Monday 22 July 2013

Call Taxi Business in Tamilnadu

Call Taxi Business in Tamilnadu


தொழில்

இந்த கார், எந்தன் சொந்தகார்!
எ த்தனை விதவிதமான மாடல்கள், வண்ணமயமான கலர்கள், மனதைக் குதூகலிக்க வைக்கும் வசதிகளோடு இந்திய மற்றும் வெளிநாட்டு கார்கள் இந்தியச் சாலைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. கால் டாக்ஸிகள் வந்தபிறகு, கார்களில் பயணம் செய்ய விரும்புபவர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது என்றே சொல்லலாம். பலரும் இந்தத் தொழிலில் இருந்தாலும் எதிர்கால வாய்ப்புள்ள, இளமையான பிஸினஸாகவே தெரிகிறது கார் வாடகைத் தொழில்!
அலுவலகம் வைத்து முழு நேரத் தொழிலாகத்தான் செய்யவேண்டும் என்றில்லை. தனிப்பட்ட ஒருவரே, ஓனர் கம் டிரைவராக இருந்து வருமானம் தரும் வாய்ப்பாக அமைத்துக் கொள்ள முடியும். புதிதாகத் தொழில் ஆரம்பிக்க விருப்பம் உள்ளவராக இருந்து, கார் டிரைவிங் தெரிந்தாலும், கார் ஓனராகலாம். நீங்களே கார் ஓட்டும் பட்சத்தில் மாதம் 15,000 ரூபாய் வரை வருமானம் வரும்.
புதிய கார்களுக்கு வரவேற்பும், அதிக வாடகையும் கிடைக்கும். முதல் இரண்டு வருடத்துக்கு எஃப்.சி கிடையாது. மேலும், இரண்டு, மூன்று வருடத்துக்காவது ரிப்பேர் செலவுகள் இருக்காது. முதலீடு என்று பார்த்தால், வாங்கும் காரின் விலையில் மூன்றில் ஒரு பங்கு கையில் இருந்தாலே போதும். மற்ற தொழில்களைப் போல கடை அட்வான்ஸ், வாடகை, மின்கட்டணம் போன்ற எதற்கும் தேவை இருக்காது.
ஐந்து வருடத்துக்கு உட்பட்ட நல்ல கண்டிஷனோடு இருக்கும் செகண்ட்ஹேண்ட் கார்களையும் வாங்கலாம். இதற்கு தனியார் நிதி நிறுவனங்களில்கூட கடன் கிடைக்கிறது. கார் எப்போதும் சுத்தமாக பளிச்சென்றும், நல்ல கண்டிஷனோடும் இருக்க வேண்டும்.
ஆனால், வருடத்துக்கு ஒரு முறை கட்டும் கார் இன்ஷூரன்ஸ், டேக்ஸ் போன்றவற்றை ரெகுலராக செலுத்தி வரவேண்டும். புதிய கார்களுக்கு அதிகமாக உள்ள இன்ஷூரன்ஸ் கட்டணம், வருடங்கள் செல்லச் செல்ல குறைந்துகொண்டே வரும். வாடகை கார்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை சாலை வரி செலுத்தவேண்டும்.
உங்களுக்கு நேரடியாக எத்தனை வாடிக்கையாளர்களைத் தெரியும் என்பதைப் பொறுத்தே வருமானம் அமையும். நண்பர்கள், உறவினர்கள் தவிர, குறைந்தபட்சம் நூறு பேராவது லிஸ்டில் இருக்கவேண்டும். ‘வாடிக்கையாளரை எங்கே போய் தேடுவது...’ என்கிறீர்களா..? அதற்கும் ஒரு வழி இருக்கிறது.
ஏற்கெனவே, டிராவல்ஸ் வைத்திருப்பவர்கள் மூலமும் கார் அனுப்பலாம். வளர்ந்த டிராவல்ஸ் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்குப் பஞ்சமில்லை. அங்கு எப்போதும் கார் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் உங்களுக்கும் வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். அதை லட்டுமாதிரி பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் அவர்கள் கமிஷனாக ஒரு தொகை போகும். லோக்கல் ட்ரிப் என்றால் நூற்றுக்கு பத்து ரூபாயும் அதிக கி.மீ செல்லும் பயணமாக இருந்தால் கி.மீக்கு 50 பைசா என்பதும் பொதுவான கமிஷன் நடைமுறை.
சென்னை போன்ற பெருநகரங்களில் கால்சென்டர்களில் இதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. மேலும், மத்திய, மாநில அரசின் உயர்பொறுப்பில் உள்ளவர்களுக்கான கார் தேவையை, டெண்டர் மூலம் எடுக்கலாம். பள்ளிக் குழந்தைகளை அழைத்து வர, ஒப்பந்தம் செய்துகொள்ளும் வாய்ப்புகளும் பெருகி உள்ளன. நட்சத்திர ஓட்டல்களின் வாடிக்கையாளர்களுக்கு கார் தேவை அதிகரித்துள்ளது. இவை எல்லாமே நீங்கள் நேரடியாக வருமானத்தைச் சம்பாதிக்கும் வாய்ப்புகளே. கல்லூரி, நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களுக்கும் திருமண நாட்களிலும் தேவைப்படும் கார்களை வெளியில் இருந்து எடுத்துத்தரலாம்.

