Tuesday 22 July 2014

சூடான சிப்ஸ்... சுப்பர் வருமானம்

சூடான சிப்ஸ்... சுப்பர் வருமானம்
தொழில்
 

சூடான சிப்ஸ்... சுப்பர் வருமானம்
நா கரிகம், டெக்னாலஜி என எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மாறாத விஷயம் உணவு சார்ந்த தொழில்கள்! சுவைகளிலும், குணங்களிலும் மாற்றங்கள் வந்தாலும், நொறுக்குத்தீனி உணவை வேண்டாம் என்று சொல்பவர்கள் இருக்கமுடியாது. குறைவான முதலீடு, எளிய தொழில்நுட்பம், நிறைந்த லாபம் என்ற அடிப்படையில் செயல்படும் சிப்ஸ் கடை என்பது எளிதாகத் தொடங்கக்கூடிய தொழிலாக இருக்கிறது. நேந்திரம், வாழைக்காய், உருளைக்கிழங்கு, பாகற்காய், மரவள்ளி போன்ற வகை வகையான சிப்ஸ்கள் தயாரித்து விற்கலாம். அதிலும் இனிப்பு, உப்பு, காரம், மசாலா போன்ற பலவிதமான சுவைகள் இருக்கின்றன.
இந்தத் தொழிலில் நாமே நேரடி விற்பனை செய்யவேண்டும் எனில் கடைக்கான இடம் ரொம்ப முக்கியம். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கடைவீதி போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களாகத் தேர்வு செய்யவேண்டும். மாலை நேரங்களில்தான் இவ்வகை பிஸினஸ் சூடு பிடிக்கும். அலுவலகம் முடிந்து வீடு திரும்புபவர்களைச் சுண்டி இழுக்க ஒரு டெக்னிக் இருக்கிறது.
மாலை சுமார் ஆறு மணி அளவில் தேங்காய் எண்ணெயில் நேந்திரம் வாழைக்காயைப் போட்டு பொரித்து எடுக்கும்போது அந்த வாசனையே போவோர் வருவோரைக் கவர்ந்து இழுத்துவிடும். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது புதிதாக வாடிக்கையாளர்கள் கிடைப்பதோடு, தினமும் ஃப்ரெஷ்ஷாகத் தயாரித்துக் கொடுக்கிறார்கள் என்ற எண்ணமும் உருவாகும்.
மக்களின் பார்வையில்படும் வகையில் சிப்ஸ் தயாரிக்க ஏதுவாக 100 சதுர அடி இடமிருந்தாலே தாராளம். இவ்வகை கடைகளுக்கு அலங்காரம் என்று பெரிதாக ஏதும் தேவையில்லை. தயாரித்த சிப்ஸ்களை அடுக்கி வைக்க ஒரு கண்ணாடி அலமாரி இருந்தாலே போதும்.
இந்தக் கடையின் முக்கியமான மூலதனம் என்றால், சிப்ஸ் சீவப் பயன்படும் கட்டையும் பெரிய வாணலியும்தான்! நல்ல உறுதியான கட்டையில் பொருத்தப்பட்ட ஸ்ட்ராங்கான கத்தித் தகடைப் பார்த்து வாங்கவேண்டும். சீவல் கத்தி கெட்டியாகவும், உறுதியாகவும் இருந்தால்தான் வாழைக்காயைச் சீராக, ஒரே அளவில், வடிவில் தேய்க்க உதவியாக இருக்கும்.
இவைதவிர, சிப்ஸ் எடுப்பதற்கான கரண்டி, எண்ணெய் வடிக்கும் பாத்திரம், மண்ணெண்ணெய் ஸ்டவ், அவசர தேவைக்கு ஒரு கேஸ் ஸ்டவ் போன்ற தயாரிப்புப் பொருட்களும் எடைபோட தராசு, பாலிதீன் கவர்கள், கேரிபேக் வகை கள் போன்ற வியாபாரத்துக்குத் தேவை யான பொருட்களும் தேவைப்படும்.
சிப்ஸ் தயாரிக்க ஒரு மாஸ்டர், ஒரு உதவியாளர் என இருவர் போதும். நிர்வாகத்தை நாமே கவனிப்பது ஆரம்ப காலத்துக்கு நல்லது. நடைமுறையில் உள்ளபடி கணக்குப் போட்டால், மாஸ்ட ருக்கு தினம் 175 ரூபாயும் உதவியாளருக்கு மாதம் 2,000 ரூபாயும் சம்பளமாகக் கொடுக்கலாம். ஊரைப் பொறுத்து இந்த சம்பள விகிதம் வேறுபடும்.
கொடுக்கும் காய்களை ஒரே சீராக தேய்த்துப் போடவேண்டும். சமமாக இல்லாமலும், ஒரு பக்கம் கனமாகவும், ஒரு பக்கம் மெல்லிதாகவும் இருந்தால், பொரிவதற்கு நேரம் எடுக்கும். ஒரே சீராகவும் எவ்வளவு மெலிதாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு விரைவாக பொரியும்... மணம் கமகமக்கும்.
இத்தொழில் அனைத்துத் தரப்பினரும் வாடிக்கை யாளர்களாக இருப்பதால் திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்கள், பண்டிகைகள், அலுவலக பார்ட்டிகள், பிக்னிக் செல்பவர்கள் என வாய்ப்புகள் எப்போதும் குவிந்தே கிடக்கின்றன. இதுதவிர குளிர், மழைக்காலங்களில் சுறுசுறுப்பாகவும், அதிக அளவிலும் விற்பனையாகும். எனவே, கோடைக்காலத்தில் வியாபாரத்தை ஆரம்பித்து பிஸினஸை கற்றுக்கொண்டால், மழைக்காலத்தில் தெளிவாகச் சம்பாதிக்கலாம்.
சிப்ஸ் தயாரிக்கும்போது நேந்திரம் என்றால் தேங்காய் எண்ணெயும், உருளைக்கிழங்குக்கு சூரியகாந்தி எண்ணெயும் பயன்படுத்தவேண்டும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எண்ணெய் இருக்கவேண்டும். ஒரே எண்ணெயில் இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தினால் சிப்ஸ் கருப்பாகிவிடும்.
ஒருமுறை தயாரித்த சிப்ஸ் இருபது நாட்கள் வரை தான் நன்றாக இருக்கும். அதனால் அன்றைய தேவையைப் பொறுத்து கூட்டியோ குறைத்தோ தயாரித்தால்தான் நஷ்டத்தைத் தவிர்க்கமுடியும்.
மூலப்பொருட்களைப் பொறுத்தவரை இருபது நாளுக்கானது கையில் இருப்பது அவசியம். பூர்வீகம் கேரளா என்பதால் நேந்திரம் வாழை தமிழகச் சந்தையில் குறைவாகத்தான் கிடைக்கும். உருளைக்கிழங்கில் ஆந்திராவின் குண்டூர் கிழங்கு சிறந்தது.
கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், பொரித்த சிப்ஸ் நொறுங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அத்துடன் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சுவையோடும் தருவதில்தான் வியாபார வெற்றியின் மொறுமொறுப்பே அடங்கியிருக்கிறது. வாடிக்கையாளர் அதிகமாவதும் விற்பனையும் ஒரேமாதிரி எல்லா நாளும் இருக்காது. வருமானம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இதனால் சராசரி விற்பனையின் மூலம்தான் லாபத்தைக் கணக்கிட வேண்டும்.
ஆரம்பத்தில் ஆர்டர் பிடிக்க கொஞ்சம் திணறினாலும் சில மாதங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு அவற்றைச் சமாளிக்கும் பொறுமைவேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 15 கிலோ சிப்ஸ் விற்பனையாக வேண்டும். அப்போதுதான், எல்லாச் செலவுகளும் போக 250 ரூபாய் முதல் 300 வரை லாபம் கிடைக்கும். இதுவே மழை, குளிர்காலம், பார்ட்டி ஆர்டர் என பிக்அப் பண்ணினால் ஒரு மாதத்துக்கு ரூபாய் 15,000வரை சம்பாதிக்க முடியும்.
கடையில் கூடுதல் வருமானம் பார்க்க குழந்தைகள் விரும்பும் பிஸ்கட், முறுக்கு போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை வாங்கி வைத்து விற்பதன் மூலம் கூடுதலாக நூறு ரூபாய் சம்பாதிக்கலாம். மாதம் 18-ல் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ள தொழில் இது!
15 கிலோ சிப்ஸ் தயாரிக்க பட்ஜெட்
(தயாரிப்புச் செலவு, பொருட்களின் விலையேற்றத்துக்கேற்ப லாபம் மாறுபடும்)
தயாரிப்புச் செலவு
உருளைக் கிழங்கு 30கிலோ = 260
நேந்திரம் பழம் 15கிலோ = 270
தே.எண்ணெய் 3கிலோ = 190
சூ.காந்தி எண்ணெய் 7கிலோ = 360
நிர்வாகச் செலவுகள்
மாஸ்டர் சம்பளம் (நாள்) = 175
உதவியாளர் (நாள்) = 75
கடை வாடகை உள்ளிட்ட செலவு = 100
எரிபொருள், மசாலா செலவுகள் = 100
மொத்தம் = 1,520
விற்பனை:
உ.கிழங்கு சிப்ஸ் 10கி = 1,300
நேந்திர சிப்ஸ் 5.5கி = 660
ஒருநாள் வருமானம் ரூபாய் = 1,960
செலவு ரூ = 1,530
வரவு ரூ = 430

