Tuesday 22 July 2014

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில்
 

நேர்மைதான் வெற்றியின் ரகசியமே..!
நா ணயம் விகடன் வாசகர் ஈரோடு, சி.எஸ்.என் ராஜா ஒரு தகவல் அனுப்பி இருந்தார். நம்ம சப்ஜெக்ட்தான். இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் அலெக்ஸ், லட்சாதிபதியாக விரும்பினார். லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்து எப்படிக் காசு பார்ப்பது என்று திட்டம் போட்டார். ஒரு வெப்சைட்டை உருவாக்கியதுதான் அவர் போட்ட முதலீடு. கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் உருவாக்கிய அந்த இணையதளத்துக்கு ‘மில்லியன் டாலர் ஹோம்பேஜ் டாட் காம்’ என்று பெயர் சூட்டினார். மில்லியன் (பத்து லட்சம்) டாலர் சம்பாதிக்கவேண்டும் என்பது அவரது கனவு. தன் இணைய தளத்தை பல்வேறு இணைய தளங்களின் வாசலாக வைக்க விரும்பியதால், ‘ஹோம் பேஜ்’ என்ற வார்த்தையைச் சேர்த்தார்.
இணைய தளத்தின் இடத்தை பத்து லட்சம் சிறிய கட்டங்களாகப் பிரித்த அலெக்ஸ், ஒரு கட்டம் ஒரு டாலர் என்று விற்க ஆரம்பித்தார். ‘உங்கள் நிறுவன ‘ஐகானை’ இங்கே இடம்பெறச் செய்யலாம். கட்டத்துக்கு ஒரு டாலர் வீதம், எந்த அளவு பெரிதாக உங்கள் நிறுவனம் கண்ணில் படவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அத்தனை கட்டத்துக்குக் காசு கட்டுங்கள். வலைத்தள தேடர்கள் அதை ‘க்ளிக்’ செய்து உங்கள் இணையதளத்துக்குள் செல்லுமாறு லிங்க் கொடுத்துவிடுவேன்’ என்று சில நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் அலெக்ஸின் இந்தத் திட்டம் புதுமையாக இருக்கவே, பெரிய நிறுவனங்கள் பல 100 டாலர் பெரிய விஷயமா..? என்று பத்துக்கு பத்து கட்டங்களாக விளம்பரம் செய்ய முன்வந்தன. வாய்வழித் தகவல் பரிமாற்றங்களாலும் தேடலாளர்களின் மிதமிஞ்சிய வருகையாலும் ஐந்தே மாதத்தில் கிடுகிடுவென பாப்புலராகிவிட்டது அலெக்ஸின் இணையதளம். நிறுவன விளம்பரங்கள் வந்து குவிய ஒரு மில்லியன் கட்டங்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. செம டிராஃபிக் உள்ள இணைய தளத்தை தந்த திருப்தியோடு, மில்லினர் ஆகிவிட்டார் அலெக்ஸ்.
இது எப்படிச் சாத்தியமாயிற்று..? சிறிய கட்டணம் என்பதால், ஒரு டாலர்தானே என்ற எண்ணத்தில் பலரும் வந்து குவிய, அந்தச் சிறுதுளிகள் சேர்ந்து, சேர்ந்து அலெக்ஸுக்கு ஜாலியான நீச்சல் குளமாகவே அமைந்துவிட்டனவே! இப்படிச் சிறிய சலுகைகளைக் கொடுத்து பெரிய லாபம் பார்க்கிறவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கவே இருக்கிறார்கள். அலெக்ஸ் போலவே, அசத்தல் திட்டங்கள் மூலம் நியாயமான சம்பாத்தியம் பார்த்து, குறுகிய காலத்தில் கோடிகளில் டர்ன் ஓவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் சிவகுமார். பலரும் மதிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிற சிவகுமாரின் ஆரம்ப முதலீடு அங்கே இங்கே புரட்டிய மூன்று லட்சம் ரூபாய். பெரிய தொகை புழங்கும் ரியல் எஸ்டேட்டில் மூன்று லட்ச ரூபாய் எப்படிப் போதும்..? அங்கே செயல்பட்டது, சிவகுமாரின் புத்தி சாலித்தனம்.
