A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Tuesday, 22 July 2014
சூடான சிப்ஸ்... சுப்பர் வருமானம்
தொழில் |
சூடான சிப்ஸ்... சுப்பர் வருமானம்
நா கரிகம், டெக்னாலஜி என எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மாறாத விஷயம் உணவு சார்ந்த தொழில்கள்! சுவைகளிலும், குணங்களிலும் மாற்றங்கள் வந்தாலும், நொறுக்குத்தீனி உணவை வேண்டாம் என்று சொல்பவர்கள் இருக்கமுடியாது. குறைவான முதலீடு, எளிய தொழில்நுட்பம், நிறைந்த லாபம் என்ற அடிப்படையில் செயல்படும் சிப்ஸ் கடை என்பது எளிதாகத் தொடங்கக்கூடிய தொழிலாக இருக்கிறது. நேந்திரம், வாழைக்காய், உருளைக்கிழங்கு, பாகற்காய், மரவள்ளி போன்ற வகை வகையான சிப்ஸ்கள் தயாரித்து விற்கலாம். அதிலும் இனிப்பு, உப்பு, காரம், மசாலா போன்ற பலவிதமான சுவைகள் இருக்கின்றன.
இந்தத் தொழிலில் நாமே நேரடி விற்பனை செய்யவேண்டும் எனில் கடைக்கான இடம் ரொம்ப முக்கியம். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கடைவீதி போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களாகத் தேர்வு செய்யவேண்டும். மாலை நேரங்களில்தான் இவ்வகை பிஸினஸ் சூடு பிடிக்கும். அலுவலகம் முடிந்து வீடு திரும்புபவர்களைச் சுண்டி இழுக்க ஒரு டெக்னிக் இருக்கிறது.
மாலை சுமார் ஆறு மணி அளவில் தேங்காய் எண்ணெயில் நேந்திரம் வாழைக்காயைப் போட்டு பொரித்து எடுக்கும்போது அந்த வாசனையே போவோர் வருவோரைக் கவர்ந்து இழுத்துவிடும். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது புதிதாக வாடிக்கையாளர்கள் கிடைப்பதோடு, தினமும் ஃப்ரெஷ்ஷாகத் தயாரித்துக் கொடுக்கிறார்கள் என்ற எண்ணமும் உருவாகும்.
மக்களின் பார்வையில்படும் வகையில் சிப்ஸ் தயாரிக்க ஏதுவாக 100 சதுர அடி இடமிருந்தாலே தாராளம். இவ்வகை கடைகளுக்கு அலங்காரம் என்று பெரிதாக ஏதும் தேவையில்லை. தயாரித்த சிப்ஸ்களை அடுக்கி வைக்க ஒரு கண்ணாடி அலமாரி இருந்தாலே போதும்.
இந்தக் கடையின் முக்கியமான மூலதனம் என்றால், சிப்ஸ் சீவப் பயன்படும் கட்டையும் பெரிய வாணலியும்தான்! நல்ல உறுதியான கட்டையில் பொருத்தப்பட்ட ஸ்ட்ராங்கான கத்தித் தகடைப் பார்த்து வாங்கவேண்டும். சீவல் கத்தி கெட்டியாகவும், உறுதியாகவும் இருந்தால்தான் வாழைக்காயைச் சீராக, ஒரே அளவில், வடிவில் தேய்க்க உதவியாக இருக்கும்.
இவைதவிர, சிப்ஸ் எடுப்பதற்கான கரண்டி, எண்ணெய் வடிக்கும் பாத்திரம், மண்ணெண்ணெய் ஸ்டவ், அவசர தேவைக்கு ஒரு கேஸ் ஸ்டவ் போன்ற தயாரிப்புப் பொருட்களும் எடைபோட தராசு, பாலிதீன் கவர்கள், கேரிபேக் வகை கள் போன்ற வியாபாரத்துக்குத் தேவை யான பொருட்களும் தேவைப்படும்.
சிப்ஸ் தயாரிக்க ஒரு மாஸ்டர், ஒரு உதவியாளர் என இருவர் போதும். நிர்வாகத்தை நாமே கவனிப்பது ஆரம்ப காலத்துக்கு நல்லது. நடைமுறையில் உள்ளபடி கணக்குப் போட்டால், மாஸ்ட ருக்கு தினம் 175 ரூபாயும் உதவியாளருக்கு மாதம் 2,000 ரூபாயும் சம்பளமாகக் கொடுக்கலாம். ஊரைப் பொறுத்து இந்த சம்பள விகிதம் வேறுபடும்.
கொடுக்கும் காய்களை ஒரே சீராக தேய்த்துப் போடவேண்டும். சமமாக இல்லாமலும், ஒரு பக்கம் கனமாகவும், ஒரு பக்கம் மெல்லிதாகவும் இருந்தால், பொரிவதற்கு நேரம் எடுக்கும். ஒரே சீராகவும் எவ்வளவு மெலிதாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு விரைவாக பொரியும்... மணம் கமகமக்கும்.
இத்தொழில் அனைத்துத் தரப்பினரும் வாடிக்கை யாளர்களாக இருப்பதால் திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்கள், பண்டிகைகள், அலுவலக பார்ட்டிகள், பிக்னிக் செல்பவர்கள் என வாய்ப்புகள் எப்போதும் குவிந்தே கிடக்கின்றன. இதுதவிர குளிர், மழைக்காலங்களில் சுறுசுறுப்பாகவும், அதிக அளவிலும் விற்பனையாகும். எனவே, கோடைக்காலத்தில் வியாபாரத்தை ஆரம்பித்து பிஸினஸை கற்றுக்கொண்டால், மழைக்காலத்தில் தெளிவாகச் சம்பாதிக்கலாம்.
சிப்ஸ் தயாரிக்கும்போது நேந்திரம் என்றால் தேங்காய் எண்ணெயும், உருளைக்கிழங்குக்கு சூரியகாந்தி எண்ணெயும் பயன்படுத்தவேண்டும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எண்ணெய் இருக்கவேண்டும். ஒரே எண்ணெயில் இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தினால் சிப்ஸ் கருப்பாகிவிடும்.
ஒருமுறை தயாரித்த சிப்ஸ் இருபது நாட்கள் வரை தான் நன்றாக இருக்கும். அதனால் அன்றைய தேவையைப் பொறுத்து கூட்டியோ குறைத்தோ தயாரித்தால்தான் நஷ்டத்தைத் தவிர்க்கமுடியும்.
மூலப்பொருட்களைப் பொறுத்தவரை இருபது நாளுக்கானது கையில் இருப்பது அவசியம். பூர்வீகம் கேரளா என்பதால் நேந்திரம் வாழை தமிழகச் சந்தையில் குறைவாகத்தான் கிடைக்கும். உருளைக்கிழங்கில் ஆந்திராவின் குண்டூர் கிழங்கு சிறந்தது.
கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், பொரித்த சிப்ஸ் நொறுங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அத்துடன் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சுவையோடும் தருவதில்தான் வியாபார வெற்றியின் மொறுமொறுப்பே அடங்கியிருக்கிறது. வாடிக்கையாளர் அதிகமாவதும் விற்பனையும் ஒரேமாதிரி எல்லா நாளும் இருக்காது. வருமானம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இதனால் சராசரி விற்பனையின் மூலம்தான் லாபத்தைக் கணக்கிட வேண்டும்.
ஆரம்பத்தில் ஆர்டர் பிடிக்க கொஞ்சம் திணறினாலும் சில மாதங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு அவற்றைச் சமாளிக்கும் பொறுமைவேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 15 கிலோ சிப்ஸ் விற்பனையாக வேண்டும். அப்போதுதான், எல்லாச் செலவுகளும் போக 250 ரூபாய் முதல் 300 வரை லாபம் கிடைக்கும். இதுவே மழை, குளிர்காலம், பார்ட்டி ஆர்டர் என பிக்அப் பண்ணினால் ஒரு மாதத்துக்கு ரூபாய் 15,000வரை சம்பாதிக்க முடியும்.
கடையில் கூடுதல் வருமானம் பார்க்க குழந்தைகள் விரும்பும் பிஸ்கட், முறுக்கு போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை வாங்கி வைத்து விற்பதன் மூலம் கூடுதலாக நூறு ரூபாய் சம்பாதிக்கலாம். மாதம் 18-ல் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ள தொழில் இது!
|
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment