Thursday 22 July 2010

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில்
 

பிஸினஸ் என் காதலி! 
பி ஸினஸில் ஜெயிக்கவேண்டும் என்பது மட்டும் மனதில் இருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்.
சென்ற வாரம் என் நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். மிடில் கிளாஸ் நண்பர் அவர். காலிங் பெல் ஒலிக்க... வாசலில் ஒருவர். கை நிறைய புத்தகங்கள். சர்வே எடுக்கிற மாதிரி பேச்சை ஆரம்பித்தார். ‘‘மாசம் எவ்வளவு ரூபாய்க்கு மளிகை சாமான் வாங்குவீங்க... ஜவுளிக்கு ஒதுக்குகிற தொகை... நகை வாங்கும் ஐடியா இருக்கிறதா..?’’ என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டார்.
‘‘உங்களுக்கு என்ன வேணும்... இதெல்லாம் எதுக்குக் கேட்கறீங்க?’’ என்று நண்பர் கேட்டார். ‘‘நீங்கள் அடிக்கடி பொருள் வாங்கும் பிரபலமான கடைகளோட தள்ளுபடி கூப்பன்கள் உள்ள புக்தான் இது! ஒரு கடைக்கு ரெண்டு, மூணு கூப்பன் இருக்கு. 3 மாசம் வரை இதைப் பயன்படுத்திக்கலாம். உதாரணத்துக்கு, நீங்க மாசம் 2,000 ரூபாய்க்கு மளிகை சாமான் வாங்கறதா வெச்சுக்கிட்டாலும் 10 % தள்ளுபடியா 200 ரூபாய் கிடைக்கும்!’’ என்றார்.
நண்பர் ஆர்வமாகிவிட்டார். ‘‘இந்த புக் ஃப்ரீயா?’’
‘‘இல்லே சார்! 50 ரூபாய். ஆனா, உங்களுக்கு குறைந்தபட்சம் 1,500 ரூபாய் லாபம் தர்ற கூப்பன்கள் இதிலே இருக்கு!’’
நண்பர் வாங்கிப் புரட்டிப் பார்த்தார். அவர் பொருட்கள் வாங்கும் கடைகள் பரவலாகத் தெரிந்தன. உடனே 50 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டார். புத்தக ஆசாமி அடுத்த வீட்டு காலிங் பெல்லை அடிக்கிற சத்தம் கேட்டது.
யோசித்துப் பாருங்கள். வீடு, வீடாக இப்படி கேன்வாஸ் செய்கிற நபர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தள்ளுபடி கூப்பன் அனுமதி பெற அணுகும்போது என்ன சொல்லி இருப்பார்..? ‘என்னிடம் 50,000 வாடிக்கையாளர் கொண்ட நெட்வொர்க் இருக்கிறது. அவர்களை உங்கள் கடையில் பொருள் வாங்க வைக்கிறேன். இதற்காக எனக்கு நீங்கள் பணம் எதுவும் தர வேண்டாம். வருகிற கஸ்டமர்களுக்கு நீங்கள் சிறப்புச் சலுகை தந்தாலே போதும்!’’ என்று கோரிக்கை வைத்திருப்பார்.
புதிய வாடிக்கையாளர் வந்தால் கடைக்காரருக்கு கசக்கவா போகிறது..? இதனால், அவருக்குக் கைப்பொருள் இழப்பு ஏதுமில்லை! தன்னால் முடிந்த தள்ளுபடியைச் சொல்லிவிடப் போகிறார். இப்படித்தான் அந்தத் தள்ளுபடி கூப்பன் புத்தகம் தயாராகி இருக்கும்.
சில பிரபல போன் நிறுவனங்கள், கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரைக் கவர, இதே ஸ்டைல் கிஃப்ட் வவுச்சர்களைக் கொடுப்பதுண்டு. அது பெரிய லெவல். மக்களுக்குப் பயன்படும் இதுபோன்ற சாதாரணக் கடைகளைக் குறிவைத்துச் செயல்பட்டால் சின்ன ஐடியாவில் பெரிய லாபம் கிடைக்கும்!
3 மாதத்துக்கு 10,000 கூப்பன் புத்தகங்களை விற்க ஒருவரால் முடியும். பெரிய செலவு என்று பார்த்தால், கடைக்காரர்களிடம் பேச அலைந்ததில் உண்டான செலவும் கூப்பன் புத்தகம் அடித்த செலவும்தான். அடித்த புத்தகங் களை கமிஷன் அடிப்படையில் ஆள் வைத்தும் விற்பனை செய்யமுடியும். மூன்றே மாதத்தில் ஐந்து லட்ச ரூபாய்க்குக் குறையாமல் டர்ன் ஓவர் பார்த்துவிட முடியுமே!
கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், வாகன விற்பனை என உங்கள் பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் இந்த கூப்பன் ஐடியாவை முயற்சித்துப் பார்க்கலாமே! மூலதனம் இல்லாமல் ஐடியாவை வைத்து பண்ணும் இதுபோன்ற தொழிலில் நேர்மை, ஆட்களை வைத்து வேலை வாங்கும் திறமை, வாடிக்கையாளர் நம்பிக்கை இதெல்லாம் மிக முக்கியம்.
