Monday 22 July 2013

தொழில் தொடங்கலாம், வாங்க! - சூப்பர் பிஸினஸ்!

தொழில் தொடங்கலாம், வாங்க!


சூப்பர் பிஸினஸ்!
உ டம்பு பற்றிய அக்கறை பரவலாக எல்லோர் மனதிலும் பரவி வரும் இந்த நேரத்தில் சூப் கடை என்பது லாபகரமான தொழிலாகி இருக்கிறது. டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க நினைப்பவர்களுக்குச் சரியான மாறுதலாகவும் ஆறுதலாகவும் இருக்கும் இந்த சூப் கடைகள் இப்போது பெரிய நகரங்களில் டீக்கடைகள் போல முளைக்கத் தொடங்கிவிட்டன .
சூப் கடை துவங்க சுமார் 30,000 ரூபாய் முதலீடு இருந்தாலே போதுமானது. சூப் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான் முக்கியமான விஷயம். அது தெரியவில்லை என்றாலும் ஆரம்பத்தில் ஒரு மாஸ்டரை வைத்து, தொழிலைத் தொடங்கிவிட்டு பிறகு நீங்களே கற்றுக் கொள்ளலாம்.
சூப் கடைகளில் கஸ்டமர்களை இழுக்க அடிப் படையான விஷயங்கள் சுவையும் சுகாதாரமும்தான். அதோடு எல்லோரும் தேடிவரும் விலையில் தர வேண்டியது மிகவும் முக்கியம். அதனால், எடுத்த எடுப்பில் ஆட்டுக்கால் சூப் என்று தொடங்கி ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கான கடையாக ஆக்கிவிடாமல், வெஜிடேரியன் சூப் கடையாக ஆரம்பிப்பது நல்லது.
சுகாதாரத்தைப் பொறுத்தவரையில் அழுக்கடையாத பாத்திரங்கள், சுத்தமான சுற்றுப்புறம், முகம் சுளிக்க வைக்காத பரிமாறல் என்று இருக்க வேண்டியது அவசியம். சுவையென்று பார்க்கும்போது வாடிக்கை யாளர்களின் தேவைக்கு ஏற்றபடி காரமும் மணமுமாக இருக்கவேண்டும். அப்போதுதான் வியாபாரம் பெருகும்.
உங்களின் சுவையும் சுத்தமும் கஸ்டமர்களைக் கொண்டுவந்து சேர்க்கும். வாய்வழித் தகவல் விளம்பரத்தையும் தாண்டி, சிறு நோட்டீஸ்களாக அடித்து சுற்றுப்புறத்தில் விநியோகிக்கலாம். இங்கே இப்படி ஒரு கடை துவங்கி இருக்கிறோம் என்பதற்கான விசிட்டிங் கார்டாக அது அமையும்.
வெறுமே வெஜிடபுள் சூப் மட்டும் வைக்காமல் தினம் ஒரு மூலிகை, காய்கறிகளில் சூப் தயாரித்து விற்கலாம். வாழைத்தண்டு, தக்காளி, காளான், காலிஃபிளவர், முருங்கைக்காய், பாகற்காய், வெந்தயக்கீரை, பொன்னாங்கன்னி, தூதுவளை, வல்லாரை, புதினா, மணத்தக்காளி போன்ற சூப் செய்ய ஏதுவான விஷயங்களை தினத்துக்கு ஒன்றாக, இரண்டாக வகைப்படுத்தி சூப் தயாரித்து அசத்தலாம்.
மூலிகை சூப் உங்களின் ஸ்பெஷாலிட்டியாக அமையும்போது, அதை வைத்து மற்ற சூப் வகைகளின் விற்பனை பெருகும். ஒவ்வொரு மூலிகையின் மருத்துவப் பயன்பாடுகள் என்ன என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு அதையே அக்கறையான ஒரு விளம்பரமாக கடை வாசலில் எழுதி வைக்கலாம். சும்மா ரோட்டில் போகிறவர்களைக் கூட அது சுண்டி இழுக்கும்.
பொதுவாக சூப் வியாபாரம் என்பது மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடக்கும். அதனால், பகுதிநேரமாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. நகரின் முக்கியமான கடைவீதி, அல்லது மாலைநேரத்தில் மக்கள் அதிகமாக வாக்கிங் போகும் பூங்காக்கள் இருக்கும் பகுதி போன்ற இடங்களைத் தேர்வு செய்து கடைகளை அமைக்கலாம். மக்கள் நடமாட்டம் இருக்கும் இடமாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம். அங்கு கடை பிடிக்க கொஞ்சம் கூடுதலான அட்வான்ஸ், வாடகை கொடுக்க வேண்டி இருந்தாலும் பரவாயில்லை. அது மிகவும் அவசியமான செலவுதான். ஒரு சூப் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விலை வைக்கலாம். ஒரே சமயத்தில் இரண்டு சூப் குடிக்கும் சூப் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால், நிச்சயம் இந்த விலை நமக்குக் கட்டுபடியாகும்.
கடைக்கு வந்து சாப்பிடுபவர்களைத் தவிர பார்சல்கள், அலுவலகங்கள், நிறுவனங்களில் நடைபெறும் பார்ட்டிகள், வீட்டு விசேஷங்கள் என்று விற்பனைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் எந்தெந்த கிழமைகளில் விற்பனை அதிகமாக இருக்கும், எப்போது வியாபாரம் டல்லடிக்கும் என்பதை கணித்துக்கொள்ள வேண்டும். விடுமுறைநாட்கள், பண்டிகை நாட்கள் போன்றவற்றை மனதில் வைத்துக்கொண்டு சூப் தயாரிப்பில் இறங்க வேண்டும். சூப் மீதமானால் மீண்டும் பயன்படுத்த முடியாது. சூடு குறைந்தாலும் சாப்பிட நன்றாக இருக்காது.
இறங்கியவர்கள் சொல்கிறார்கள் இது ‘சூப்’பரான பிஸினஸ் என்று. நீங்கள் ரெடியா..?

No comments:

Post a Comment