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில்
 

நேர்மைதான் வெற்றியின் ரகசியமே..!
நா ணயம் விகடன் வாசகர் ஈரோடு, சி.எஸ்.என் ராஜா ஒரு தகவல் அனுப்பி இருந்தார். நம்ம சப்ஜெக்ட்தான். இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் அலெக்ஸ், லட்சாதிபதியாக விரும்பினார். லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்து எப்படிக் காசு பார்ப்பது என்று திட்டம் போட்டார். ஒரு வெப்சைட்டை உருவாக்கியதுதான் அவர் போட்ட முதலீடு. கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் உருவாக்கிய அந்த இணையதளத்துக்கு ‘மில்லியன் டாலர் ஹோம்பேஜ் டாட் காம்’ என்று பெயர் சூட்டினார். மில்லியன் (பத்து லட்சம்) டாலர் சம்பாதிக்கவேண்டும் என்பது அவரது கனவு. தன் இணைய தளத்தை பல்வேறு இணைய தளங்களின் வாசலாக வைக்க விரும்பியதால், ‘ஹோம் பேஜ்’ என்ற வார்த்தையைச் சேர்த்தார்.
இணைய தளத்தின் இடத்தை பத்து லட்சம் சிறிய கட்டங்களாகப் பிரித்த அலெக்ஸ், ஒரு கட்டம் ஒரு டாலர் என்று விற்க ஆரம்பித்தார். ‘உங்கள் நிறுவன ‘ஐகானை’ இங்கே இடம்பெறச் செய்யலாம். கட்டத்துக்கு ஒரு டாலர் வீதம், எந்த அளவு பெரிதாக உங்கள் நிறுவனம் கண்ணில் படவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அத்தனை கட்டத்துக்குக் காசு கட்டுங்கள். வலைத்தள தேடர்கள் அதை ‘க்ளிக்’ செய்து உங்கள் இணையதளத்துக்குள் செல்லுமாறு லிங்க் கொடுத்துவிடுவேன்’ என்று சில நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் அலெக்ஸின் இந்தத் திட்டம் புதுமையாக இருக்கவே, பெரிய நிறுவனங்கள் பல 100 டாலர் பெரிய விஷயமா..? என்று பத்துக்கு பத்து கட்டங்களாக விளம்பரம் செய்ய முன்வந்தன. வாய்வழித் தகவல் பரிமாற்றங்களாலும் தேடலாளர்களின் மிதமிஞ்சிய வருகையாலும் ஐந்தே மாதத்தில் கிடுகிடுவென பாப்புலராகிவிட்டது அலெக்ஸின் இணையதளம். நிறுவன விளம்பரங்கள் வந்து குவிய ஒரு மில்லியன் கட்டங்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. செம டிராஃபிக் உள்ள இணைய தளத்தை தந்த திருப்தியோடு, மில்லினர் ஆகிவிட்டார் அலெக்ஸ்.
இது எப்படிச் சாத்தியமாயிற்று..? சிறிய கட்டணம் என்பதால், ஒரு டாலர்தானே என்ற எண்ணத்தில் பலரும் வந்து குவிய, அந்தச் சிறுதுளிகள் சேர்ந்து, சேர்ந்து அலெக்ஸுக்கு ஜாலியான நீச்சல் குளமாகவே அமைந்துவிட்டனவே! இப்படிச் சிறிய சலுகைகளைக் கொடுத்து பெரிய லாபம் பார்க்கிறவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கவே இருக்கிறார்கள். அலெக்ஸ் போலவே, அசத்தல் திட்டங்கள் மூலம் நியாயமான சம்பாத்தியம் பார்த்து, குறுகிய காலத்தில் கோடிகளில் டர்ன் ஓவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் சிவகுமார். பலரும் மதிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிற சிவகுமாரின் ஆரம்ப முதலீடு அங்கே இங்கே புரட்டிய மூன்று லட்சம் ரூபாய். பெரிய தொகை புழங்கும் ரியல் எஸ்டேட்டில் மூன்று லட்ச ரூபாய் எப்படிப் போதும்..? அங்கே செயல்பட்டது, சிவகுமாரின் புத்தி சாலித்தனம்.
ரியல் எஸ்டேட் துறைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு அதில் களமிறங்கினார் சிவகுமார், இடத்தின் உரிமையாளரிடம் ஒரு விலை வைத்து இடத்தை வாங்க அக்ரிமென்ட் போட்டார். குறிப்பிட்ட தேதிக்குள் வீட்டைக் கட்டி வாடிக்கையாளர்களைப் பிடித்து விற்றார். சரியாக அக்ரிமென்ட் முடிவதற்குள் இடத்தின் உரிமையாளருக்குப் பேசிய தொகையைக் கொடுத்தார். முதல் கட்டுமானத்தில் வந்த வருமானத்தை வைத்து, தான் கடன் வாங்கிய தொகை யைக்கூடத் திருப்பிச் செலுத்திவிட்டார். முதல் ப்ராஜெக்ட் தரமாக, திருப்தியாக வரவே... அதைக் காட்டியே அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களை எடுத்துச் செய்தார். டயத்துக்கு பணத்தைக் கொடுத்து விடுவார் என்று முந்தைய அனுபவத்தில் அந்த உரிமையாளர் சொன்ன வாக்கு, அடுத்தடுத்தவர்களை நிலம் கொடுக்க வைத்தது. ‘வீட்டை ஜோராக, சொன்ன சொல்லில் மாற்றமில்லாமல் முடித்துக் கொடுத்தார்’ என்று வீடு வாங்கியவர்கள் சொல்ல... அட்வான்ஸ் கொடுத்து வீட்டை புக் செய்தார்கள் கஸ்டமர்கள். அவர்களுக்கு வில்லங்க சான்றில் துவங்கி வங்கிக் கடன் வரை அனைத்து வேலைகளையும் தானே முடித்துவிடுவார்.
பத்திரத்தைப் பதிவுசெய்து வாடிக்கையாளர் கையில் கொடுக்கும் வரை அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்வதால், திருப்தியில் திளைத்துப் போனார்கள் வாடிக்கையாளர்கள். கட்டணங்களில் பேரம் பேசுவதோ, சந்தேகப்படுவதோ இல்லாத நிலை என்பதால் நிம்மதியாகப் போன தொழில், பல புதிய சிந்தனைகளைக் கொண்டு வந்தது. சென்னையில் மட்டுமே செய்துவந்த வேலையை திருச்சிக்கு விரிவு படுத்தினார். அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவது திட்டம். அங்கே ஒரு சறுக்கல்.
இடத்தைப் பேசி, வேலைகளைத் துவங்கி, பாதி நடந்துவிட்டது. திடீரென அந்த இடம் வேறொருவருக்கு விற்கப்பட்ட தகவல் கிடைத்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து, புதிய வீடு கனவோடு இருந்த நேரத்தில் இப்படி ஒரு ஷாக். வாடிக்கையாளர்கள் இவரை நோக்கி கோபத்துடன் வரும் முன்னர் இவரே முந்திக்கொண்டார். ‘நம்பிய இடத்தில் மோசம் போய்விட்டேன். என்னால் நடந்த இந்தத் தவறுக்கு நீங்கள் நஷ்டப்படக்கூடாது. உங்கள் அட்வான்ஸை திருப்பித் தந்துவிடுகிறேன், வட்டியோடு!’ என்று சொன்னவர், தலா 36,000 ரூபாய் கூடுதலாகத் திருப்பித் தந்தார். புல்லரித்துப் போய்விட்டனர் வாடிக்கையாளர்கள்.
‘உங்க அடுத்த ப்ராஜெக்ட்டை சீக்கிரமே துவங்குங்கள். அங்கே வீடு வாங்கிக் கொள்கிறோம்!’ என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்கள். அடுத்த ப்ராஜெக்ட்டில் வந்து நின்றது இரட்டிப்பு வாடிக்கையாளர்கள். மனிதர்களைப் பொறுத்தவரை, நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டால் அதன்பின் சரண்டர்தான். பிஸினஸில் இந்த நேர்மை, நாணயம் இரண்டும் மிக முக்கியம். அதனால்தான், தோற்று ஓடிவந்திருக்கவேண்டிய சிவகுமார், அதையே சிறிய செலவில் பாஸிடிவ்வாக, பிஸினஸின் படிக்கல்லாக மாற்றி விட்டார். பெங்களூர், ஹைதராபாத் என 12 ஊர்களில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துவரும் சிவகுமாரின் ‘ஹையக்ரீவர்ஸ்’ நிறுவனம் இன்று நாகர்கோவில், ஊட்டி என்று விரிந்து வியாபாரம் செய்துவருகிறது.
அவரது இந்த வளர்ச்சிக்கு, அடிப்படையில் அவரிடம் இருந்த நேர்மையும், சில நல்ல குணங்களும்தான் காரணம். தான் ஒப்பந்தம் போடும் இடத்திலும் சரி... வாடிக்கையாளரிடமும் சரி... கணக்கில் வராத கருப்புப் பணம் வாங்குவதில்லை... கொடுப்பதில்லை. எல்லாமே கணக்குதான். என்னென்ன வசதிகள் செய்து தருவதாகச் சொல்வாரோ, அந்த குவாலிட்டியில் இருந்து பின்வாங்குவதில்லை. வாசலுக்குப் படிகட்டுகிறேன் என்று அரசு இடத்தை ஆக்கிரமித்து ஒரு அடி கூடுதலாக்கி விற்பதில்லை. வரி ஏய்ப்பு செய்வதில்லை. இந்தக் குணங்கள் எல்லாத் தொழிலுக்குமே பொருந்தும். நேர்மையான பிஸினஸ் மட்டுமே அடுத்தகட்ட வளர்ச்சியைத் தரும். இது இல்லாவிட்டால், பிஸினஸ், ஒரு வட்டத்துக்குள்ளேயே சிக்கி சவலைப் பிள்ளையாகி விடும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார் சிவகுமார்.
தவிர, அவரது பிரமாதமான விளம்பர யுக்தி. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெரிய விளம்பரம் செய்து மக்களை ஈர்த்த நேரத்தில்... இவர் தன் விளம்பர வியூகத்தால் வாடிக்கையாளர்களை மடக்கிப்போட்ட விதமே தனி. தேடிப் போகிற வாடிக்கையாளர்களிடம் தன் சைட் பற்றிய தகவல்களை ஒரு பரிசுப் பொருள் போல, டேபிளில் வைத்துக் கொள்கிற வருடாந்திர காலண்டர் போல படு ரிச்சாக அடித்து வைத்திருப்பார். பொதுவாக, திட்டங்களைப் படித்ததும் அந்த பேப்பரை எட்டாக மடித்துப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இவரது இந்த காலண்டர் வடிவ விவரங்களைப் பார்த்ததுமே வீடு வாங்கியாகவேண்டும் என்று மனதளவில் தயாராகி விடுவார்கள். ஒவ்வொன்றும் 500 ரூபாய்க்குக் குறையாமல் வரும். 50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்கப் போகிறவருக்காக 500 ரூபாய் செலவழிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். ஆனால், வாங்குவாரா, இல்லையா என்று தெரியாமலே 500 ரூபாய் செலவழிப்பதற்கு பலரும் தயங்கிய நேரத்தில், சிவகுமாரின் சமயோசித திட்டம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிக் கொண்டு இருக்கிறது.
இ.சி.ஆர் ரோட்டில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து, தனித்தனி வீடுகளாகக் கட்டினார் சிவகுமார். அதற்கு அவர் வைத்த விளம்பர வாசகம் என்ன தெரியுமா..? ‘மனைவியைக் காதலி ஆக்குவீர்’, ‘வார விடுமுறையைக் கழிக்க... உங்கள் காதல் வீடு’ என்று ஆரம்பித்து, பக்கத்துக்குப் பக்கம் ரொமான்டிக் வாசகங்கள். கணவர் லேசாக யோசித்தாலும் மண்டையில் தட்டி வாங்க வைத்து விடுவார் மனைவி.
இப்படி விதவிதமான விளம்பர வாசகங்கள்... அதற்கான பெரிய செலவுகள் என்று செய்து குறுகிய காலத்திலேயே பெரிய பில்டர்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் இவர்.
‘ரியல் எஸ்டேட் விலை கிடுகிடுனு ஏறிட்டே போகுதே! இதோட எதிர்காலம் என்னவா இருக்கும் சிவகுமார்..?’ என்று கேட்டேன். ‘நல்லா இருக்கும் சார்! இந்த ஃபீல்டுக்கு வர்றதுக்கு முன்னே மார்க்கெட்டிங்ல வீதி, வீதியா அலைஞ்சு மக்களைச் சந்திச்சவன்ங்கிறதால, இதுபத்தி தீர யோசிச்சுட்டுதான் இறங்கினேன். எந்த ஃபீல்டு விழுந்தாலும் விழும். இந்த ஃபீல்டுக்கு மட்டும் ஒரு குறையும் இருக்காது!’ என்றார்.
‘எப்படி இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க?’ என்று கேட்டேன். ‘மற்ற எல்லாப் பொருட்களும் மனிதர்களால உருவாக்கப்படுகிறது. நிலம் மட்டும்தான் இயற்கையில் ஆனது. அதை நாம புதுசா உருவாக்க முடியாது. ஆக, இடத்தை விற்க... விற்க ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு வந்துக்கிட்டே இருக்கும். விலை ஏறிட்டே இருக்கும். இது வற்றாத லாபம் தர்ற தொழில் சார்!’ என்றார் நம்பிக்கையோடு.

தொழில் ஐடியா... அட்வைஸர்கள் பராக்.. பராக்!