சமூகத்தை, சுற்றுப்புறத்தை வைத்து காசு பண்ணும் இந்த வித்தையில் ஜெயித்த வர்கள் ஏராளம். அதில் ஒருவர் தான் இதோ இந்தப் படத்தில் என்னுடன் இருக்கிறார்.
மூளையைப் பயன்படுத்துவதில் கோவைக் காரர்கள் எப்போதுமே கெட்டிதான். சிறிய முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இன்று கோவையைத் தாண்டி சென்னைவரை பல கிளைகள் விரித்து வியாபித்திருக்கின்றன. அதன் உரிமையாளர் மகாதேவ ஐயரிடம் கற்ற வித்தையை அவருடைய இரு மகன்கள் கிருஷ்ணனும், முரளியும் அசத்தலாகச் செயல்படுத்துகிறார்கள்.
‘நண்பர்கள் கைதூக்கி விட்டதுதான் எங்கள் மூலதனம். அவர்களின் வாய்வழித் தகவலாலேயே வளர்ந்தவர்கள் நாங்கள்’ என்பார் முரளி.
எங்கெல்லாம் சந்தோஷம் இருக்கிறதோ, அங்கெல்லாம் இருக்கிற இனிப்புத் தொழில் பண்ணுகிற முரளி, இன்றைக்கும் சொல்வது, ‘பேங்க் பேலன்ஸ் முக்கியமே இல்லை. தயாரிக்கிற பொருளோட தரம் நல்லபடியா இருக்கா?ன்றதுதான் முக்கியம்’ என்பார். அந்த அளவுக்கு அவருடைய தந்தை, ‘தப்பு வந்துடக் கூடாது. தப்பு வந்தா நம்பிக்கை போய்டும்’ என்று சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறார்.
ஒருமுறை இனிப்பு பூந்தி போட்டுக் கொண்டிருந்தார் சமையலறை ஊழியர். அந்தக் கரண்டி, காராபூந்தி போடப் பயன்படுவது. இரண்டுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை என்றாலும், அது நெய்யில் மட்டுமே விழுந்து எழும். காராபூந்தி கரண்டி எண்ணெயில் போட்டு எடுப்பது. அதுவரை இரண்டு டின் நெய் செலவில் சில கிலோக்கள் தயாராகி இருந்தது பூந்தி. கவலையோடு அந்த ஊழியரைப் பார்த்தாராம் முரளியின் அப்பா.
‘கொட்டிடு... எல்லாத்தையும் கொல்லையிலே கொட்டிடு!’ என்று மட்டும் சொல்லிவிட்டு அந்த இடத்தைக் காலி செய்திருக்கிறார். ‘என்னதான் நெய்யில் சுட்டாலும், காராபூந்தி கரண்டியின் எண்ணெய் வாசம் ஒட்டிவிட்டால், வாடிக்கையாளர் நம்பிக்கை போய்விடுமே’ என்ற கவலை! எவ்வளவு நஷ்டம் வந்தாலும் தாங்கத் தயாராக இருந்த அந்த மனசுதான், அவரது நிறுவனத்தை இத்தனை தூரம் வளர்த்து விட்டிருக்கிறது. இன்றும்கூட, ஒவ்வொரு கிச்சனின் பின்புறமும் ஒரு குழி இருக்கிறதாம்.
செய்யும் வேலை என்பது தவம் மாதிரி என்று இருக்கிற இவர் போன்றவர்களால்தான் நினைத்த இலக்கை எட்டமுடியும். பிஸினஸ் சிறியதா, பெரியதா என்பதைப் பார்த்து முடிவு செய்கிற விஷயமல்ல இது. வியாபாரம் என்பது காதலி மாதிரி. அதை எனக்கே எனக்கானது என்று விட்டுக் கொடுக்காத உரிமையோடு அன்பாகப் பார்த்தால், அது நம்மை உயரே, உயரே கொண்டு போகும். இதற்கு அடிப்படை, தெளிவான திட்டமிடுதல்தான். நம் இலக்கு இது... அதைத் தொட நாம் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் இவை என்பதில் நாம் எப்போதுமே படு தெளிவாக இருக்கவேண்டும். முரளியும் சென்னை வந்தபோது அதைத்தான் செய்தார்.