ரியல் எஸ்டேட் துறைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு அதில் களமிறங்கினார் சிவகுமார், இடத்தின் உரிமையாளரிடம் ஒரு விலை வைத்து இடத்தை வாங்க அக்ரிமென்ட் போட்டார். குறிப்பிட்ட தேதிக்குள் வீட்டைக் கட்டி வாடிக்கையாளர்களைப் பிடித்து விற்றார். சரியாக அக்ரிமென்ட் முடிவதற்குள் இடத்தின் உரிமையாளருக்குப் பேசிய தொகையைக் கொடுத்தார். முதல் கட்டுமானத்தில் வந்த வருமானத்தை வைத்து, தான் கடன் வாங்கிய தொகை யைக்கூடத் திருப்பிச் செலுத்திவிட்டார். முதல் ப்ராஜெக்ட் தரமாக, திருப்தியாக வரவே... அதைக் காட்டியே அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களை எடுத்துச் செய்தார். டயத்துக்கு பணத்தைக் கொடுத்து விடுவார் என்று முந்தைய அனுபவத்தில் அந்த உரிமையாளர் சொன்ன வாக்கு, அடுத்தடுத்தவர்களை நிலம் கொடுக்க வைத்தது. ‘வீட்டை ஜோராக, சொன்ன சொல்லில் மாற்றமில்லாமல் முடித்துக் கொடுத்தார்’ என்று வீடு வாங்கியவர்கள் சொல்ல... அட்வான்ஸ் கொடுத்து வீட்டை புக் செய்தார்கள் கஸ்டமர்கள். அவர்களுக்கு வில்லங்க சான்றில் துவங்கி வங்கிக் கடன் வரை அனைத்து வேலைகளையும் தானே முடித்துவிடுவார்.
பத்திரத்தைப் பதிவுசெய்து வாடிக்கையாளர் கையில் கொடுக்கும் வரை அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்வதால், திருப்தியில் திளைத்துப் போனார்கள் வாடிக்கையாளர்கள். கட்டணங்களில் பேரம் பேசுவதோ, சந்தேகப்படுவதோ இல்லாத நிலை என்பதால் நிம்மதியாகப் போன தொழில், பல புதிய சிந்தனைகளைக் கொண்டு வந்தது. சென்னையில் மட்டுமே செய்துவந்த வேலையை திருச்சிக்கு விரிவு படுத்தினார். அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவது திட்டம். அங்கே ஒரு சறுக்கல்.
இடத்தைப் பேசி, வேலைகளைத் துவங்கி, பாதி நடந்துவிட்டது. திடீரென அந்த இடம் வேறொருவருக்கு விற்கப்பட்ட தகவல் கிடைத்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து, புதிய வீடு கனவோடு இருந்த நேரத்தில் இப்படி ஒரு ஷாக். வாடிக்கையாளர்கள் இவரை நோக்கி கோபத்துடன் வரும் முன்னர் இவரே முந்திக்கொண்டார். ‘நம்பிய இடத்தில் மோசம் போய்விட்டேன். என்னால் நடந்த இந்தத் தவறுக்கு நீங்கள் நஷ்டப்படக்கூடாது. உங்கள் அட்வான்ஸை திருப்பித் தந்துவிடுகிறேன், வட்டியோடு!’ என்று சொன்னவர், தலா 36,000 ரூபாய் கூடுதலாகத் திருப்பித் தந்தார். புல்லரித்துப் போய்விட்டனர் வாடிக்கையாளர்கள்.
‘உங்க அடுத்த ப்ராஜெக்ட்டை சீக்கிரமே துவங்குங்கள். அங்கே வீடு வாங்கிக் கொள்கிறோம்!’ என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்கள். அடுத்த ப்ராஜெக்ட்டில் வந்து நின்றது இரட்டிப்பு வாடிக்கையாளர்கள். மனிதர்களைப் பொறுத்தவரை, நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டால் அதன்பின் சரண்டர்தான். பிஸினஸில் இந்த நேர்மை, நாணயம் இரண்டும் மிக முக்கியம். அதனால்தான், தோற்று ஓடிவந்திருக்கவேண்டிய சிவகுமார், அதையே சிறிய செலவில் பாஸிடிவ்வாக, பிஸினஸின் படிக்கல்லாக மாற்றி விட்டார். பெங்களூர், ஹைதராபாத் என 12 ஊர்களில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துவரும் சிவகுமாரின் ‘ஹையக்ரீவர்ஸ்’ நிறுவனம் இன்று நாகர்கோவில், ஊட்டி என்று விரிந்து வியாபாரம் செய்துவருகிறது.