தொழில் ஐடியா... அட்வைஸர்கள் பராக்.. பராக்!
தொழில் ஐடியா... அட்வைஸர்கள் பராக்.. பராக்!
தொழில்
 

தொழில் ஐடியா... அட்வைஸர்கள் பராக்... பராக்!
வி யாபாரம் என்பது எல்லோராலும் முடிகிற காரியமில்லை. தொழிலைத் தொடங்குவதில் ஆரம்பித்து பல கட்டங்களிலும் சோதனையைச் சந்திக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வுகளைச் சொல்வதற்கு ஆலோசனை நிறுவனங்கள் சில செயல்படுகின்றன.
பணம் இருக்கிறது... ஐடியாவும் இருக்கிறது. ஆனால், அதை எடுத்துச்செய்யப் போதிய அனுபவமும் இல்லை, தொழில்நுட்பமும் தெரியாது என்கிற ஆளா நீங்கள்? உங்களுக்கு உதவி செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ‘என்ன தொழில் செய்யவேண்டும்?’ என்பதை மட்டும் முடிவுசெய்து சொல்லிவிட்டால் போதும். அதற்கான முழுத் திட்டத்தையும் நேர்த்தியாக வடிவமைத்துக் கொடுத்துவிடுவார்கள்.
இன்டீரியர் டிஸைன்ஸ், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், கண்ணைக் கவரும் கலர்கள் கொண்ட அலங்காரம், இருக்கிற இடத்தைப் பக்குவமாகப் பயன்படுத்த ஏற்ற திட்டங்கள், தொழிலுக்குத் தேவையான லைசென்ஸ் எடுக்க உதவுவது வரை எல்லா வேலைகளையும் செய்துதருவார்கள் இவர்கள்!
‘‘தொழில்நுட்ப முறையில் இடத்தைப் பொறுத்து எதை, எங்கு என்ன அளவில் வைக்கலாம்? என்பதில் ஆரம்பிக்கும் எங்கள் வேலை! ஏ.ஸி போன்ற வசதிகள் எந்தெந்த பகுதிக்குத் தேவை என்பது போன்ற விவரங்களைக் கொடுப்பதோடு அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் சொல்லிவிடுவோம். அந்த பிராஜெக்ட் பிடித்திருந்து ஓகே செய்து கொடுத்து விட்டால், எங்களை நம்பிவந்த தொழில் நிறுவனத்தைத் தயார் செய்து தரவேண்டியது எங்கள் பொறுப்பு!
‘‘தொழில் தொடங்கவிருக்கும் இடம் தேர்வானவுடனே, அதற்கேற்ற மாதிரி திட்டமிடுவோம். கடைவீதிகள் என்றால் பார்க்கிங் பகுதிக்கு இடம் விட வேண்டும். குடியிருப்புப் பகுதிகள் என்றால் பார்க்கிங் பகுதியைப் பெரிதாக அமைக்கத் தேவையில்லை. இதைக் கணிக்க ஏரியா முக்கியம்’’ என்றார் பிரகாஷ். கடந்த பதினைந்து வருடமாக வடிவமைப்பு மற்றும் ஆலோசனைத் தொழிலைச் செய்துவரும் ‘ஃபோர்கான்’ நிறுவனத்தின் பார்ட்னர்களில் இவரும் ஒருவர்.
‘‘ஓட்டல் என்று எடுத்துக்கொள்வோம். சமையல் பகுதி 40%, சர்வீஸ் பகுதி 60% எனப் பிரித்துக்கொள்ளலாம். இடத்தின் தேவையைப் பொறுத்து சமையல் பகுதியிலேயே காய் நறுக்குவதற்கு தனி இடம் வேண்டுமா, மசாலா அரைக்கும் இயந்திரங்களை அதே பகுதியில் வைக்க வேண்டுமா என்பதை எல்லாம் தீர்மானித்துக்கொள்ளலாம். இதையெல்லாம் வீட்டிலேயே தயார் செய்துகொண்டு வரமுடியுமானால் அந்த இடம் மிச்சம்தானே! சமையல் பகுதியில் அடுப்பு இருக்கும் சுவற்றுப்பக்கம் மின்சார வயர்களோ, இணைப்போ எதுவும் செல்லக் கூடாது. இதுபோன்ற பாதுகாப்பு விஷயத்தையும் கவனித்துச் சொல்வோம்.
பார்சல் வாங்கும் பகுதிக்கு தனி கவுன்டர் போடுவது நல்லது. பார்சல் வாங்கிச் செல்பவர்களுக்கு மின்சாரச் செலவோ, தண்ணீர், டேபிள் சேர், கவனிக்க ஒரு ஆள் என தனியாக ஒதுக்கத் தேவை இல்லை. இதுபோன்ற விஷயங்களை எங்களை நாடிவரும் தொழிலதிபர்களுக்குத் திட்டமிட்டுத் தருவோம்’’ என்றார்.
இந்த விஷயத்தில் அடிப்படையான விஷயம் ஒன்று உள்ளது. அதாவது யார் வாடிக்கையாளர்கள் என்பதைப் பொறுத்து அலங்கார ஏற்பாடுகளைச் செய்யும் போதுதான் மக்கள் கவர்ந்து இழுக்கப் படுவார்கள்.
கல்யாண மண்டபம், தியேட்டர்களில் ஆரம்பித்து, ஃபேன்ஸி ஸ்டோர் நடத்துவதுவரை ஆலோசனை சொல்ல ஆள் இருக்கிறார்கள். பட்ஜெட்டுக்கு ஏற்ப, இவர்களது ஆலோசனைக் கட்டணங்களும் இருக்கின்றன. வேலை முடியும்வரை இருப்பது ஒருவகை என்றால், எதை எப்படி வடிவமைக்க, நிர்மாணிக்க வேண்டும் என்று திட்டமிட்டுத் தருவது இன்னொரு வகை. அவர்களது திட்டத்துக்கான கட்டணத்தை மட்டும் வசூலித்துக்கொள்வார்கள். நாம் அதை நம் கற்பனைக்கேற்றபடி அமைத்துக் கொள்ளலாம்.
இதேபோல, தொழிலை நடத்துபவர்கள் நடைமுறையில் சந்திக்கும் சிக்கல்களைச் சமாளிக்க வழிசொல்லும் நிறுவனங்களும் இருக்கின்றன. அதில் ஒன்றான ‘வேதா கார்ப்பரேட் அட்வைஸர்ஸ்’ நிறுவனத்தின் துணைத்தலைவர் ராம்குமார், ‘‘கம்பெனி விரிவாக்கத்துக்குத் தேவையான தொகையைத் திரட்ட தனிப்பட்ட பங்கு முதலீட்டை ( Private Equity Investment ) நாடுவது நல்லது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஓவரைக்கொண்ட நிறுவனங்கள் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பரவி இருக்கின்றன. இவை தனிப்பட்ட பங்கு முதலீட்டின் வாயிலாக விரிவாக்கத்தில் இறங்கினால், இவை உலக அளவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாகிவிடும். எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வரும்போது தனிப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள்’’ என்றார்.
டாடா நிறுவனத்தின் சில்லரை வணிகப் பிரிவான டிரன்ட்( Trent ), சென்னையைச் சேர்ந்த லேண்ட்மார்க் நிறுவனத்தின் 76 சதவிகிதப் பங்குளை 104 கோடி ரூபாய்க்கு வாங்க ஆலோசனை கொடுத்தது போன்ற விஷயங்களில் வேதா நிறுவனத்தின் பங்கு முக்கியமானது.
சிலர் தற்போதுள்ள தொழில் அல்லது பிஸினஸை விட்டு வெளியேற விரும்புவார்கள். 30, 40 வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க நிறுவனங்கள் சில கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப வளர்ச்சியின்மை, போட்டியைச் சமாளிக்க முடியாமை போன்ற காரணங்களால் சரியாகச் செயல்படாமல் இருக்கும். இதுமாதிரியான நிறுவனங்களை, அத்துறையில் உள்ள சிறப்பாகச் செயல்படும் பெரிய நிறுவனங்கள் வாங்க விரும்பும். அது போன்ற நேரங்களில் நலிவடைந்த நிறுவனத்தின் மதிப்பு, எத்தனை சதவிகிதப் பங்குகளை தங்கள் வசம் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்? முழு அளவில் நிறுவனம் கைமாறினால் தொழிலாளர்களை என்ன செய்ய வேண்டும்... பழைய நிர்வாகம் எவ்வளவு நாளைக்குத் தொடரவேண்டும்? என்பது போன்ற விஷயங்களில் இரு தரப்புக்கு இடையே பாலமாகவும் இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இதில் இவர்களுக்கு லாபமே, திரட்டப்படும் மூலதனத்துக்கு ஏற்ப கமிஷன் பெற்றுக் கொள்வதுதான்!
இதற்கு அடுத்தகட்டமாக, நஷ்டதிசையில் இயங்கும் நிறுவனங்களைக் கையில் எடுத்து, அதை தங்கள் திறமையான நிர்வாகத்தால், லாபதிசைக்கு மாற்றும் வேலையைச் செய்யவும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் செல்வன்.
‘‘செக்யூரிட்டி முதல் சேர்மன்வரை அனைவருக்கும் யார், யாருக்கு என்ன பணி என்பதை முடிவுசெய்து, எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் கம்பெனிக்குள் நுழைவோம். அதன்படி செயல்படுகிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்போம். அடிக்கடி மீட்டிங் போட்டு, ஒட்டுமொத்த கம்பெனியும் எப்படி இணைந்து செயல்படவேண்டும் என்பதை விளக்கிக் கூறுவோம். ஒரு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு பணிகளைச் சரிவர மேற்கொண்டாலே பாதி வேலை முடிந்துவிடும்.
ஊழியர்கள் சிறப்பான முறையில் பணிபுரிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். அவர்கள் கஷ்டப்பட்டு வேலையைச் செய்யக்கூடாது. பணியைச் சுலபமாக செய்ய வழி சொல்லிக்கொடுக்க வேண்டும்.
நாங்கள் சீர்திருத்தம் மேற்கொண்ட கடை ஒன்றில் நடந்த சம்பவத்தையே உதாரணமாகச் சொல்கிறேன். ஐந்தாவது மாடியில் வாங்கப்படும் பொருட்கள் படிக்கட்டு வழியாக சுமார் 25 பேர் கைமாறி கீழ்தளத்துக்கு டெலிவரி பகுதிக்கு வந்து கொண்டிருந்தன. இதில் சிலர் விடுமுறை போட்டு விட்டால் அன்று கஸ்டமர்கள் பாடு திண்டாட்டம் தான். டெலிவரி பொருட்களை வாங்க நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய நிலை. கோபமாகும் சில கஸ்டமர்கள் வேறு கடை பார்த்து நகர ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தப் பிரச்னையும் கஸ்டமர்கள் குறைய ஒரு காரணம் என்று எனக்குப்புரிந்தது. ஆட்கள் கைமாற்றுவதற்கு பதில் கன்வேயர் பெல்ட் மூலம் பொருள்களைக் கீழே கொண்டுவர ஏற்பாடு செய்தேன். பலரது வேலைப்பளு குறைந்து, நேரமும் மிச்சமானது. இது, சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு சிறு நகரத்திலுள்ள கடை ஒன்றில் அமல்படுத்திய திட்டம். செலவு, நேரம், பணிச் சுமையைக் குறைத்ததில், கடைக்கு நல்ல பேர் கிடைத்து வியாபாரம் பெருகியது.
சரியான நிதி திட்டமிடல் இல்லாததால் சரிந்த நிறுவனங்கள் பல உண்டு. அதேபோல, வங்கிக் கணக்கு வழக்குகளை எப்போதும் சரிவர பராமரித்து வருவது நல்லது. அப்போதுதான் ஓர் அவசரத் தேவைக்கு கேட்டதும் கடன் கிடைக்கும். இதுபோன்ற ஒழுங்குகளையும் எங்களை நாடிவரும் வாடிக்கையாளர்களுக்குச் சொல்லித் தருவோம்.
நாங்கள் பொறுப்பேற்கும் நிறுவனத்தில் சேர்மன், டைரக்டர் என எல்லோருக்கும் சம்பளம் நிர்ணயித்து விடுவோம். மீதிப் பணத்தை வங்கியில்போட்டு எடுக்கச் சொல்வோம். தேவையில்லாத வீண் செலவுகளைக் குறைப்பதன் மூலமும் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க முடியும் என்பதை உணர்த்துவோம்.
சில நிறுவனத்தில் நான்கைந்து டைரக்டர்கள் இருப்பார்கள். அவர்கள் ஆளுக்கு சில கிரெடிட் கார்ட்கள் வைத்திருப்பார்கள். பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பதால், இவற்றுக்கான தொகை எகிறும். கார்ட்கள் எண்ணிக்கையைக் குறைத்து, இத்தனை கார்ட்கள்தான் வைத்திருக்கலாம் என எல்லை வகுத்துத் தருவோம். மேலும், கம்பெனி அக்கவுன்ட் தனியாகவும், பர்சனல் அக்கவுன்ட் தனியாகவும் வைத்துக்கொள்ளச் சொல்வதோடு அவ்விதமாகச் செய்கிறார்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வோம். சிக்கனம், தான் முதல் சேமிப்பு என்பதை உணர்ந்து தேவையில்லாத செலவுகளை நீக்க நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் செல்வன்.
நலிவடைந்த நிறுவனத்துக்குப் பொறுப்பேற்று சில மாதங்கள் அவர்களுடனே இருந்து ஒவ்வொரு துறையாகத் சீர்திருத்தம் செய்வது, முழு நேர கன்சல்டன்டாகச் செயல்படுவது தவிர, சில நிறுவனங்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ரிப்போர்ட்டையும் செல்வன் தயாரித்துக் கொடுத்து வருகிறார்.
ஆக, தொழிலில் எந்த நிலையில் சிரமம் ஏற்பட்டாலும் சமாளிக்க வழி சொல்ல வகைவகையாக இருக்கிறார்கள் ஆட்கள்.

சில்லுன்னு ஒரு லாபம்!

சில்லுன்னு ஒரு லாபம்!
தொழில்
 
சில்லுன்னு ஒரு லாபம்!
பெ ப்ஸி, கோக் போன்ற குளிர்பானங்களுக்கு எதிராக ஊரே கிளம்பி நிற்கும் இந்த நேரத்தில், குடிசைத் தொழில் போலப் பரவிக்கிடக்கும் லோக்கல் குளிர்பானத் தயாரிப்பு லாபகரமாக இருக்கிறது!
‘‘சுத்தமான தண்ணீரில் சுகாதாரக்கேடு தராத சுவை கலவைகளைக் கலந்து, பாக்கெட்களில் அடைத்து விற்பனைசெய்வது நல்ல லாபம் தரக்கூடிய தொழில்! குளிர்பானங்களைப் பாக்கெட் செய்யும் மெஷினை வாங்கினால், அதன்மூலம் விதவிதமான சுவைகளில் குளிர்பானங்களைத் தயாரித்துக் கடைகளில் விற்று வருமானம் பார்க்கலாம்’’ என்கிறார் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள சென்னையைச் சேர்ந்த செல்வம். அவருடைய தயாரிப்பு இடம் மிகச்சிறிதாக இருக்கிறது. சுமார் 75,000 ரூபாய் விலை உள்ள இதுபோன்ற ஆட்டோமேடிக் பேக்கிங் மெஷின்கள் ஒரு மணி நேரத்தில் சுமார் 2,500 பாக்கெட்கள் வரை தரக் கூடியவை.
‘‘உள்ளூர் குளிர்பானங்கள் தயாரிக்க உதவும் இந்தக் கலவைக்கான பவுடர் பெரும்பாலான மளிகைக் கடைகளில் கிடைக்கிறது. அதை மொத்த விலையில் வாங்கி, சரியான விகிதத் தில் கலந்து, பாக்கெட் செய்யவேண்டும். அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்ப, தேவையை மனதில்கொண்டு நாம் உற்பத்தி செய்யவேண்டும். கோடைக்காலத்தில் அதிகமான தேவை இருக்கும். அந்தச் சமயத்தில் முழுவீச்சில் வேலைசெய்து அதிக பாக்கெட்களைத் தயாரிக்கலாம். ஆரஞ்சு, சாக்லெட் மில்க், மோர், பாதாம், ரோஸ் மில்க் என்று எல்லா சுவை களிலும் பானங்களைத் தயாரிக்கலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் கொஞ்சம் கவனமாக ஆர்டருக்கு ஏற்ப தயாரிப்பில் ஈடுபடவேண்டும். சுமாராக ஒருநாளைக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கக்கூடிய தொழில் இது’’ என்றார் செல்வம்.
மக்கள் நேரடியாக உட்கொள்ளும் உணவுப் பொருள் இது என்பதால், சுகாதார விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இது நாம் சாப்பிடும் பொருள். நம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பானம் என்பது போன்ற அக்கறையுடன் செயல்படவேண்டும். இதைக் கடைப்பிடித்தால் தரம், சுவைக்காக தேடி வாங்கிச் செல்வார்கள். நல்ல வருமானம் கிடைக்கும்.
தயாரிப்புக்குத் தரும் அளவு முக்கியத்துவத்தை விற்பனை செய்வதிலும் காட்டவேண்டும். இரு சக்கர வாகனம் மூலம் கடைகளுக்கு சப்ளை செய்யத் தயாராக இருக்கவேண்டும். தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் கடைக்காரர்களே தேடிவந்து, வாங்கிச் செல்வார்கள் என்பது இதில் சாதகமான விஷயம். கூடிய வரை கடன் கொடுக்காமல் ரொக்கத்துக்கே வியாபாரம் செய்தால்தான் முதலீட்டு சுழற்சி இருந்துகொண்டே இருக்கும்.
இது குடிசைத் தொழில் வகையில் வருவதால், வங்கிக் கடன்களையும் எதிர்பார்க்க லாம்.
எல்லா ஊர்களிலுமே குளிர்பானங்களுக்கு தேவை இருக்கத்தான் செய்கிறது... வாய்ப்புள்ளவர்கள் தாகம் தீர்க்கத் தயாராகுங்கள். லாபமும் பாருங்கள்!

