Monday 22 July 2013

தொழில் தொடங்கலாம், வாங்க! - பங்கு தரகர்

தொழில் தொடங்கலாம், வாங்க!
தொழில்
தொழில் தொடங்கலாம், வாங்க!
 
ப ங்குச் சந்தையில் ஏராளமானோர் இறங்கிவிட்ட நேரம் இது. சிறு முதலீட்டாளர்கள் பலரும் களம் இறங்கி தங்கள் கையில் இருக்கும் சில ஆயிரங்களை வைத்து பங்குச் சந்தையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது பங்குத் தரகர்கள்தான். கவனமாகக் கையாண்டால் நிச்சயமாக நல்ல வருமானத்தைக் கொடுக்கக் கூடியது தரகர் வேலை!
முன்பு எப்போதையும்விட பங்குச் சந்தை நடை முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு சட்டதிட்டங்கள் கடுமையாக உள்ளன. இன்று பங்குகளின் வர்த்தகம் அதிகரித்த அளவுக்கு பங்குத் தரகர்களின் எண்ணிக்கை உயரவில்லை. நூறு கோடி ஜனத்தொகை கொண்ட நம் நாட்டில், உபதரகர்கள் உட்பட சுமார் 10,000 பங்குத் தரகர்கள்தான் இருப்பதாகத் தகவல். அதாவது, லட்சம்பேருக்கு ஒருவர்! இந்தநிலையில் சுயதொழில் செய்யும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பங்குத்தரகர் வாய்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழில்.
நீங்களே நேரடி பங்குத் தரகராகவும் ஆகலாம். ஆனால், அதற்கான முதலீடு கோடி ரூபாயைத் தொடும்! பெரிய பங்குத் தரகர்களுடன் உங்களை இணைத்துக்கொண்டு உப தரகராக ஆகலாம். இதற்கு சிறிய முதலீடே தேவை.
இதை முழுநேரத் தொழிலாகச் செய்வதுதான் நல்லது. ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். நிறுவனங்களின் போக்கு, அவற்றின் கடந்த கால வரலாறு ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருப்பதுதான் இத்தொழிலின் பலம் என்பதால், அதைக் கற்கும் ஆர்வம் ரொம்ப ரொம்ப முக்கியம். ஓகே! வேறென்னவெல்லாம் தேவை!
ஆரம்பக்கட்ட சர்வே!
மு தலில் உங்கள் ஊரில் எத்தனை பங்குத் தரகர்கள்/உப தரகர்கள் இருக்கிறார்கள் எனக் கணக்கிடுங்கள். முதலீட்டாளர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த அளவில் தரகர்கள் உள்ளனரா எனக் கண்டறிய வேண்டியது முக்கியம்.
ஏற்கெனவே இருக்கும் உப தரகர்களின் சேவையைவிட, முதலீட்டாளர்களை இழுக்க வேறென்ன மாதிரியான உயர்ந்த சேவையை வழங்க முடியும் என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இந்த சர்வே மூலம் உபயோகமான பல தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும். அவற்றை உங்கள் எதிர்கால வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தரகரை அணுகுங்கள்!
உ ங்கள் ஊரில் நல்ல வாய்ப்பு இருக்கிறது என உங்களுக்குத் தோன்றினால், அடுத்த கட்டத்துக்குப் போவோம். இன்று பல பெரிய தரகு நிறுவனத்தினர் தேசிய பங்குச் சந்தையில் மட்டுமல்லாது, மும்பை பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டீஸ் எக்ஸ்சேஞ்சிலும் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களை அணுகினால் நமக்கு வழிகாட்டுவார்கள். அவர்களோடு முறையாகப் பேசி ஒப்பந்தமிட்டுக் கொள்ளலாம். நாம் செய்யும் தினசரி வர்த்தகத்தின் அளவைப் பொறுத்து திரும்பப் பெறக் கூடிய டெபாசிட்டாக ஒரு தொகையை கொடுக்க வேண்டும்.
இடம் முக்கியம்!
