Monday 22 July 2013

2014:தொழிற்துறை எப்படி இருக்கும்?

13 முழுக்கவே தொழிற்துறை இந்தியா முழுக்க டல்லடிக்கவே செய்தது. இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்தது. ரூபாயின் மதிப்பு குறைந்ததால், வெளிநாடுகளிலிருந்து நேரடி முதலீடு குறைந்தது. உள்நாட்டிலும் அதிக வங்கி வட்டி, பொருளாதார சரிவு போன்ற காரணங்களால் தொழில் விரிவாக்கம் மற்றும் புதிய தொழில் தொடங்குவது குறைந்து போயிற்று. மூலப்பொருட்களின் விலை உச்சத்தில் இருந்தது, கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் என பல காரணங்களால் 2013 முழுக்கவே தொழிலதிபர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலைமையில் எதிர்வரும் 2014-ல் தொழிற்துறை எப்படி இருக்கும் என ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ஹஸ்முக்லால் வோராவிடம் கேட்டோம்.
''2014-ல் தொழிற்துறையில் வளர்ச்சி நன்றாகவே இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமைய உள்ள புதிய அரசாங்கம் தொழிற்துறை வளர்ச்சிக்கு  உதவி செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த வருடத்தின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைவிட இந்த வருடத்தின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந் திருக்கிறது.
மேலும், மந்த நிலைமையின் எதிர்வினை, வளர்ச்சியை நோக்கியதாகவே இருக்கும். தொழிற்துறை வளர்ச்சிக்கு முக்கியம் அரசின் ஒத்துழைப்பு. இது 2014-ல் கிடைக்கும் என்று நம்பலாம்.
புதிய ஆட்சி வந்தால் புதிய கொள்கைகள், புதிய வழிகாட்டுதல்கள் இருக்கலாம். இந்த எதிர்பார்ப்பும் இருப்பதால் புதிய முதலீடுகள், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஏற்றுமதி வர்த்தகத்தைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டு இறுதியைவிட இந்த ஆண்டு சிறப்பாகவே உள்ளது. இது அப்படியே தொடருவதற்குதான் வாய்ப்புகள் உள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் இப்போது சீரான நிலையில் இருக்கிறது.  எனவே, இதேநிலையில் பொருளாதாரம் தேர்தல் வரை நீடிக்கும் என்று நம்பலாம்.
தேர்தலுக்குப் பிறகான பொருளாதாரக் கொள்கையும் வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகவே இருக்கும். கூடுதலாக, இப்போதைய அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களும் பக்கபலமாக தொடரும். ஆகவே, 2014 தொழிற் துறைக்கு சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்'' என்று நம்பிக்கையோடு பேசி முடித்தார் அவர்.
சிஐஐ கோவை மண்டல துணைத் தலைவர் இளங்கோ, ''கீழ்மட்டம் வரை வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. இதனால் வேலைவாய்ப்புகள், உள்ளூர் பொருளாதார நிலைமைகள்கூட மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மாறும்.
2014-ல் முதல் ஆறு மாதங்கள் பொருளாதார நிலைமைகள் ரிஸ்க் நிறைந்ததாகவே இருக்கும். தேர்தலுக்குப் பிறகு அமையும் அரசைப் பொறுத்துதான் இந்த நிலைமைகள் சீராகுமா, இல்லையா என்று சொல்ல முடியும்'' என்றார் அவர்.
மோசமான நிலைமையிலிருக்கும் தொழிற்துறை 2014-ல் சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம்!
- நீரை.மகேந்திரன்.

No comments:

Post a Comment