Call Taxi Business in Tamilnadu


பள்ளி, கல்லூரி விடுமுறைகாலங்கள் வருமானத்தின் இரும்புக்கோட்டைகள் என்று சொல்லாம். சாதாரணமாக கோடைக்காலத்தில் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது அதிகமாக இருக்கும். அதுபோலவே கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை, பழனி கோயில்களுக்குச் செல்வது... குற்றால சீசன், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சீசன்கள்... என வரிசைகட்டி நிற்கும். அலுவலக விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள், வெளிநாட்டுக்குச் சென்று வருவோருக்கான பிக்-அப், டிராப் என தினமும் தேவை இருக்கும்
பராமரிப்பு கவனம் முக்கியம். சிறுசிறு ரிப்பேர்கள்... மூவாயிரம் கி.மீக்கு ஒரு முறை இன்ஜின் ஆயில் மாற்றுவது... நீண்ட தூரப் பயணம் போய்வந்தால் வாட்டர் சர்வீஸ்... ஆறுமாதத்துக்கு ஒருமுறை வீல் அலைன்மென்ட் பார்ப்பது... இதயப் பகுதியான இன்ஜின், ரேடியேட்டரைத் தினமும் கவனித்து வருவது அவசியம். இடையிடையே ஏற்படும் சிறுசிறு ரிப்பேர்களை உடனுக்குடன் சரிசெய்து வருமான இழப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு தொழிலிலும் உள்ள ரிஸ்க் போலவே இதற்கும் உண்டு. வாடிக்கையாளர்கள் பணம் தர 10,15 நாட்கள் ஆக்கலாம், இழுத்தடிக்கலாம். அதற்கும் தயாராக இருக்கவேண்டும். மழைக்காலங்களில் வாய்ப்புகள் போலவே, ரிப்பேரும் அதிகமாக வரும். அடிக்கடி சர்வீஸ் செய்யவேண்டியது வரும். சிலசமயம் வருமானமே இல்லாமல், செலவு வைக்கும் கார்களும் உண்டு. செகண்ட் ஹேண்ட் கார்களில் இந்த வாய்ப்புகள் அதிகம். எதிர்பாராத விபத்து, வியாபாரப் போட்டிகளினால் டல் அடிக்கும் நேரங்கள் என வருமான இழப்பும் உண்டு. வருடத்துக்கு ஒரு முறை எஃப்.சி (ஃபிட்னஸ் சர்டிஃபிகேட்)க்காக ஆகும் செலவுகளுக்கும் தயாராக இருக்கவேண்டும்.
ஒரு சில நாட்கள் டல்லடித்தாலும், சீசனில் நன்றாகச் சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு எல்லா செலவுகளும் போக குறைந்தபட்சம் ரூபாய் 300 என்றாலும் மாதம் சராசரியாக ரூபாய் 10,000 வருமானம் பார்க்கமுடியும். இதில் காருக்குச் செலுத்தவேண்டிய மாதத் தவணை ரூபாய் ஐயாயிரம் போக ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் போது, சொந்தமாகவே டிராவல்ஸ் ஆரம்பிக்கலாம். காருக்காக வங்கியில் வாங்கிய கடனைச் சரியாகச் செலுத்திவந்தால் மேலும், புதிய கடன் வசதிகள் கிடைக்கும்.
‘தினமும் என்னைக்கவனி’ என்ற வாசகத்துக்கேற்ப சிறிதுநேரம் மட்டும் கவனித்துவந்தால் போதும். வண்டி ஓடிக்கிட்டே இருக்கும்... வருமானம் கொடுத்துக்கிட்டே இருக்கும்... நீங்களும் சம்பாரிச்சுக்கிட்டே இருக்கலாம்!

Call Taxi Business in Tamilnadu


1 comment: