Monday 22 July 2013

கிளாஸ் பெயின்டிங் தொழில், | Glass Painting in Tamil

லாபக் கண்ணாடி!
தொழில்

லாபக் கண்ணாடி!
ம க்களின் ரசனை ரொம்பவே மாறிவிட்டது. தங்கள் வீடுகளை அலங்கரிக்கவும், மற்றவர்களுக்குக் கொடுக்க வித்தியாசமான பரிசுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். கண்ணாடியில் வரையப்படும் ஓவியங்களை மிக ரசித்து வாங்குகிறார்கள். அதற்காக ஆகும் செலவுப் பணத்தைப் பற்றி யாரும் பெரிதாகக் கவலைப் படுவதில்லை. அதனால், கொஞ்சம் விரல் வளைத்து வேலை செய்யத் தெரிந்திருந்தால் போதும். கண்ணாடியில் கலைப் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்யும் தொழிலைச் செய்து பணம் பார்க்கலாம்.
கலைப் பொருள் என்றாலே பெரிய அளவில் ஓவியத்திறமை வேண்டுமே என்று யோசிக்க வேண்டாம். கண்ணாடியின் கீழே ஓவியங்களை வைத்து அப்படியே டிரேஸ் எடுக்கவேண்டியது தான், வேலை... அதனால் குறைந்தபட்ச திறமைகள் இருந்தால் போதும். நல்ல ஓவியத் திறமை இருந்தால் இன்னும் சம்பாதிக்கலாம்.
இந்தத் தொழிலைத் தொடங்க பெரிய அளவில் முதலீடு ஏதும் தேவையில்லை. இடம் பார்த்து அலையவேண்டியது இல்லை. வீட்டில் வைத்தேகூட தாராளமாகச் செய்யலாம்.
கண்ணாடி பீஸ்கள் எல்லா ஊரிலும் கிடைக்கும். பெரிய சைஸில் கண்ணாடி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். எந்த சைஸ் படத்தை டிரேஸ் அவுட் எடுக்கப் போகிறோமோ, அந்த அளவுக்கு கண்ணாடியைக் கட் பண்ணி தனியாக எடுத்துக் கொள்ளலாம். பலதரப்பட்ட அளவுகளில் கண்ணாடிகள் கிடைக்கின் றன. ஆனால், இதுபோல பெரிய சைஸ் கண்ணாடியை வாங்கி, தேவைக்கு ஏற்ப கட் செய்து செலவை மிச்சப்படுத்தலாம். கண்ணாடி கட் செய்யும் ஊசி வாங்க வேண்டி இருக்கும்.
அடுத்ததாக, படங்களை டிரேஸ் எடுப்பதற்குத் தேவையான பேப்பர்கள், கிளாஸ் பெயின்டிங் கலர் பேனாக்கள், பெயின்ட்கள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். எந்த ஓவியத்தை கண்ணாடியில் வரைய வேண்டுமோ அதை முதலில் டிரேஸ் பேப்பரில் அவுட்லைனாக அச்சு எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி அச்செடுத்த டிரேஸ் பேப்பரை, தேவைக்கு ஏற்ப சுருக்கியோ அல்லது பெரிதாக்கியோ ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சைஸில் படம் இருந்தால் போதும் என்றால் டிரேஸ் பேப்பரையே பயன்படுத்தலாம். ‘ஒரிஜினல் படத்தையே கண்ணாடிக்கு அடியில் வைத்து வரையலாமே!’ என்று உங்களுக்குத் தோன்றலாம். அப்படி வரையும் போது, சில சிறிய கோடுகள் சரியாக வராது.
அச்சு தெளிவாகவும் அழகாகவும் இருந்தால்தான் அடுத்தடுத்து ஆர்டர்கள் வரும். கை நிறைய காசும் வரும்.
அவுட்லைன் வரையப்பட்ட பேப்பரை, அளவாக வெட்டப் பட்ட கண்ணாடியின் பின்புறம் ஒட்டி வைக்கவேண்டும். அதன் பிறகு, அந்த அவுட்லைனை கண்ணாடியில் டிராயிங் பேனாவால் வரையவேண்டும். அதன் பிறகு, தேவைக்கு ஏற்ப கிளாஸ் பெயின்ட்களைப் பயன் படுத்தி ஓவியத்துக்கு வண்ணம் சேர்த்தால் கண்ணாடி ஓவியம் ரெடி!
5 X 4 இன்ச் கண்ணாடியின் விலை மூன்று ரூபாய்தான். டிரேஸ் பேப்பர், பெயின்ட் செலவு போன்றவை இரண்டு ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட, மூன்று மடங்கு லாபம் வைத்து 20 ரூபாய்க்கு விற்கலாம். அந்த மூன்று மடங்கு லாபம் என்பது உழைப்புக்குக் கிடைப்பது! டிரேஸ் எடுக்கும் பேப்பர், பேனா, பெயின்ட் எல்லாமே ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கக் கூடியவைதான்.
கடவுள் படங்கள் இப்போது நன்றாக விற்பனையாகின்றன. அதேபோல இயற்கைக் காட்சிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை ஒருமுறை டிரேஸ் எடுத்து வைத்துக்கொண்டால், அதை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘படம் வரையத் தெரிந்துவிட்டது. ஆனால், நம்மைத் தேடி வந்து வாங்குபவர்கள் யார்?’ என்ற கேள்வி எழலாம். முதலில் கைக்காசைப் போட்டு சில ஓவியங்களை ரெடிசெய்து கிஃப்ட் விற்பனை செய்யும் கடைகளில் கொடுத்து வைக்கவேண்டும். அதைப்பார்த்துவிட்டு ஆர்டர் கொடுப்பவர்களுக்கு வரைந்து கொடுக்கலாம். அல்லது கிஃப்ட் சென்டருக்கே விலை வைத்துக் கொடுக்கலாம்.
இதைவிட முக்கியமாக, போன் நம்பர் கொண்ட விசிட்டிங் கார்ட் அடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை முக்கியமான கடைகளில் கொடுத்து வைத்தால், நல்ல வாய்ப்புகள் வரும்போது தகவல் பெற்று படங்களை வரைந்து கொடுக்கலாம்.
வாடிக்கையாளர்களில் 90% பெண்களாகத்தான் இருப்பார்கள். அதனால், அவர்களைக் கவரும் வகையில் ஓவியங்களை உருவாக்கவேண்டும். வெறுமே படம் வரைந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஃபிரேம் செய்தும் கொடுத்தால் அதில் கூடுதலாக வருமானம் கிடைக்கும். ஃபிரேம் செய்த 30ஙீ18 இன்ச் படங்களை அதிகபட்சம் 4,000 ரூபாய்வரை கூட விற்கமுடியும். ஏனென்றால், இதில் கலைக்குதான் மரியாதை!
அக்கம்பக்கத்து ஊர்களாக இருந்தாலும் ஆர்டர் எடுத்து தெர்மாகோலில் வைத்து பேக் செய்து கூரியரில்கூட அனுப்பலாம். இவ்வளவு ஏன், தொழில் சூடு பிடித்துவிட்டால், வெளிநாட்டு ஆர்டர்களைக்கூட எடுத்துச் செய்யலாம்.

No comments:

Post a Comment