Tuesday 3 November 2015

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

அசைவப் பிரியர்கள்… ஆடு, கோழிக்கு அடுத்தபடியாக விரும்புவது காடை இறைச்சியைத்தான். அதனால், காடைக்கு எப்போதும் விற்பனை வாய்ப்பு உண்டு. இதைச் சரியாகப் புரிந்துகொண்டு ஜப்பான் காடை வளர்ப்பில் ஈடுபட்டு பலர், நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன்.
காடைக் குஞ்சுப் பொறிப்பகத்தில், இன்குபேட்டரில் முட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ராஜேந்திரனைச் சந்தித்தோம்.
”முன்னாடி மாற்றுமுறை வைத்தியம் செய்துக்கிட்டிருந்தேன். அதுல பெருசா வருமானம் இல்லாததால, கூடுதல் வருமானத்துக்காக ‘லவ் ஃபேர்ட்ஸ்’ வாங்கி வளர்த்து விற்பனை செய்துக்கிட்டிருந்தேன். அதுலயும் நிறைய சிக்கல்கள். இதனால வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு மாறினேன். கூடவே, கறிக்கோழியையும் வளர்க்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல மனைவிக்கு வேலை கிடைச்சு, வெளியூருக்குப் போக வேண்டி இருந்ததால, அந்தத் தொழிலையும் விட்டுட்டேன்.
கொஞ்ச நாள் கழிச்சு, எங்க ஊருக்கே மாற்றலாகி வந்து, ஈமு கோழிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல 7 லட்சம் ரூபாய் நஷ்டமாகிடுச்சு. அதுல இருந்து மீளமுடியாம துவண்டு கிடந்தப்போதான், நண்பர் ஒருத்தர் ஜப்பான் காடை பத்திச் சொன்னார். நாமக்கல், கால்நடைக் கல்லூரியில இருந்து 50 காடைக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து, வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச முட்டைகள் மூலமா பெருக்கி, 200 தாய்க்காடைகளை உருவாக்கி, குஞ்சுகளை எடுக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு வளர்ந்த குஞ்சுகளை எங்க பகுதியில விற்பனை செஞ்சப்போ, நல்ல வரவேற்பு… நல்ல வருமானம். இதனால, தாய்க் காடைகளோட எண்ணிக்கையை ஐநூறா அதிகரிச்சிட்டேன். இப்போ 350 பெட்டை, 150 ஆண் காடை வெச்சுருக்கேன். இது மூலமா நாள் ஒன்றுக்கு 250 முட்டைகள் கிடைக்குது. முட்டைகளைப் பொரிக்க வெச்சு, ஒரு நாள் குஞ்சாவும், 28 நாள் வளர்ந்த காடையாவும் விற்பனை செஞ்சுக்கிட்டிருக்கேன்” என்ற ராஜேந்திரன், வளர்ப்பு முறைகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
இறப்பைத் தடுக்கும் கோலி குண்டுகள்!
‘காடை வளர்ப்புக்குக் குறைவான இடம் இருந்தாலே போதுமானது. ஆரம்பத்தில் காடையைக் கறிக்காக வளர்ப்பதுதான் நல்லது. கொஞ்சம் அனுபவம் கிடைத்த பிறகு, குஞ்சு உற்பத்தியில் இறங்கலாம். ‘நாமக்கல் கோல்ட்’ காடை ரகம், ‘நந்தனம் ஜப்பானியக் காடை’ என இரண்டு ரகங்கள் உள்ளன (இவர் நாமக்கல் காடையை வளர்க்கிறார்). ஒரு நாள் காடைக் குஞ்சுகளைத்தான் வளர்ப்புக்காக வாங்கவேண்டும். தீவனம் எடுக்க ஆரம்பித்துவிட்ட குஞ்சுகளை வாங்கினால், அவற்றை ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குக் கொண்டு செல்லும்போது இறப்பு விகிதம் அதிகமாகும். ஒரு நாள் குஞ்சுகளை புரூடரில் (5 அடி விட்டம், ஓரடி உயரத்துக்கு தகரத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு) விட்டு… அதன் மையத்தில், கங்கு நிரப்பிய பானையை வைத்து வெப்பமூட்ட வேண்டும். குஞ்சுகள் பானையை நோக்கி வந்தால்… நெருப்பை அப்படியே பராமரிக்கலாம். தகரத்தை நோக்கிச் சென்றால், சூடு அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து, நெருப்பைக் குறைக்க வேண்டும்.
