Thursday, 22 July 2010

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

நேர்மை

 

த லைப்பைப் பார்த்ததும் வித்தியாசமான யோசனை எதையும் சொல்லப் போகிறேன் என்று நினைத்தீர்களா..? நம்பர் டூ-வில் இருக்கிற கறுப்பைக் கவனியுங்கள். நம்பர் ஒன்னில் தெரிகிற கம்பீரத்தையும் கவனியுங்கள்... சரி, சூட்சுமத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்.
தொழிலை ஆரம்பிக்க மட்டுமல்ல... ஆரம்பித்து, வெற்றி கரமாக நடத்தும் தொழிலைப் புத்திசாலித்தனமாகத் தொடரவும் அதை விரிவாக்கம் செய்யவும் மூலதனம் தேவைப்படும். அங்கேயும் இருக்கவேண்டும் மூளைதனம். என் வியாபாரத்தில் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் இது!
நாங்கள் ஷாம்பூ சப்ளை செய்யப் போகும்போது, ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் சொன்னார். ‘‘சார்! நீங்க ஷாம்பூ கொடுக்கும்போது, பில் போடாம கொடுங்க... ஏன்னா, நான் கணக்கு வழக்கு எதுவும் காட்டறது இல்லை. நீங்க பில் போட்டா, நானும் அதுக்குக் கணக்கு காட்டவேண்டி இருக்கும். அதோட, பில் போடும்போது நீங்க கட்டற 20% விற்பனை வரி மிச்ச மாகும். அதை நாம பிரிச்சுப்போம். விலையிலே 5% எனக்கு குறைச்சுக் கொடுங்க... மீதி 15% உங்களுக்கு லாபம்!’’ என்றார்.
நான் உடன்படவில்லை. எதைச் செய்தாலும் நேர்மையுடன் நியாய மான கணக்குக் காட்டிச் செய்ய வேண்டும் என்பது சிறுவயது முதலே என் நெஞ்சில் பதிந்துவிட்டிருந்தது. அவரிடம் சொன்னேன். ‘‘இது சரிப்பட்டு வராதுங்க. பில் போடற தால கட்டற வரியைச் சந்தோஷமா கட்டிப் பாருங்க... உங்க பிஸினஸ் ஓகோனு வளரும்’’ என்று அவருக்கு அட்வைஸ் செய்தேன்.
அவரைப் போன்ற மனநிலையில் தான் இன்று சிறியது முதல் பெரியது வரை பல பிஸினஸிலும் இருக்கிற சிலர் உள்ளனர். வியாபாரத்தில் கறுப்புப் பணம் சேர்ப்பது, முறை யான கணக்கு இல்லாமல் செய்யும் பிஸினஸ், அரசாங்கத்தை ஏமாற்றி வரியில் இருந்து தப்பிக்கும் முயற்சி... இதெல்லாம் உங்கள் வியாபாரத்துக்கு நீங்களே தோண்டும் குழிகள். அது உங்கள் வியாபாரத்தை வளர விடாமல் செய்வது ஒருபக்கம்... வியாபார வட்டத்தைக் குறுக்கி, உங்களையே உள்ளிழுத்துவிடும் ஆபத்தும் அதில் இருப்பதை உணருங்கள். எப்படி..?
ஓர் உதாரணம் பார்ப்போம். ஒரு ஜாலிக்காக கொஞ்சம் சினிமாத் தனத்துடனே விளக்குகிறேன்.
ஒரு ஹீரோ... ஒரு வில்லன். இருவரிடமும் 20,000 ரூபாய் இருக்கிறது. ஹீரோ வைத்திருப்பது கணக்கில் காட்டிய சுத்தமான ரூபாய். வில்லன் வைத்திருப்பது 10,000 ரூபாய் நேர்மையான கணக்கு; 10,000 ரூபாய் கணக்கில் காட்டாதது. இருவரும் ஒரே தொழிலில் ஒரே முறையில் சரக்கு வாங்குபவர்கள். மாதம் சுமார் 25% லாபம் வருகிற தொழில் அது.
இருவரும் வங்கிக் கடனுக்காகச் செல்கின்றனர். வைத்திருக்கும் தொகை போல இருமடங்கு கடன் கிடைக்கிறது. ஹீரோவுக்கு 40,000 ரூபாய் கடனும், வில்லனுக்கு 20,000 ரூபாய் கடனும் கிடைக்கும். இப்போது ஹீரோ கையில் 60,000 ரூபாய். வில்லன் கையில் 40,000 ரூபாய்.