சு மார் 200 அல்லது 300 சதுர அடி இடம் இருந்தால் போதும். அலுவலகம் சற்று உள்ளடங்கி இருந்தாலும் தேடி வருவார்கள். ஆனால், முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், டெலிபோன் கனெக்ஷன், முறையான கரண்ட் கனெக்ஷன் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். இன்று பங்குப் பரிவர்த்தனை அனைத்தும் கணினி மூலம்தான் என்பதால் வர்த்தகத்தின் போது தடங்கல் ஏற்படாமல் இருக்க வேண்டியது முக்கியம். ஒரு கம்ப்யூட்டரும் பிரின்டரும் தேவைப்படும்.
எவ்வளவு முதலீடு தேவைப்படும்?
உ ங்கள் தரகருடன் உங்கள் கணினியை இணைக்கத் தேவையான வீசாட்டுக்கு மாத வாடகை 5,000 ரூபாய். உள்ளூரிலேயே தரகரின் அலுவலகம் இருந்தால் சாதாரண தொலைபேசி இணைப்பே போதும். சற்றே வேகம் அதிகம் தேவை என்றால் பிராட்பாண்ட் கனெக்ஷன் எடுத்துக் கொள்ளுங்கள்.
நாட்டு நடப்புகளை அவ்வப்போது தெரிந்து கொள்ளவும் உடனுக்குடன் முடிவு எடுக்கவும் ஏதுவாக கேபிள் கனெக்ஷனுடன் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தால் சௌகரியம். உதவிக்கு ஒருவர் இருந்தால் போதும். அவர் பட்டதாரியாக இருந்தால் மிகவும் நல்லது.
இதற்கென உள்ள ஒரு பரீட்சையை எழுதி பாஸ் ஆக வேண்டும். ‘பரீட்சையா...ஐயையோ!’ என அலறாதீர்கள். வீட்டில் உங்களுக்குச் சௌகரியமான நேரத்தில் படித்துவிட்டு, சென்னைக்கு வந்து ‘தேசிய பங்குச் சந்தை’ அலுவலகத்தில் கணினி மூலம் நடத்தும் இரண்டு மணி நேர பரீட்சையை எழுத வேண்டும். மற்றபடி டென்ஷன் ஆகும் அளவுக்கு இது சீரியஸான விஷயமில்லை.
கம்ப்யூட்டர், பிரின்டர், யூ.பி.எஸ். என சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு உப தரகர் அலுவலகம் ரெடி! ஊழியருக்கான சம்பளம், வாடகை, தொலைபேசிக் கட்டணம், மின்சாரம் போன்ற செலவுகள் மாதம் சுமார் பத்தாயிரம் ரூபாய்வரை ஆகலாம். பெரிய ஊர்களில் இத்தொகை சற்றே கூடும். ஆனால், அதற்கு ஏற்றபடி வருமானமும் அதிகமாக இருக்கும்.
வருமானம் எப்படி?
மு தலீட்டுக்காக பங்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அரை சதவிகிதத்தில் இருந்து ஒரு சதவிகிதம் வரை கமிஷன் வாங்கலாம். தினசரி பங்குகளை வாங்கி விற்று குறுகிய கால வர்த்தகம் செய்வோரிடம் மிகக் குறைவான கமிஷனே வாங்க முடியும். பரஸ்பர நிதி, காப்பீடு போன்ற மற்ற முதலீடுகள் சம்பந்தமான சேவையையும் செய்தால் இன்னும் கூடுதலாகச் சம்பாதிக்கலாம்.
கவனிக்க வேண்டியது!
உ ங்களைத் தேடி வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் முன்பணம் வாங்கத் தவறாதீர்கள். அது எதிர்காலத்தில் உருவாகும் சிக்கல்களைச் சமாளிக்க உதவியாக இருக்கும். அதேபோல ‘செபி’யின் சட்ட திட்டங்களை நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
மக்கள்தொகையில் 2% தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. வளர்ந்த நாடு களிலோ இது 40%. அதிவேகத்தில் வளர்ந்து வரும் நம் பொருளா தாரத்தால், இந்த அளவு மெள்ள மெள்ள இனி உயரும். அதற்கேற்றாற்போல் அரசும் பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு பல வரிச் சலுகை களை வாரி வழங்கி வருகிறது.
அதனால், பங்குத் தரகர் தொழில் பலன்தரும் தொழிலாக அமையும்!

No comments:

Post a Comment