மார்க்கெட்டிங் செய்வது எப்படி - Marketing Seivathu Eppadi In Tamil

மார்க்கெட்டிங் ரகசியம்!
மார்க்கெட்டிங் ரகசியம்!

தொழில்


மார்க்கெட்டிங் செய்வது எப்படி - Marketing Seivathu Eppadi In Tamil 



மார்க்கெட்டிங் ரகசியம்!
ஒ ரு நகர வீதியில் இருபக்கமும் மளிகைக் கடைகள் நிறைந்திருக்கின்றன. ஒரு கடையில் எப்போது பார்த்தாலும் கூட்டம்... சதா தள்ளு முள்ளு! அடுத்த கடையிலோ, காற்றாடும். இருவருமே மளிகை வியாபாரத்தில் இருந்தாலும் ஏனிந்த வித்தியாசம்? கூட்டம் கூடும் கடைக்காரர் மார்க்கெட்டிங் வித்தை அறிந்தவர். ஆளில்லாத கடைக்காரருக்கு அந்த வித்தை தெரியவில்லை. இதுதான் வித்தியாசம்!
கோடி கோடியாகப் பணம் போட்டுப் பொருளைத் தயாரித்தாலும், அது விற்பனை ஆனால்தானே மதிப்பு? அதேபோல தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தயாரிக்கப்பட்டாலும் பொருட்களை எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கவேண்டுமே... அப்போதுதானே வியாபாரம் பெருகும். இதுபோன்ற விஷயங்களுக்கு அடிப்படையாக இருப்பது மார்க்கெட்டிங்!
தற்போது உள்ள சூழ்நிலையில் என்னென்ன வழிகளைக் கடைப்பிடித்து வாடிக்கையாளர்களைக் கவரலாம்? பல முன்னணி நிறுவனங்களுக்கு விற்பனை ஆலோசகராக இருக்கும் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, ‘‘ஒரு பொருளை தயாரித்த பின் அதற்கு நல்ல பெயராகத் தேர்ந்தெடுப்பது அவசியம். பெயர் எளிதாக மக்கள் மனதில் பதிந்துவிட்டாலே போதும். பெயரில் இருக்கும் ஈர்ப்பினாலேயே மக்கள் அந்தப் பொருளைக் கேட்டு வாங்க ஆரம்பிப்பார்கள்.
அதேபோல, பொருளை மக்களுக்குக் கொடுத்து அவர்களின் கருத்தைக் கேட்கவேண்டும். ‘நன்றாக இருக்கிறது’ என்று கருத்து சொல்பவர்கள், தொடர்ந்து வாங்க ஆரம்பிப்பார்கள். அதுமட்டும் இல்லை. தாங்கள் பயன்படுத்திய பொருளைப் பற்றி நாலுபேருக்கு எடுத்துச் சொல்லவும் செய்வார்கள். இது இலவச பப்ளிசிட்டி!
‘மேகி’ நூடுல்ஸை இப்படித்தான், ஆரம்பத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். அது, இப்போது குழந்தைகளின் விருப்பமான உணவு’’ என்றார்.
சென்னையில் உள்ள என்.ஜி.ஓ-க்களின் விற்பனை ஆலோசகர் முத்து கிருஷ்ணன், ‘‘பொருளைத் தயாரிக்கும் பகுதியிலேயே விற்பனையைத் தொடங்கவேண்டும். அப்படி முன்னோட் டம் பார்க்கும்போது அந்தப் பொருளில் உள்ள நிறைகுறைகள் தெரியும்.
சுய உதவி குழுவில் பொருட்களைத் தயாரிப்பவர்கள் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள அரசு விற்பனை அங்காடிகளுக்குச் சென்று விற்பனை செய்ய லாம். அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் விற்கலாம்’’ என்று அனுபவ அடிப்படையில் கருத்து சொன்னார்.
பொருளைத் தரமானதாகத் தயாரித்துவிட்டு பேக்கிங்கைச் சரியாகச் செய்யாவிட்டாலும் விற்பனையில் தேக்கம் இருக்கும். அதனால், பொருளைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் அதே அளவு அக்கறையை பேக்கிங்கிலும் காட்டவேண்டும்

Marketing Seivathu Eppadi In Tamil 

கைவினைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுவரும் வனஜா, ‘‘உள்ளூர்ப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கலாம். ஏதாவது கண்காட்சிகள் நடக்கும்போது ஸ்டால் போட்டு தயாரிப்புகளை வைக்கலாம். அங்கு பெரிய அளவில் விற்பனை இல்லாவிட்டாலும் பொருளைப்பற்றிய நல்ல அறிமுகமாக இருக்கும்.
முக்கியமான இடங்களில் இருக்கும் கடைகளில் நம் பொருட்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். நல்ல கமிஷன் கொடுத்தால் அவர்கள் அப்படி வைத்து வியாபாரத்தைப் பெருக்கிக் கொடுப்பார்கள்’’ என்கிறார்.
எல்லா ஊர்களிலும் அபார்ட்மென்ட்கள் அதிகரித்து வருகின்றன. அங்குள்ள ஒருவரிடம் நம் பொருட்களைக் கொடுத்து அவர்களுக்கு குறிப்பிட்ட கமிஷன் கொடுத்தும் விற்பனை செய்யலாம்.
இதெல்லாம் பாலபாடங்கள்தான்... அனுபவம் இன்னும் பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்!

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில்
 
ஊழியரும் முதலாளி ஆகலாம்! 
வ ளம்மிக்க தீவு ஒன்றைக் கைப்பற்றத் திட்டமிட்டுப் படையோடு கிளம்பினான் ஒரு மன்னன். தங்கள் மண்ணை யாருக்கும் விட்டுத் தரக்கூடாது என்ற வைராக்கியத்தோடு வீரமாகப் போரிடும் மக்கள் நிறைந்த தீவு அது.
பலரும் ஆசையோடு படையெடுத்துப்போய், அந்தத் தீவின் வீர மைந்தர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கிய சம்பவங்கள் உண்டு. இதையெல்லாம் அறிந்துகொண்டேதான் படையெடுத்துச் சென்றான் அந்த மன்னன்.
அந்தத் தீவின் முகத்துவாரத்தை அடைந்தது படை. ஒரே ஒரு மரப்பாலம்... அதைக் கடந்து தான் தீவுக்குள் செல்லவேண்டும். வீரர்களை எல்லாம் பாலத்தைத் தாண்டி அனுப்பிவிட்டு கடைசியாக வந்த மன்னன், பாலத்தைத் தீவைத்துக் கொளுத்திவிட்டு, வீரர்களிடையே உரை ஆற்றினான்.
‘வீரர்களே... திரும்பிச் செல்ல இனி வழி கிடையாது. வெற்றி பெற்று புதிய பாலம் அமைத்தால்தான் நாம் வெளியேற முடியும். எனவே, இந்தத் தீவின் மைந்தர் களை வெற்றிகொள்வதுதான் ஒரே வழி! வாருங்கள்... ஜெயிக்கப் போகிறோமா... சாகப் போகிறோமா..? என்பதைப் பார்த்துவிடுவோம்!’ என்றபடி போரில் இறங்கிய மன்னனுக்கு வெற்றி கிடைத்தது என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.
‘பர்ன் தி பிரிட்ஜ்’ என்ற கதை இது. உயிர்பயம் என்கிற உந்துசக்திதான் அவர்களை ஜெயிக்க வைத்தது. 100% ரிஸ்க் இருந்தால், ஜெயிப்பதைத்தவிர வேறு வழியே இல்லையே! அந்தத் துடிப்பும் திடமான மனதும் பிஸினஸிலும் இருக்கவேண்டும். ‘நான் இந்தச் செயலில் இறங்கிவிட்டேன். இனி பின்வாங்க மாட் டேன். எத்தனை இன்னல்கள் வந்தாலும் என்னால் துணிந்து சமாளிக்கமுடியும்’ என்ற எண்ணத்தோடு தொழிலில் இறங்கிய யாரும் தோற்றதில்லை. இந்த நம்பிக்கையும் ஒருவகையில் மூலதனம்தான். எடுக்க எடுக்கக் குறையாத மூலதனம்!
செலிபிரிட்டி ஃபேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ராஜகோபாலிடம் இருந்தது அப்படி ஒரு மூலதனம்தான். தன்னந்தனியராக டெக்ஸ்டைல் தொழிலில் இறங்கிய ராஜகோபால், இன்று 13,000-க்கும் மேற்பட்ட ஊழியர் களைக் கொண்ட நிறுவனத்தின் தலைவர். போலீஸ் அதிகாரியாக, அதுவும் ஐ.ஜி லெவலில் இருந்து அந்த வேலையை உதறிவிட்டு வந்தவர் என்பது ஆச்சர்யமான செய்தி. எந்த வேலையில் இருப்பவரும் தொழிலதிபர் ஆகலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்!
சென்னையில் படித்த ராஜகோபால், ஐ.பி.எஸ் பாஸ் செய்ததும் உத்தரப்பிரதேசத் தில் பணி வாய்ப்பு கிடைத்திருக் கிறது. 26 வயது... ஜாலியாக இருந்தவர் கையில் ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்கும் பொறுப்பு... பெரிய வேலை! தடக்கென ஒரு ‘பக்குவ லோடை’ உள்ளே இறக்கிக் கொண்ட ராஜகோபால் வேலையில் சின்சியராக இறங்கிவிட்டார்.
‘திடுமென வரும் அதிகாரம் இரண்டு விஷயங்களுக்குத் தூண்டும். நம்மைவிட, அனுபவஸ்தர்களை, வயதில் முதிர்ந்தோரை வேலை வாங்கும் நிலையில் வரும் இரண்டு துருவங்கள் அவை. ஒன்று, மமதை. அடுத்தது அடக்கம். நான் இரண்டாவது ரகமாக இருந்தேன். காரணம், நான் வளர்க்கப்பட்ட விதம் அப்படி!’ என்று தன் பெற்றோருக்கு அடிக்கடி நன்றி சொல்வார் ராஜகோபால்.
வட மாநிலங்களில் கண்டிப்பான உயர் போலீஸ் அதிகாரியாக, நேர்மையாளராக வலம்வந்த அவருக்கு, சிலர் எதிர்பார்க்கும் நெளிவு, சுழிவுகள் கைவரவில்லை. சி.பி.ஐ-க்கு இடமாற்றம் பெற்று எஸ்.பி-யாக இருந்தும் மேலதிகாரிகள், கீழதிகாரிகளைச் சமாளித்து, தினம் தினம் நடத்தும் போராட்டம், இலக்கற்ற வாழ்க்கை யாகத் தெரிந்திருக்கிறது. அந்த நிமிடங்கள் பற்றி ராஜகோபாலே சொல்கிறார்.
‘இந்த வேலையே வேண்டாம்... என்று யோசித்தேன். அப்படி யோசித்த 1989-ம் வருடத்தில், எனக்கு 13,500 ரூபாய் சம்பளம். அதில் பாதி இருந்தாலே, என் குடும்பம் நன்றாக நடக்கும் என்று தோன்றியது. அதை எப்படியும் சம்பாதித்து விடமுடியும் என்று நம்பிக்கை எனக்குள் இருந்தது. வேலையை உதறிவிட்டு சென்னை வந்தேன். என் மனைவி, குழந்தைகளின் எதிர்காலம் என் கையில் இருந்தது. அப்பாவின் பென்ஷனை நம்பி இருந்துவிடக்கூடாதே என்ற கவலை எனக்கு. ஆனால், மனைவியும் அப்பாவும் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள்.
வேலை இல்லை... வருமானம் வேண்டும். என்ன தொழிலைத் தொடங்குவது, எப்படி நடத்துவது எதுவும் யோசனை இல்லை என்றாலும் எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்... இல்லாவிட்டால் பிழைக்க முடியாது என்ற இக்கட்டான நிலை. (‘பர்ன் தி ப்ரிட்ஜ்’ கதைதான்). எனக்குத் தெரிந்து டெக்ஸ்டைல் துறையில் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பும் எதிர்காலமும் இருந்தது. அதில் இறங்க முடிவு செய்தேன். இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கடன் கேட்டேன். கைப்பணம், சேமிப்பு கொஞ்சம் இருந்தது. சிறிதாக ஒரு தொழிற்சாலை ஆரம்பித்தேன். 50 மெஷின்களைப் போட்டு துணி தைத்துத்தரும் பணி. வெற்றி ஒன்றே இலக்கு என்று கடுமையாக உழைத்தேன். எக்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு பெரிய ஆர்டர் பிடிக்க ஆர்வம் காட்டியதில் நிறுவனம் மெள்ள, மெள்ள வளர்ந்து, இன்று கோடிக்கணக்கில் டர்ன் ஓவர் செய்ய முடிகிறது’ என்கிறார் ராஜகோபால்.
‘அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது, ஜெயித்து விட்டார்’ என்றும் ‘போலீஸ் அதிகாரியாக இருந்த ஒருவர் இப்படி தொழிற்சாலை ஆரம்பிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!’ என்றும் சிலர் கேட்கலாம்.
தன் போலீஸ் அனுபவத்தை அவர் பயன்படுத்தியது ‘மேன் மேனேஜ்மென்ட்’ எனப்படும் மனிதர்களுக்குள் ஏற்படும் சிக்கலைத் தீர்க்க. அதேபோல, யாரை எப்படி நடத்தவேண்டும்... யாரிடம் எந்தப் பணியைக் கொடுக்கவேண்டும் என்பது போன்ற விஷயங்களில்தான் அவர் தன் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொண்டார். ஒவ்வொருவருக்கும் இதுபோல், அனுபவம் நிச்சயம் இருக்கும். அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்பது தான் முக்கியம்.