மாத முடிவில் ஹீரோ பார்க்கும் லாபம் 15,000 ரூபாய். அதில் வங்கி வட்டி, ஊழியர் சம்பளம், வெவ்வேறு வரிகளுக்காக ரூபாய் 5,000 எடுத்து வைப்பதாகக் கொள்வோம். மீதித் தொகையை அப்படியே அவர் பிஸினஸில் போடுவார். வருட முடிவில் எல்லா செலவுகளும் போகவே, கிட்டத்தட்ட வியாபாரம் இரு மடங்காகி இருக்கும். வியாபாரத்தை மேலும் பெருக்க, திறமையான ஒருவரை வேலைக்கு அமர்த்துவார். தொழில் முன்னேற்றம் பற்றிய சிந்திக்க நேரமிருக்கும். நேர்மையாக வரி கட்டுவதால், வியாபாரத்தின் அளவு என்னவென்பது பளிச்சென வெளியே தெரியும். வங்கிகள் கடன் கொடுக்க முன்வரும். அதைப் பெற்று புதுப்புது யுக்திகளின் மூலம் பிஸினஸ் வளர்ச்சியை எட்டமுடியும். வாய்வழித் தகவல்களால் தொழில் பற்றி பரவலாகத் தெரிய ஆரம்பிக்கும். இல்லாவிட்டாலும் நல்ல விளம்பரங்கள் மூலம் தொழிலை வளர்க்கமுடியும். ஹீரோ சில வருடங்களிலேயே பல லட்ச ரூபாய் தொழிலுக்குத் தலைவராகி விடுவார்.
வில்லன் கதைக்கு வருவோம். அவரது முதலீட்டுக்கு மாத லாபமாக ரூபாய் 10,000 வரும். வங்கி வட்டி, ஊழியர் சம்பளம் என்று ரூபாய் 3,000 வரை எடுத்து வைப்பார். சரியாக கணக்குப் பராமரிப்பு செய்யாததால், அதை யாரும் கேள்வி கேட்டுவிடாமல் இருக்க, அங்கே இங்கே கொஞ்சம் என்று ரூபாய் 500 வரை செலவாகும். வருட முடிவில் அவரது பிஸினஸ் 50% வளர்ந்திருக்கும். எதை பில் போட்டு விற்பது, எதை நம்பர் டூ பிஸினஸில் கொடுப்பது என்று பிரித்து விற்க அதிக நேரம் செலவழிப்பார். அவர் இல்லாத நேரத்தில் ஊழியர் சரியாகச் செயல்படாமல் போனாலோ, அதிகாரிகளின் சோதனையில் சிக்கிவிட்டாலோ அல்லது வெளியே எங்கும் உளறிக் கொட்டிவிட்டாலோ தான் மாட்டிக்கொண்டு விடுவோம் என்ற பதற்றம் இருப்பதால், அவரே முழுநேரமும் தொழிலில் இருக்கவேண்டி இருக்கும். அவசரநேரத்தில், தான் வெளியே செல்லவேண்டி வந்தால், தொழிலைக் கவனிக்க உறவினரோ, நம்பிக்கையான ஊழியரோ இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பார். ‘திறமைசாலியை வேலைக்கு எடுக்கலாமே!’ என்று யாராவது யோசனை சொன்னாலும், ‘எதை எப்படி விற்கிறதுனு தெரியாம, என்ன புத்திசாலித்தனம் இருந்து என்ன பிரயோஜனம்..?’ என்று தப்புக்கு உடந்தையாக இருக்கும் ஒரு விசுவாசியையே தேடுவார். புதிய சிந்தனைகளோடு அடுத்தகட்டத்துக்குப் போவதற்குப் பதில் இருப்பதை எப்படிப் பாதுகாப்பது என்ற மன உளைச்சலே அவரைப் பெரும்பாடுபடுத்தும். விளம்பரம் செய்யவே தயங்குவார்... எங்கே விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, யாராவது ரெய்டுக்கு வந்துவிடுவார்களோ என்ற பயம் உள்ளூர ஓடிக்கொண்டிருக்கும். வில்லனுக்கு அவனே வில்லனாவான் என்பதுதான் க்ளைமேக்ஸாக இருக்கும். நான் ஷாம்பூ தொழிலில் இருந்தபோது, தரமாகவும் என்னை விட அதிக அளவிலும் ஷாம்பூ தயாரித்த திறமைசாலிகள் பலர் இருந்தனர். அத்தனை போட்டியையும் சமாளித்து நான் இன்றைக்கு வளர்ந்து, தொழிலில் தொடர்ந்து நிற்கிறேன் என்றால் அதற்குத் தொழில் நேர்மையும் ஒரு காரணம். சின்ன ஃப்ளாஷ்பேக் சொல்கிறேன்.