அவரது இந்த வளர்ச்சிக்கு, அடிப்படையில் அவரிடம் இருந்த நேர்மையும், சில நல்ல குணங்களும்தான் காரணம். தான் ஒப்பந்தம் போடும் இடத்திலும் சரி... வாடிக்கையாளரிடமும் சரி... கணக்கில் வராத கருப்புப் பணம் வாங்குவதில்லை... கொடுப்பதில்லை. எல்லாமே கணக்குதான். என்னென்ன வசதிகள் செய்து தருவதாகச் சொல்வாரோ, அந்த குவாலிட்டியில் இருந்து பின்வாங்குவதில்லை. வாசலுக்குப் படிகட்டுகிறேன் என்று அரசு இடத்தை ஆக்கிரமித்து ஒரு அடி கூடுதலாக்கி விற்பதில்லை. வரி ஏய்ப்பு செய்வதில்லை. இந்தக் குணங்கள் எல்லாத் தொழிலுக்குமே பொருந்தும். நேர்மையான பிஸினஸ் மட்டுமே அடுத்தகட்ட வளர்ச்சியைத் தரும். இது இல்லாவிட்டால், பிஸினஸ், ஒரு வட்டத்துக்குள்ளேயே சிக்கி சவலைப் பிள்ளையாகி விடும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார் சிவகுமார்.
தவிர, அவரது பிரமாதமான விளம்பர யுக்தி. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெரிய விளம்பரம் செய்து மக்களை ஈர்த்த நேரத்தில்... இவர் தன் விளம்பர வியூகத்தால் வாடிக்கையாளர்களை மடக்கிப்போட்ட விதமே தனி. தேடிப் போகிற வாடிக்கையாளர்களிடம் தன் சைட் பற்றிய தகவல்களை ஒரு பரிசுப் பொருள் போல, டேபிளில் வைத்துக் கொள்கிற வருடாந்திர காலண்டர் போல படு ரிச்சாக அடித்து வைத்திருப்பார். பொதுவாக, திட்டங்களைப் படித்ததும் அந்த பேப்பரை எட்டாக மடித்துப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இவரது இந்த காலண்டர் வடிவ விவரங்களைப் பார்த்ததுமே வீடு வாங்கியாகவேண்டும் என்று மனதளவில் தயாராகி விடுவார்கள். ஒவ்வொன்றும் 500 ரூபாய்க்குக் குறையாமல் வரும். 50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்கப் போகிறவருக்காக 500 ரூபாய் செலவழிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். ஆனால், வாங்குவாரா, இல்லையா என்று தெரியாமலே 500 ரூபாய் செலவழிப்பதற்கு பலரும் தயங்கிய நேரத்தில், சிவகுமாரின் சமயோசித திட்டம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிக் கொண்டு இருக்கிறது.
இ.சி.ஆர் ரோட்டில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து, தனித்தனி வீடுகளாகக் கட்டினார் சிவகுமார். அதற்கு அவர் வைத்த விளம்பர வாசகம் என்ன தெரியுமா..? ‘மனைவியைக் காதலி ஆக்குவீர்’, ‘வார விடுமுறையைக் கழிக்க... உங்கள் காதல் வீடு’ என்று ஆரம்பித்து, பக்கத்துக்குப் பக்கம் ரொமான்டிக் வாசகங்கள். கணவர் லேசாக யோசித்தாலும் மண்டையில் தட்டி வாங்க வைத்து விடுவார் மனைவி.
இப்படி விதவிதமான விளம்பர வாசகங்கள்... அதற்கான பெரிய செலவுகள் என்று செய்து குறுகிய காலத்திலேயே பெரிய பில்டர்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் இவர்.
‘ரியல் எஸ்டேட் விலை கிடுகிடுனு ஏறிட்டே போகுதே! இதோட எதிர்காலம் என்னவா இருக்கும் சிவகுமார்..?’ என்று கேட்டேன். ‘நல்லா இருக்கும் சார்! இந்த ஃபீல்டுக்கு வர்றதுக்கு முன்னே மார்க்கெட்டிங்ல வீதி, வீதியா அலைஞ்சு மக்களைச் சந்திச்சவன்ங்கிறதால, இதுபத்தி தீர யோசிச்சுட்டுதான் இறங்கினேன். எந்த ஃபீல்டு விழுந்தாலும் விழும். இந்த ஃபீல்டுக்கு மட்டும் ஒரு குறையும் இருக்காது!’ என்றார்.
‘எப்படி இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க?’ என்று கேட்டேன். ‘மற்ற எல்லாப் பொருட்களும் மனிதர்களால உருவாக்கப்படுகிறது. நிலம் மட்டும்தான் இயற்கையில் ஆனது. அதை நாம புதுசா உருவாக்க முடியாது. ஆக, இடத்தை விற்க... விற்க ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு வந்துக்கிட்டே இருக்கும். விலை ஏறிட்டே இருக்கும். இது வற்றாத லாபம் தர்ற தொழில் சார்!’ என்றார் நம்பிக்கையோடு.

No comments:

Post a Comment