‘தண்ணீர் இல்லாமல் 40 நாட்கள் வாழலாம்... காற்று இல்லாமல் 8 நிமிடம் வாழலாம்... ஆனால், நம்பிக்கை இல்லாமல் ஒரு நொடிகூட வாழ முடியாது’ என்று ஒரு பழமொழி உண்டு. அந்த நம்பிக்கை, தொழில் தொடங்குகிற நடத்துகிற எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
சம்பளம் வாங்குகிற ஒருவர், வாழ்நாள் முழுக்க, கைநீட்டி சம்பளம் வாங்கிக்கொண்டேதான் இருக்கவேண்டுமா..? சம்பளம் கொடுக்கிற இடத்துக்கும் வரமுடியும் என்பதற்கு ராஜகோபால் நல்ல உதாரணம். ஆர்வம், வேகம் இதைவிட சிறந்த மூலதனம் ஏதுமில்லை.
இன்று பங்குச் சந்தையில் தன் நிறுவனப் பங்குகளை விற்று, லாபகரமான நிலையில் நிறுவனத்தை நடத்தும் அளவுக்குத் தகுதி பெற்றிருக்கிற ராஜகோபாலிடம் இருந்த விடாமுயற்சிதான் 15 ஆண்டுகளில் அவரை இந்த அளவு வளர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அவர் தொழில் தொடங்கும்போது, தான் இப்படி வரவேண்டும் என்று யோசித்திருக்கமாட்டார்... இலக்கு வைத்திருக்கமாட்டார். ஆனால், எடுத்த காரியத்தில் வெற்றி!
புதிய தொழில் ஒன்றைத் தொடங்கும்போது, நிலவை இலக்கு ஆக்குங்கள். அது, நீங்கள் சமவெளியில் ஓடுகிற திசை எங்கும் உங்கள் கூடவே வரும். இப்படி ஓடினால் பிடிக்கமுடியாது என்று தோன்றும்போது, உயரே பறக்க ஆரம்பிப்பீர்கள். நீங்கள் அதை நெருங்கி விட்டதாக நினைக்கும்போதெல்லாம் கண்ணுக்குத் தெரிகிற அதன் அளவுதான் பெரிதாகுமே தவிர, கைக்கு சிக்காது. இன்னும் நெருங்குங்கள்... மேலும் உயரம் தொடுங்கள். நீங்கள் பறக்கிற வேகம் உங்களுக்குப் பழகிவிடும். நிலவு தன்னாலே உங்களை நோக்கி வரும். வெற்றிகரமான தொழில் அதிபர்கள் செய்வது இதைத்தான். ‘குழந்தைப் பையன்... நிலாவுக்கு ஆசைப்படறான்’ என்று வெட்டி வீணர்கள் உதடு பிதுக்கி செய்யும் பரிகாசத்தை, இடதுகையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு உங்கள் ஓட்டத்தைத் தொடருங்கள்... நிலவைப் பிடிப்போம் வாருங்கள்.
வி டாமுயற்சியில் ராஜகோபாலை அடித்துக் கொள்ள முடியாது. அவர் சந்தித்த ஒரு சம்பவம் அதற்கு நல்ல உதாரணம். அவரே சொல்கிறார்.
‘‘பிஸினஸ் ஆரம்பித்த முதல் வருடம். சோவியத் யூனியனில் ஏற்றுமதி கண்காட்சி ஒன்று நடப்பது தெரிந்தது. உலக அளவிலான அந்தக் கண்காட்சியில் இந்தியாவிலிருந்து சுமார் 5 நிறுவனங்கள்தான் தொடர்ச்சியாகச் சென்றன. பிறரை அனுமதிப்ப தில்லை. நிகழ்ச்சியாளர்கள் சிலரோடு அப்படி ஒரு திரைமறைவு ஒப்பந்தம் போலிருக்கிறது. நான் ஆர்வத்தில் விண்ணப்பித்து எனக்கு அழைப்பு வந்தது. கையில் இருந்த மூலதனத் தொகையை எல்லாம் செலவழித்து அங்கே சென்றேன்.
இறங்கிய என்னை வரவேற்க ஆளில்லை. 250 கிலோ மீட்டர் தள்ளி கிராமம் ஒன்றில் அறை கொடுத்திருந்தார்கள். மொழி புரியவில்லை. விளக்கம் சொல்ல ஆளில்லை. கண்காட்சி அரங்குக் குச் சென்று என் அழைப்பிதழைக் காட்டினால், ‘இப்படி ஒரு நிறுவனத்தை அழைக்கவே இல்லையே’ என்று கைவிரித்துவிட்டார்கள். செய்வதறியாது, திகைத்து நின்றேன். ஓட்டல் அறையைக் காலி செய்யச் சொல்லி நெருக்கடி வேறு. அழைப்பு கொடுத்து, அதை அங்கீகரிக்கமாட்டேன் என்கிறார்களே என்று எனக்குள் கொந்தளிப்பு.
அந்நிய நாட்டில் எனக்கு இருந்த ஒரே ஆறுதல் இந்தியத் தூதரகம்தான் என்று முடிவெடுத்து, அங்கு சென்றேன். இந்தியத் தூதர் என்பவர், கவர்னர் அளவுக்கு பெரிய பதவி என்பது அங்கே போனபின் தான் தெரிந்தது. சந்திக்க வேண்டுமென்றால் ஒரு மாதம் முன்பே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டுமாம். அவருடைய உதவியாளரிடம் என் நிலையைச் சொல்லி வாதம் செய்து கொண்டிருந்த போது, தூதர் உணவுக்காக வெளியே வந்தார். இந்திய முகம் பார்த்து, என்னை அருகே அழைத்தார். வேகமாக என் நிலையைச் சொன்னேன். ‘இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு ஆர்டர் பெறாமல் திரும்பினால் என் எதிர்காலம் அவ்வளவுதான்’ என்பதை மளமளவென சொன்னேன். நிதானமாகப் பார்த்தவர், ‘இன்று இரவு விருந்து இருக்கிறது. வா!’ என்றார்.
தூதரக விருந்து மிகப் பிரமாண்டம். அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. நிகழ்ச்சி முடியும் நேரம். தூதரும் கிளம்ப ஆயத்தமாகிவிட்டார். வண்டியில் ஏறப்போனவர், வழி அனுப்ப வந்த ஒரு அதிகாரியிடம், ‘ம்... ஒரு விஷயம். இங்கே துணிகள் கண்காட்சி நடக்கிறதே! அதை நான் பார்க்க விரும்புகிறேன். அங்கிருக்கும் செலிபிரிட்டி ஃபேஷன் என்ற நிறுவன ஸ்டாலுக்கு நான் விசிட் செய்யவேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அதன்பின் நிலைமை உல்டா. என்னை உள்ளேவிட மறுத்தவர்கள், சல்லடை போட்டு என்னைத் தேடியிருக் கிறார்கள். அறைக்குப் போன என்னை இரவோடு இரவாகப் பிடித்து, எக்ஸிபிஷன் ஹாலில் ஸ்டால் போட வைத்தார்கள். ‘ரொம்பப் பெரிய நிறுவனமா உங்களுடை யது... உங்கள் பிஸினஸ் அளவு என்ன... யாரும் அதிகாரி களின் உறவினரா..?’ என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டார்கள். எனக்கோ அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி!
மறுநாள் தூதர் வந்தார். நேராக, ‘எங்கே அந்த ஸ்டால்..?’ என்று என் இடம் தேடிவந்தார். சில சாம்பிள்களைப் பார்த்தார். கொத்தாக சிலவற்றைப் பறித்து, ‘வாவ்! எவ்வளவு பிரமாதமான துணிகள். நாம் இவற்றுக்கு ஆர்டர் கொடுக்கவேண்டும்’ என்றார். உடனே, ஒப்புதல் கிடைத்தது. கிளம்பும்போது என்னைப் பார்த்துச் சிரித்தார். கண்கள் பணிக்க என் நன்றியைத் தெரிவித்தேன். முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். தெய்வம் நேரில் வந்தமாதிரி இருந்தது. ஆனால், அது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு என்பதை மறுப்பதற்கில்லை!’’ என்கிறார் ராஜகோபால்.
புத்தகங்களுக்கு நேரம் கொடுங்கள்!
‘நா ன் ரொம்ப பிஸி. புத்தகம் படிக்கவே நேரம் இல்லை’ என்று ஒதுங்காதீர்கள். உலகம் புத்தகங்களில்தான் இருக்கிறது. உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது உங்கள் கைகளுக்கு வரும் உலகம் அது. நிறையப் படியுங்கள். நீங்கள் தொழிலில் கற்றுக்கொள்ளும் அனுபவம் ஒருவகை என்றால், ஜெயித்த தொழில் அதிபர்களின் வாழ்க்கைப் பயணம், அவர்கள் சந்தித்த சிக்கல், அதிலிருந்து மீண்டது என்பதெல்லாம் புதிய பரிமாணங்களை உங்களுக்கு அடையாளம் காட்டும். அதை இழந்துவிடக்கூடாது. புத்தகம் படிப்பதும் உங்கள் தொழிலை வளர்க்க நீங்கள் செலவழிக்கும் நேரம்தான்.