‘1996-ல் சென்னையில் கடை ஆரம்பித்தபோது, இவ்வளவு பெரிய ஊரில் எப்படி நம் தயாரிப்பைத் தனித்து தெரிய வைப்பது என்ற குழப்பமும் பயமும் வந்தது. தயாரிப்புச் செலவைவிட, விளம்பரத்துக்கு அதிகம் செலவழிப்பதுதான் சரி என்று தோன்ற, மக்களை ஈர்க்கும் விதமாக ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால், அரைக்கிலோ இலவசம் என்று அறிவித்தோம். அது நன்றாக ஒர்க் அவுட் ஆனது. அந்த வெற்றி ஃபார்முலாவை ஒவ்வொரு புது பிராஞ்சின் போதும் இன்றும் பின்பற்றுகிறோம். சமீபத்தில் பெட்ரோல் பங்கில் ஒரு பிராஞ்ச் தொடங்கியபோது இதையே வேறு விதமாக்கி, ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால், இரண்டு லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ என்று அறிவித்தோம். நல்ல வரவேற்பு இருந்தது’ என்று சொல்கிறார் முரளி.
இதுவும் ஒருவகையான நீண்டகால வாடிக்கையாளர் ஈர்ப்பு டெக்னிக்தான். சாம்ப்ளிங் என்பதும் ஒருவகை முதலீட்டுச் செலவுதானே! இன்று சென்னையில் மட்டுமே 15 கிளைகள் திறக்கிற அளவு இனிப்பால் ஈர்த்திருக்கிறார் முரளி.
தங்களை வாழவைத்த இந்தச் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வருடம் முழுக்க பல விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார் முரளி. அங்கு வருகிற மக்களெல்லாம் இதை நடத்துகிற ‘கிருஷ்ணா’வை வாயார வாழ்த்தும்போது பரவும் பெயர் தனி பப்ளிசிட்டி. பாட்டில் சைஸில் இருக்கிற தொழிலை, அண்டா அளவுக்கு மாற்றும் வித்தை இதுதான்.
பிள்ளையார், என் பிஸினஸ் குரு!
மு ரளி ஒரு விநாயகர் ரசிகர். சின்னதும் பெரியதுமாக அவரது அறை முழுக்க 2,500 சிலைகள் வரை சேர்த்து வைத்திருக்கிறார். ‘விநாயகரோட குணம் ஒவ்வொரு பிஸினஸ் மேனுக்கும் இருந்தால் எங்கேயோ போய் விடலாம்!’ என்று ஜாலியாகச் சொன்ன முரளி, அதுபற்றி விளக்கவும் ஆரம்பித்தார்.
‘‘விநாயகர் ரொம்ப சமத்து. உலகத்தின் முழு முதல் கடவுளா இருந்தாலும் ‘ஆவா கயாமி’ன்னு சொல்லி மஞ்சளைப் பிடிச்சு வெச்சா, வந்து இறங்குவார். பூஜைகளைப் பண்ணி, கோரிக்கை வெச்சு, கொழுக் கட்டை தந்தா சமத்தா சாப்பிட்டுட்டு ‘யதாஸ்தானம்’னு சொன்னவுடனே கிளம்பிப் போய்டுவார். நாம் நினைக்கிற வடிவத்திலே உருவத்திலே அவரைப் பார்க்க முடியும். இப்படியான எளிமையான முதலாளி அவர்.
அவரைத் தேடி எங்கேயும் அலைய வேண்டியதில்லை. நூறடிக்கு ஒரு கோயில்ல இவரைப் பார்க்க முடியும். ‘பார்ட்டிக்கு செக் கொடுத்திருக்கேன். பார்த்துக்கோப்பா!’னு வேண்டுதலை வெச்சுட்டுப் போய்ட்டே இருக்கலாம். இந்தச் சுலபமான சந்திப்புதான் பிஸினஸ் மேனுக்குத் தேவைப்படற பலம்.
வியாபாரிக்கு ஞாபக சக்தி ரொம்ப அவசியம். அது விநாயகருக்கு உண்டு. அவர் அவதாரமான யானையின் நினைவு சக்திக்கு ஈடு இணை ஏது..? அவர் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்.
பொறுமை முக்கியம். நாலு வயசுப் பையன் ‘உட்காரு!’னு உத்தரவு போட்டாலும் யானை உடனே கீழ்ப்படியும். பத்துப் பேரைத் தூக்கிப் போட்டு பந்தாடற சக்தி உள்ள யானைக்கு இருக்கிற அந்தப் பொறுமை, சகிப்புத் தன்மை... வியாபாரிக்கு அவசியம்.
கம்பீரம்தான் முதலாளிக்கு அழகு. எத்தனை பேர் இருந்தாலும் ஒரு சிறந்த பிஸினஸ்மேன் தனியா தெரிவார். ஒரு நடையிலே, அந்த ஸ்டைலிலே அது வெளிப்பட்டு விடும். விநாயகர் (யானை)கிட்டே அந்த ஸ்டைலைப் பார்க்க முடியும்.
பாசம். கூட இருக்கிறவங்களை அணுசரிச்சு, அரவணைச்சுப் போற அந்த அன்பு, விநாயகர் கண்ணைப் பார்த்தீங்கன்னா தெரியும். சின்னக் கண்ணிலே அம்மாவோட பாசத்தைச் சொல்ற அற்புதம் அவர்கிட்டேதான் இருக்கு!’’ - தன் குரு பற்றி சிலாகித்துச் சொல்கிறார் முரளி.

No comments:

Post a Comment