Thursday 22 July 2010

தொழில் தொடங்கலாம், வாங்க!

தொழில் தொடங்கலாம், வாங்க!
தொழில்
 

பச்சக்கென்று ஒரு வருமான வாய்ப்பு!
வா கனங்கள் பெருகிவிட்டன என்பதற்கு பரபரப்பான சாலைகளும், அதில் பறக்கும் மக்களுமே சாட்சி! வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த நேரத்துக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டும் தொழில்!
எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தன் வண்டி மட்டும் தனி அடையாளத்துடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் வாகன உரிமையாளர்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதற்காக வண்டியில் கூடுதலாக அலங்காரம் செய்ய ஆசைப் படுகிறார்கள். அதனால், இந்தத் தொழிலுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
ஒரு கம்ப்யூட்டர், ஸ்டிக்கர் கட்டிங் மெஷின், கொஞ்சம் ஐடியா - இவை இருந்தால் போதும். இந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம். கம்ப்யூட்டர் என்பது 20 ஆயிரம் ரூபாயிலேயே கிடைக்கும். ஸ்டிக்கர் கட் பண்ணிக் கொடுக்கும் பிளக்கர் மெஷின் 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். கம்ப்யூட்டர் அறிவு கொஞ்சம் இருந்தால் போதும். கட்டர் மெஷின் கொடுப்பவர்களே ஸ்டிக்கர் டிஸைனுக்கான சாஃப்ட்வேர்களையும் கம்ப்யூட்டரில் நிறுவிவிடுவார்கள். அதனால், சாஃப்ட்வேர் செலவு ஏதும் வராது. அதுதவிர, ஆரம்ப கட்ட செலவுகளுக்காக 5,000 ரூபாய் வைத்துக்கொண்டால் போதும். ஆக, 50 ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் ஸ்டிக்கர் ஒட்டும் தொழிலைத் தொடங்கிவிடலாம்.
கடை வைப்பதற்கு பெரிய அளவில் இடமோ, ஷோரூமோ தேவையில்லை. கம்ப்யூட்டரையும், கட்டிங் மெஷினையும் வைக்கக்கூடிய அளவுக்கு இடம் இருந்தாலே போதும். கடையின் அளவு முக்கியமல்ல... அதை எந்த இடத்தில் வைக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம். ஆட்டோ மொபைல் ஷோரூம்கள், ஸ்பேர் பார்ட்ஸ் அதிகமாக விற்கும் ஏரியா, மெக்கானிக்குகள் அதிகம் இருக்கும் பகுதி போன்ற இடங்களிலும், வாகனங்களைப் பதிவு செய்யும் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அருகிலும் கடை வைக்கலாம்.
ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடைகள், மெக்கானிக் ஷாப்கள் போன்ற இடங்களில் கடையைப் பற்றிச் சொல்லும் சின்ன நோட்டீஸ்களை விநியோகித்து வைத்தால், அவர்கள் நல்ல வாய்ப்புகளைச் சொல்வார் கள். அடுத்ததாக என்னென்ன மாடல்களில் எல்லாம் ஸ்டிக்கர் இருக்கிறதோ, அதை எல்லாம் மக்கள் பார்வையில் படும்படி கடைக்கு வெளியே ஒட்டி வைக்க வேண்டும். அதைப் பார்த்து பலரும் கடையை நாடி வர வாய்ப்பிருக்கிறது.
நல்ல ஆட்டோமொபைல் பொருட்கள் விற்பனை ஆகும் ஏரியா என்றால் ஒரு நாளைக்கு இருபதிலிருந்து முப்பது டூவீலர்களுக்கும், பத்திலிருந்து இருபது கார்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டித் தரமுடியும். இதர பகுதிகள் என்றால் குறைந்தது பத்து டூ வீலர்களுக்காவது ஸ்டிக்கர் ஒட்ட வாய்ப்பு கிடைக்கும். இந்த இடங்களில் ஏற்கெனவே பலரும் இதேபோன்ற கடைகள் வைத்து இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது டிஸைன்களை அறிமுகம் செய்து, போட்டியைச் சமாளிக்கலாம்.
குறைந்தபட்சம், நான்கு வண்டி களுக்கு ஒட்டக்கூடிய பெரிய ‘ஒளிரும் ஸ்டிக்கர் ஷீட்’ 30 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதே அளவு, சாதாரண கலர் ஸ்டிக்கர் ஷீட்’ 8 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த இரண்டு வகைகளை சேர்த்து ஒட்டினால் 100 ரூபாய் வரை வருமானம் பார்க்கமுடியும். இரண்டு சக்கர வண்டியின் முன் மற்றும் பின் உள்ள நம்பர் பிளேட் ஒட்டித்தருவதற்கு 30 ரூபாய் வசூலிக்கலாம். கார் என்றால் நூறு ரூபாய்வரை பெறலாம். பைக்கின் பக்கவாட்டில் டிஸைன் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு 100 ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். கார் வைத்திருப்பவர்கள் 250 ரூபாயில் இருந்து 500 வரை செலவு செய்கிறார்கள்.
இப்போது புதுப்புது மாடல்களில் ஸ்டிக்கர்கள் வந்திருக்கின்றன. சில வாடிக்கையாளர்கள் அரசியல் தலைவர்களின் போட்டோவை ஒட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய போட்டோவையேகூட வண்டியில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொள்ள விருப்பப்படுவார்கள். அப்படியான உருவத்தை நாமே ஸ்டிக்கர் செய்துதந்து கூடுதலாக வசூலிக்கலாம்.
அதோடு போலீஸ், அட்வகேட், டாக்டர் போன்ற துறை சார்ந்த ஸ்டிக்கர் களையும் வாடிக்கையாளர்கள் விருப்பப்படும் வகையில் வாசகங்களையும் கொடுத்து அசத்தி, கூடுதல் கஸ்டமர்களைப் பிடிக்கலாம்.
இப்படி வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருமானம் பார்ப்பதோடு, அரசு விழிப்பு உணர்வு பிரசார ஸ்டிக்கர்கள், கடைகளுக்கான விளம்பர ஸ்டிக்கர்கள் போன்றவற்றை அச்சிட்டுக் கொடுப்பதிலும் லாபம் பார்க்கலாம். இவற்றைத் தவிர கம்பெனி பெயர், வீட்டின் முன்னால் வைக்கும் பெயர் பலகைகள் எழுதுதல், ஸ்கூல் பைகளில் ஸ்டிக்கர்களை பிரின்ட் செய்து தருவது போன்ற ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
செலவு என்றால் கடை வாடகை, ஒரு ஆளுக்கு சம்பளம், மின்சாரக் கட்டணம், போன் பில் இவை மட்டும்தான். குறைந்தது ஐயாயிரம் ரூபாய் இதற்கு செலவு ஆகும் என்று வைத்துக்கொண்டால் கூட ரூபாய் 15,000 வரை வருமானம் பார்க்கமுடியும்.
கீ செயின்கள் சின்னச் சின்ன பொம்மைகள், காரில் வைக்கிற அழகுப் பொருட்களை வாங்கி வைத்தால் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.
என்ன... இது டக்கர் பிஸினஸ்தானே!

No comments:

Post a Comment