Thursday 22 July 2010

செங்கல் சூளை செமத்தியான லாபம்!

செங்கல் சூளை செமத்தியான லாபம்!

தொழில்

செங்கல் சூளை செமத்தியான லாபம்!
தி னம் தினம் ஏதாவது ஒரு இடத்தில் பூமிபூஜை போடப்படுகிறது... கட்டட வேலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. கட்டடங்களுக்கான தேவை தீரப் போவ தில்லை. அதனால், கட்டுமானத்தின் அடிப்படைத் தேவையான செங்கற்களைத் தயாரிக்கும் தொழில் ஏறுமுகத்தில்தான் இருக்கும். சொந்தமாக கொஞ்சம் இடம் இருந்தால் இந்தத் தொழிலில் ஜொலிக்கலாம்.
‘‘கொஞ்சம் நெளிவுசுழிவுகளோடு தொழில் நடத்தும் எண்ணம் உள்ளவர்களுக்கு ஏற்ற தொழில் இது’’ என்றபடி செங்கல் சூளைக்கான தேவைகளைச் சொல்லத் தொடங்கினார் இந்தத் தொழிலில் முப்பது வருடங்களாக ஈடுபட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த ஜேக்கப்மனோகர்.
‘‘செங்கல் சூளை அமைப்பது என்பது கொஞ்சம் அதிக முதலீடு தேவைப்படும் தொழில். சூளையை அமைப்பதற்கே சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை தேவைப்படும். சூளையை அமைப்பதற்கு முப்பது, நாற்பது சென்ட் நிலம் தேவைப்படும். சொந்த நிலமாக இருந்து மண் வாகும் நன்றாக இருந்துவிட்டால் பாதி சிரமம் குறைந்துவிடும்.
வாடகைக்கு இடம் பிடிக்கும்போது குறைந்த பட்சம் நான்கு வருடங்களுக்காவது ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், லட்சரூபாய் செலவு செய்து அமைக்கும் சூளை குறைந்தது மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குப் பயன்படும். இடையில் நிலத்தை விடவேண்டிய சூழல் வந்தால் நமக்குத்தான் நஷ்டம்.
செங்கற்களை அடுக்கி, சரியான முறையில் தீமூட்டி, சுட்டெடுக்கும் விதத்தில் மூன்று அடுக்கு களைக் கொண்ட அமைப்புதான் சூளை.
அடுத்து செங்கற்களை உருவாக்கும் இரும்பு பெட்டி (அச்சு) செய்து வாங்கிக் கொள்வது, மண்வெட்டி, சட்டி, ஓலை, தார்ப்பாய் போன்ற தளவாடச் சாமான்களை வாங்குவது, தண்ணீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைப்பது போன்ற அடிப்படைத் தேவைகளைச் செய்யவேண்டும். இவை எல்லாமே ஒருமுறை செய்யப்படும் முதலீடுதான். இவற்றைக்கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு செங்கற்களைத் தயாரிக்கமுடியும்’’ என்ற ஜேக்கப், ‘‘பொதுவாக செங்கல் சூளைக்கு வேலைக்கு வருபவர்களுக்கு நிறைய முன்பணம் கொடுத்துத்தான் அழைத்து வர வேண்டியிருக்கிறது. அதில் கொஞ்சம் கவனமாக இருந்து தொழிலாளிகளைச் சரியாக பிடித்துவிட்டால், வேறு பிரச்னை களில்லை’’ என்று சொல்லிவிட்டு, அடுத்து செங்கல் தயாரிப்புப் பற்றி பேச ஆரம்பித்தார்.
‘‘சூளையில் அதிகபட்சமாக 50 ஆயிரம் செங்கற்களைத் தயாரிக்கமுடியும். அதற்குக் குறைவாகத் தயாரிக்கும்போது எரிபொருளும் வீணாகத்தான் செய்யும். அதனால், ஒரே நேரத்தில் 50 ஆயிரம் செங்கற்களைத் தயாரிக்கத் திட்டமிடுவதுதான் லாபகரமானது.
செங்கற்களை உருவாக்க முதலில் தேவைப் படுவது மண்கலவை! ஒரு சூளை செங்கற்களை உருவாக்க குறைந்தபட்சம் 50 டெம்போ மண் தேவைப்படும்! அதில் 10 வேன் வண்டல் மண்ணாக இருக்கவேண்டும். அதற்குதான் செங்கலை உறுதியாக இறுக்கிப்பிடிக்கும் தன்மை உண்டு. மீதியுள்ளவை சாதாரண மண்ணாக இருந் தால் போதும். ஒரு வேன் மண்ணுக்கு 300 ரூபாய் ஆகும். இது ஊருக்கு ஊர் மாறுபடலாம்.
அடுத்தது, சரியான விகிதத்தில் இந்த மண்ணைக் கலந்து, தண்ணீர் விட்டு பதமாக்கி, ஒருநாள் அப்படியே போட்டுவிட வேண்டும்! அடுத்தநாள் மீண்டும் தண்ணீர் சேர்த்து பதமாகக் குழைத்து அச்சில் போட்டு ஈர செங்கல் களாக தரையில் போட வேண்டும். ஒரு அச்சில் மண்ணை அடைத்து தரையில் தட்டினால் மூன்று செங்கல் கிடைக்கும். இப்படி 1,000 செங்கற்களை உருவாக்கித்தர தொழிலாளிக்கு கூலி 260 ரூபாய்.
ஈர செங்கல் இரண்டு நாட்கள் நன்றாக காற்றில் உலரவேண்டும். பின்னர் சூளையில் அடுக்கி, சுட்டெடுக்க வேண்டும். இதற்கு தென்னை, பனை, ரப்பர் மர விறகுகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் சூளையில் இருந்து அப்படியே செங்கற்கள் லாரியில் ஏற்றப்பட்டுவிடும்’’ என்றார்.
எல்லாம் சரியாக இருந்து வெயிலும் நமக்கு சாதகமாக இருந்தால் பதினைந்து நாட்களிலேயே ஒரு சூளை செங்கற்களை உருவாக்க முடியும். செங்கல் தயாரிப்பின்போது, மழை பெய்தால், நஷ்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல சூளையின் அடியில் அடுக்கப்படும் செங்கற்கள் பயன்படுத்த முடியாமல் போகும். அதைத் தவிர்த்துதான் விற்கமுடியும்.
பொதுவாக 1,000 செங்கற்கள் 1,800 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விலை போகும். ஒரு சூளை செங்கற்களுக்கான செலவாக 75 ஆயிரம் ரூபாய் போனாலும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை லாபம் கிடைக்கிறது. இதுவே, 15 நாட்களில் ஒரு சூளை செங்கற்களை உருவாக்கும்போது ஒரு மாதத்துக்கு இரண்டு சூளை வைத்தால் 60 முதல் 80 ஆயிரம் ரூபாய்வரை லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
‘சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன், மின்சார இணைப்பு, தொழில் சம்பந்தமான வரி’ போன்றவற்றில் அரசு பல சலுகைகளைத் தருகிறது. எனவே செங்கல் சூளை... செம லாபம் தான்!
மா வட்ட தொழில் மையத்தில் செங்கல் சூளை ஆரம்பிக்க பதிவு செய்து, பஞ்சாயத்தில் தொழில் தொடங்க அனுமதி (லைசென்ஸ்) பெற வேண்டும். கடன் பெறுவதற்காக, செங்கல் சூளை தொழில் தொடங்குவதற்கு ஆகும் செலவுகள், தொழிலில் கிடைக்கும் லாபம் குறித்த ஒரு மினி ப்ராஜெக்டை, அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒப்படைத்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சொத்து ஜாமீனாக கடன் பெற விரும்பும் தொகையைப் போல இருமடங்கிலான, அரசு மதிப்பீட்டிலான நம்முடைய சொத்துக்களை காட்டவேண்டும். அடுத்து, செங்கல் சூளை ஆரம்பிக்க தேவையான சொந்த இடத்தையோ, அல்லது குறிப்பிட்ட வருடத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கும் இடத்தையோ அதிகாரிகள் பார்வையிட்டு கடன் தருகிறார்கள்.
கடன் தொகையை 3 வருடத்திலிருந்து 5 வருடங்களுக்குள் அரசு நிர்ணயிக்கிற வட்டி விகிதத்தில் திரும்பச் செலுத்தவேண்டும். இந்தத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், கடந்த காலங்களில், முதன் முதலில் தொழில் தொடங்குபவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தொகையை மானியமாக அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் இப்போது, இந்தத் தொழிலில் மானியத் தள்ளுபடி தரப்படுவதில்லை! சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய் வரை கடனாக பெறலாம். குடிசைத் தொழில் ஆதலால், இந்த தொழிலுக்கு அரசாங்கம் விற்பனை வரி விலக்கு தருகிறது.

No comments:

Post a Comment