முதல் ஒரு வாரத்துக்கு கடைகளில் கிடைக்கும் குஞ்சுத் தீவனத்தைக் கொடுக்கலாம். 100 குஞ்சுகளுக்கு தினமும் 150 கிராம் முதல் 250 கிராம் வரை தீவனம் தேவைப்படும். தினமும்  காலை, மாலை இரண்டுவேளைகளிலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி பஞ்சகவ்யா என்கிற கணக்கில் கலந்து ஒரு டப்பாவில் நிரப்பி, புரூடருக்குள் வைக்கவேண்டும். காடைக் குஞ்சு தண்ணீர் டப்பாவில் விழுந்து, இறக்க வாய்ப்புள்ளதால்… முதல் இரண்டு நாட்கள் வரை தண்ணீர் டப்பாவில் கோலி குண்டுகளைப் போட்டு வைக்க வேண்டும். அந்த வண்ணத்தைப் பார்த்து பயந்து, குஞ்சுகள் தண்ணீரில் இறங்காது.
நோய் வாராமல் தடுக்கும் பஞ்சகவ்யா!
ஒரு வார வயதுக்குப் பிறகு குஞ்சுகளை புரூடரிலிருந்து கூண்டுகளுக்கு மாற்றலாம். கறிக்காக வளர்க்கப்படும் குஞ்சுகள் என்றால், வளரும் பருவத்தில், 100 குஞ்சுகளுக்கு 2 கிலோ வரை தினமும் தீவனம் தேவைப்படும். முட்டைக்காக வளர்ப்பதென்றால், இதைவிட குறைவாகவே தீவனம் கொடுக்கலாம். காலை, மாலை இரண்டுவேளைகளிலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வீதம் பஞ்சகவ்யா கலந்து வைக்க வேண்டும். இப்படிப் பராமரித்தால், 28 நாட்களில் இருந்து 30 நாட் களில் ஒரு காடை, 200 முதல் 220 கிராம் எடை வந்துவிடும். இந்தசமயத்தில் விற்பனை செய்யலாம். பஞ்சகவ்யா கலந்த தண்ணீரைக் கொடுக்கும்போது காடைகளுக்கு நோய்த்தாக்குதல் குறைவதுடன், கறியும் சுவையாக இருக்கும்.
6 பெட்டைக்கு 3 ஆண்!
தாய்க்காடைகள், 50-ம் நாளுக்குமேல் முட்டை இட ஆரம்பிக்கும். அதன் பிறகு, ஒன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலம் இருக்கும் கூண்டில், 6 பெட்டைக்கு, 3 ஆண் காடை என்கிற கணக்கில், அடைத்து வைக்கவேண்டும். ஒரு கிலோ தீவனத்துக்கு
50 மில்லி பஞ்சகவ்யா என்கிற கணக்கில் கலந்து கொடுக்கவேண்டும். 100 காடைகளுக்கு தினமும் 2 கிலோ தீவனம் தேவைப்படும். ஒரு வயதுக்குப் பிறகு முட்டையிடும் தன்மை குறைவதால், ஓர் ஆண்டுக்குப் பிறகு தாய்க்காடைகளைக் கழித்து வரவேண்டும். இந்தக் காடைகளுக்கு அடைகாக்கும் தன்மை கிடையாது. அதனால், இன்குபேட்டர் மூலம்தான் பொரிக்க வைக்க வேண்டும். இன்குபேட்டரில் 17 நாட்களில் முட்டை பொரிந்து குஞ்சு வெளிவரும்.’
மாதம்  80 ஆயிரம்!
வளர்ப்பு முறை பற்றி விளக்கிய ராஜேந்திரன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார். ”350 பெட்டைகள் மூலமா நாளன்றுக்கு சராசரியா 250 முட்டைகள்னு ஒரு மாசத்துக்கு 7 ஆயிரத்து 500 முட்டைகள் கிடைக்குது. இதில் ஆயிரம் முட்டைகளை ஒரு முட்டை 2 ரூபாய் வீதம் விற்பனை செய்றதுல, 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.
6 ஆயிரத்து 500 முட்டைகளைப் பொரிக்க வெச்சா, சராசரியா 3 ஆயிரத்து 550 குஞ்சுகள் வரை கிடைக்கும். இதுல ஆயிரம் குஞ்சுகளை ஒரு நாள் குஞ்சுகளா விற்பனை செய்துடுவேன். ஒரு குஞ்சு 7 ரூபாய்னு விற்பனை செய்றதுல 7 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
மீதியிருக்கிற 2 ஆயிரத்து 550 குஞ்சுகளை 28 நாள் வரை வளர்த்து விற்பனை செய்றேன். இதை இறைச்சிக்காக வாங்குறாங்க. ஒரு காடை 28 ரூபாய்னு விற்பனை செய்றப்போ… 71 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கிது. ஆக மொத்தம், ஒரு மாசத்துக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதுல, தீவனம், பராமரிப்பு செலவு, மின்சாரக் கட்டணம்னு எல்லாச் செலவும்போக… மாசம் 30 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது” என்றார், மகிழ்ச்சியாக!
தொடர்புக்கு, ராஜேந்திரன், செல்போன்: 97861-02973

ஜப்பானியக் காடை வளர்ப்புக்குத் தடையில்லை!
கடந்த 2011-ம் ஆண்டின் இறுதியில் வனவிலங்குகள் சட்டப்படி காடை இனங்களைக் கொல்வதோ… வேட்டையாடுவதோ… தண்டனைக்குரிய குற்றம் என மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தடை விதித்தது. இது ‘ஜப்பானியக் காடை’ இனத்தை பண்ணைகளில் வளர்த்த விவசாயிகளுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தியது. இதனால், தற்போது, ஜப்பானியக் காடை ரகங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடைகள் உற்பத்தி ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர். பாபு, ”தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் ஜப்பானியக் காடை இனங்கள், வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை.
கால்நடைப் பல்கலைக்கழகம், ஜப்பானியக் காடை இனங்களை ஆராய்ச்சி மூலம் இனப்பெருக்கம் செய்து… நந்தனம் ஜப்பானிய இறைச்சிக் காடை, நாமக்கல் கோல்ட் இறைச்சிக் காடை என இரண்டு ரகங்களை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், பண்ணை களில் வளர்க்கப்படும் ஜப்பானியக் காடை ரகங் களுக்கும், இந்தியக் காடுகளில் இருக்கும் காடை இனங் களுக்கும் தொடர்பு இல்லை என தேவையான விளக்கங் களையும், ஆவணங்களையும் மத்தியச் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் சமர்பித்தார்கள். இதையடுத்து, 2013-ம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட அரசாணையில்… கோட்நிக்ஸ் ஜப்பானிக்கா (Coturnix japonica) என்கிற ஜப்பானியக் காடை (Japanese quail) இனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பண்ணையாளர்கள் நம்பிக்கையுடன் காடை வளர்ப்பில் இறங்கலாம். மேலும், சந்தேகங்கள் இருந்தால், உங்கள் பகுதிகளில் இருக்கும் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களை அணுகலாம்” என்றார்.