குடும்பத்தாரிடம் கோபித்துக்கொண்டு, அன்னக்காவடி யாக வெளியே வந்தவன் நான். முதல் திரட்ட என்னிடம் எந்தச் சொத்தும் இல்லை. தட்டுத் தடுமாறி, மூன்று வருடங்கள் தாக்குப் பிடித்தபின், முக்கியமான ஒரு கட்டத்தில் இருந்தேன். நான் தொழில் செய்துகொண்டிருந்த கடலூரில் உள்ள விஜயா வங்கியை அடுத்தகட்ட வளர்ச்சிக்காக அணுகினேன். ‘25,000 ரூபாய் லோன் வேணும் சார்!’ என்று விண்ணப்பத்தை நீட்டினேன். ஏற, இறங்கப் பார்த்தார். ஒரு புன்முறுவலுடன் ‘தருகிறேன்!’ என்றார். என் விண்ணப்பத்தில் அவர் போட்டிருந்த குறிப்பைக் கவனித்து ஆச்சர்யத்தில் சிலிர்த்துப்போனேன்.
‘ரொம்ப ரொம்ப சிறிய ஸ்தாபனம்தான்; டாக்குமென்ட் என்று காட்டுவதற்கு ஏதுமில்லைதான்; ஆனால், இன்கம்டேக்ஸ் கட்டுகிற நிறுவனமாக இருக்கிறது. நியாயமாக நடக்கிற, லாபகரமாகச் செயல்படுகிற, எதிர்கால வளர்ச்சி கொண்டதாகத் தெரிகிற இந்நிறுவனத்துக்குக் கடன் தரலாம்’ என்று இருந்தது அந்தக் குறிப்பு. அந்த வங்கி மேலாளர் சுப்ரமணியன், என் மேல் காட்டிய நம்பிக்கையைவிட, என் நிறுவனத்தின் வளர்ச்சியில்தான் நம்பிக்கை வைத்து கடன் தந்தார். 25 ஆயிரத்தில் ஆரம்பித்த கடன், அடுத்தடுத்து வளர்ந்து, சுமார் 50 லட்சம் கடன் வாங்கும் அளவுக்கு வளர்ந்தது.
வரி ஏய்ப்பு செய்யக்கூடாதே தவிர, சட்டப்படியான வரிச் சலுகை வாய்ப்புகள் இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் தயங்கக்கூடாது.
பக்கத்து மாநிலத்தில் வழக்கமான தயாரிப்புச் செலவுக்கு வரி கட்டுவதற்குப் பதிலாக, விற்பனை விலைக்கு வரிகட்ட வேண்டும் என்ற புதிய கட்டளை போட்டிருந்தார்கள். எங்களுக்கு அதுபற்றித் தெரியவில்லை. எங்கள் நிறுவன ஊழியர்களும் உஷார்ப்படுத்தவில்லை. அம் மாநில அரசுக்கு வழக்கமான வரியை செலுத்தி இருந்த சமயத்தில், ஒரு நோட்டீஸ் வந்தது. ஒன்றரைக் கோடி ரூபாய் பாக்கி என்று வரி கட்டச் சொல்லி இருந்தார்கள். இதுபற்றி எங்கள் மேனேஜரிடம் பேசிய அங்கிருந்த ஒரு அதிகாரி, ‘5 லட்ச ரூபாய் குடுத்துடுங்க... பார்த்துக்கலாம்!’ என்று சொல்லி இருக்கிறார். எங்கள் மேனேஜர் இதை ஒரு வெற்றிச் செய்தி போல எங்களிடம் சொல்ல... செம டோஸ் அவருக்கு. ‘முழுவரியையும் கட்டிவிடுங்கள்!’ என்று சொல்லிவிட்டோம். ‘இப்படியா இருப்பாங்க... ஒன்றரைக் கோடியை லட்டு மாதிரி தூக்கி நீட்றீங்களே!’ என்று சம்பந்தப்பட்ட அதிகாரி பதறித் துடித்திருக்கிறார். ‘நியாயம்னா நியாயம்தான். இன்னிக்கு இந்தப் பணத்துக்காக தடம் புரண்டா, நாளைக்கு வேறு சிலரும் தப்பு பண்ணத் தூண்டுவாங்க. தப்பு கூடாது’னு பணத்தைக் கட்டினோம்.
இதெல்லாம் நம்மை அறியாமல் நம் நிறுவனத்தைப் பற்றி வெளிநபர்களுக்கு உணர்த்துகிற விஷயங்கள்... மரியாதையைக் கூட்டுகிற விஷயங்கள். ராத்திரி படுக்கையில் படுத்து கண்களை மூடினால், தூக்கம் வரவேண்டும். ரெய்டு கனவுகள் வரக்கூடாது. எதை எப்படி மறைக்கலாம் என்ற சிந்தனைகளுக்கு புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவதைவிட, தொழில் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்திப் பாருங்கள்... உங்கள் காட்டில் பணமழை கொட்டும். தொழில் பயிர் கிடுகிடுவென வளரும்.

No comments:

Post a Comment