சம்பாதிக்கலாம். வாங்குபவரின் தேவை மற்றும் பட்ஜெட் அறிந்து செயல்படும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்களே எளிதில் வெற்றி பெறுகிறார்கள்.
கூடுதல் வருமானத்துக்காக வாடகைக்கு வீடுகளைப் பிடித்துக் கொடுக்கலாம். இதில் இரு தரப்பிலும் கமிஷன் பார்க்கமுடியும். மாத வாடகை ஐயாயிரம் என்றால் சாதாரணமாக அதிகபட்சம் 2,500 ரூபாய் கமிஷன் கிடைக்கும். அடுத்தகட்ட வளர்ச்சியாக ஏஜென்டே சொந்தமாக மனையை வாங்கி, அதில் வீடுகள் கட்டி விற்கலாம். இதற்கு முதலீடு அதிகம் தேவைப்படும். அதேநேரத்தில், அதிக லாபம் கிடைக்கும். இந்த முதலீட்டைக்கூட புத்திசாலித்தனமாக, வீடு தேவைப்படுபவர்களை அணுகி, முன்பணம் பெறுவதன் மூலம் புரட்டிக் கொள்ளமுடியும். இப்போதெல்லாம் நகரங்களில் வீடுகட்ட பூமி பூஜை போடும் அன்றே பாதி தொகைக்கு மேல் அட்வான்ஸ் கொடுத்து பதிவு செய்வது நடைமுறையாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இன்னும் 25-30 வருடத்துக்கு ரியல் எஸ்டேட் துறை, ஏறுமுகத்தில்தான் இருக்கும் என்பதால் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் தொழில் என்பது எதிர்கால வாய்ப்புள்ள தொழில்தான்!’’ - அழுத்தமாகச் சொல்கிறார் சொக்கலிங்கம்.
அப்புறமென்ன... முதலீடு இல்லாத தொழில் தொடங்க, கையில் ஒரு செல்போன், நண்பர்கள் தொடர்போடு களமிறங்குங்கள். காசு கொட்டும்!

1 comment: